Monday, April 27, 2009

கருணாநிதி - ஓரங்க நாடகம்

· 16 comments

அண்ணா சமாதியில் தலைவர் தலுக்காக அமர்ந்து விட, விஷயம் தெரிந்ததும் ஸ்டாலின் பதைபதைத்துப் போய் கோபாலபுரத்திற்கு தொலைபேசுகிறார்.

ஸ்டாலின்: அம்மா! அம்மா! ஐயய்யோ! இவரு திரும்பவும் ஆரம்பிச்சிட்டாரும்மா!!!

தயாளு: என்னாச்சுப்பா! யாரு ஆரம்பிச்சிட்டா!

ஸ்டாலின்: அப்பாதான்மா!! அவருக்கு நீயே கால் போட்டு பேசு! நான் பண்ணா எடுக்க மாட்டேங்கிறார்!!!

(கருணாநிதியின் செல் போனுக்கு தயாளு டயல் செய்கிறார்)

கருணாநிதி: அதெல்லாம் நிறுத்த முடியாது. சாயந்தரம் வரை... ச்சே சாகும் வரை உண்ணா விரதம்தான்...

தயாளு: ஐயோ! நாந்தாங்க பேசுறேன். என்ன இதெல்லாம்?!!

கருணாநிதி: அட நீயா!! நான் டெல்லி காலுக்கு வெயிட் பண்ணறேன், உன்கிட்ட அப்புறம் பேசறேன், போன வை..

தயாளு: என்னமோ போங்கோ! மதியத்துக்குள்ள டிவியில சீரியல் வந்துடனும், சொல்லிட்டேன், ஆமா!

ராமநாதன்: அய்யா! டெல்லியிலருந்து கால்...

கருணாநிதி: ரொம்ப நன்றி சோனியாஜி! என் உண்ணாவிரத போராட்டத்திற்கு மதிப்பளித்து போரை நிறுத்தியதற்கு நன்றி. "மேரா பாரத் மாக்கான், ஜெய் ஹிந்த்!!!"

சோனியாஜி: இருங்க அவசரப் படாதிங்க! முந்தாநாள் ஒத்துகிட்டவர் இப்ப முரண்டு பிடிக்கிறார் ராஜ பக்சே!... நாங்கதான் உண்ணாவிரதத்திற்கு டைம் சொல்றோம்னு சொன்னோமே! அதுக்குள்ள ஏன் திடீர்னு ஆரம்பிச்சிங்க!

கருணாநிதி: ஏதோ தெரியாம ஆரம்பிச்சிட்டேன்... அம்மா தாயே நீங்கதான் காப்பாத்தனும்!!

சோனியா: உங்களோட ஒரே ரோதனையா போச்சு! நீங்க என்னடான்னா இங்க உண்ணாவிரதம் இருந்து உசுர வாங்குறீங்க! அவர் சீனாவில போய் உண்ணாவிரதம் இருப்பேன்னு மிரட்டுறாரு! கடைசீல என் கூந்தல முடிய பிரபாகரன் ரத்தம் இல்லாமலே போய்டும் போல இருக்கே!

கருணாநிதி: நீங்க எதுக்கு ஜெயலலிதாவுக்கு நம்ம பிளானை கசிய விட்டீங்க? அதுனாலதான் நான் அவசர அவசரமா....

சோனியா: நான் எங்க கசிய விட்டேன், ரா -வில் இருக்கிற ஜெ விசுவாசி எவனோ இந்த வேலையை செஞ்சிருக்கான்.

கருணாநிதி: அதெல்லாம் இருக்கட்டும், நாங்க என்ன போர் நிறுத்தமா கேட்டோம், போர் நிறுத்தம்னு அறிக்கைதான கேட்டோம், அதுகூட ராஜபக்சேவால் முடியாதாமா? தமிழனை என்ன கிள்ளுக்கீரை என்று நினைத்துவிட்டாரா

சோனியா: சரி.. சரி.. எல்லாரும் சேர்ந்து பிளானையே குழப்பிட்டீங்க! இனிமேலாவது ஒத்திகைப்படி நடந்துக்குங்க! "போர் நிறுத்தம் பெற்றாயிற்று, உண்ணாவிரதம் வாபஸ்" -னு தங்கபாலுவை கூப்பிட்டு உண்ணாவிரதத்தை முடிங்க! அதுக்குள்ள நாங்க கொழும்புக்கு கால் போட்டு பாக்கறோம்!

(10 ஜன்பத் ரோடு, டெல்லி - இத்தாலி மொழியில் ஏதோ ஒரு கெட்ட வார்த்தை சொல்லி சோனியா திட்ட, மன்மோகன் சிங் அலறியடித்துக்கொண்டு ஓடிப்போய் கொழும்புக்கு கால் செய்கிறார்)

சிங்: ஹலோ!

பக்சே: ம்ம்... இப்ப என்ன!

சிங்: टाइटलर मामले में ठुकरा दी थी अधिकारियों की राय

பக்சே: No

சிங்: मनमोहन पर जूता फेंकने का प्रयास

பக்சே: No

சிங்: जूता फेंकने वाले को मनमोहन ने किया माफ

பக்சே: No

சிங்: अच्छा चुनावी शिगूफा है काले धन का मुद्दा

பக்சே: No

சிங்: सद्दाम के नक्शेकदम पर मायावती

பக்சே: මේ සුනාමියේ සුන්බුන් මතින් නැගිටි අධිෂ්ඨානයේ කතාව කියා පාන තවත් සංකේතයකි. සුනාමියෙන් පානදුරයට කළ ලොකුම විපත වුයේ සුමංගල විද්‍යාලයට වූ හානියයි. පානදුරේ ශ‍්‍රී සුමංගල විද්‍යාලය නැවත ගොඩනඟා දීමට ඒ අතර ජපන් රජය ඉදිරිපත් විය. එහෙත් ඔවුන් කියා සිටියේ සුනාමි අනතුරු කලාපයෙන් පිටත භූමියක මේ විදුහල ගොඩනඟන්නේ නම් පමණක් ඒ සඳහා රුපියල් ලක්ෂ 5000ක මුදලක් ප‍්‍රදානය කිරීමට කැමැති බවයි.

சிங்: (எலேய்! இத்தாலியில் திட்டு வாங்கறது பத்தாதுன்னு சிங்களத்திலையும் நான் திட்டு வாங்கனுமாடா?) ரொம்ப நன்றி ஜி, நாங்க இங்க "போர் நிறுத்தம்" -னு அறிவிச்சிடறோம். எப்பவும்போல அங்க உங்க வேலைய அறிக்கையில காட்டுங்க! (உங்கள எவன் கேட்க முடியும்?) அடுத்த வாட்டி 'வென் ஜியாபோ' வந்தா நான் கேட்டேன்னு சொல்லுங்க!!!

(எல்லாம் இனிதே முடிந்ததாக எல்லோரும் அவரவர் இடங்களில் ஆசுவாசப்படுத்திக் கொள்கிறார்கள்)

சோனியா: எப்பா! எவ்ளோ இம்சை இந்தாளு கூட! எலக்சன் முடிஞ்சதும் இந்தாள முதல்ல வீட்டுக்கு அனுப்பனும்!

சிங்: ஏம்பா செக்ரட்டரி, மொழி பெயர்க்கச்சொல்லி ஒரு சிங்கள டெக்ஸ்ட் கொடுத்தேனே, என்னாப்பா ஆச்சு!!!

கருணாநிதி: ராம நாதா!! அந்த கெட்டி சட்னி எடுத்துட்டுவா!

தயாளு: நல்லவேளை, சீரியல் மிஸ்ஸாகல!!

உடன்பிறப்பு: தலைவா! உங்க கூட சேர்ந்து மத்தியானம் வரை கொலை பட்னி இருந்தோமே! எங்கே தலைவா எங்கள் பிரியாணி??

(எல்லாம் சகஜ நிலைக்கு திரும்பிக் கொண்டிருந்த நிலையில், பொள்ளாச்சியிலிருந்து கோபாலபுரத்திற்கு ஒரு கால் வருகிறது)

சிபிசிஐடி: சார், இங்க ஜெயலலிதா பொதுக்கூட்டத்தில் "ராஜ பக்சேவை கைது செய்து தமிழகத்திற்கு கொண்டுவருவேன்" -அப்படின்னு முழங்கறாங்க சார்!!!

கருணாநிதி: அய்யய்யோ! டேய் ராமனாதா சீக்கிரம் ஓடிவா, பத்திரிக்கைகளுக்கு அறிக்கை தயார் பண்ணு, "ஈழத்தமிழருக்காக கலைஞர் தண்டவாளத்தில் தலை வைத்து போராட்டம்னு" அறிக்கை கொடு. (நம்மள நிம்மதியா இருக்க விடமாட்டானுங்க போலருக்கே!!!)

Read More......

Sunday, April 19, 2009

தமிழச்சியின் பேட்டி

· 5 comments

பதிவுலகில் பெரியாரியல் மற்றும் சர்ச்சையியல்(!) என்றால் நினைவுக்கு வருபவர் பதிவர் தமிழச்சி அவர்கள். தத்துவார்த்த ரீதியிலான விவாதம் என்றாலும் அடாவடிகள் என்றாலும் அசராமல் அடித்து ஆடக்கூடியவர். அவரது நண்பர்களின் எண்ணிக்கைக்கு நிகராக வைரிகளின் எண்ணிக்கை உண்டு. பெண்ணியம் தொடர்பாகவும் பெரியாரின் பெண்ணுரிமை கருத்துக்கள் சார்ந்தும் தமிழச்சியின் பதிவுகள் இணைய உலகில் மிகப் பிரபலம்.

மின்னஞ்சல் வழியிலான அவரது நேர்காணலை 'ச்சும்மா ட்டமாஷ்' வலைப்பூவில் தொடராக வெளியிடவிருக்கிறேன். சர்ச்சைக்குரிய கேள்விகளையும், தத்துவார்த்த விளக்கங்களையும் உள்ளடக்கியதாக அவரது பேட்டி இருக்கும். விரைவில் அவரது பேட்டியுடன் அடுத்த பதிவில் சந்திப்போம்.

Read More......

Sunday, April 5, 2009

திருமா வெளியிட்ட ரகசியம்

· 23 comments

ஆட்சியை கலைக்க சதி என்று திமுக போலியாக பலமுறை அலறிய போதெல்லாம் நம்பிய மக்கள் மெய்யாகவே ஒரு சதிவலை பின்னப்பட்டபோது கண்டுகொள்ளவே இல்லை. இப்போதும் திமுக கூப்பாடு போடத்தான் செய்தது. எனினும் பலனில்லை. தமிழின துரோகி என்ற பட்டம் கிட்டத்தட்ட கொடுக்கப் பட்டுவிட்டது. பாவம், "புலிவருது! புலிவருது!" -என்று பொய்யாக ஓலமிட்டபோது உதவிக்கு வந்த கூட்டம், உண்மையில் புலி வந்தபோது வாளாவிருந்துவிட்டது.

திருமா தன் சமீபத்திய பேட்டி ஒன்றில் இச்சதி பற்றி குறிப்பிட்டபோது திமுக கூறியதில் உண்மை இருப்பது உறுதியானது. அதிமுக + மதிமுக -வின் அறுபத்தியாறு சீட்டுகளுடன் காங்கிரஸ் மற்றும் பாமகவின் உறுப்பினர்களையும் சேர்த்து காங்கிரஸ் தலைமையில் ஒரு இடைக்கால அரசை அமைக்க ஒரு சதி நடந்ததாக அவர் கூறுகிறார். இம்மாதிரியான அரசியல் டிராமாக்கள் புதிதல்ல; ஜனநாயக நடைமுறைகள்தான். மேலும் திமுக -வின் கடந்தகால செயல்பாடுகள் இம்மாதியானவைதான் என்றாலும் இந்த சதியை நடத்த முயன்ற நேரம் மற்றும் முனைந்தோரின் வாய்ச்சவடால்கள் போன்றவை அம்பலத்திற்கு முக்கியமானவை.

ஈழத்திற்கு ஆதரவாக மனிதச் சங்கிலி நடந்த நேரம் எல்லோரும் காங்கிரசை கரித்துக்கொண்டிருந்த போது, ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு மத்தியில் உள்ளதுபோல் தமிழகத்திலும் காங்கிரஸ் தலைமை ஏற்கவேண்டும் என்று ஒருவர் பினாத்திக் கொண்டிருந்தார். அப்போது தான் தமிழனின் தீராத்துயராகிய ஜெயலலிதா ஈழத்திற்கெதிரான அறிக்கைகளை அள்ளிவிட்டுக் கொண்டிருந்தார். அவருடன் சேர்ந்து காங்கிரஸ் தலைமையில் ஆட்சியமைக்க பாடுபட்டவர் நம் தமிழ்க்குடி சொங்கி அவர்கள். ஈழத்து ரட்சகன் போல் தம்மை காட்டிக்கொண்ட ராமதாஸ் காகிரசுக்கு ஆதரவாக இதை அப்போது செய்தார். அப்போதேன்றால் 1947 -இல் அல்ல. வெறும் ஓரிரு மாதங்களுக்கு முன். இன்று காங்கிரஸ் துரோகம் செய்து விட்டது என்று கண்டுபிடித்து கூறி நமக்கு விழிப்புணர்வேற்றிவிட்டு கூட்டணி மாறி இருக்கிறார்.

திருமா மேலும் கூறுகிறார்: "காங்கிரஸ் கூட்டணி தேவையா? இப்படி ஒரு துயரான ஆட்சியில் நாம் தொடரவேண்டுமா? என்ற எண்ணம் கலைஞருக்கு ஏற்பட்டது, மீண்டும் தேர்தலில் வெல்ல திமுகவால் முடியும் என்று அவர் நம்பினார்." ஆட்சியை இழக்க அவர் தயாராக இருந்தாலும் ஆட்சி கவிழ்ந்ததும் தேர்தலை நடத்தவிடாமல், எஞ்சிய காலத்திற்கு காங்கிரஸ் தலைமையில் இடைக்கால ஆட்சியமைக்க பெரிய திட்டம் ஒன்று தீட்டப்பட்டு வருவதாக கருணாநிதி தன்னிடம் கூறியதாக பேட்டியில் திருமா குறிப்பிடுகிறார். ("நானா துரோகி?" என்ற தலைப்பிட்டு ஒரு நீண்ட அறிக்கையை ராமதாஸ் வெளியிட்டது நினைவிருக்கலாம்). மத்தியிலும் மாநிலத்திலும் அதிகாரம் முழுமையாக காங்கிரஸ் கையிலும், அரசுகளின் சிண்டு ஜெயலலிதா கையிலும், எட்டப்பனின் சிரிப்பு ராமதாஸ் வாயிலும், திருவிழாவில் காணாமல் போன குழந்தையின் திரு திரு விழிப்பை வைகோவின் கண்களிலும் பார்க்க தமிழன் கொடுத்து வைத்திருக்க வேண்டுமல்லவா?

எல்லாம் சரி. ஆனால், ஆட்சி கவிழ்ந்து தேர்தல் வந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்? கருணாநிதியின் மனிதச் சங்கிலி என்ற சிறு நாடகத்திற்கே தமிழ்நாடெங்கும் பேரெழுச்சி பொங்கியது நமக்கு தெரியும். ஆட்சியை இழந்திருந்தால் அவர் வானத்திற்கும் பூமிக்கும் குதித்து பெரும்பான்மை பெற்றிருப்பார். காங்கிரசுடன் சேர்த்து ஜெயாவையும், வெளியுறவு அமைச்சகத்தில் இருட்டுக்குசு விட்டுக்கொண்டிருக்கும் ஜந்துக்களையும் ஒருங்கே டர்ராக்கி இருக்கலாம். இதை நடக்கவிடாமல் செய்தது யார்? ஈழத்திற்காக பாரம் சுமக்கும் மருத்துவர் அய்யா அவர்கள். திமுக -வை பழி வாங்குகிறாராம்!! அதற்காக துரோகிகளை ஆட்சியிலமர்த்த முயன்றுள்ளார். புலிகளை பழிவாங்க ஈழ மக்களை பலிவாங்கும் காங்கிரசிற்கும் திமுகவை பழிவாங்க துரோக ஆட்சிக்கு துணைபோகும் ராமதாசுக்கும் வித்தியாசங்கள் ஏதும் உளதா? திமுக வை பழிவாங்க ராமதாசுக்கு அப்படி என்ன தேவை? ஆட்சியில் குறை கண்டுபிடிக்கிறேன் என்று கூறிக்கொண்டு எல்லா நலத்திட்டங்களிலும் ஆற்று மணலை வாரிப் போட்டவர் இவர். இடஒதுக்கீட்டின் பலனை மிகப் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு கொண்டு சேர்த்த பாமக -வை வன்னியப் பெருமை பேசும் சாதிப் பார்ப்பனர்கள் கையில் இன்று முழுமையாக கொடுத்துவிட்டார். காடுவெட்டி குரு போன்ற சாதியவாதிகளுக்காக திமுக -வை பழிவாங்குகிறார். இவரை நம்பினால் ஈழத்தமிழன் மட்டுமல்ல இங்குள்ள உண்மைத்தமிழனும் சிங்கி அடிக்கவேண்டியதுதான். நல்லவேளையாக மூன்றாவது அணியும் தோன்றிய கணத்திலேயே முடிந்துபோனது.

மூன்றாவது அணி அமைக்க முழுமூச்சாக பாடுபட்டவர் யாரென்று நமக்கு தெரியும். அவ்வணியில் இணைய மதிமுக விற்கு உள்ள பிரச்சினைகளை நம்மால் புரிந்து கொள்ள முடியும். ஒவ்வொரு தேர்தலின் போதும் வெற்றிபெறும் கூட்டணியில் இருந்து கடைசி நேரத்தில் வெளியேறி தோற்றுக்கொண்டிருக்கும் கட்சி அது. அணி அமைந்த பிறகு அக்கட்சியை அழைப்பதுதான் பொருத்தமாக இருக்கமுடியும். ஏற்கனவே திமுக கூட்டணியிலிருந்து வெளியேறிய பாமகவிற்கு என்ன தடை? அதன் தலைமையில்தான் கூட்டணி என்று திருமா கூறிக்கொண்டிருந்தார். அதை ஏற்க மறுத்து மூன்றாவது அணிக்கான வாய்ப்பை நிர்மூலமாகியது யார்? உலகத்தமிழர்கள் புரிந்து கொள்ளவேண்டும் பாமக -வை.

திமுக -வை சுழற்றும் சாட்டை காங்கிரஸ் கையில் சிக்கியது பாமகாவால். தேர்தல் நடக்கவிருந்த வாய்ப்பை கெடுத்தது பாமக. மூன்றாவது அணியை சிதைத்தும் அக்கட்சியே. பழியை காங்கிரஸ் மீது போட்டு நாடகமாடும் கருணாநிதிக்கும், கருணாநிதி மீது போட்டு ஓட்டு பொறுக்கும் ராமதாசுக்கும் ஒரே பெயர் தான். அது என்ன?!?!

Read More......

Wednesday, April 1, 2009

தரும(மற்ற) புரி - நாங்களும் ரவுடிதாண்டா!

· 12 comments

ஈகைத்தருமம் நிறைந்த அதியமான் நெடுமானஞ்சி ஆட்சிசெய்த பகுதிகளை உள்ளடக்கியது இன்றைய தருமபுரி மாவட்டம் என்று நாம் படித்திருப்போம். நான் அங்கு படித்த ஓரிரு வருடங்களில் தருமபுரி நகரம் தருமம் நிறைந்த நகரமா என்பதை அறிய முடியாவிட்டாலும் அது ஒரு ரவுடிகள் நிறைந்த இடம் என்பதை என் அனுபவத்தில் கண்டிருக்கிறேன். வீட்டுக்கொரு ரவுடி என்ற பாரம்பரியத்தைக் கொண்டது அந்நகரம். நெசவாளர் காலனி முனுசாமி, வென்னாம்பட்டி ரவி, பள்ளித்தெரு ராஜா, பஸ்டாண்டு ரசாக், டி.ஆர் -ஐ தாக்கிய எஸ்.ஆர், ஸ்டேடியம் ஜிம் குமார், என்று பலர் அங்கு ரவுடிப் பள்ளிகள் நடத்தி சேவை செய்து வந்தனர். அரசியல் ரவுடிகளை விட சுயேச்சை ரவுடிகளுக்கு நல்ல மவுசு இருந்தது. இவர்கள் தவிர காக்கி உடையில் பல ரவுடிகள் சென்ட்ரல் தியேட்டர் பக்கம் இருந்தார்கள்.

இவர்களில் ஜிம் குமார் தான் எனது ஜிம் மாஸ்டர். பள்ளித்தெரு ராஜா -வுடன் எனக்கு நல்ல பழக்கம் உண்டு. இவர்கள் தவிர ஆராயி என்ற பொம்பள ரவுடி ஒருவர் ரயில்வே ஸ்டேசன் அருகில் இருந்தார். வெகு குறுகிய காலமே இவர் அப்பகுதியை ஆட்சி செய்தார். திடீரென ஒருநாள் அவர் காணாமல் போய்விட்டார். ரொம்ப கவர்ச்சியான ரவுடியாகிய இவருக்கு வெளிமாநிலங்களில் இருந்து வந்து அங்கு படிக்கும் மாணவர்களிடம் பணம் கறப்பதுதான் முக்கிய தொழில். இரவு ஒன்பது மணியானதும் ரயில்வே ஸ்டேசன் சாலையில் சோடியம் வேப்பர் விளக்கு வெளிச்சத்தில் சிலம்பம் பயிற்சி செய்வார். சேலையை வேட்டிபோல் மடித்து கட்டிக்கொண்டு ஓரிரு அல்லக்கைகளுக்கு கற்றுத்தருவார்.

ஒருமுறை சில ஆந்திரா மாணவர்கள் ஆராயியிடம் மாட்டிக்கொண்டனர். பணம் பறித்துக்கொண்டு சிலர் கன்னத்தில் அறையும் கொடுத்திருக்கிறார். அவர்களில் கொஞ்சம் தைரியமான மாணவர் ஒருவர் "உன் பெயர் என்ன?" என்று கேட்டிருக்கிறார். உடனே கோபத்தின் உச்ச்சிக்கே போய்விட்ட ஆராயி தன் மார்பை திறந்து காட்டி இருபுறத்திலும் பச்சை குத்தியிருந்த தன் பெயரை பார்த்து படித்துக்கொள் என்று சொல்லிவிட்டாராம். பார்த்து பயந்துபோய் அலறிவிட்டார்கள் அம்மாணவர்கள். ஒரு துடுக்கான மாணவர் தனக்கு தமிழ் சரியாக படிக்கத்தெரியாது என்றும் அதனால் பொறுமையாக பார்த்து படித்து பெயரை தெரிந்து கொள்வதற்காக இன்னொருமுறை திறந்து காட்டச்சொல்லி கேட்டிருக்கிறார். செமைக்கடுப்பான ஆராயி அவரை அடித்து துவைத்துவிட்டார்.


பெரும்பாலும் போலீஸ்காரர்களுக்கு உற்ற தோழர்களாகத்தான் ரவுடிகள் இருப்பார்கள் என்பது உலக வழக்கு. ஆச்சர்யமான ஒருவிசயம் என்னவென்றால் போலீஸ்காரர்களுக்கும் பள்ளித்தெரு ராஜாவுக்கும் ஏழாம் பொருத்தும். மனிதர்களில் வேறுபாடு பாராட்டாமல் எல்லோரையும் ஒரே விதமாக மொக்கை போடும் இவரது இயல்பு தான் அதற்கு காரணம். போலீஸ்காரர்கள் இவரது தலையைக் கண்டாலே அலறி அடித்துக்கொண்டு ஓடிவிடுவார்கள்.

அரசு மருத்துவமனைக்கு பின்னால் ஒருபகுதியில் நான் எனது கல்லூரி நண்பர்களுடன் தங்கி இருந்த சமயத்தில் ரயிலடித் தெருவில் ஒரு சூதாட்ட கிளப் இருந்தது. காலையில் இருந்து மாலை ஆறுமணிவரை சீட்டாடிய களைப்பில் நம்ம பள்ளித்தெரு ராஜா கிளப்புக்கு வெளியே ஒருமணிநேரம் ரெஸ்ட் எடுப்பார். ஆறுமணி வாக்கில் நான் வீட்டுக்கு வரும்போது என்னைப் பிடித்துவைத்து ஒருமணிநேரம் மொக்கை போட்டுவிட்டுத்தான் அடுத்த இரவு ரவுண்டுக்கு சீட்டாட செல்வார். அதேபோல் காலையில் ஒன்பது மணிக்கும் ஒரு மொக்கை உண்டு.

அப்பகுதியில் இருந்த கடைகளுக்கு காலையில் ஒவ்வொரு குடம் தண்ணீர் பிடித்து வைக்கும் வேலையை ஒரு பதினைந்து வயது மதிக்கத் தக்க பெண் ஒருவர் செய்துவந்தார். மகா வெகுளியான அந்தப் பெண் குண்டலப்பட்டியிலிருந்து காலையில் தருமபுரி வந்து அப்பகுதியில் இருந்த சுமார் முப்பது கடைகளுக்கு தண்ணீர் பிடித்து கொடுத்துவிட்டு மாலைவரை வேறெங்கோ வேலை செய்துவிட்டு வீட்டுக்குச் செல்வார். அந்த சீட்டாட்ட கிளப்புக்கும் அவர்தான் தண்ணீர் பிடித்து வைப்பார். அரசு மருத்துவமனையில் அச்சமயம் பணியாற்றி வந்த கண்ணன் என்ற ஆப்டீசியன் அந்த கிளப்பில் சீட்டாடி பணத்தை விடுவது வழக்கம். தண்ணீர் வைக்க அந்த பெண் கிளப்புக்கு சென்றால் அவ்வப்போது அவரிடம் சில்மிஷம் செய்யும் வேலையை இவர் நெடுநாளாக செய்து வந்திருக்கிறார். நம்ம ராஜா அங்கு இல்லாவிட்டால் கண்ணனுடன் சேர்ந்து சில மைனர் குஞ்சுகள் அப்பெண்ணை அலரவைப்பார்கள். இதனால் அப்பெண் தினமும் என்னிடம் வந்து ராஜா கிளப்புக்கு வந்துவிட்டாரா என்று கேட்டுவிட்டுத்தான் அங்கு தண்ணீர் வைக்க செல்வார். சமயங்களில் வெகுநேரமாகியும் ராஜா அங்கு வந்திருக்க மாட்டார். அந்நாட்களில் அப்பெண் பயந்து பயந்து அங்கு சென்று வருவார். எனக்கு எப்போதும் காலை வகுப்புகள் அரசு மருத்துவ மனையிலும் மாலை வகுப்புகள் பெரியாம்பட்டி கல்லூரியிலும் நடக்கும். காலை வகுப்புகளை பெரும்பாலும் கட் அடித்துவிட்டு கிளப்புக்கு எதிரில் இருக்கும் எங்கள் வாடிக்கையான செட்டிநாடு மெஸ்ஸில் ஆச்சியிடம் வம்பு வளர்த்துக் கொண்டு இருப்பேன். இதனால் கிளப் சங்கதிகளும் அப்பெண் பற்றியும் எனக்கு நன்றாக தெரிந்திருந்தது.

அப்பகுதியில் இருத்த ஒரு ஜவுளிகடையில் புதிதாக ஒரு டைலர் வந்திருந்தார். வெகு அபூர்வமாக பேசுவார். அவரை பார்த்தாலே நோன்ஜான்களுக்குக் கூட அடித்து பணம் பிடுங்கத்தோன்றும். சவுத் -இலிருந்து வந்தவராம். அநாதை என்று சொன்னார்கள். இப்படிப்பட்ட மனிதர் திடீரென்று ஒருநாளில் இருந்து எங்கள் மெஸ்சுக்கு காலையில் வந்து என்னை தேடிப்பிடித்து வணக்கம் சொல்லிவிட்டுப் போகும் வழக்கத்தை மேற்கொண்டார். இது எனக்கு வினோதமாக தோன்றினாலும் ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று நான் அவரை கேட்கவில்லை. அவரும் அதற்குமேல் எதுவும் பேசமாட்டார்.

ஒருமுறை ஜி.எம் தியேட்டருக்கு நண்பர்கள் ஏழெட்டு பேராக இரவு காட்சிக்கு சென்றிருந்தோம். வழக்கம் போல முதல் அரைமணி நேரத்திலேயே நான் மட்டும் தனியாக வீட்டுக்கு கிளம்பிவிட்டேன். தியேட்டரில் இருந்து யாரோ என்னை தொடர்ந்து வருவதுபோல் தோன்றினாலும் வீட்டுக்கருகில் வந்தபோதுதான் கவனித்தேன். அந்த டைலர் என்னை தொடர்ந்து வந்து அருகில் நெருங்கினார். முகம் உப்பியிருந்தது. நிறைய அழுதிருப்பார் போல இருந்தது. "என்னங்க ஆயிற்று, என்ன விஷயம், ஏன் என்னை தொடர்கிறீர்கள் என்று கேட்டேன்?" பொலபொலவென அழ ஆரம்பித்த அந்த டைலர் தன் மனைவியின் தாலியை ஆப்டீசியன் கண்ணன் பறித்துக் கொண்டதாகவும் மேலும் தன் மனைவியின் சீலையை அவிழ்த்து அவமானப் படுத்தியுதாகவும் சொன்னார். நான் கண்ணனுடன் மருத்துவமையில் பணிபுரிவதாக நினைத்து என்னிடம் சொன்னார் போலிருக்கு. எனினும் அவர் இந்த விசயத்தைச் சொன்னவுடன் எனக்கு கோபத்தில் தலை பாரமாகிவிட்டது. வெறியில் பற்கள் இறுகின. கண்ணனின் கதையை இன்றோடு முடமாக்குவது என்று முடிவெடுத்தேன். சினிமா விட்டு நண்பர்கள் வருவதற்குள் இதை சமயோசிதமாக செய்யவேண்டும் என்று திட்டமிட்டேன்.

எனது பைக்கில் அவரை அழைத்துக் கொண்டு நேராக பள்ளித் தெருவுக்குப் போனேன். ராஜா இந்நேரம் குடித்துவிட்டு தன்னிலை மறந்து இருப்பாரென்று நன்றாக தெரியும். அவரை அணுகுவது ஆபத்தானதும் கூட. போகும் வழியில் அவரிடம் மீதிக்கதையைக் கேட்டுக்கொண்டேன். அந்த தண்ணீர் எடுத்து வைக்கும் பெண்ணை இவர் சில நாட்களுக்கு முன்தான் திருமணம் செய்து கொண்டதாக கூறினார். என்னைப் பற்றி அந்த பெண் நல்லவிதமாக அவரிடம் சொன்னதாகவும் சொன்னார். தினமும் காலையில் ஏன் என்னை தேடி வந்து அவர் வணக்கம் வைத்துவிட்டு செல்கிறார் என்று புரிந்தது.

பயங்கர மப்பில் இருந்தாலும் ராஜா என்னைப் பார்த்ததும் "வாடா, இங்க என்ன பண்ற? இவன் யாரு?" என்றார். நான் விசயத்தை முழு மூச்சில் ஆவேசத்துடன் சொன்னேன். அவர் அதை காதில் போட்டுக்கொண்ட மாதிரி தெரியவில்லை. வழக்கமான மொக்கையுடன் போதையில் வேறு ஏதோ பேச ஆரம்பித்தார். கடுப்பாக இருந்தாலும் பத்துநிமிடம் குறுக்கே எதுவும் பேசாமல் பொறுமையாக மொக்கையை கேட்டேன். இதற்குமேல் இங்கே வேலையாகாது என்று நினைத்து "அண்ணே! வந்து..." என்று அரைமனதுடன் மீண்டும் விஷயத்தை ஆரம்பித்தேன். இருந்தாற்போல் இருந்து திடீரென என் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். "அதான் சொல்லிட்டல்ல, திரும்ப எதுக்குடா சொல்ற!" என்று முறைத்தார். பிறகு என்ன நினைத்தார் என்று தெரியவில்லை; "வண்டியை எடுடா என்று கூறி" பின்னால் அமர்ந்து கொண்டார். "அண்ணே அவரும் என்கூட வந்தாருக்காரு, வண்டியில அவரும் வரட்டும்னே!" என்றேன். "அவன் எதுக்குடா?" என்றார். "என்னது, அவன் எதுக்கா! அவருக்குக்காகத்தானே உன்னையே பாக்க வந்தேன்!" என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டு மீண்டும் கதையை அவருக்கு சுருக்கமாக சொல்ல ஆரம்பித்தேன். நான் திரும்ப சொல்வது மொக்கை போல் தெரிந்தது போலிருக்கு அவருக்கு. "சரி சரி அவனையும் ஏறச்சொல்லு! என்றார்.

கண்ணன் வீட்டில் வண்டியை நிறுத்தியதும் "நீ வீட்டுக்கு போ, நான் அப்பறமா வரேன்" என்று சொல்லிவிட்டு கண்ணன் வீட்டுக்குள் நுழைந்தார். இவர் ஏதாவது செய்வார் என்று கூட்டிவந்தால் இவர் அவனுடன் சேர்ந்து சீட்டாட வந்தவர் போல் கூலாக என்னை போகச்சொல்லுகிறாரே என்று ஏமாற்றமாக இருந்தது. கயவர்கள் பற்றி கலைஞரிடம் மக்கள் முறையிட்டால் அவர் காங்கிரஸ் உடன் சேர்ந்து வெறுப்பேற்றுவது போல அந்த சூழல் இருந்தது. அங்கேயே நின்று கொண்டிருந்தோம். சிறிது நேரத்தில் அவனுடன் சேர்ந்து வெளியே வந்தார். கண்ணன் சிரித்த முகத்துடன் வந்தான். டைலாரைப் பார்த்ததும் நக்கலாக "என்னடா, இங்க என்ன பண்ற? கட்டச்சி வீட்ல இருக்காளா? வா அவள பார்க்க போவோம்" என்றான். நான் அவரைப் பார்த்தேன். அவரது கண்ணில் பயம் தொற்றிக் கொண்டது. அவர் வீட்டிற்கு ஓட ஆரம்பித்தார். எதுவும் பேசாமல் இருந்த ராஜா எட்டி அவர் சட்டையை பிடித்தார்.

"ஆஹா நிலைமை வேறுமாதிரியாகப் போகிறதே" என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு ஒரு புதிய திட்டத்தை வகுத்தேன். நண்பர்களை இப்போது அழைக்க நேரமில்லை. போதையில் இருக்கும் ராஜா மற்றும் கண்ணனை இந்த டைலர் தனியாக சமாளிக்க முடியாது. என்ன ஆனாலும் சரி எந்த அசம்பாவிதமும் நடக்காமல் சமாளித்தாக வேண்டும் என நினைத்துக்கொண்டு அவர்கள் பின்னால் நடந்தேன். டைலரின் சட்டையை கொத்தாக பிடித்துக்கொண்டு ராஜா முன்னாள் நடந்தார். கண்ணன் என்னை திரும்பி கூட பார்க்கவில்லை.

மெலிதாக எரியும் மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் அந்தப்பெண் மூலையில் படுத்திருந்தார். கண்ணனும் ராஜாவும் உள்ளே நுழைந்தனர். பின்னால் நானும் டைலரும் திகிலுடன் சென்றோம். ராஜாவுக்கு உள்ளே சரியாக எதுவும் தெரியவில்லை போல. "யேய்!!" என்று கத்தினார். ராஜாவுடன் கண்ணனைப் பார்த்ததும் அந்தப் பெண் வீல் வீல் என அலற ஆரம்பித்தார். எனக்கு அது பலியாட்டின் கனைப்பை போல் அபாயமாகத் தோன்றியது. டைலரும் குரலெடுத்து அழ ஆரம்பித்துவிட்டார். இனியும் தாமதிக்க முடியாது என்றெண்ணி இருவரையும் விளக்கிவிட்டு ஒரே ஓட்டமாக அப்பெண்ணை நெருங்கினேன். என்னைப்பார்த்ததும் கன நேரத்தில் ஓடிவந்து என் பின்னால் நின்றுகொண்டார். என் சட்டையை பின்புறமாக கொத்தாக பிடித்துக்கொண்டு "அண்ணா காப்பாத்துங்கண்ணா, காப்பாத்துங்கண்ணா!" என்று பதற ஆரம்பித்தார். ஈழக் கொடுமைகள் தொடர்பான வீடியோவில் பள்ளிச்சிறுமிகள் போர் விமானங்களைக் கண்டு வீறிட்டு அலறும்போது நமக்கு எப்படி மனம் பதைபதைக்குமோ அதுபோன்ற பதைப்பு எனக்கு அப்போது ஏற்பட்டது. இனி உயிரே போனாலும் இப்பெண்ணை எவனும் தொட அனுமதிக்கக் கூடாது என்று முடுவேடுத்தேன். அவரது உதறல் எனக்கு எச்சரிக்கை உணர்வையும் ஆவேசத்தையும் வரவழைத்துவிட்டது. அப்பெண்ணை ஒரு மூலைக்கு நகர்த்தி அரணாக நின்றுகொண்டேன்.

தான் அப்பெண்ணை தாக்கப்போவதாக நான் நினைக்கிறேனென்று ராஜா புரிந்து கொண்டார். போதையும் தெளிந்திருந்தது. "நீ ஏன்டா பேயறைந்த மாதிரி நிக்கிற" என்று என்னைப் பார்த்து சொன்னவாறே கண்ணன் தலையில் ஒரு எத்து எத்தினார். முடியை கொத்தாக பிடித்து இழுத்துவந்து அப்பெண்ணின் காலருகே அவனை கிடத்தினார். அப்பெண் இப்போது என் பின்னாலிருந்து வெளியே வந்து என் கையைப் இருகப்பற்றிக்கொண்டார். ராஜா எத்த காலை தூக்கியதைப் பார்த்து அலறியடித்துக்கொண்டு மீண்டும் அப்பெண்ணின் காலில் விழுந்தான் கண்ணன். "எங்கடா அந்த தாலி?" என்று அவர் கேட்டு முடிப்பதற்குள் அந்த அரைப்பவுன் தாலியை பாக்கேட்டிலிருந்து அப்பெண்ணின் காலுக்கடியில் வைத்தான் கண்ணன். பிறகு எங்கள் மூவரையும் வெளியே போகச்சொல்லிவிட்டு கதவை சாத்தி அரைமணிநேரம் கண்ணனை அடித்தார். பிறகுதான் சற்று நிம்மதியாய் இருந்தது.

ஒருவழியாக வெளியே வந்த ராஜா வண்டி சாவியை கேட்டார். பள்ளித்தேருவுக்குப் போன எந்த வண்டியும் திரும்ப வராது என்று எனக்கு நல்லாவே தெரியும் என்றாலும் எதுவும் பேசாமல் சாவியை கொடுத்தேன். திரும்பவும் கண்ணனை வலுக்கட்டாயமாக வண்டியில் ஏற்றிக்கொண்டு எங்கோ போனார். இன்னமும் திகில் விலகாத இருவரையும் அழைத்துக் கொண்டு எங்கள் வீட்டுக்குப் போனேன். உடனடியாக ஆச்சிக்கு போன் செய்து செட்டியாருக்கு தெரியாமல் ஒருநிமிடம் வந்துபோகும்படி சொன்னேன்.

அவர் வந்ததும் நான் சுருக்கமாக சொன்ன அந்த கதையைக் கேட்டு என்னைத் திட்ட ஆரம்பித்துவிட்டார். "உனக்கென்ன பயித்தியமா, இதெல்லாம் உனக்கு தேவையா?" என்ற ரேஞ்சில் பேச ஆரம்பித்துவிட்டார். பின்னாலே செட்டியாரும் வந்துவிட அவருக்கு ஆச்சியே அவரது வெர்சன் கதையை சொல்ல ஆரம்பித்தார். ராஜா எடுத்துச் சென்ற வண்டிக்காக செட்டியார் என்னை திட்ட ஆரம்பித்துவிட்டார். இதற்கிடையே விஷயம் தெரிந்து நண்பர்கள் தியேட்டரில் இருந்து வந்துவிட்டனர். "நாமே கண்ணனை துவைச்சி தொங்கப் போட்டிருக்கலாம், ராஜாவை கூப்பிட்டு பிரச்சினையை ஏன் பெரிசு பண்ணின?" என்று நண்பர்கள் பேச ஆரம்பித்தனர். ("அடப்பாவிகளா! நல்லது நினைச்சி ஏதாவது செஞ்சா ஏண்டா திட்டறிங்க !") கொஞ்ச நேரத்தில் கண்ணன் வண்டியை எடுத்துவந்து வீட்டில் பார்க் செய்துவிட்டு, சைடு லாக் போட்டுவிட்டு சாவியை வெளியிலிருந்தே வீசிவிட்டு வேகமாக சென்றுவிட்டான். ராஜா சொல்லி அனுப்பி இருப்பார் போலிருக்கு.

சிறிது நேரத்தில் அனைவரும் என்னை கும்முவதை நிறுத்திவிட்டு அவ்விருவரையும் தேற்ற ஆரம்பித்தனர். அவர்கள் திருமணம் செய்து கொண்டதை ஏன் முன்னமே தெரிவிக்கவில்லை என்று கடிந்து கொண்டனர். செட்டியார் தனது ஆதிகாலத்து மகிந்திரா வேனை எடுத்துக்கொண்டு வந்தார். அனைவரும் தொபபூர் பஞ்சாபி தாபா சென்று அவர்களுக்கு திருமண விருந்தைக் கொடுத்தோம். பிறகு வேனில் ஏற்றி இருவரையும் குண்டலபட்டி அனுப்பிவைத்தோம். கடைசியாக வேனில் ஏறும்போது அப்பெண் என்னிடம் அவரது பாட்டி மீன் குழம்பு நன்றாக செய்வார் என்றும் குண்டலப்பட்டி ஒருமுறை நான் வரவேண்டும் என்றும் சொன்னார். டைலர் வழக்கம்போல் "வணக்கம் சார்" என்று மட்டும் கூறிவிட்டு வேனில் ஏறிக்கொண்டார்.

எனக்கு சீ ஃபுட் சாப்பிட்டால் ஒவ்வாமை ஏற்படும் என்று நான் அப்பெண்ணிடம் ஏனோ சொல்லவில்லை.

Read More......