Tuesday, June 16, 2009

அல்னார் நரம்பும் அல்லக்கையும்.

·

நட்சத்திர வாய்ப்பை முழுதாக பயன்படுத்தாத பதிவர்களில் நானும் ஒருவன் என்பது வருத்தமாகத்தான் உள்ளது. எனினும் தமிழ்மணத்திற்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். வெகுநாட்கள் ஆவலாக எதிபார்த்த ஒன்று; ஏற்கனவே நிலுவையில் இருக்கும் பதிவுகளை வலை ஏற்றவே வாய்ப்பு கிடைக்காமல் இருப்பது கவலையாக உள்ளது. தா. பாண்டியனின் பேட்டியை வலை ஏற்ற ஆயத்தமாகும் முன் அது காலாவதி ஆகிப்போனது கொடுமை. MLA ரவிக்குமாரின் பேட்டி தட்டச்சு செய்யப்படாமல் கிடக்கிறது. மேலும், என் சில கேள்விகளுக்கு அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் அளித்த பதில்கள் மொழி பெயர்கப்படாமல் உள்ளன. அதுமட்டுமல்லாமல், செந்தழல் ரவியின் பேட்டி முழுமையாக கைக்கு வரவில்லை. மிகுந்த பிரயத்தனம் செய்து அனுமதி பெற்ற தமிழச்சியின் பேட்டிக்கு கேள்விகள் தயாரிக்கமலே இருக்கிறேன். இன்னும் சில பதிவுகள் ரஃப் காப்பி என்னும் அளவிலேயே கிடக்கின்றன. இதற்கிடையே 'கவிச்சை' என்னும் வலைப்பூவை உருவாக்கி இந்தியாவிலுள்ள நண்பரிடம் அதை முற்றாக ஒப்படைத்து என் பதிவுகளை தட்டச்சு செய்து வலையேற்ற கோரியிருந்தேன். சில பதிவுகளுக்கு பிறகு அதிலும் தொய்வு ஏற்பட்டுவிட்டது.

பத்து வருடங்களுக்குள்ளாகவே கணிப்பொறி சார்ந்த பணி எனக்கு மிகுந்த சேதாரத்தை செய்துவிட்டதாகவே உணர்கிறேன். தொடர்ச்சியாக கணிப்பொறி முன் அமர்ந்திருந்தால் கழுத்து தசைகள் அதீதமாக சோர்வுற்று தலையின் மொத்த எடையும் கழுத்துப்புற தண்டு வடத்தின் மீது வீழ்ந்து நரம்புகளை அழுத்துகிறது. இதனால் அப்பகுதியில் இருந்து வெளியேறும் நரம்புகளில் ஒன்றான அல்னார் நரம்பு சிறிது நேரத்தில் சுண்டு விரலையும் மோதிர விரலையும் மரக்கச்செய்து விடுகின்றன. வெறும் மூன்று விரல்களைக்கொண்டு தட்டச்சு செய்வது இயலாத காரியம். தொடர்ந்தால் குறைந்த பட்சம் மூன்று நாட்களுக்கு பெரும் அவதியைத்தருமே ஒழிய முக்கிய பணிகள் முடங்கிப் போகும்.

ஊரில் சிறிதுகாலம் இயல் முறை மருத்துவராக நான் பணி புரிந்தபோது இது போன்ற பிணிகளை தீர்த்திருக்கிறேன். எனினும் இதை காசால்ஜியாவாக முற்றும் வரை விட்டுவைத்திருப்பது கொடுமைதான். என் நலனில் அக்கறை கொண்ட குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் இதற்காக என்னை கடிந்து கொள்வது உண்டு. பதிவுலகிலும் அக்கறை கொண்ட தோழர்களின் பட்டியல் இருக்கிறது. ஆச்சர்யமாக,இப்போது அந்த பட்டியலில் புதிதாக ஒரு நண்பர் இணைந்திருக்கிறார். அவருக்கு என் பதிவுகள் சுவாரசியமில்லாமல் இருப்பது மிகுந்த கவலையைத் தந்திருக்கிறது. காற்று வாங்கும் நிலையில் என் வலைப்பூவை நான் வைத்திருப்பது அவருக்கு பிடிக்கவில்லையாம்!. கடிந்து கொள்கிறார். பதிவு எழுத மேட்டர் இல்லை என்று நான் சொன்ன சால்ஜாப்பை கேட்டு அவருக்கு கோபம் கூட வருகிறது. ஆனால் என்ன முயன்றாலும் எனக்கு அவரைப் போல சுவாரசியமாக எழுதவே வராது என்று அவர் புரிந்து கொள்ளவே இல்லை.

தற்போதைய தமிழ்மண சூப்பர் ஸ்டார் பரிசல்காரனும் நானும் ஒரே சமயத்தில் பதிவெழுத வந்தோம். ஒன்னரை வருடத்தில் அவர் சென்றுள்ள தூரத்தில் பகுதி அளவு கூட நான் முயற்சிக்க வில்லை. ஏனெனில் சுட்டுப்போட்டாலும் எனக்கு வரவே வராத வகைமாதிரி அவருடையது. சுவாரசியமாக எழுதவேண்டுமானால் பஜார் புத்தகங்கள் முதல் பன்னாட்டு இலக்கியங்கள் வரை நிறைய படிக்கவேண்டும். நான் படித்ததெல்லாம் பத்திரிக்கைகளும் படிப்பு சம்பந்தமான ஆய்வு புத்தகங்களும்தான். அவற்றில் இருக்கும் மொன்னையான எழுத்து நடை தான் எனக்கு கைகூடி உள்ளது. பதிவுகள் தவிர்த்து வேறெங்கும் எழுதியதில்லை. பல்கலைக்கழக உள்சுற்று சஞ்சிகைகளில் வாரம் ஒருமுறை எதையாவது எழுதியாகவேண்டும். எவரையும் கவர்ந்தாக வேண்டியதில்லை. நாலைந்து பெருசுகளை திருப்தி படுத்தினால் போதும். இந்நிலையில் சுவாரசியமான பதிவுகளுக்கு நான் எங்கே போவது? நானும் உடன் பிறப்பு பதிவுகளை படித்துக் கொண்டுதான் இருக்கிறேன். அவரது சுண்டி இழுக்கும் எழுத்து நடை எனக்கு வாய்க்கவே இல்லையே!

மேலும், தமிழ்மணத்தில் இணையும் முன்பே, ஏன் பதிவெழுதும் முன்பே பல பதிவர்களை தொடர்ந்து படித்து வந்திருக்கிறேன். அசுரன், திராவிட தமிழர்கள், கோவிகண்ணன், லக்கிலுக், குழலி, வரவனையான், ரவி, பொட்'டீ'கடை சத்யா, டிபிசிடி, தமிழ் சசி, செல்லா, தமிழச்சி, கிழுமத்தூரார் என்று பலரையும் புக் மார்க் செய்து வைத்ததுண்டு. ஆனால் எவர் நடையையும் நான் சுவீகரிக்கவில்லை. கிழுமத்தூரார் போல் எழுதுவதாக குசும்பனும் கோவியும் கூறியதுண்டு. பொட்'டீ'கடை சத்யாவை ஒத்தது என்று ரவி ஒரு முறை சொன்னார். ஆனால் உண்மையில் என் பதிவுகள் பரீட்சை விடைத்தாளில் இருக்கும் வாக்கியங்களை போன்றவை. ஆனால், ஊடே மிகை உணர்ச்சிகள் நிறைந்த வாரிகளை மெனக்கெட்டு திணிப்பது உண்டு. பதிவுகளை சுவாரசியமாக்க எனக்கு தெரிந்த ஒரே வழி இதுதான். என் விமர்சனப் பதிவுகள் அவ்வகையானவை. அடாவடி நிறைந்தவை. அளப்பரையானவை. மேலும் அவை விரும்பியே செய்யப்பட்டவை. எனினும் சத்தியாவின் பதிவுகளை ஒப்பிட்டால் எனது பதிவுகள் வெறுமையானவை என்பதை எளிதில் உணரலாம்.

ஆனால், சிலருக்கு அவரது பதிவுகள் ஏற்படுத்தாத எரிச்சலை என் பதிவுகள் ஏற்படுத்துகின்றன. திமுக -வை விமர்சித்தும் அதன் தலைவரை செத்துதொலையச் சொல்லியும் அவர் எழுதியபோது வராத கோபம் இந்த அல்லக்கைக்கு என் மீது வருகிறது. ஏன் அவரைப்போய் நொட்ட வேண்டியதுதானே?! அது முடியாது! ஏனென்றால் அவர் விமர்சித்தது திமுக -வை மட்டும். நான் அல்லக்கைகளின் நிலைப்பாட்டையும் சேர்த்து கேள்வி கேட்பது குடைச்சலைத் தருகிறது போலும். குடைச்சல் தாழாமல் அழும்போது மட்டும் திமுக -வின் பதிவுலக அறங்காவலர் போல பிஸ்த்து கிளம்புகிறது. திமுக எனக்கு பதிவுலக வாழ்வு தருவதாக அதை நம்பியே வாழும் அடிவருடிகள் கூறுவது விந்தைதான். திமுக கருணாநிதியின் தனி சொத்தாகியது போல் பதிவுலகில் அது இவருக்கு தாரை வார்க்கப்பட்டுவிட்டதோ ஒருவேளை!

வன்மமும், வக்கிரமும், வசவும் நிறைந்த அறிக்கைகளுக்காக அதை விரும்பாதவர்களால் கருணாநிதி தொடர்ந்து விமர்சிக்கப்படுகிறார். இதிலெல்லாம் அனுபவம் நிறைய உண்டு அவருக்கு. நம் டமாஷ் பாண்டிகள் அடுத்தமுறை அறிவாலயத்திற்கு காவடி தூக்கும்போது தனி மனித தாக்குதல் குறித்த வரையறையை அவரிடமே பயின்றுவிட்டு வரலாம். இல்லாவிட்டால் எப்போதும்போல் பாப்பான் மாட்டினால் கும்மிக் கொண்டு பொழுதை ஓட்டலாம். இவற்றையெல்லாம் விட இன்னொரு வழியுமுண்டு. கொஞ்சம் கஷ்டமானது. உணவில் சிறிது உப்பை சேர்த்து அருந்திப் பார்க்கலாம். ஒரு முயற்சிதான்! முடியாவிட்டால் பரவாயில்லை, இருக்கவே இருக்கு எலும்புத் துண்டு. அதைக் கவ்விக்கொண்டு, வருவோர் போவோர் மீது விழுந்து பிடுங்கலாம்.

14 comments:

கோவி.கண்ணன் said...
June 16, 2009 at 2:19 AM  

குறிப்பிட்ட 'அந்த' இடுகையை படித்ததும் அதிர்ச்சியுற்றேன். அந்த இடுகைக்கு அபி அப்பா போன்றோரின் ஆசிர்வாதம் வேறு சகிக்கவில்லை. எதிர்ப்பவர்களை இல்லாமல் செய்ய வேண்டும் என்பது போன்ற தூற்றல் மிகவும் வருத்தமாக இருந்தது. திமுக அனுதாபிகள் கிட்டதட்ட இன்னொரு பார்பனியமாக உருவாகுகிறார்கள். ஆரோக்கியமான சூழலுக்கும், நல்ல விவாதத்திற்கும் வழி இல்லை.
:(

லக்கிலுக் said...
June 16, 2009 at 2:30 AM  

பதிவின் கடைசி சில வரிகளும், அதைத்தொடர்ந்து கோவி.கண்ணனின் பின்னூட்டமும் நல்ல எண்டெர்டெயினிங் எலிமெண்டாக இருக்கிறது.

மோகன்!
இவ்வளவு சுயபச்சாதாபமும், சுய கழிவிரக்கமும் தேவையே இல்லை. டேக் இட் ஈஸி!

உங்கள் அல்னார் நரம்பு விரைவில் சரியாக வாழ்த்துகள்!

கோவி.கண்ணன் said...
June 16, 2009 at 2:44 AM  

//பதிவின் கடைசி சில வரிகளும், அதைத்தொடர்ந்து கோவி.கண்ணனின் பின்னூட்டமும் நல்ல எண்டெர்டெயினிங் எலிமெண்டாக இருக்கிறது.//

வாங்க லக்கி ஐயங்கார்,

அதுல ஒண்ணுமே இல்லை என்றால் பதிவைத் தூக்கியது ஏன் ? யாராவது எடுக்கச் சொல்லிக் கேட்டுக் கொண்டார்களா ? இல்லாவிடில் எழுதியது தரக்குறைவான தனிமனித சீண்டல் என்று எடுக்கப் பட்டதா ?

லக்கிலுக் said...
June 16, 2009 at 2:50 AM  

கோவிகண்ணன் தென்கலை ஐயங்கார் அவர்களே!

தனிமனித சீண்டல் பற்றி மோகனின் பதிவில் பேசமுடியுமா? கடந்த இருமாதகால அவரது பதிவுகள் கருத்து சீண்டல்களா அல்லது தனிமனித சீண்டல்களா என்று கூட புரிந்துகொள்ள முடியாத அப்பாவியா நீங்கள்?

தோழர் உடன்பிறப்பின் பதிவு நியூட்டனின் மூன்றாம் விதியை நினைவுபடுத்துவதாகவே இருக்கிறது. மற்றபடி என்னைப்போல உங்களுக்கு உடன்பிறப்பு அவர்களை பர்சனலாக தெரியும். வெறும் தனிமனித சீண்டல் மட்டுமே அவரது ஆட்டிட்யூட் அல்ல.

அப்புறம் திமுக அனுதாபிகள் சூழலை கெடுக்கிறார்கள் என்ற உங்கள் கூற்று நகைச்சுவை அல்லாமல் வேறு என்ன? தேர்தலுக்கு முந்தைய சூழலை நீங்களெல்லாம் எப்படி அற்புதமாக கட்டியமைத்தீர்கள் என்பதை எல்லோரும் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம்?

கோவி.கண்ணன் said...
June 16, 2009 at 3:47 AM  

//அப்புறம் திமுக அனுதாபிகள் சூழலை கெடுக்கிறார்கள் என்ற உங்கள் கூற்று நகைச்சுவை அல்லாமல் வேறு என்ன? தேர்தலுக்கு முந்தைய சூழலை நீங்களெல்லாம் எப்படி அற்புதமாக கட்டியமைத்தீர்கள் என்பதை எல்லோரும் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம்?//

தேர்தலுக்கு முன்பு மனசாட்சி உள்ளவர்கள் மாற்றிக் கொள்ள தள்ளப்பட்டார்கள் என்பதே உண்மை.

அப்படி மாற்றிக் கொண்டவர்களில் சீமான், பாரதிராஜா போன்றோர்களும், பதிவர்களும் உண்டு, கருணாநிதியை விமர்சித்த ஒரே காரணத்திற்காக எதோ மாமன் மச்சான் குடும்பத்தினரை இழுத்தது விமர்சித்தது போல் பதிவர்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாக திட்டித் தீர்த்தது யார் ?

கருணாநிதியை விமர்சனம் செய்த பதிவர்களை தேர்தல் முடிவுக்கு பிறகு 'கொஞ்ச நஞ்சமாவாடா ஆடுனீங்க....' ன்னு ஒருமையில் தாக்கியது யார் ?

கருணாநிதியைத் திட்டுவதற்காக எழுதுகிறோம் என எனக்கு தெரிந்து யாரும் சம்பளம் பெற்றுக் கொண்டு எழுதவில்லை.

தமிழின உணர்ச்சி உள்ளவர்கள் விமர்சனம் செய்தார்கள், செய்வார்கள்

ரவி said...
June 16, 2009 at 4:33 AM  

ரெஸ்பெக்டட் சார்,

ஐ வாஸ் ட்ரையிங் டு பப்ளிஸ் தெ பேட்டி அண்ட் தட் டைம் பாப்பா வெண்ட் ஆயி ஆன் டாப் ஆப் த லேப் டாப்.

கைண்லி பர்கிவ் மீ பார் திஸ் வீக் எண்ட் அண்ட் ஐ வில் கிவ் யூ த பேட்டி நெக்ஸ்ட் வீக் எண்ட்.

யுவர்ஸ் ஒபிடியண்ட்டிலி
நொந்தழல் கவி


அய்யங்கார்களே...

சண்டை போடுங்க. ஆனா ஓட்டு போட்டுட்டு போடுங்க.

டேக் கேர்.

ரவி said...
June 16, 2009 at 5:20 AM  

ஓட்டு குத்தியாச்சு...........

மோகன் கந்தசாமி said...
June 16, 2009 at 9:35 PM  

///அந்த இடுகைக்கு அபி அப்பா போன்றோரின் ஆசிர்வாதம் வேறு சகிக்கவில்லை.///

தெரிஞ்சவங்க யாராவது இருந்தா அவருக்கு சொல்லுங்கப்பா! அவரது காமெடி பதிவுகளு... சரி வேணாம்...

////இன்னொரு பார்பனியமாக உருவாகுகிறார்கள். ஆரோக்கியமான சூழலுக்கும், நல்ல விவாதத்திற்கும் வழி இல்லை.////

இன்னும் ஆறு வித்தியாசங்கள் தான் இருக்கின்றன. விரைவில் பூச்சியமாகலாம்!

மோகன் கந்தசாமி said...
June 16, 2009 at 9:44 PM  

///மோகன்!
இவ்வளவு சுயபச்சாதாபமும், சுய கழிவிரக்கமும் தேவையே இல்லை. டேக் இட் ஈஸி!///

ஒ! இது ஒரு எதிர்வினைப் பதிவென்று நினைத்து விட்டீர்களா? பின்னூட்டத்திற்கு பதில் கூட போடாமல் நட்சத்திர வாரத்தில் என்ன செய்கிறாய் என்று நண்பர் ஒருவர் கேட்டுவிட்டார். இதை எழுதிக்கொண்டிருந்தபோதே காணமல் போன அந்த பதிவின் 'Cache' காப்பியை ஒரு நண்பர் அனுப்பியிருந்தார். கடைசியில் அதற்கும் பதில் கூறியாயிற்று. அவ்வளவுதான். எனினும் அனுசரணைக்கு நன்றி!

///உங்கள் அல்னார் நரம்பு விரைவில் சரியாக வாழ்த்துகள்!///

நன்றி லக்கி லுக்.

மோகன் கந்தசாமி said...
June 16, 2009 at 10:13 PM  

///தனிமனித சீண்டல் பற்றி மோகனின் பதிவில் பேசமுடியுமா? கடந்த இருமாதகால அவரது பதிவுகள் கருத்து சீண்டல்களா அல்லது தனிமனித சீண்டல்களா என்று கூட புரிந்துகொள்ள முடியாத அப்பாவியா நீங்கள்?///

தாக்குதல் அதிகம் என்பதாலேயே அதை தனிமனித சீண்டல் என்று கொள்வீர்களா லக்கிலுக்? நான் கருணாநிதியை விமர்சித்ததில் பத்தில் ஒருமடங்கு கூட உடன் பிறப்பை விமர்சிக்கவில்லை. அல்லது கருத்து ரீதியாக பிறர் முன்பு திமுகவை விமர்சித்தபோது அதற்கு உடன்பிறப்பு ஆற்றிய எதிவினைனையின் கோரத்தைவிட குறைவுதான் இந்த தாக்கு; அல்லது அதேபோன்றதுதான்.

///தோழர் உடன்பிறப்பின் பதிவு நியூட்டனின் மூன்றாம் விதியை நினைவுபடுத்துவதாகவே இருக்கிறது. மற்றபடி என்னைப்போல உங்களுக்கு உடன்பிறப்பு அவர்களை பர்சனலாக தெரியும். வெறும் தனிமனித சீண்டல் மட்டுமே அவரது ஆட்டிட்யூட் அல்ல.///

இப்படி பதிவுகள் எழுதுவது ஒரு மகாத்திறமை என்று நினைத்துக் கொண்டிருக்கிறாரா உடன்பிறப்பு? இதெல்லாம் மேனியல். இது எனக்கும் நன்றாகவே வரும். //நானும் உடன் பிறப்பு பதிவுகளை படித்துக் கொண்டுதான் இருக்கிறேன். அவரது சுண்டி இழுக்கும் எழுத்து நடை எனக்கு வாய்க்கவே இல்லையே!/// இதைப்படித்துவிட்டு புளகாங்கிதம் அடைந்துவிட்டார் போலும். ஒருவேளை அவர் அஞ்சாங்கிளாஸ் ஃபெயிலா? இன்ஃபரன்ஸ் சுத்தமாக இல்லை போலிருக்கு அவருக்கு.

///அப்புறம் திமுக அனுதாபிகள் சூழலை கெடுக்கிறார்கள் என்ற உங்கள் கூற்று நகைச்சுவை அல்லாமல் வேறு என்ன? தேர்தலுக்கு முந்தைய சூழலை நீங்களெல்லாம் எப்படி அற்புதமாக கட்டியமைத்தீர்கள் என்பதை எல்லோரும் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம்?////

ஏன் தேர்தலுக்கு உங்கள் பாவங்கள் கழுவப்பட்டு ஞானஸ்தானம் அடைந்துவிட்டீர்களா? சூழல் அப்படியேதான் இருக்கிறது. அந்தசூழல் உங்கள் நிமித்தம் இல்லை. உங்கள் தலைமையை குறித்துதான். அதை கட்டமைத்ததும் திமுகவே. அதை இங்கே செவ்வனே செய்வது உடன்பிறப்புகள்தான். விளக்கம் விரைவில்!

மோகன் கந்தசாமி said...
June 16, 2009 at 10:21 PM  

///தமிழின உணர்ச்சி உள்ளவர்கள் விமர்சனம் செய்தார்கள், செய்வார்கள்////

அவர்களுக்கும் தமிழின உணர்வுகள் இருக்கின்றன. ஆனால் அவை தற்போது தலைவரது அனுமதிக்காத காத்திருக்கிறன. அவர் விரல் அசைக்கும்போது பற்றிக்கொள்ளும். பிறகு பார்க்கணுமே அளப்பரையை!!

மோகன் கந்தசாமி said...
June 16, 2009 at 10:31 PM  

////ரெஸ்பெக்டட் சார்,

ஐ வாஸ் ட்ரையிங் டு பப்ளிஸ் தெ பேட்டி அண்ட் தட் டைம் பாப்பா வெண்ட் ஆயி ஆன் டாப் ஆப் த லேப் டாப்.

கைண்லி பர்கிவ் மீ பார் திஸ் வீக் எண்ட் அண்ட் ஐ வில் கிவ் யூ த பேட்டி நெக்ஸ்ட் வீக் எண்ட்.

யுவர்ஸ் ஒபிடியண்ட்டிலி
நொந்தழல் கவி///

பலபேருக்கு தனிமடலிலும் பின்னூட்டத்திலும் பதில் சொல்லி என்னால் மாளவில்லை. விரைவில் வெளியிடுங்கள் ரவி! :-)) நன்றி.


///அய்யங்கார்களே...
சண்டை போடுங்க. ஆனா ஓட்டு போட்டுட்டு போடுங்க.

டேக் கேர்.////

மற்றொரு நன்றி.

மோகன் கந்தசாமி said...
June 16, 2009 at 10:32 PM  

///ஓட்டு குத்தியாச்சு...........///

மீண்டும் ஒரு நன்றி!

எம்.எம்.அப்துல்லா said...
August 7, 2009 at 2:49 AM  

//தற்போதைய தமிழ்மண சூப்பர் ஸ்டார் பரிசல்காரனும் நானும் ஒரே சமயத்தில் பதிவெழுத வந்தோம். ஒன்னரை வருடத்தில் அவர் சென்றுள்ள தூரத்தில் பகுதி அளவு கூட நான் முயற்சிக்க வில்லை. //

உங்களோடு என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள். அப்புறம் ரவி அண்ணனிடம் நானும் ஓரு பேட்டி எடுக்க எண்ணியுள்ளேன்...இன்னும் இரண்டு மாதம் கழித்து :)