அவ்வப்போது யாராவது எதையாவது கிளப்பிவிட்டு தமிழ்மணத்தை அல்லோகலப் படுத்துவதால் அச்சமயங்களில் திரட்டியின் முகப்பிற்கு வரவே பகீரென்றிருக்கிறது. சாட்டிலோ தனி மடலிலோ திட்டிக் கொள்ளும் கொள்ளும் நேரம்போக முச்சந்திக்கு வந்து முண்டாசு தட்டுவதும் ஒரு கிக்குதான் போலிருக்கு.
இந்த பரஸ்பர டவுசர் அவுத்துக்கொள்ளும் வைபோகத்தில் பங்கு பெறுவோர் தனித்தனியாகவும் கூட்டாகவும் சில வரலாற்று சாகசங்களை அரங்கேற்றி இருப்பார்கள் என கருத இடமிருக்கிறது. அவற்றை விலாவாரியாக விளக்கிவிட்டு அவர்களது குடுமிப்பிடியை தொடர்ந்தால் வேடிக்கைப் பார்ப்பவர்களுக்கு வசதியாக இருக்கக்கூடும். இவர்களது ஒவ்வொரு பதிவையும் தனித்தனியாக படித்து அர்த்தம் ஊகித்து தெரிந்த செய்திகளுடன் ஒப்பிட்டு பார்த்து ஒரு முடிவுக்கு வருவதற்குள் நம்ம தலைக்கா எகிறி விடுகிறது என்பது சோகமான செய்தி.

இருப்பினும் தற்போது சூடாக பரிமாறிக்கொள்ளப்படும் வசவுகளுக்கு மூலகாரணம் புரியாமல் தவிக்கும், தமிழ்மண அரைடிக்கட்டுகளின் சவுகரியத்திற்காக நான் ஊகித்த விஷயங்களை பகிர்ந்து கொள்வது உசிதமாகப்படுகிறது. இந்த எபிசோடின் துவக்கம் அமெரிக்காவில் துவ்ங்குவதாகக் கொள்ளமுடியும். புதிதாக திரட்டி சமைத்துள்ள அமெரிக்கவாழ் மூத்த பதிவர் ஒருவர் சிங்கையில் உள்ள ஒரு மூத்த கருத்துப் பதிவரைப் பற்றி ஒரு பிலாக்கொகிராபி பதிவை எழுதினார். அந்த சிங்கைபதிவருடன் பன்னெடுங்காலமாக கொடுக்கல் வாங்கல் பிரச்சினை உள்ள மும்மூர்த்திப் பதிவர்கள் பின்னூட்டத்தில் அதை விமர்சித்திருந்தனர். அந்த மூன்று மூத்த பதிவர்களில் வெளியே தமிழ்த் திரட்டி நடத்திவரும் பதிவரும் தனது சீரிய பதிவுகளால் அறியப்பட்ட ஒரு மூத்த பதிவரும் டெசிபல் குறைவான விமர்சனத்தை வைக்க, ஐரோப்பா பயணத்திலிருக்கும் ஒரு மூத்த மொக்கைப் பதிவர் வழக்கம் போல் சவுண்ட் பைட்டை கூடுதலாக சேர்த்திருந்தார். அமெரிக்கவாழ் மூத்த பதிவர் அபாண்ட குற்றச்சாட்டு ஒன்றை ஏற்கனவே இவர்மீது வைத்திருந்தார் என்பது கூடுதல் தகவல்.
இந்நிலையில், சிறிது காலமாக நட்புக்கரத்தை நீட்டிபார்த்து ஓய்ந்துபோன சிங்கைப் பதிவர் இந்த அதிரடி விமர்சனத்திற்கு எதிவினையாக பதிவொன்றை வெளியிட்டுவிட மைனஸ் இருபது டிகிரி சுவீடன் தட்பவெட்பத்திலிருந்து ஒரு பிழம்புப் பதிவு ஒன்று இன்று வெளியாகி உள்ளது. இந்த பிழம்பை வேடிக்கை பார்க்கச்சென்று முடி பொசுங்கிப் போனவர்களெல்லாம் அலறி அடித்துக்கொண்டு ஓட எதிர்த்திசையில் ஒரு சூறாவளி தாக்கத்தொடங்கியது. காண்டின் உச்சத்தை அடைந்து விட்ட கஜேந்திரன் பொறுமை இழந்து சுழன்றடிக்கத் தொடங்கியதால் ஏற்பட்ட புயல்தான் அது. தனது சுவாரசியமான பதிவுகளால் பெருமதிப்பைப் பெற்றுள்ள இந்த மூத்தப் பதிவரின் கோபத்திற்கு காரணம் தான் வழக்கமாக ஜோவியலாக காலை வாரிவிடும் இன்னொரு மூத்த பதிவருக்கு மற்றொரு மூத்த பதிவர் இட்ட அநாகரீகமான பின்னூட்டமேயாகும்.
அநாகரீகப் பின்னூட்டம் என்பது வலை உலகின் சாபக்கேடு என்கிற நிலையில் அப்பின்னூட்டமிட்ட அந்த மூத்த பதிவர் நியாயமான காரணத்திற்கு கீழ்த்தரமான பின்னூட்டத்தை இட்டிருக்கக் கூடாது என வெய்ட்டிங் லிஸ்ட்டிலிருந்த மேலும் சில மூத்த பதிவர்கள் இப்போது கருத்து சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். கோலிகுண்டு விளையாட்டில் பேந்தா கட்டி தோற்றுப்போன சிறுவனுக்கு ஆறுதல் சொல்வது போன்று ஈழத்தமிழருக்கு அறிவுரைகூறிக்கொண்டு திரியும் பலர் தங்களது காமெடிகளால் தமிழ்மணத்தை வயிறு குலுங்க சிரிக்க வைக்கின்றனர் என்பது யாவர்க்கும் தெரிந்ததே. அந்த காமெடி டிராக்குகளுக்கு ஒரு குரூரத்தன்மையை தொடர்ந்து வழங்கிவரும் பன்மொழி வித்தகரான இந்த மூத்த பதிவருக்கு ஒரு புதிய போர்வாள் கிடைத்திருப்பதாக வேறு சில மூத்த பதிவர்கள் வருத்தப்படுகிறார்கள்.
ஆக, பிழம்பாலும் புயலாலும் பாதிக்கப்பட்டு அகதி முகாம்களில் தஞ்சம் புகுந்த தமிழ்மண சிறுபான்மை பதிவர்களின் பாதுகாப்பு கருதி ஒரு இடைக்கால போர் நிறுத்தத்திற்கு மூத்த பதிவர்கள் முன்வரவேண்டும். நான்காண்டு காலாமாக நடைபெற்று வரும் இந்த மூன்றாம் தமிழ்மண பாணிபட்டுப்போர் நான்கு நாட்களில் நிறுத்த முடியாது என அரசியல்வாதிகள் போல் காமெடி செய்யாமல் உடனடியாக போர் நிறுத்தம் செய்யவேண்டும். இல்லாவிட்டால் மொத்தமாக எல்லோரும் ரிட்டையராகி ஆளுக்கொரு திரட்டி உருவாக்கி தனி சாம்ராஜ்யம் நடத்துமாறு தாழ்ந்த பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
பின் குறிப்பு: நியூ ஜெர்சி காட்டுப் பகுதி ஒன்றில் தனது கடைசிகாலத்தில் ஐயின்ஸ்டீன் தங்கிஇருந்து மாஸ் எனர்ஜி கொள்கையையும் குவாண்டம் பிசிக்ஸையும் ஒருமைப் படுத்த முயற்சி செய்து வந்தார். அவர் தங்கி இருந்த பகுதிக்கு அருகில் நான் வசிப்பதால் பிழம்புப் பதிவையும் புயல் பதிவையும் ஒருமைப் படுத்த முடியுமா என தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறேன். விடை கிடைத்தால் மகிழ்ச்சி. அதற்குள் இரண்டுமே கட்டுடைக்கப் பட்டு அதர பழசாகி பின் அவரவர் வேலையைப் பார்க்கச்சென்று விடுவார்களேயானால் அதுவும் மகிழ்ச்சியே.
[அமேரிக்கா.. இளா.. சிங்கப்பூர்... கோவி... ஓசை... குழலி... ரவி... சுவீடன்... லக்கி... காண்டு... டோண்டு... பெயரிலி... ஐன்ஸ்டீன்... அடச்சே] Read More......



