Showing posts with label மொழிபெயர்ப்பு. Show all posts
Showing posts with label மொழிபெயர்ப்பு. Show all posts

Monday, February 2, 2009

[தி நியூ யார்க் டைம்ஸ்]: "சி.என்.என், பி.பி.சி, அல் ஜசிராவை விரட்டி அடிப்போம்" - ராஜ பக்சே

· 4 comments

இன்றைய "தி நியூ யார்க் டைம்ஸ்" நாளிதழில் வெளியான கட்டுரையின் தமிழாக்கம் கீழே!

காயமுற்ற நோயாளிகளால் நிரம்பி வழியும் ஒரு இலங்கை மருத்துவமனையில் ஞாயிறு இரவு மூன்று எறிகணை தாக்குதல்கள் நடந்துள்ளதாக சர்வதேச அமைப்புகளும் மருத்துவ ஊழியர்களும் தெரிவித்துள்ளனர். முதலிரண்டு தாக்குதல்களில் குறைந்தது ஏழுபேர் இறந்துள்ளனர். பெண்கள் மற்றும் குழந்தைகள் பிரிவில் நிகழ்ந்த தாக்குதல்களில் இறந்தவர்களை எண்ணும் பணி திங்கள் வரையிலும் தொடர்வதாக கூறப்படுகிறது.

உலகிலேயே மிக நீண்ட காலம் நடைபெறும் மக்கள் போராட்டங்களில் ஒன்றான இதில் பிரிவினைவாத எல்.டி. டி. இ - யினரை ஒரு சிறிய பகுதிக்குள் இலங்கை இராணுவம் முடக்கிய பிறகு இது போன்ற தாக்குதல்கள் தொடர்கின்றன. எந்தப்பகுதியில் இருந்து எறிகணைகள் வருகின்றன என்று கணிப்பது கடினமாக உள்ளது.

புது குடுயிருப்பு பகுதியில் உள்ள அந்த மருத்துவமனையில் நடைபெற்ற முதல் தாக்குதலில் இருவர் இறந்ததாகவும் ஐவர் காயமுற்றதாகவும் செஞ்சிலுவை சங்கத்தின் பன்னாட்டு அமைப்பு ஒரு செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது. இரண்டாவது தாக்குதலில் ஐவர் இறந்தாக மருத்துவ ஊழியர் ஒருவரை மேற்கோள் காட்டி ஒருங்கிணைந்த ஊடகம் (Associated Press) தெரிவித்துள்ளது. இரவு 11.45 -க்கு குழந்தைகள் பிரிவு தாக்கப் பட்டதாக கொழும்பில் இருக்கும் ஐ.நா. செய்தி தொடர்பாளர் கார்டன் வீயஸ் திங்களன்று தொலைபேசி வாயிலாக தெரிவித்தார். "பெண்கள் மற்றும் குழந்தைகள் பிரிவு தாக்கப்பட்டது. கடவுளே! இதை விவரிக்க வார்த்தைகளே வரவில்லையே! இன்னும் இறந்தவர்கள் எண்ணிக்கையை எண்ணிக்கொண்டுள்ளோம்" -என ஐ.நா. பணியாளர் ஒருவர் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதற்கிடையே, காயமுற்றவர்கள் பற்றிய செய்திகளை ஒளிபரப்பி போராளிகளுக்கு அனுதாபத்தை காட்டும் வெளிநாட்டு ராஜதந்திரிகள், உதவி அமைப்புகள் மற்றும் செய்தியாளர்களை வெளியேற்றப் போவதாக அரசு அதிகாரி மிரட்டல் விடுத்துள்ளார்.

"தி ஐலேண்டு" இதழுக்கு அளித்த நேர்காணலில் பாதுகாப்பு அமைச்சர் கோத்தபாய ராஜபக்சே சி.என்.என், பி.பி.சி, அல்ஜசிரா ஆகிய மூன்று ஊடகங்களை பெயர் குறிப்பிட்டு சாடியுள்ளார். "அம்மூன்று ஊடகங்களும் விரட்டி அடிக்கப்படவிருக்கிறார்கள்" என்று அவர் கூறியதாக பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

அரசுக்கும் போராளிகளுக்கும் சண்டை வலுத்துள்ள நிலையில் இப்படி ஒரு கருத்தை அவர் தெரிவித்துள்ளார். வேகமாக சுருங்கி வரும் விடுதலைப் புலிகளின் வசமுள்ள வடகிழக்குப் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் கதி குறித்து அபாயம் அதிகரித்துள்ளது.

இராணுவம் அழைத்துச்செல்லும் பகுதிகள் தவிர வேறெங்கும் பத்திரிகைகள் அனுமதிக்கப் படாததால் போர்முனையில் என்ன நடக்கின்றது என்பது வெளியுலகில் அறியப்படாமலேயே உள்ளது. தாக்குதலுக்குள்ளான அந்த மருத்துவமனை அதன் கொள்ளளவுக்கு மீறி காயமடைந்த ஐந்நூறு நோயாளிகளுக்கும் மேல் மருத்துவம் செய்து வந்ததாக அம்மருத்துவமனையை நடத்தும் செஞ்சிலுவைச் சங்கம் தெரிவிக்கின்றது. கட்டாந்தரைகளிலும், கூரைப் பாய்களிலும் நோயாளிகள் கிடத்தப்பட்டும் பலர் வரிசைகளில் காத்திருந்தனர். அரசு நடத்தும் மருத்துவமனைகளில் அவர்கள் அனுமதிவேண்டி நீண்ட வரிசையில் இன்னமும் காத்திருப்பதாக அவ்வமைப்பு தெரிவிக்கிறது.

Read More......

Friday, December 19, 2008

ச்சும்மா ட்டமாஷ் - 75: அருந்ததி ராய் - நவம்பர் செப்டம்பரல்ல! - பகுதி 2

· 5 comments

ழுத்தாளர் அருந்ததி ராய் அவர்களின் கட்டுரை அவுட்லுக் இதழில் சமீபத்தில் வெளியானது. மும்பை பயங்கரவாதம் பற்றிய அக்கட்டுரையை ச்சும்மா ட்டமாஷ்-75 -க்காக மொழிபெயர்த்து இப்பதிவில் வெளியிடுகின்றேன். இதன் முதல் பகுதி சென்ற பதிவில் வெளியிட்டுள்ளேன். மூல கட்டுரைக்கும் மொழி பெயர்ப்புக்கும் அர்த்த வேறுபாடுகள் இருக்குமானால் அப்பிழை முழுக்கவும் என்னைச்சார்ந்ததே!


ஒன்பது பதினொன்றல்ல;

நவம்பர் செப்டம்பரல்ல! - பகுதி 2

ர்.எஸ்.எஸ். அமைப்பு 45,000 கிளைகளையும், பெரும் எண்ணிக்கையில் தான அமைப்புகளையும், இந்தியாவெங்கும் வெறுப்புத்தத்துவத்தை போதிக்கும் எழுபது லட்சம் ஆர்வலர்களையும் கொண்டுள்ளது. இதில் நரேந்திர மோடியும் ஒருவர். கூடவே, முன்னாள் பிரதமர் ஏ.பி. வாஜ்பாய், தற்போதைய எதிர்கட்சித் தலைவர் எல்.கே. அத்வானி, பல மூத்த அரசியல்வாதிகள், அதிகாரிகள், காவல்துறையினர் மற்றும் உளவுத்துறையினர் என பலரும் இதில் உறுப்பினர்களாவர்.

தச்சார்பற்ற ஜனநாயகத்தை குழப்ப இவர்கள் போதாதென்றால் குறுகிய வைராக்கியங்களை போதிக்கும் எண்ணற்ற முஸ்லீம் அமைப்புகளையும் இதில் சேர்த்துக்கொள்ளலாம்.

க, இந்தச்சமனில், பிரிவு-அ, பிரிவு-ஆ இரண்டில் ஒன்றை நாம் தேர்ந்த்டுத்தாக வேண்டும். நான் பிரிவு-ஆ வை தேர்ந்தேடுத்துக்கொள்கிறேன். அடுத்து, நமக்கு ஒரு களம் வேண்டுமல்லவா, எப்போதும்?

ந்த அணுஆயுத துணைக்கண்டத்தில் "பிரிவினை"தான் அந்தக்களம் . இந்தியா மற்றும் பாகிஸ்தானை பிரிக்கும் அந்த "ராட்கிலிஃப்" எல்லைக்கோடு மாநிலங்கள், மாவட்டங்கள், கிராமங்கள், வயல்கள், இனங்கள், நீரமைப்புகள், வீடுகள், குடும்பங்கள் ஆகியவற்றின் ஊடாக கிழித்துச் செல்லுமாறு ஒரே இரவில் வரையப்பட்டது. கிளம்பும் தருவாயில் இறுதியாக பிரிட்டன் நமக்கு விட்ட ஒரு எத்துதான் அது. பத்துலட்சம் மக்களின் படுகொலைக்கும், கற்கால வரலாற்றின் மிகப்பெரிய மனித இடப்பெயர்வுக்கும் காரணமானது அப்பிரிவினை. என்பது லட்சம் மக்கள் தங்கள் வீடுகளைவிட்டு, உடுத்திய ஆடையோடு வெறுங்கையுடன் (முஸ்லீம்கள் புதிய இந்தியாவை விட்டும், இந்துக்கள் புதிய பாகிஸ்தானை விட்டும்) வெளியேறினர். அவர்கள் ஒவ்வொருவரும் விவரிக்க முடியாத வலியையும், வெறுப்பையும், திகிலையும், ஏக்கத்தையும் தம்முள் சுமந்து சென்றனர். அறுபடாமல் மிச்சமிருக்கும் தசைகளில் உள்ள புண், அந்த ரத்தம், நொறுங்கிய எலும்புகள் இவையாவும் நம்மை இன்னமும் குறுகிய வெறுப்பு, பழகிப்போன திகில், கூடவே சிறிது அன்பு இவற்றால் நம்மை இணைக்கின்றன. இவைதான் மீண்டுவர எந்த முகாந்திரமும் இதுவரை தென்படாத ஒரு அபாயத்தில் காஷ்மீரை தள்ளியுள்ளன. அது இதுவரை அறுபதாயிரம் பேரை கொன்றுள்ளது. "தூய்மை தேசமாகிய"(Land of Pure) பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசானது; விரைவில் அது ஊழல் நிறைந்த ஒன்றாக, கொடூர ராணுவ தேசமாக, வேற்று நம்பிக்கைகளை வெளிப்படையாக வெறுக்கும் நாடாக மாறிப்போனது. ஆனால், மறுபுறத்தில் விஷயம் அற்புதமாக கையாளப்பட்டது. இந்தியா பிறக்கும் முன்பிருந்தே, 1920 -களில் தொடக்கி, இந்தியாவின் ரத்த ஓட்டத்தில் பஜ்ரங்கியின் முன்னோர்கள் நஞ்சை கலந்து வந்தனர். 1990 -வாக்கில் அதிகாரத்தை கைப்பற்ற தயாரானார்கள். 1992 -இல் எல்.கே.அத்வானி தலைமையில் இந்துக்கும்பல் பாபர் மசூதியில் புகுந்து அதை இடித்தது. 1998 -இல் பா.ஜ.க. மத்தியில் ஆட்சிக்கு வந்துவிட்டது. அமெரிக்காவின் "பயங்கரவாதத்தின் மீதான" போரால் காற்று இவர்கள் பக்கம் வீசத்தொடங்கியது. அது இவர்களை தங்கள் விருப்பம்போல் செயல்பட அனுமதித்தது. மேலும் படுகொலைகளை நிகழ்த்தவும் பாசிசத்தை அங்கீகரிக்கப்பட்ட ஜனநாயக நடைமுறையாக முன்வைக்கவும் வழிவகை செய்தது. இவையாவும் சர்வதேச நிதியத்திற்கு இந்தியா தனது சந்தையை திறந்துவிட்டிருந்த சமயத்தில் நிகழ்ந்தன. இவை சர்வதேச நிறுவனங்களின் நலன்சார்ந்த நடவடிக்கைகளேயாகும். அந்நிறுவனங்கள் கைக்கொண்டிருந்த ஊடகங்கள் இந்த தேசத்தை தவறே செய்யாத நாடாக சித்தரித்தன. இவை இந்து தேசியவாதிகளுக்கு ஊக்கத்தை கொடுத்ததுடன், தண்டனைகளுக்கு அப்பாற்பட்டவர்களாக்கின. இதுதான் துணைக்கண்ட பயங்கரவாதத்தை உலாகலாவிய பயங்கரவாதத்துடன் இணைக்கச்செய்தது; ஒரு சரித்திர பின்புலத்தையும் கொடுத்தது. இப்போது மும்பைத்தாக்குதலையும் அதனுடன் இணைத்துவிட்டது.

ர்.எஸ்.எஸ் அமைப்பைச்சேர்ந்த எல்.கே. அத்வானி பாகிஸ்தானின் சிந்த் பகுதியிலிருந்தும் ஹபிஸ் சயீத் இந்தியாவின் சிம்லாவிலிருந்தும் வந்தவர்கள் என்பது உண்மையில் நமக்கு ஆச்சர்யத்தை தரக்கூடாது.

பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ உதவியுடன் லஷ்கர்-இ-தோய்பா செய்துள்ளதற்கான திடமான ஆதாரம் தன்னிடம் உள்ளதாக, 2001 பாராளுமன்ற தாகுதளுக்குப்பின்னும், 2002 சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் எரிப்பின்போதும், 2006 சம்ஜாதா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டு வெடிப்பின்போதும், இந்திய அரசு அறிவித்தது போலவே மும்பை தாக்குதலுக்குப்பிறகும் அறிவித்தது. லஷ்கர் இதை மறுத்துள்ளபோதும் அதுதான் முதன்மை குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளது. காவல்துறை மற்றும் உளவுத்துறையினரின் கூற்றுப்படி "இந்திய முஜாகிதீன்" என்ற அமைப்பின் மூலம் லஷ்கர் இந்தியாவில் இயங்குகிறது. ஜம்மு காஷ்மீரைச்சேர்ந்த சிறப்பு காவல் அதிகாரியான ஷேக் முக்தார் அகமது, கொல்கத்தா வாசியான தௌசிப் ரகுமான் ஆகிய இரு இந்திய பிரஜைகள் மும்பை தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர். ஆக, ஏற்கனவே பாகிஸ்தானை முழுப் பொறுப்பாக்கி வைக்கப்பட்ட தெளிவான குற்றச்சாட்டு லேசாக கலங்கியுள்ளது.

ந்தியா பாகிஸ்தான் எல்லைப்பகுதி மட்டுமின்றி உலகின் பலநாடுகளில் பரவியுள்ள செயல் வீரர்கள், பயிற்சியாளர்கள், பயிற்சி ஏற்பாட்டாளர்கள், நிழலுலகினர், உளவு எதிர்ப்பு பிரிவினர் என ஒரு உலகளாவிய சிக்கலான வலையமைப்பு இச்சமயங்களில் முடிச்சவிழ்வது வழக்கம். இன்றைய உலகில், தீவிரவாத செயல்களின் சங்கிலித்தொடர்பை ஒரு குறிப்பிட்ட தேசத்தின் எல்லைகளுக்குள் சுருக்கி அதை மடக்குவதென்பது, கார்பரேட் நிறுவனமொன்றின் சொத்தை ஒரு குறிப்பிட்ட நாட்டு எல்லைக்குள் கைக்கொள்ள முயல்வதற்குச்சமம். இரண்டுமே சாத்தியமல்ல.

ம்மாதிரியான சூழ்நிலைகளில் வான் தாக்குதல் தீவிரவாத முகாம்களை அழிக்க உதவுமே ஒழிய, தீவிரவாதிகளை அல்ல. நிச்சயம் போரும் நலம்பயக்காது. (மேலும் நமது நேர்மையை ஒருமுறை உரசிப்பார்த்துக்கொள்வோம்; உலகின் மிக மோசமான தீவிரவாத அமைப்பான எல்டிடிஇ இந்தியாவால் பயிற்சி அளிக்கப்பட்ட ஒன்று).

ப்கன் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக முதலிலும் பிறகு எதிராகவும் நடைபெற்ற அமெரிக்க போர்களில் நிர்பந்த கூட்டாளியாக்கப்பட்ட பாகிஸ்தான் இத்தகு முரண்பாடுகளால் இன்று ஒரு உள்நாட்டுப்போரை நோக்கி தள்ளாட்டத்துடன் நகர்கிறது. சோவியத்துக்கு எதிரான புனிதப்போரில் அமெரிக்காவிற்கு பயிற்சித் தரகர்களாக செயல்பட்ட பாகிஸ்தான் இராணுவம் மற்றும் ஐ.எஸ்.ஐ, இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் நிதி ஆதாரங்களை உருவாக்கி பெருக்கச்செய்தன. இவ்விதமாக பிராங்கைஸ்டீன் பிசாசுகளை முடைந்து உலக புழக்கத்தில் விட்டு தாம் வேண்டும்போது அவற்றை கட்டுக்குள் வைக்க அமேரிக்கா விரும்பியது. ஆனால் செப்டம்பர் 11 -இல் இப்பிசாசுகள் தம் சொந்த வீட்டில் நுழையும் என நிச்சயம் எதிர்பார்த்திருக்காது. எனவே, ஆப்கானிஸ்தான் மீண்டும் புதிதாக கட்டமைக்கப்பட வேண்டியாதயுள்ளது. இப்போது மீண்டும் சீரழிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானிலிருந்து சிதிலங்கள் பாகிஸ்தான் எல்லைக்குள் வழிந்தோடுகின்றன. வெடித்துச் சிதறவிருக்கும் ஒரு நாட்டை தான் ஆள்வதை பாகிஸ்தான் அரசாங்கம் கூட மறுக்கப்போவதில்லை. தீவிரவாத பயிற்சி முகாம்கள், நெருப்பை சுவாசிக்கும் முல்லாக்கள், இஸ்லாம் இவ்வுலகை ஆளவேண்டும்/ஆளும் என நம்பும் மனம்பிறழ்தோர் யாவரும் இரு ஆப்கானிய போர்களின் தீய விளைவுகளே. இந்தக் குரோதம் பாகிஸ்தான் அரசுமீதும், மக்கள் மீதும் மழையை பொழிவது போதாதென்று இந்தியாவிலும் கசிந்தோடுகிறது. இந்த சந்தர்பத்தில் இந்தியா போரை முடிவுசெய்தால் இந்த பிராந்தியம் எங்கும் அந்த மழை பொழிவு முழுமை பெற்றுவிடும். பாகிஸ்தான் திவாலாகி அழிந்துபட்டு அதன் கசடுகள் இந்திய கடற்கரைகளுக்கு அடித்துச்செல்லப்படும்; முன்னெப்போதுமில்லாத ஒரு அபாயத்தில் நம்மை பொருத்திவிடும். பாகிஸ்தான் வீழ்ந்தால் லட்சக்கணக்கான தேசம்சாராத அணுஆயுததாரிகளை நம் அக்கம்பக்கத்தவர்களாகப் பெறவேண்டும். மிகவும் சிக்கலான நம்மூர் மதவாதிகளின் விஷயத்தை மேலும் மோசமாக்கும்படியாக அதனுள் அமெரிக்க சாபக்கேட்டை அனுமதித்து, பாகிஸ்தான் செய்த அதே தவறை ஏன் இந்திய ஆட்சியாளர்களும் செய்கிறார்கள் என்பது புரியவில்லை. ஒரு வல்லரசு எப்போதும் கூட்டாளிகளை கொண்டிராது. இடைத்தரகர்கள் மட்டுமே அதற்கு உண்டு.

போரினால் விளையும் ஒரே நன்மை, அது நம் உள்நாட்டில் பெருகிவரும் பிரச்சினைகளை தவிர்க்க உதவும் ஒரு சிறந்த உபகரணம் என்பதே!

மும்பை தாக்குதல் நேரலையாக (மற்றும் சிறப்பு ஒளிபரப்பு) நமது அறுபத்தேழு 24-மணிநேர செய்தி ஊடகங்களால் ஒளிபரப்பப்பட்டது; சர்வதேச ஊடகங்கள் எத்தனை என்று கடவுளுக்குத்தான் தெரியும். தொகுப்பாளர்கள் செய்தி அரங்கிலும், நிருபர்கள் சம்பவ இடத்திலும் முடிவில்லாத ஒரு உற்சாக வர்ணனையை கொடுத்துக்கொண்டிருந்தார்கள். தன்னை பலவானாக கருதிக்கொள்ளும் இந்த அணுஆயுத நாட்டின் தேசிய பாதுகாப்புப் படை, கடற்படை மற்றும் காவல் துறை போன்றோரின் வீச்சின்மையை ஒரு சிறுவயதினரின் ஆயுததாரிக்குழு அம்பலப்படுத்தியதை அவநம்பிக்கையுடன் மூன்று இரவுகள் மூன்று பகல்களாக நாம் பார்த்துவந்தோம். இதை இவர்கள் ஒளிபரப்பும்போதே தீவிரவாதிகள் ஜாதி, மத, இன, தேச பேதமின்றி அப்பாவிகளை ரயில் நிலையங்களிலும், மருத்துவமனைகளிலும், விடுதிகளிலும் கண்மூடித்தனமாக கொன்று குவித்தனர்.



[தொடரும்]


Read More......

ச்சும்மா ட்டமாஷ் - 75: அருந்ததி ராய் - நவம்பர் செப்டம்பரல்ல!

· 6 comments

ழுத்தாளர் அருந்ததி ராய் அவர்களின் கட்டுரை அவுட்லுக் இதழில் சமீபத்தில் வெளியானது. மும்பை பயங்கரவாதம் பற்றிய அக்கட்டுரையை ச்சும்மா ட்டமாஷ்-75 -க்காக மொழிபெயர்த்து இப்பதிவில் வெளியிடுகின்றேன். மூல கட்டுரைக்கும் மொழி பெயர்ப்புக்கும் அர்த்த வேறுபாடுகள் இருக்குமானால் அப்பிழை முழுக்கவும் என்னைச்சார்ந்ததே!


ஒன்பது பதினொன்றல்ல; நவம்பர் செப்டம்பரல்ல!

மது சோதனைகளுக்கு எதிர்வினையாற்றும் உரிமையை நாம் ஏமாந்துள்ளோம். மும்பை கோரம் உச்சமடைந்த சமயத்தில், அந்த கொடிய நாளுக்கு மறுதினம், நாம் இந்தியாவின் 9/11 -ஐத்தான் பார்க்கிறோம் என நமது 24 -மணிநேர செய்தி ஊடகங்கள் நமக்கு அறிவிக்கை செய்தன. பழைய ஹாலிவுட் அச்சில் வரும் பாலிவுட் பட நாயகர்கள் போல் நாமும் நம் பங்கையும் நமக்குரிய வசனத்தையும் உச்சரிக்க எதிர்பார்க்கப்பட்டோம். எனினும் அவை நமக்கு முன்பே இப்படியாக உரைக்கப்பட்டுவிட்டதை நாம் அறிவோம்.

ப்பிராந்தியத்தில் பதற்றம் கூடிப்போன தருவாயில் அமெரிக்க செனட்டர் ஜான் மெக்கெயின் பாகிஸ்தானுக்கு ஒரு எச்சரிக்கை விடுத்தார். 'கெட்டவர்களை' கைது செய்ய பாகிஸ்தான் நடவடிக்கையேதும் எடுக்காவிட்டால் அங்கு உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது வான்தாக்குதலை இந்தியா தொடரலாம்; இதில் வாசிங்டன் ஒன்றும் செய்வதற்கில்லை என தன் கருத்தாக ஒரு செய்தியை வெளியிட்டார்.

னால், நவம்பர் செப்டம்பர் அல்ல; 2008 2001 அல்ல; பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் அல்ல; இந்தியா அமெரிக்காவும் அல்ல.

னவே, நம் சீரழிவிலிருந்து நாமே மீளவேண்டும்; சிதிலங்களிளிருந்தும், நம் உடைந்த இதயங்கள் வழியாகவும் நமது முடிவுகளை நாமே கண்டடைய வேண்டும்.

டம்பர இந்தியாவின் பணக்கார பட்டினம் காஷ்மீரிலேய மிக மோசமாக சீரழிந்த குப்வாரா நகரம்போல் காட்சியளிக்க, ஆயிரக்கணக்கான ராணுவத்தினரின் கண்காணிப்பில் நவம்பர் இறுதிவாரம் நடந்த காஷ்மீர் தேர்தலில் மக்கள் எவ்வாறு வாக்களிக்க வந்திருப்பார்கள் என நினைத்தால் அது முரணாக தோன்றுகிறது.

மும்பை தாக்குதலானது இந்திய நகரங்களிலும் மாநகரங்களிலும் நடைபெறும் எண்ணற்ற தீவிரவாத தாக்குதல்களில் மிக சமீபத்திய ஒன்று, அவ்வளவே. அகமதாபாத், பெங்களூர், தில்லி, குவகாத்தி, ஜெய்ப்பூர் மற்றும் மலேகான் போன்றவையெல்லாம் நூற்றுக்கணக்கில் சாதாரண மக்கள் இறக்கவும் காயமடையவும் காரணமாயிருந்த தொடர் குண்டு வெடிப்புகளை சந்தித்துள்ளன. இந்திய முஸ்லிம்கள் மற்றும் இந்துக்கள் என காவல்துறை சரியானவர்களைத்தான் விசாரனைகைதிகளாக கைது செய்துள்ளது என்றால், இந்த நாட்டில் ஏதோ மோசமான தவறு நடைபெறுவதாகவே அர்த்தம் ஆகிறது.

ம்பவத்தை தொலைக்காட்சிகளில் பார்த்திருப்பீர்களானால், மும்பையில் சாதாரண மக்கள் கூட இறந்தார்கள் என்பதை நீங்கள் கேட்டிருக்கமாட்டீர்கள். ஒரு பரபரப்பான தொடர்வண்டி நிலையத்திலும் ஒரு பொது மருத்துவமனையிலும் அவர்கள் கொத்து கொத்தாக கொல்லப்பட்டனர். தீவிரவாதிகள் பணக்காரர்களையும் ஏழைகளையும் வேறுபடுத்தவில்லை. எல்லோரையும் ஒரே கொடூரத்துடன்தான் கொன்றனர். ஆனால் ஒளிரும் இந்தியாவின் பளபளப்புத் தடுப்பான்களை சீரும் தீவிரவாதம் தகர்த்தெறிந்தது கண்டு இந்திய ஊடகம் விக்கித்துப்போனது. ஒரு யூத மையத்தையும் இரு ஆடம்பர விடுதிகளின் பளிங்கு முகப்பு மற்றும் கண்ணாடி நடன அரங்குகளையும் இந்த தீவிரவாத முடை வீச்சம் வியாபித்ததால் விழி பிதுங்கி நின்றது. அவ்விரு விடுதிகளும் மும்பையின் அடையாளங்கள் எனவும் நமக்கு சொல்லப்பட்டது. அது முற்றிலும் சரியே. சாதாரண இந்தியர்கள் அனுதினமும் அல்லலுறும் அநியாயத்தின், நேரும் அசிங்கத்தின் உடனடி அடையாளம் அவைகள்தான். அழகான மேன்மக்கள் தாங்கள் தங்கி இருந்த அறைகள், தங்கள் மனங்கவர்ந்த உணவு விடுதிகள், தங்களுக்கு பணிவிடை செய்த பணியாளர்கள் பற்றியெல்லாம் மனதுருக்கும் இரங்கல்களால் நிறைத்திருந்த அன்றைய செய்தித்தாளின் இடது உச்சியில் ஒரு பீட்சா கம்பனியின் விளம்பரம் கட்டம் கட்டப்பட்டிருந்தது. "ஹங்கிரி கியா?" (பசிக்கிறதா, ம்?). சர்வதேச பசிக்குறியீட்டில் (International Hunger Index) இந்தியா சூடானுக்கும் சோமாலியாவுக்கும் கீழே இடம்பெற்றுள்ளதை விளக்கத்தான் அந்த விளம்பரம் என நாம் கொள்ளலாம். ஆனால் இது அதற்கான போரல்ல. அந்த போர் கிராமங்களிலுள்ள தலித் பண்ணைகளிலும், நர்மதா மற்றும் கோயல் காரோ ஆற்றங்கரைகளிலும், செங்காரா ரப்பர் தோட்டத்திலும், நந்திகிராம், சிங்கூர், லால்கர் போன்ற மேற்கு வங்க கிராமங்களிலும், சட்டிஸ்கர், ஜார்கண்ட், ஒரிசா போன்ற மாநிலங்களிலும், பெருநகர குப்பங்களிலும் நடத்தப்படுவது. அது தொலைகாட்சிகளில் நடைபெறப்போவதில்லை.


ஹஃபிஸ் சயீத்

பாபு பஜ்ரங்ஜி

நரேந்திர மோடி

ற்கால பயங்கரவாதத்தின் போக்கு ஒரு தீவிரமான, மன்னிக்கமுடியாத தவறுகள் நிறைந்த பாதையில் திரும்பிவிட்டது. ஒரு புறத்தில் உள்ளவர்கள் (இதை பிரிவு - அ எனக்கொள்வோம்) தீவிரவாதத்தை, குறிப்பாக, இஸ்லாமிய தீவிரவாதத்தை, வெறுப்பால், சுவாதீனமின்றி, தனியான அச்சில் தனக்கேயுரிய வட்டப்பாதையில் சுழலக்கூடிய, புறவுலகில் தொடர்பில்லாத, வரலாறு, புவியியல் மற்றும் பொருளாதார காரணிகள் ஏதும் இல்லாத ஒன்றாக பார்ப்பவர்களாவர். எனவே அத்தீவிரவாதத்தை அரசியல் ரீதியாக தீர்க்க முயல்வது, புரிந்து கொள்ள முயல்வது கூட அதை நியாயப்படுத்துவதற்குச் சமம்; மேலும் அது ஒரு குற்றம் என்பது இவர்களது வாதம்.

தீவிரவாதத்தை மன்னிக்கவோ நியாயப்படுத்தவோ முடியாது எனினும், அது ஒரு குறிப்பிட்ட நேரத்தில், ஒரு குறிப்பிட்ட இடத்தில், ஒரு குறிப்பிட்ட அரசியல் சூழலிலேயே இருக்கின்றது. அக்காரணிகளை கவனிக்கத் தவறினால் அது பிரச்சினையை மோசமாக்குவதுடன் மேலும் அதிக மக்களை துன்பத்தில் தள்ளும்; இதுவும் ஒரு குற்றமே என்று பிரிவு - ஆ நம்புகிறது.

1990 -ல் லஷ்கர் - இ - தோய்பா(தூய்மையின் போர்ப்படை) -வை தோற்றுவித்த, அடிப்படைவாத சலாஃபி முஸ்லீம் பாரம்பரியத்தை சேர்ந்த, ஹஃபிஸ் சயீத் நிச்சயம் பிரிவு அ -வினரின் வாதத்தை வலிமைப் படுத்துபவர்கள். ஹஃபிஸ் சயீத் மனித வெடிகுண்டை அங்கீகரிப்பவர்; யூத, ஷியா மற்றும் ஜனநாயக வெறுப்பை கொண்டவர்; அவரது இஸ்லாம் இந்த உலகை ஆளும் வரை புனிதப்போரை நடத்தவேண்டும் என நம்புபவர்.

வர் கூறியவற்றில் சில: "இந்தியா ஓர்மத்துடன் இருக்கும் வரை அமைதி இராது; அவர்களை சிதை; கருணைகேட்டு, உன் முன்னாள் அவர்கள் மண்டியிடும்வரை தொடர்ந்து சிதை."

மேலும், "இந்தியா இந்த வழியை நமக்கு காட்டியுள்ளது. தகுந்த பதிலடியை நாம் தருவோம். அது காஷ்மீரில் முஸ்லிம்களை கொள்வதைப்போல் இந்துக்களை கொன்று பழி வாங்குவோம்."

னால், தன்னை ஜனநாயகவாதி என்றும் தீவிரவாதி அல்ல என்றும் சொல்லிக்கொள்ளும் பாபு பஜ்ரங்கி எந்த இடத்தில் பிரிவு - அ -வினருடன் ஒத்துப்போகிறார்? 2002 குஜராத் படுகொலையின் முக்கிய சூத்திரதாரியான இவர் காமிரா முன் கூறுகிறார்: "ஒரு முஸ்லீம் கடையைக்கூட நாங்கள் விட்டுவைக்கவில்லை, அனைத்திற்கும் தீவைத்தோம், ....தாக்கினோம், போசுக்கினோம், தீயிட்டோம், ...இந்த பாஸ்டர்டுகள் தாம் சிதையாவதை விரும்பவில்லை; மேலும் அது குறித்து மிகவும் பயந்தனர்; இதனாலேயே அவர்களை தீயிலிட்டோம். ...எனக்கு ஒரு இறுதி ஆசை உள்ளது... எனக்கு மரண தண்டனை தாருங்கள்... தூக்கில் தொங்குவதில் எனக்கு கவலை இல்லை. ...அதற்கு முன் எனக்கு இரண்டே இரண்டு நாட்களை மட்டும் தாருங்கள். ஏழெட்டு லட்சம் எண்ணிக்கையில் இவர்கள் உள்ள ஜுஹோபுரா பகுதிக்கு செல்வேன். ...அவர்கள் கதையை முடிப்பேன். ...இன்னும் கொஞ்சம் பேர்தான் சாகட்டுமே! ...குறைந்தது இருபத்தைந்தாயிரத்திலிருந்து ஐம்பதாயிரம்பேர் வரை சாகவேண்டும்.

மேலும், பிரிவு - அ, தனது செயல் திட்டத்தில் எவ்விடத்தில் ஆர்.எஸ். எஸ். -இன் பைபிலான "நாம் அல்லது நமது தேசியம்" பொருந்திவருகிறது? இதை வரையறை செய்த எம். எஸ். கோல்வாக்கர் 'குருஜி' 1944 -ல் ஆர்.எஸ்.எஸ் தலைவரானார். அது மேலும் கூறுகிறது: முஸ்லீம்கள் இந்துஸ்தானத்தில் முதலில் காலடி வைத்த அந்த தீய நாளிலிருந்து இந்த நொடிவரை இந்து தேசம் அந்த சூரையாளர்களை எதிர்த்து தீரத்துடன் போராடி வருகிறது. இன உணர்வு எழுச்சி பெற்று வருகிறது"

ல்லது: "இன மற்றும் கலாச்சார தூய்மைக்காக யூதக்களையை எடுப்பதன் மூலம் ஜெர்மனி உலகை அதிர்ச்சிக்குள்ளாகியது. இனப்பெருமை அங்கே உச்சம் பெற்றது. அந்த நல்ல பாடத்தை கற்பதன் மூலம் இந்துஸ்தானம் பலன் பெறமுடியும்"

ண்மையில் இந்து வலதுசாரிகளின் துப்பாக்கி முஸ்லீம்களை நோக்கியது மட்டுமல்ல, தலித்துகள் தொடர்ந்து குறிவைக்கப்பட்டுள்ளனர். சமீபத்தில், ஒரிசாவின் காந்தமாலில், கிறித்துவர்களுக்கெதிரான இரண்டரை மாதகால வன்முறை நாற்பது பேர் வரை கொன்றுள்ளது. நாற்பதாயிரம் பேர்வரை தங்கள் வீடுகளில் இருந்து விரட்டப்பட்டுள்ளனர். அவர்களில் பாதிபேர் அகதி முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.



கோல்வாக்கர்

த்தனை காலமும் லஸ்கர் - இ - தோய்பா -வின் முன்னணி அமைப்பான ஜமாத் - உத் -தாவா -வின் தலைவராக ஹஃபிஸ் சயீத் ஒரு மதிப்பான வாழ்க்கையை லாகூரில் வாழ்ந்துவந்துள்ளார். வெறியுடன் கூடிய திரிபுவாத போதனைகள் மூலம் இளைஞர்களை தனது காட்டுமிராண்டி புனிதப்போருக்கு தயார்படுத்தி வந்துள்ளார். டிசம்பர் 11 சம்பவத்திற்குப் பிறகு ஐ.நா. ஜமாத் - உத் -தாவா -க்கு தடைவிதித்தது. சர்வதேச நிர்பந்தத்தால் ஹஃபிஸ் சயீத் -ஐ பாகிஸ்தான் அரசு வீட்டுக்காவலில் வைத்தது. ஆனால், பாபு பஜ்ரங்ஜியோ பிணையில் வெளியே வந்து மதிப்பான வாழ்க்கையை குஜராத்தில் தொடர்கிறார். படுகொலைகள் நடந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வி.ஹச்.பி -இலிருந்து விலகி சிவசேனாவில் இணைந்தார். பஜ்ரங்ஜி -யின் முன்னாள் குருவான நரேந்திர மோடி இன்னமும் குஜராத் முதல்வர்தான். ஆக, குஜராத் படுகொலைகளை முன்னின்று நடத்தியவர் இரண்டாம் முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்; மேலும் இவர் இந்தியாவின் மிகப்பெரிய கார்ப்பரேட்டுகளான ரிலையன்ஸ், டாடா-வால் வெகுவாக போற்றப் படுபவருமாவார்.கார்பரேட்டுகளின் செய்தித்தொடர்பாளரும், ஒரு தொலைக்காட்சியின் அரங்கு முன்னவருமான ஸொஹைல் சேத் சமீபத்தில் 'மோடி ஒரு கடவுள்' என விளித்துள்ளார். குஜராத்தில் இந்துக் கும்பல்களின் சூறையாட்டத்தை மேற்பார்வை செய்த, சமயங்களில் உதவியும் செய்த போலீஸ்காரர்களுக்கு பரிசுகளும் பதவி உயர்வும் கொடுக்கப்பட்டுள்ளது.



[தொடரும்]

பகுதி-2

Read More......