Monday, June 30, 2008

என் தாக்க அறுக்க வந்த ஆன் சைட் பார்ட்டி

· 19 comments

நம் பட்டமளிப்பு விழா நிகழ்வுகள் ஒவ்வொருவர் மனதிலும் பசுமையாய் என்றும் நிற்கும் என்பது நாம் அறிவோம். விழாவில் நாம் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்கள் தான் மீண்டும் ஒருநாள் பார்க்கும்போது நம் பெருமித நினைவுகளைத் தூண்டும் கிளர்ச்சிப் பொருட்கள். ஆனால் என் வாழ்வின் மூன்றாவதும் இறுதியுமான 2008 பட்டமளிப்பு விழா புகைப்படங்களை எவரிடமும் காட்டி பெருமை கொள்ள முடியாத படிக்கு என் நிலைமையாகும் என நான் கனவிலும் நினைத்திருக்கவில்லை. காரணம் விதி விண்ணேறி வந்தது. தொலைபேசியில் அதன் வரவை உறுதி செய்யும்போது அபாக்கியவான், நான் அறிந்திருக்கவில்லை.

"ஹலோ..."

"ஹலோ அண்ணே, நாந்தாண்ணே ரகு, மெட்ராஸ் -லருந்து பேசறேன்!"

"எந்த ரகு?.."

"என்னண்ணே! மறந்துட்டிங்களா? கெமிஸ்ட்ரி பய்யன் ரகு -ண்ணே!"

"அடேய் நீய்யா! சொல்லு, எப்டி இருக்க +2 பாஸ் பண்ணிட்டியா? "

"ண்ணே, டிகிரியே முடிச்சிட்டு ஒரு வருஷமா ஐ.டி -ல வேல பாக்றண்ணே!"

"என்னடா கத உடற, ஒன்ற வருஷத்துல எவண்டா டிகிரி தரான் இந்தியாவுல?"

"எங்கப்பாகிட்ட வேணா போன குடுக்கிறேன் நீங்களே கேளுங்க!"

"சரி, என்னுமோ போ!............. அப்பறம் என்ன திடீர்ன்னு போன்?"

"யு.எஸ் வரண்ணே ஆன் சைட்டுக்கு 3 மாசம், நியூ யார்க் தான் வரேன்."

"ஓஹோ! வா வா, அப்படியே மறக்காம உன்ன ஆன் சைட்டுக்கு ரெக்கமண்ட் பண்ணான் பாத்தியா, அவன் பர்சனல் மெயில் ஐ.டி. ய வாங்கிட்டு வா!"

"சரிண்ணே!, ... அப்பறம் உங்கக்கூடதான் தங்கப்போறேன்."

"என்கூடயா? போடா வெண்ணை, ... உங்க கம்பனி அரேஞ் பண்ணுவாங்க, ... அங்க போ!"

"வேணாண்ணே, எங்கப்பா கண்டிப்பா உங்கக்கூடத்தான் தங்கச் சொல்றாரு!"

"என்னது கண்டிப்பாவா? ...நான் இன்னும் அவர் கிளாஸ் -ல படிச்சிட்டு இருக்கேன் -ன்னு நெனைச்சிட்டு இருக்காரா? ஆர்டர்லாம் போடறாரு!"

"..ண்ணே ப்ளீஸ் ண்ணே! இல்லன்னா அனுப்பமாட்டாருண்ணே!"

"சரி வந்துத்தொல!...ஆமா, எப்பவும் உங்கம்மா முந்தாணிய புடிச்சிட்டே திரியுவியே, இங்க அந்த வசதியெல்லாம் கெடயாது என்ன பண்ணபோற?"

"என்னானே! இப்பவும் அப்படியேவா இருப்பேன்?, நீங்க போய் பன்னண்டு வருஷம் ஆனமாதிரி சீன் போடுறிங்க"

"அது சரி..எங்கம்மா என் கிராசுவேசன் டே -க்கு வராங்க, ரெண்டுபேரும் ஒன்னா டிக்கட் புக் பண்ணுங்க, என்ன சரியா!"

"சரிண்ணே!"

"சரி போன வை."

எதிர் பார்த்த படியே, ஏர்போர்ட்டில் என் அம்மாவின் முந்தானையை பிடித்துக்கொண்டு நின்றிருந்தவனை அள்ளிப்போட்டுக்கொண்டு வீட்டுக்கு வந்தபோதுதான் தெரிந்தது ஏழரையும் கூடவே வந்துள்ளது என்று. முதல் நாளே என் உடனிருந்தவனுடன் சண்டை போட்டான். அவன் இவனைவிட பொடியன், இனி மூன்று மாதத்திற்கு இந்தப்பக்கமே வரமாட்டேன் என்று சொல்லி ஓடிப்போன அவன் நேற்று முன்தினம் தான் வந்தான்.

நான் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த கிராஜுவேசன் டே வந்தது. முந்தய நாள் இரவு அனைத்தும் தயார் நிலையில் வைத்துவிட்டு, என் அம்மாவுக்கு இன்ஸ்ட்ரக்ஷன் கொடுத்துக்கொண்டிருந்தேன். அப்போதுதான் அந்த அசம்பாவிதம் நிகழ்ந்தது!

"டேய், நாளைக்கு பங்க்ஷனுக்கு இவன் வரலையா?"

"அவன் எதுக்கு மா, அவன் ஆபிஸ் போக வேணாமா!"

"இல்லண்ணே, நான் பர்மிஷன் சொல்லிடறேன்" என்று இதற்காகவே காத்திருந்தவன் போல் சொன்னான். நான் முறைத்ததும் ஜகா வாங்கியவன் என் அம்மாவைப்பார்த்தான்.

"அவனும் வரட்டும் விடுறா, போட்டா எடுக்கவாவது ஆள் வேண்டாமா?" -தான் செய்வது இன்னது என்று தெரியாமல் அவனுக்கு ரிக்கமன்ட் செய்தாள் என் அம்மா. அதன் பிறகு அப்பீல் ஏதும் இல்லாமல் போகவே நானும் ஆண்டவன் மேல பாரத்த போட்டுட்டு தூங்கச்சென்றுவிட்டேன்.

ரகு காலையிலேயே எழுந்து ரெடி ஆகி, அங்கும் இங்கும் ஓடியபடி போட்டோ எடுத்து பிராக்டிஸ் செய்து கொண்டிருந்தான். நான் பல் தேய்ப்பது, என் அம்மா கொட்டாவி விடுவது என முக்கியமான தருணங்களை பதிவு செய்து கொண்டிருந்தான்.

"டேய் ஒரு ஓரமா உட்காருடா, நானே டென்ஷன்ல இருக்கேன், நீ வேற இம்சைய குடுக்கிற" என்று சலித்துக்கொண்டே உடை அணிந்து தயாரானேன்.

முட்டி போட்டு அயர்ன் செய்து கொண்டிருந்தவனிடம் வந்து "அண்ணே ஒரு போஸ் கொடுங்க" என்றான்.

"போட்டோ எடுக்க வேறு ஆள் ரெடி பண்ணியாச்சு, நீ கொஞ்சம் உணர்ச்சி வசப்படாம சாப்ட்டுட்டு கெளம்பு" என்று சற்றே கடுமையாக சொல்லி அனுப்பி வைத்தேன்.

என் அம்மாவிடம் போய் என்ன சொன்னான் என்று தெரியவில்லை, அவள் அங்கிருந்த படியே கத்தினாள், "அவன்தான் நான் போட்டோ எடுக்கறேன்றான் இல்ல, வேற ஆளு எதுக்குடா?"

வெற்றி பெருமிதத்தோடு என்னிடம் வந்தவன் என் அனுமதியின்றியே இப்போது போட்டோ எடுத்தான், நான் முறைப்பதையும் பொருட்படுத்தாமல். கீழே இருப்பதுதான் அந்த போட்டோ. கடு கடுப்பில் எனது முகம் மேக்கப் போடாத நயன்தாரா மாதிரி இருந்ததால், பிறகு போட்டோவை சற்றே புராசஸ் செய்துவிட்டேன்.



நான் வேறு வரிசையில் உள்ளே நுழைய வேண்டியிருந்ததால், அவர்களுக்கு என்ட்ரி பாஸ் பெற்று உள்ளே அனுப்பி விட்டு என்னிருக்கைக்கு சென்று சேரும் வரை ஒரு டசன் முறையாவது எனக்கு கால் செய்து இன்ஸ்ட்ரக்ஷன் கொடுத்திருப்பான்.

"அண்ணே, உள்ள போய் உட்காந்ததும் ஒரு மிஸ்டு கால் கொடுத்துட்டு ஒரு வாட்டி எழுந்து நில்லுங்க, அப்பத்தான் போக்கஸ் பண்ண வசதியா இருக்கும்"
சரிடா!

அண்ணே, பட்டம் வாங்கினதும் தொப்பிய கழட்டி ஒரு வாட்டி ஆட்டினிங்கன்னா, சிக்னலா புரிஞ்சிகிட்டு ஷூம் பண்ண வசதியா இருக்கும்"
சர்ர்ர்ர்ர்ரிடா!

எந்த பிகர் கூடயாவது சேர்ந்தாமாதிரி போட்டோ வேணுன்னா ஒரு சிக்னல் கொடுங்கண்ணே, அம்மாவுக்கு தெரியாம எடுத்திடறேன்.
டேய்ய்ய்...கம்ம்ம்முன்னு போன வைடா"

அடுத்த முறை போன் வந்தது. தமிழில் இருப்பதிலேயே ஒரு மோசமான வார்த்தையை சொல்லி நான் கத்தவும் பக்கத்திலிருந்த வெள்ளைக்காரன் வேறுஇடம் போய் அமர்ந்து கொண்டான்.

அதன் பிறகு அவன் என்ன செய்து கொண்டிருந்தான் என்ற கவலையை விடுத்து பட்டமளிப்பு உரையில் கவனம் செலுத்தத்தொடங்கிவிட்டேன்.

ஒரு படமாவது எப்படியும் நன்றாக எடுத்திருப்பான் என்ற நம்பிக்கை எனக்கு ஏனோ கடைசிவரை இருந்தது. அவன் எடுத்த மொத்தம் 182 படங்களில் ஒரு பத்து படங்களில் என்னை அடையாளம் காண முடியும். ஆனால் என்னைத் தவிர வேறு யாராலும் அடையாளம் காணமுடியாது. அவன் எடுத்தப்படங்களில் "ஹைலைட்" -டான சில படங்களை இங்கு தருகிறேன். என்னைக்கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.


என்னைக்கண்டு பிடித்தால் $1000 பரிசு



பிகரோட சேர்த்து போட்டோ எடுக்கிறானாம்!
பட்டம் வாங்குறது நான்தான், முக்கியமானத உட்டுட்டான்



படியில் இறங்குவது கிறிஸ்துமஸ் தாத்தா அல்ல, நான்தான்.



இந்தப்படத்தை "Fine Arts" மாணவர் ஒருவர் விலைக்கு கேட்டிருக்கிறார்.




தான் எடுத்த படங்களை எல்லாம் விலாவரியாக அன்று இரவு என் அம்மாவிடம் விவரித்துக்கொண்டிருந்தான். பொறுமையாக எல்லா போட்டோக்களையும் பார்த்துக்கொண்டிருந்தவள் கடைசி போட்டோ வரும்போதே தொண்டையை செருமத் தொடங்கினாள். காரி துப்பிவிடுவாளோ என்று ஒருகணம் பயந்தே விட்டேன். எழுந்து போய் "சிங்க்" -ல் துப்பி விட்டு எதுவும் பேசாமல் படுக்கைக்குச் சென்றுவிட்டாள்.

Read More......

Saturday, June 28, 2008

நான் சார்ந்துள்ள துறை பற்றி...

· 22 comments

சிலநாட்களுக்கு முன்பு பதிவர் மஞ்சூர் ராஜா அவர்கள் பயோ-டெக்னாலஜி குறித்து தகவல் வேண்டி தனிமடல் அனுப்பியிருந்தார். எனது பதில் மடலுக்கு நன்றி தெரிவித்து அவர் அனுப்பிய மடலில் எனது இந்தத்தகவலை பதிவாக இட்டால் பயனிருக்கும் என ஆலோசனை தெரிவித்தார். அதன்படி இப்பதிவு.

பர்சனல் விஷயங்களை நீக்கிவிட்டு மடல்களை அப்படியே தருகிறேன்.

அவரது முதல் மடல்.

அன்பு நண்பரே வணக்கம்.
நீங்கள் பயோ-டெக் துறையில் பணி செய்வதாக அறிந்தேன்.
** *** தற்போது +2 படிக்கிறாள். அவளுக்கு பயோடெக் படிக்கவேண்டும் என்ற ஆர்வம் அதிகமாக இருக்கிறது.
அதை பற்றிய மேலதிக தகவல்களையும், அந்த துறையில் எதிர்காலம் எப்படி என்பதை பற்றியும் கொஞ்சம் விளக்கமாக எழுதவும்.

எனது வலைப்பதிவு: www.manjoorraja.blogspot.com
குழுமம்: *********
நன்றி.

எனது பதில் மடல்:

அதற்கு முன் என்னைப் பற்றி: நான் பயோ-இன்பார்மேடிக்ஸ் முதுகலை பட்டதாரி. எனது இளங்கலை முழுதும் மருத்துவம் சார்ந்தது. முதுகலையில் முதல் ஒன்னரை வருடம் Rutgers University -யில் பயோ டெக்னாலஜியும், இறுதி வருடம் NJIT -யில் கணிப்பொறி அறிவியலும் படித்தேன். தற்போது Insili***** ****** நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறேன்.

நண்பரே, வணக்கம்!
நான் பணிபுரியும் துறை பயோ-இன்பர்மேட்டிக்ஸ். பயோ-டெக்னாலஜி அல்ல. **** -ல் நான் எனது ************* டிகிரியை முடிக்கும் போது எனக்கு பயோ-டெக்னாலஜி -ல் ஒரு முதுகலை பட்டப்படிப்பை தொடர ஆர்வம் இருந்தது. பயோ-டெக்னாலஜி சம்பந்தமான வணிக (டெக்னிக்கல் அல்ல) இதழ்களை ஆராய்ந்த போது, பயோ-டெக்னாலஜி துறையில் அனைத்து முயற்சிகளும் ஆராய்ச்சி என்ற அளவிலேயே இருப்பதாக அறிந்தேன். இன்றும் அப்படித்தான். எந்த துறைக்கும் இல்லாத அளவுக்கு இந்த துறைக்கு (அதன் கண்டு பிடிப்புகளுக்கு) மக்கள் எதிர்ப்பு இருப்பதாலும் வணிக ரீதியிலான வெற்றிக்கு இத்துறை மிகுந்த போராட்டத்தை சந்தித்து வருகிறது. ஆட்சி மாற்றங்களால் வணிகத்துறையை விட மிகவும் பாதிக்கப் படும் துறையும் இதுவேயாகும். உணவு பதப்படுத்தல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தொழிற்சாலை நுட்பவியல்(industrial biotechnology) மற்றும் வெகு சில பிரிவுகளில் குறிப்பிடத்தகுந்த வெற்றி கிடைத்துள்ளது. உணவு உற்பத்தி மற்றும் ஹெல்த் போன்றவற்றில் மிக மிகக் கடுமையான நெருக்கடிகளை(மக்கள் எதிர்ப்பு) சந்தித்து வருகிறது. சில வணிக நிறுவனங்கள் திடீர் திடீரென தங்கள் புராஜெக்ட்டுகளை கைவிடுகின்றன.

இத்துறையில் வேலை வாய்ப்பு என்று பார்த்தோமானால், ஆராச்சி மாணவர்களுக்கும், அனுபவஸ்தர்களுக்கும், பல்கலை கழக ஆசிரியர்களுக்கும் கொள்ளை சம்பளத்தில் வேலை கிடைக்கின்றன. சில நிறுவனங்கள் கணிசமான தொகையை முதலிலேயே கொடுத்து பின் சம்பளமும் தருகின்றன. ஆனால் ஒரு டிகிரியை மட்டும் வைத்துக் கொண்டுள்ள மாணவனுக்கு வேலை அரிதிலும் அரிது. அம்மாணவன் தனியாக ஒரு புராஜெக்டை தானே செய்து, ஒரு 5-6 வருடங்கள் பல்கலை கழக ஆசிரியர்களுடன் சொற்ப தொகைக்கு பணி புரிந்து தன்னை நிரூபித்த பிறகே வாய்ப்புகள் கிட்டும். மைக்ரோ சாப்ட் பயோ-டெக்னாலஜி -யில் நுழையவிருப்பதாக அறிவித்து வருடம் மூன்றாகிறது. இதுவரை எந்த அறிகுறியும் இல்லை. முன்பெல்லாம் நோவார்ட்டி சில ப்ராஜெக்ட்டுகளை முதுகலை மாணவர்களுக்கு அளித்து வந்தது. இப்போது நிறுத்திவிட்டது. ஆனால் அரசு நிறுவனங்களிடம் இருந்து இன்றும் பெருந்தொகைகளை கிராண்ட் -ஆக பெறமுடியும். எனினும் நாம் நம்மை நிரூபிக்க வேண்டியது மிக அவசியம். மற்ற துறைகளைப் போல தகுதிக்கு ஏற்ற ஏதோ ஒரு வேலை இதில் கிடைப்பதில்லை.

பயோ-இன்பார்மேட்டிக்ஸ் துறை சற்றே ஆறுதல் தரும் துறை. பயோ-டெக்னாலஜி ஆராய்ச்சியில் ஈடுபடுவோர்க்கு மென்பொருள் செய்து தருவது இத்துறை. இதில் வேலை பெறுவது கூட நாம் படிக்கும் பல்கலைகழகத்தை பொறுத்தே இருக்கிறது.

இந்தியாவில் வேலை இதற்கு எப்படி இருக்கிறது என்று பார்த்தால், இவ்வகை வேலை வாய்ப்பைத்தரும் பயோ-இன்பார்மேட்டிக்ஸ் நிறுவனங்கள் யாவும் இந்தியாவிலுள்ள பயோ-டெக்னாலஜி நிறுவனங்களைச் சார்ந்தே இருக்கின்றன. இத்துறைகளில் அவுட்-சோர்சுக்கு வாய்ப்பே இல்லை என்ற நிலையில், இந்திய பயோ-டெக்னாலஜி நிறுவனங்கள் வலுப்பெறும் வரை பொறுத்திருக்க வேண்டியதாயிருக்கிறது. அதற்கான அறிகுறிகள் சிதம்பரத்தின் கடந்த மூன்று பட்ஜெட்டிலும் இல்லை. அவர் முதல் பட்ஜெட்டில் கூறியவற்றையும் இதுவரை நிறைவேற்றவில்லை. ஒரு விவாதத்தில் இதுபற்றிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் சொன்னார் "என் இதயம் இடது பக்கம் இருக்கிறது. நீங்கள் ஆய்வகத்தில் இட்லியையும் சாம்பாரையும் தயாரித்துக் கொண்டிருக்கும் வரை என்னால் எதுவும் செய்யமுடியாது". அவர் சொன்னது என்னைப் பொறுத்தவரை நியாயமானது. நாம் தகவல் தொழில் நுட்பத்துறையில் பிரபஞ்சத்தையே மறு உருவாக்கம் செய்பவர்களாக இருக்கலாம்(இது போன்ற உளறல்களை நாம் எப்போதும் கேட்க முடியும்). ஆனால் பயோ-டெக்னாலஜி -யில் நிறைய செய்ய வேண்டியதிருக்கிறது. வெறுமனே ஒரு பெருந்தொகையை யாரை நம்பி ஒதுக்க முடியும். கிராமப்புற வேலை வாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்திற்கு முழுமூச்சாய் எதிர்த்தவர்கள்தான் இப்போது இத்துறைக்கு பெரும் தொகையை கேட்கிறார்கள். செயற்கை விவசாயத்திற்கு எதிராக விவசாயிகளுடன் இணைந்து போராடும் இடது சாரிகள் எக்காலத்திலும்(இந்த ஆட்சியில் மட்டுமல்ல) இவ்வகை செலவுகளுக்கு ஆதரவு தர மாட்டார்கள். இதைத்தான் சிதம்பரமும் சொன்னார். முதலில் இந்திய பயோ-டெக்னாலஜி துறை தன்னை ஆய்வகத்தில் நிரூபிக்க வேண்டும், இரண்டாவது உண்மையில் மக்களுக்கு (இடைத்தரகர்களுக்கு அல்ல) நேரிடையாக பயன்தரும் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி கன்வின்ஸ் செய்ய வேண்டும். எனவே நம் நாட்டில் இத்துறை வளர்ச்சி பெற சில காலம் பிடிக்கலாம்.

அடுத்து அவுட்-சோர்ஸ் வாய்ப்பு எப்படி என்று பார்த்தோமானால், இதற்கு வாய்ப்புகள் மிக அரிது. உதாரணமாக, ஒரு ஆய்வாளர் ஒரு புதிய டி.என்.ஏ. -வை கண்டுபிடித்திருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவர் அதை ஏற்கனவே உள்ள டி.என்.ஏ. -களுடன் ஒப்பிட்டு அதை வகைப் படுத்த வேண்டும். இதை ஆய்வகத்திலும் செய்யமுடியும், கணிப்பொறியிலும் செய்ய முடியும். எனினும் இது ஒரு போரடிக்கின்ற வேலை. இவ்வகை வேலைகளை அவர்கள் அவுட்-சோர்ஸ் செய்வார்கள் என எதிர்பார்க்கலாம். அதற்கு ஒரு இந்திய பயோ-இன்பார்மேட்டிக்ஸ் நிறுவனம் ஒன்றை ஒப்பந்தம் செய்கிறார் எனக்கொண்டால், அந்த நிறுவனம் பணியை அவுட்-சோர்ஸ் செய்த ஆய்வாளருக்கு நிகரான சில பணியாளர்களை(ஆய்வாளர்கள்) நியமிக்க வேண்டும். எவ்வகை மென்பொருளையும் தயாரிக்க திறன் உங்களுக்கு இருந்தாலும் அது தரும் ரிசல்டுகளை சரிபார்க்க இவ்வகை பணியாளர்கள்(ஆய்வாளர்கள்) அவசியம். இதைசெய்ய எத்தனை பேர் இந்தியாவில் இருக்கிறார்கள்?. இதனால் பயோ-இன்பார்மேட்டிக்ஸ் பணிகளுக்கும் வாய்ப்பு குறைவு. பயோ-இன்பார்மேட்டிக்ஸ் என்பது ஒரு கம்பச் சித்திரம் அல்ல. ஆனால் பயோ-டெக்னாலஜி அப்படித்தான்.

நிற்க, பெரிதாக வேலை வாய்ப்பைத் தரும் நிலையில் பயோ-டெக்னாலஜி இன்னும் 5 முதல் 10 பத்தாண்டுகளுக்கு இல்லை என்ற நிலையில், மாணவர்களுக்கு அதன் மீது ஆர்வம் என்பது குறைவதில்லை. அதற்கு நியாயமான காரணங்கள் இருக்கின்றன. ஒரு துறையில் பட்டம் பெற்றால் முன்னங்கால்களில் கண்களைக்கொண்ட ஒரு எலியை உங்களால் உருவாக்க முடியும் என்று அறிகிற போது அத்துறையில் இயல்பாக ஆர்வம் பிறக்கும். மரபனுவியலில் பாலபாடமான "மேண்டலிசம்" பற்றி படிக்கும் உயர் நிலைப் பள்ளி மாணவன், ஒரு குறிப்பிட்ட தாவரத்தின் இனப்பெருக்கத்தை ஒரு ஆய்வாளர் கட்டுக்குள் வைக்கிறார் என்று அறியும்போது ஒரு கூரியாசிட்டி அவனுக்கு ஏற்படுகிறது. இயற்கையின் ரகசியத்தை அறிந்தது போல் உற்சாகம் ஏற்படுகிறது. இந்த ஆர்வம் ஒரு நான்கு வருட டிகிரி முடியும்போதும் இருக்க வேண்டும். அடுத்த இரண்டு அல்லது மூன்று வருடங்கள் முதுகலை முடிக்கும்போதும் இருக்க வேண்டும். பிறகு ஆய்வகத்திலும், programming -லும் (பயோ-இன்பார்மேட்டிக்ஸ் படித்தால்) தன்னை நிரூபிக்க சில காலம் ஆகலாம்.

இவையெல்லாம் பயோ-டெக்னாலஜி படிக்க விரும்பும் மாணவனை பயமுறுத்துவதற்கு நான் சொல்லவில்லை. உண்மையில் ஆர்வம் உள்ள ஒரு மாணவனுக்கு இது ஒரு தகவலாக மட்டுமே இருக்கும், ஆர்வத்தை குறைக்காது. ஆனால் பெற்றோர்கள் பிள்ளைகளின் ஆர்வத்தை மட்டுமே கவனத்தில் எடுத்துக்கொள்வதில்லை. அவர்களின் எதிகாலம், வேலை வாய்ப்பு எல்லாவற்றையும் யோசிக்கக் கூடியவர்கள். மிடில் கிளாஸ் பெற்றோர்களாகிய என் தாய் தந்தையரை கன்வின்ஸ் செய்ய அதிகம் போராடினேன் என்பது குறிப்பிடத்தக்கது.
இறுதியாக, ஆலோசனை என்றில்லாமல், ஒரு கருத்து என்ற வகையில் நான் ஒன்றை சொல்ல விரும்புகிறேன். பயோ-டெக்னாலஜி -யில் ஆர்வம் உள்ள பள்ளி இறுதியாண்டு மாணவர்கள் அதை ஒரு கரியர் -ஆக தேர்ந்தெடுக்கும் முன் தங்கள் ஆர்வம் எவ்வளவு ஆழமானது என்பதை சுய பரிசோதனை செய்ய வேண்டும். பிறகு வெளிநாடுகளில் சென்று படிக்க பெற்றோர்களிடம் அனுமதி பெற்றிட வேண்டும். குறைந்தது 7-8 ஆண்டுகள் பொறுத்திருக்க வேண்டும்.

நன்றி,
மோகன் கந்தசாமி.

அவரது அடுத்த மடல்:

அன்பு நண்பரே மிகவும் விளக்கமாக எழுதியிருக்கிறீர்கள். நன்றி. இதையே ஒரு பதிவாகவும் நீங்கள் போடலாம்.
** *** தற்சமயம்+2வில் Maths, Chemistry, Physics and Biology பாடங்களை எடுத்து படித்துக்கொண்டிருக்கிறாள். அவளை மேற்படிப்புக்கு வெளிநாட்டுக்கு அனுப்பவேண்டும் என்ற விருப்பம் ****** இருக்கிறது. ஆனால் அவளது மதிப்பெண்களை பொருத்தே நல்ல கல்லூரி அல்லது பல்கலை கழகம் அமையும் என எதிர்ப்பார்க்கிறோம்.
சில நண்பர்களிடம் கேட்டப்போது பயோமெடிகல் இஞ்ஜினியரிங் படிப்பு பற்றி சொன்னார்கள். எதிர்காலம் நன்றாக இருக்கிறது என்றும் ஏதேனும் ஒரு மருத்துவமனையில் சேர்ந்துவிடலாமென்றும், அல்லது தனியாகவும் சிறிய அளவில் தொழில் தொடங்க முடியுமென்றும் சொன்னார்கள். வெளிநாடுகளிலும் அதிகவாய்ப்பு இருக்கிறது எனவும் சொன்னார்கள்.
MSc. molecular biology என்னும் படிப்பை மைசூர் பல்கலைகழகம் இந்த வருடம் முதல் ஆரம்பித்திருக்கிறது. இதை பற்றி எனக்கு அதிக விவரம் தெரியவில்லை. (4 வருடம்)
Bits Pilaniயில் M.Sc.(Hons.): Biological Sciences என்னும் படிப்பு உள்ளது.
இவற்றை படிப்பதால் என்ன நன்மை, எதிர்காலம் எந்த அளவு இருக்கிறது என்பதை தெரிவிக்கவும்.
இதை தவிர வேறு என்ன செய்யலாம் என்பதை தெரிந்துக்கொள்ள ஆசை.
உங்களுக்கு தொந்தரவாக இல்லையெனில் கொஞ்சம் விவரத்தை எழுதவும்.
நன்றி.


பயோ மெடிக்கல் பற்றி ஆராய்ச்சி மாணவர் திரு. அளிசான்றோ -வை தொடர்பு கொண்டு கேட்டேன்.

Alessandro to me
show details 06/25/08 Reply
My cell phone died, so when you come by, call me at extension 264. If
that doesn't work, try the lab extension, 253.
Sorry about that. (Hope you get this in time!)
See you soon,
-Alessandro

On Jun 25, 2008 8:07 PM, Alessandro <*********@gmail.com> wrote:
> Hey Alessandro,
> 11 is too late for me today. How about 9?
> Mohan (Rutgers)

பயோ-மெடிக்கல் என்பது என்ன?

இது ஒரு இன்டர் டிசிப்பிளினரி துறை. மருத்துவத்துறை, உயிரியல் மற்றும் அது சார்ந்த துறைகளுக்கு உதவிக் கருவிகளை உருவாக்கித்தரும் துறையாகும். எனவே உயிரியல் மற்றும் மருத்துவம் தெரிந்த பொறியாளர்களை உருவாக்குவது பயோ-மெடிக்கல் கல்லூரிகளின் பணி என நாம் கருதலாம்.

வேலை வாய்ப்பு கண்ணோட்டத்தில் இத்துறையை நீங்கள் விவரிக்க முடியுமா?

இதுபற்றி நான் எதுவும் சொல்லுவதற்கு முன் நான் ஒரு ஆராய்ச்சி மாணவன் என்பதை தெரிவித்து விடுகிறேன். நான் இது குறித்தது எது சொன்னாலும் அது இந்த வருடத்து நிலைமையாகும். அடுத்த வருடம் பற்றி நீங்கள் இந்த வருட இறுதியில் தான் கேட்க வேண்டும்.
தற்போது இயல் முறை மருத்துவத்திற்கான கருவிகள் அதிகம் தேவைப்படுகின்றன. மெடிகல் இமேஜிங் பிரிவுகளில் அதிகமாக வேலை வாய்ப்புகள் உள்ளன. எனது ஜூனியர் மாணவர் எழுவருமே இத்துறையில் தான் பணிபுரிகின்றன.

ஏன் பயோ-மெடிக்கல் படிக்கவேண்டும்? மற்ற துறைகளை விட இது எவ்வாறு அதிக வேலை வாய்ப்புகளைத் தரக்கூடும்?

நான் மற்ற துறைகளை விட அதிக வேலைவாய்ப்பு இதில் உண்டு எனக்கூறவில்லை. உங்களுக்கு ஆர்வம் இருந்தால் வேலை வாய்ப்பை குறித்து எந்த பயமும் இல்லாமல் படிக்கலாம். மென்பொருள் மேம்பாட்டுத் துறையில் தொடக்க நிலை பணியாளர் எவ்வாறு ஜாப் சாடிஸ்பாக்ஷனுடன் பெறுவாரோ அதுபோல்தான் இதிலும். மேலும், முக்கியமான ஒன்று, நீங்கள் தேர்ந்தெடுக்கும் பிரிவை பொறுத்து ப்ரோகிராமிங் செய்யவேண்டியும் வரலாம்.

அப்படியென்றால் மென்பொருள் மேம்பாடு சார்ந்த வகுப்புகளில் அமர வேண்டியிருக்குமா?

அவசியமில்லை, தேர்ந்தெடுத்தால் நல்லது. நீங்கள் எந்த மென்பொருளையும் மேம்பாடு செய்யத்தேவை இல்லை. ஆனால் மேட்லாப், எக்ஸ்.பி.பி., சாஸ் போன்றவற்றை பயன்படுத்தியாக வேண்டும். அதற்கு சற்றே ப்ரோகிராமிங் கற்க வேண்டிவரலாம். மற்ற படி, படிப்பு காலங்களில் பெரும்பான்மையை கால்வனா மீட்டருடன் கழிக்கவேண்டியிருக்கும் (ஹா ஹா ஹா)

இன்னும் மூன்று வருடங்களில் பயோ-மெடிக்கலில் பட்ட மேற்படிப்புக்கு தயாராக விருக்கும் மாணவனுக்கு உங்கள் அறிவுரை என்ன?


இப்போதே திட்டமிடுங்கள். அனாட்டமி, பிசியாலஜி, மைக்ரோ பயாலஜி, ஜெனரல் மெடிசன், பார்மக்காலாஜி, வைராலஜி, நியூரோ சயன்ஸ், மாலிக்குலார் பயாலஜி, டிஷ்ஷு என்ஜினீயரிங், போன்ற பாடங்கள் உள்ள ஒருதுறையில் இளங்கலை பட்டம் பெறுங்கள். முதுகலையில் நீங்கள் பொறியியலை படித்துக் கொள்ளலாம்.

பயோ-மெடிக்களிலேயே இளங்கலை படித்து வேலை பெறவேண்டுமானால்?

நான் ஏற்கனவே சொன்ன பாடங்களுடன் மெடிக்கல் இமேஜிங், பயோ-ரோபாட்டிக்ஸ், கம்ப்யூட்டேசனால் நியுரோசயன்ஸ், பயோ-மெடிக்கல் இன்ஸ்றுமேன்டேசன், மேன்-மெசின் சிஸ்டம், பயோ-ஸ்டாடிஸ்டிக்ஸ் போன்றவற்றை படிக்க முன்தயாரிப்பு செய்து கொள்ளுங்கள்.

தகவல்களுக்கு மிக்க நன்றி.

பிரச்சினை இல்லை. மேலும் தகவல்களுக்கு தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள், இரவு பதினோரு மணிக்கு பிறகே உசிதமான நேரம். நன்றி.


மைசூர் பல்கலைகழகம், Bits Pilani பற்றி தகுந்த நண்பர்களுடன் விசாரித்து எழுதவிருக்கிறேன்.

Read More......

Wednesday, June 25, 2008

செல்வி ஜெயலலிதா -வின் வலைப்பூ.

· 56 comments

நம் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா -வின் வலைப்பூவை பதிவுலக நண்பர்களுக்கு அறிமுகம் செய்வதில் நான் உள்ளபடியே பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.

வெகு நாட்களாக வலைப்பூவை தொடங்குவது குறித்து ஜெயலலிதா அவர்கள் யோசித்து வந்தாலும் இப்போதுதான் அவரது எண்ணம் கைகூடியிருக்கிறது. வழக்கறிஞர் ஜோதியின் துரோகத்திற்கு பிறகு, ஆலோசனை கூற தகுந்த ஆட்கள் கிடைப்பதில் சற்றே சுணக்கம் இருந்த போதிலும் இப்போது வெற்றிகரமாக வலைப்பூ தொடங்கப் பெற்றிருக்கிறது. புரட்ச்சித்தலைவி கொடநாட்டில் ஓய்வில் இருப்பதால் ஊட்டியில் இருந்தபடியே வலைப்பூவை நிர்வகிப்பார்

தற்போது வலைப்பூ முழுதும் திராவிட திம்மிகளின் ஆதிக்கம் நிலவுவதால் தலைவியின் பெயரில் வலைப்பூ தொடங்குவது சற்றே ஆபத்தாய் முடியும் என்று கருதி வலைப்பூ வேறொரு பெயரில் தொடங்கப்பட்டிருக்கிறது. சுப்பிரமணியன் சுவாமியின் ஆலோசனையின் பேரில் Valentina என்று ஆங்கிலத்திலும் சகோதரர் வைகோ வின் கெஞ்சுதலின் பேரில் "தமிழரசி" என்று தமிழிலும், அதிமுக ஆஸ்த்தான சோதிடர் "நம்புங்கள்" நாறவாயன் வழிகாட்டுதலின் பேரில் இரண்டையும் கலந்து தமிங்கிலீஷில் ஒரு வலைப்பூ தொடங்கப்பட்டிருக்கிறது. ஆறுகொடியே எண்பத்தெட்டு லட்சத்து பண்ணிரெண்டாயிரத்து நூற்றி பதினோரு அதிமுக தொண்டர்களின் விருப்பத்தின் பெயரில் புரட்சித்தலைவியின் "தான்தோன்றித்தன" தனியியல்புகள் தெறிக்கும் வண்ணம் கட்டுரைகள் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில், தற்குறி கமலகாசனைப் பற்றி அவரது “ஒலக நாயக்கன் “ கொட்டம் அடங்கும் பொருட்டு சில கட்டுரைகள் வெளியிடப்பட்டுள்ளன. தனியொருவராக சட்டமன்றத்தை கதிகலக்கிய அம்மா இப்போது அதே பாணியில் எதிரிகளை பின்னூட்டங்களில் கலாய்த்து வருகிறார். இதுவரை தன்னை பீனிக்ஸ் பறவையாக காட்டி வந்த தானைத்தலைவி, சிங்க நிகர் செல்வி, புறநானூற்று தாய், நம் புரட்சித்தலைவி அம்மா இப்போது தன்னை அமிஞ்ச பீடி என்று blog caption -ல் கீழ்க்கண்டவாறு பிரகடனப்படுத்தியுள்ளார்.

“பீடியைப்போலவே மீச்சிறு அளவினள்! புகைக்க நினைத்தால்(உங்களால் முடிந்தால்) நாறடிப்பேன், அமிஞ்ச பீடியாய், நனஞ்ச சுருட்டாய்!”

மகோன்னத மேதா விலாசம் ஸ்திரீ வாலன்டீனா தமிழரசியின் ஆன்லைன் பத்ரிகா -விற்கு இன்றே விஜயம் பண்ணுங்கள்.

....இருங்க இருங்க....இங்க பின்னூட்டம் போட்டுட்டு அங்க போங்க.

டிஸ்க்கி1: பதிவுலகின் புதிய வரவு வாலன்டீனா தமிழரசியை வருக வருக என இருகரம் கூப்பி தமிழ்மண அரை டிக்கட்டுகள் சார்பாக வரவேற்கிறேன்.

டிஸ்க்கி 2: பதிவில் நான் குறிப்பிடும் பார்ப்பனியம் சார்ந்த கிண்டல்கள் ஜெயலலிதாவைச் சுட்டுவன மட்டுமே. பதிவர் வாலண்டினா, ஜெயலலிதா இருவருக்கும் உள்ள ஒற்றுமை என நான் கருதுவது தான்தோன்றித்தன தனியியல்புகள் முதலானவை மட்டுமே அன்றி வேறெதுவும் இல்லை.
I don't indulge in targeting people".

இணைப்பு(ஜூன்-26):

செல்வி ஜெயலலிதா, செல்வி வாலண்டினா ஒற்றுமைகள்:

1) இருவரும் கான்வென்ட் ஸ்கூல்

2) தற்போது வாசம்: முன்னவர் கொடநாடு, பின்னவர் ஊட்டி.

3) தலைக்கனம்:
பெரியவர்(1998): "என்னை கேள்வி கேட்பவர்கள் கோர்ட்டுக்கு கருணாநிதி வந்த போது இதே கேள்வியை கேட்டீர்களா?, நீங்களெல்லாம் எடுபிடிகள், உண்மையான பத்திரிக்கைக்காரர்களுக்கு பதில் சொல்லிக்கொள்கிறேன், இங்கிருந்து கிளம்புங்கள் எல்லோரும்"
சின்னவர்: "to see the achievements .... .... .... before scribling here. Any real Film Critics here?"

4) கெக்கே பிக்கே தனம்:
முன்னாள் முதல்வர்: "சேது சமுத்திரம் நிறைவேறினால் தமிழ்நாட்டுக்கு மீண்டும் சுனாமி வரும்"
இந்நாள் உலற்வர்: ".....அப்படியே ஒரு மளிகைக்கடக்காரரின் பையனாக நடிக்காமல் வாழ்ந்துகாட்டிய பரத், பருத்திவீரன் கார்த்தி சரவனன், நாசர், சீயானாகவே மாறிய... அந்நியன் ரெமோ அம்பி என்று தம்மாத்தூண்டு ஷாட்களில் கலக்கிய விக்ரம், பிதாமகன், ஆறுச்சாமி என்று அசத்திய விக்ரம், பாலக்காட்டு சமையல் காரனாக வந்த மாதவன்...."

5) இங்கிலீஷ்-தமிழ் குழப்பம்:
இரும்பு பெண்மணி: ஓட்டு கேட்க தமிழும் சட்டமன்றத்தில் ஆங்கிலமும் பத்திரிக்கைகாரர்களுக்கு ரெண்டும் கலந்தும் என இவர் கலக்குவது நாம் அறிந்ததுதான்.
இம்சைப் பெண்மணி: "For Lucky once again.. from my post
ஆனால் நம் ஒலகத்த்ரப் படத்தில் முறூக்கேறிய"


6) அப்பீட்டு:
மூத்த செல்வி: "நான் பெண் என்பதால் தொடர்ந்து விமர்சிக்கப்படுகிறேன்"
இளைய செல்வி: "இன்று புதிதாக எழுதவந்திருக்கிறேன். அதற்குள் ”கேணத்தனமாக எழுதுகிறாள்” என்றெல்லாம் உற்சாகப்படுத்துவது அவசியம் தானா?"


7)

Read More......

Tuesday, June 24, 2008

காதலைச் சொல்லும் நாளதுவில்...

· 9 comments

Read More......

Friday, June 20, 2008

லக்கி லுக் - ஒரு அதிரடி பேட்டி. (பாகம் - 2)

· 17 comments

"ச்சும்மா ட்டமாஷ்." வலைப்பூவின் வெள்ளிவிழா பதிவுகள் வரிசையில் அடுத்து பதிவர் லக்கி லுக் -இன் பேட்டியை வெளியிடுகிறேன். பேட்டியின் முதல் பாகம் இங்கே. பின்னூட்டங்களுக்கு அவர் பதிலளிப்பார். வழக்கம்போல் மட்டுறுத்தலை நான் மேற்கொள்கிறேன்.


ந்தியாவின் மற்ற பகுதிகளை விட இங்கு தாழ்த்தப்பட்ட சமூகத்தில் முன்னேற்றம் விரைவாக இருந்திருக்க வேண்டுமல்லவா? ஏன் இல்லை? அல்லது இருக்கிறதா?

தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றம் இந்தியாவின் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் நிச்சயமாக அதிகம். இவ்விஷயத்தில் தமிழகத்தோடு ஒப்பிடும் அளவுக்கு மகாராஷ்டிரா மட்டுமே இருக்கிறது. மற்ற மாநிலங்களில் நிலைமை கவலைக்கிடமாக தானிருக்கிறது.

ம்யூநிஷ்ட்டுகளும் பகுத்தறிவாளர்களும் இணையும் அந்த ஆதிக்க எதிர்ப்பு என்ற புள்ளியை பற்றி விளக்குங்கள்.

ந்தப் புள்ளியில் சரியாக இணைகிறார்கள் என்ற தெளிவு எனக்கில்லை. நானெல்லாம் கூட பிறக்கும் போதே அமெரிக்கா ஒழிக என்று சொல்லிக் கொண்டு தான் பிறந்திருப்பேன் என்று நினைக்கிறேன். ஆதிக்க எதிர்ப்பு தான் கம்யூனிஸம் என்றால் திராவிட இயக்கத்தார் அனைவருமே கம்யூனிஸ்ட்டுகள் தான்

ருத்து முதல் வாதம், பொருள் முதல் வாதம் பற்றி உங்கள் அறிதலை இத்தருணத்தில் பகிர்ந்து கொள்ள முடியுமா?

ந்த கேள்வியை வாசிக்கும்போது எனக்கு வாசிப்பு பத்தாது என்பதை உணர்ந்துகொள்ள முடிகிறது. ஒரு ஐந்து ஆண்டுகள் கழித்தாவது இந்த கேள்விக்கு என்ன பொருள் என்று புரிந்துகொள்ள முயற்சிக்கிறேன்.

ப்போதெல்லாம் சென்னைவாசிகள் மெட்ராஸ் பாசையில் பேசுவதில்லை. எல்லோரும் வடிவேல் பாசையில் பிதற்றுகிறார்கள். தங்கள் சுய அடையாளத்தை இழக்கும் இப்போக்கு ஆபத்தானதா?

ல்லோரும் நினைக்கும் மெட்ராஸ் பாஷை என்பதே மிகைப்படுத்தப்பட்டு சினிமாவிலும், ஊடகங்களிலும் சொல்லப்படும் ஒரு பாஷை. அதுமாதிரி பாஷை பேசுபவர்களை மெட்ராஸில் காண்பது அரிதிலும் அரிது. என்ன மெட்ராஸ்காரன் என்ன பேசினாலும் முன்னாடி 'ஓத்தா' போட்டு பேசுவான். அது தான் ஒரிஜினல் மெட்ராஸ் பாஷை.

சென்னை மற்றும் பெங்களூரை அரசியல் தாண்டி ஒப்பிடுங்களேன்!

பெங்களூர் கால் நூற்றாண்டுக்கு முன்னரே நன்கு முன்னேறிய நகரம் என்பதாக சுஜாதாவின் எழுத்துக்கள் மூலமாக அறிய முடிகிறது. சென்னை கடந்த பண்ணிரண்டு ஆண்டுகளாக தான் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வருகிறது. இரு நகரங்களுக்கும் பொதுவான அம்சம் போக்குவரத்து நெரிசல் என்பதாக அறிந்திருக்கிறேன். பெங்களூரில் பெண்கள் அழகாக இருப்பார்கள் என்பதாக தெரிகிறது. சென்னை இந்த விஷயத்தில் கொஞ்சம் சுமார் தான்.

முன்னேற்றம் என்பது எது? IT பட்டதாரிகளுக்கு மட்டும் வேலை கிடைப்பதா? அல்லது 12 -ம் வகுப்பு படித்தவர்க்கும் வேலை கிடைப்பதா? பெங்களூர் பற்றி சுஜாதா அப்படி என்னதான் சொன்னார்?

முன்னேற்றம் என்பது எல்லாத்தரப்பு மக்களின் வாழ்க்கைத்தரமும் உயர்வதாக தான் பொதுக்கருத்து இருக்கிறது. பெங்களூரில் மக்களின் வாழ்க்கைத்தரம் இப்போது சென்னை மக்களுக்கு இருக்கும் வாழ்க்கைத்தரத்தை 25 ஆண்டுகளுக்கு முன்பாகவே எட்டிவிட்டதாக சுஜாதா சொல்லியிருந்தார்.

சென்னை பைலட் தியேட்டரில் உலக சினிமா ஏதும் பார்த்ததுண்டா?

டைசியாக 'இண்டியானா ஜோன்ஸும், கபால முத்திரையும்' பார்த்தேன். அது உலக சினிமாவா என்று தெரியாது. உலக சினிமா என்பதற்கு எது அளவுகோல்?

டிகை ஷகீலா உங்கள் வீட்டிற்கு வருகை தந்தால் வாசலை இடித்து கட்டுவது குறித்து பரிசீலிப்பீர்களா?

கீலாவுக்காக என் வீட்டுக்கு எதிரில் புதியதாக ஜோதிமஹால் கட்டுவேன். கேள்விக்கு சம்பந்தமில்லாத ஒரு இடைசெறுகல் : இப்போது ஜோதி தியேட்டரில் 'மிஸ் ஷகிலா' என்ற உலக சினிமா ஓடிக்கொண்டிருக்கிறது

ங்கள் முழுப்பெயர், பணி, ஊர், குடும்பத்தினர், எதிர் வீட்டு பிகர் பற்றி வாசகர்களுக்கு சொல்ல முடியுமா?

ன்னுடைய முழுப்பெயர் 'சிறுணை இல.மோகன கிருஷ்ணகுமார்', என்னுடைய பணி விளம்பர ஆலோசகர், ஊர் மடிப்பாக்கம், உலகமே என் குடும்பம் தான், கடந்த மாதம் புதியதாக எதிர்வீட்டுக்கு ஒன்றல்ல, ரெண்டு ஃபிகர் குடிவந்திருக்கிறது. ஒரு ஃபிகர் திராவிட ஃபிகர் லுக்கிலும், அவளுடைய தங்கை ஆரிய ஃபிகர் லுக்கிலும் இருக்கிறாள்கள். இன்னும் பெயர் இத்யாதி விவரங்கள் விசாரிக்கவில்லை.

ங்கள் படிப்பு மற்றும் தனித்திறமைகள்?


ரசியல் இளங்கலைப் பட்டம், இதைப் படிப்பு என்றெல்லாம் சொல்லமுடியாது :-) ஃபிகர் மடிப்பதும் தனித்திறமையில் சேருமென்றால் சுமாரான பர்சனாலிட்டியை வைத்தே நான் ஐந்துக்கும் மேற்பட்ட குறிப்பிடத்தக்க ஃபிகர்களை மடக்கியதை என் திறமை மூலமாக சாதித்ததாக சொல்லலாம்.

திவுலகிலும் பொதுவிலும் உங்கள் நெருங்கிய நண்பர் இருவர், தூரத்து எதிரிகள் இருவர் பற்றி குறிப்பிடுங்கள்.

திர்கருத்து கொண்டவர்களும் எனக்கு தனிப்பட்ட முறையில் நண்பர்களே. உச்சநீதி, உயர்நீதி என்று நீதியை தரம் பிரித்து வைத்திருப்பது போல நெருங்கிய, தூரத்து என்று நண்பர்களை தரம் பிரிக்க விரும்பவில்லை

ச்சும்மா ட்டமாஷ் வலைப்பூ பற்றி உங்கள் கருத்து என்ன?


நாமெல்லாம் இலக்கியம் படைக்க இங்கே வரவில்லை என்ற யதார்த்தத்தை உணர்ந்த இன்னொரு வலைப்பூ.

புதிதாக பதிவெழுத வருவோர்க்கு உங்கள் அறிவுரை என்ன?.


திவெழுதுவதை விட அதிகமாக படிக்கவும். அருள் எழிலன், சுகுணா திவாகர், பைத்தியக்காரன், வளர்மதி, ஜ்யோவ்ராம் சுந்தர், சாரு நிவேதிதா, ஜி.கவுதம், பா.ராகவன், பத்ரி, டாக்டர் ப்ரூனோ, எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன், அய்யனார் போன்றவர்களின் வலைப்பூக்களை தவறாது வாசிக்கவும். புதிய வார்த்தைகள் நிறைய கற்றுக் கொள்ள முடியும். வாக்கியங்களை எளிமையாக அமைக்கும் நுட்பத்தை அறிந்துகொள்ள முடியும். ஆனால் எதை வாசித்தாலும் உங்களுக்கென்று இருக்கும் இயல்பினை இழந்துவிட வேண்டாம். உங்கள் இயல்பு தான் உங்கள் முகவரி


ராபிட் ரவுண்ட்

ழகிரி? ஸ்டாலின்?

ரசியலுக்கு முன்னவர். ஆட்சிக்கு பின்னவர்.


கிலா? நமீதா?

பீப்பாய், அண்டா!!


ண்மைத்தமிழன்? டோண்டு?

பிளேடு பக்கிரி, இண்டர்நேஷனல் மாஃபியா!


சுண்டை கஞ்சி? பதிவர் கூட்டம்?

ப்பு, பிளேடு!!


ரங்கிமலை ஜோதி? ராயப்பேட்டை பைலட்?

கீலா, ஷரன் ஸ்டோன்!



தனது செப்டம்பர் 9 பதிவின் பின்னூட்டத்தில் தன் சாதியை வெளியிட்டதற்காக லக்கிலுக்கிற்கு எனது கண்டனங்கள் - மோகன் கந்தசாமி |செப்டெம்பர் 10, 2008

Read More......

லக்கி லுக் - ஒரு அதிரடி பேட்டி.

· 15 comments

"ச்சும்மா ட்டமாஷ்." வலைப்பூவின் வெள்ளிவிழா பதிவுகள் வரிசையில் அடுத்து பதிவர் லக்கி லுக் -இன் பேட்டியை வெளியிடுகிறேன். பின்னூட்டங்களுக்கு அவர் பதிலளிப்பார். வழக்கம்போல் மட்டுறுத்தலை நான் மேற்கொள்கிறேன்.


ர்சனல் கேள்விகளை இறுதியில் வைத்துக்கொண்டு, உங்களைப் போன்றே அதிரடியாக விசயத்திற்குச் செல்வோம். அனானிகள் வந்தால் பெரும்பாலான பதிவர்கள் கதவை இழுத்து சாத்திவிட நீங்கள் மட்டும் அவர்களை உள்ளே கூப்பிட்டு உதைக்கிறீர்களே ஏன்?

ண்மையை சொல்லப் போனால் நான் வெளியிடுவதை விட ரிஜெக்ட்டு செய்யும் அனானி கமெண்டுகள் தான் அதிகம். அனானிகளும் வலைப்பதிவுலகின் ஒரு அங்கம். நான் தமிழ்மண நட்சத்திரமாக இருந்த ஒரு வாரம் மட்டுமே அனானி-அதர் ஆப்ஷனை மூடி வைத்திருந்தேன். சில நேரங்களில் அனானி ஆட்டம் சுவாரஸ்யமாகவே இருக்கிறது. பல நேரங்களில் எரிச்சலை கிளப்புவதும் உண்மை!

"கும்மி", "டவுசர் கிழியுது", "தாவு தீருது" போன்ற சொற்றொடர்களை பதிவுலகில் பிரபல படுத்தியதில் உங்கள் பங்கு என்ன? உங்கள் மற்ற கண்டு பிடிப்புகளை பட்டியலிட முடியுமா?

வை ஏற்கனவே என் மாணவப் பருவத்தில் பயன்படுத்திய சொற்றொடர்கள் தான். எதையெல்லாம் இப்போது பயன்படுத்துகிறேனோ அதெல்லாம் ஏற்கனவே இங்கே இருப்பவை தான் என்பதால் என்னுடைய பங்கு என்று எதுவுமில்லை. நான் கண்டுபிடிப்பாளன் அல்ல, காப்பி அடிப்பவன் என்பதால் எதையும் பட்டியலிட்டு சொந்தம் கொண்டாட முடியாது.

"காண்டு கஜேந்திரன்" என்ற பாத்திரத்தை நீங்கள் உருவாக்கி பிரபல படுத்தியுள்ளீர்கள், அதேபோல் "கஜக்கோல் பாண்டியன்" பாத்திரத்தை உருவாக்கி வருவதாக லண்டனில் இருந்து வெளிவரும் "ஸ்டேட்ஸ் மேன்" ஏடு செய்தி வெளியிட்டுள்ளது. அதை நீங்கள் இந்த பேட்டியில் உறுதி செய்யமுடியுமா?

ஜக்கோல் பாண்டியன் என்ற பாத்திரம் அருமையான கற்பனையாக இருக்கிறது. மேட்டர் கதைகளில் தான் இதுபோன்ற பாத்திரங்கள் இருக்கும். எனக்கு மேட்டர் கதை எழுத வராது.

"பெயரிலி" உடனான பிரச்சினைக்கு பிறகு நீங்கள் "ரூம் போட்டு அழுத" தாக வந்த வதந்தியைப் பற்றி.

பெயரிலியோடு எனக்கு எந்த பிரச்சினையுமில்லை. தமிழச்சி பதிவுக்கு நான் பின்னூட்ட ஆதரவு தந்து வந்ததால் அவர் என்னை திட்டினார். பதிலுக்கு திருப்பி திட்டினேன். டோண்டு பதிவுக்கு பின்னூட்டம் போட்டவர்களை போலி டோண்டு திட்டியது போலவே இது ஒரு பாசிஸ நடவடிக்கையாக எனக்கு பட்டதால் என் எதிர்ப்பை முழுமூச்சாக காட்டினேன். மற்றபடி பெயரிலி அண்ணனை எங்காவது சந்திக்க நேர்ந்தால் கட்டியணைத்து வரவேற்க எனக்கு எந்த தயக்கமும் இல்லை. அவருக்கு இருக்காது என்று நம்புகிறேன்.

ங்கள் வலைப்பூவை பிரபலப் படுத்த ஏதேனும் அஜண்டா தயாரித்தீர்களா அல்லது "மகா யக்ன யாகம்" செய்தீர்களா?

ரம்பத்தில் நிறைய பேருக்கு அதிரடியாக பின்னூட்டங்கள் போட்டுவந்தேன். அதை தவிர வேறு எதுவுமில்லை.

திரடியாக பின்னூட்டம் என்றால், ஜல்லி பின்னூட்டமா, கலாய்த்தல் பின்னூட்டமா அல்லது அட்டன்டன்ஸ் பின்னூட்டமா?

ல்லா மாதிரி பின்னூட்டமும். அட்டணண்ட்ஸ் பின்னூட்டம் போட்டால் பேக் பயர் ஆக வாய்ப்புண்டு.

தி. மு. க -வின் வருங்கால தலைவருக்கு எதிர்காலத்தில் பிரச்சினை தரப்போவது யார்? ஜெயலலிதா வா? விஜய காந்த் -ஆ? வீர பாண்டியாரா? அல்லது டோண்டு சாரா?

டந்த கால் நூற்றாண்டாக திராவிட இயக்க சிந்தனைகள் நீர்த்து வருவதாக அல்லது முழுமுனைப்போடு சிந்திக்கப்படாததாக தோன்றுகிறது. இதுதான் எதிர்கால திமுக தலைவருக்கு பிரச்சினையை தரும் என்று கருதுகிறேன். திராவிட இயக்க சிந்தனைகளை தவிர்த்துப் பார்த்தால் திமுகவுக்கும் மற்ற கட்சிகளுக்கும் வேறுபாடு எதுவுமில்லை.

லந்தூர் சட்டமன்ற தொகுதி டிக்கெட் உங்களுக்கு தரப்பட்டால் எத்தனை லட்சம் செலவு செய்வீர்கள்? ப்ளாக்கில் விற்பதைப் பற்றி யோசித்திருக்கிறீர்களா?

நான் இப்போது இருப்பது தாம்பரம் தொகுதி. அதுவும் அடுத்த தேர்தலில் சோழிங்கநல்லூர் தொகுதியாக மாறப்போகிறது. ஆலந்தூரில் எனக்கு எப்படி சீட்டு தருவார்கள்? திண்டுக்கல் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டபோது நடிகர் சந்திரசேகர் சொன்னதை தான் நானும் சொல்லமுடியும். "தலைவர் தான் செலவு செய்யணும்!"

ரே நேரத்தில் பத்து ஆட்டோக்கள் வந்தால் உங்கள் வீட்டு வாசலில் நிறுத்த இடமிருக்கிறதா?

நிறுத்த இடமிருக்கிறது. வந்த ஆட்டோக்களை நொறுக்கித்தள்ள ஆள்பலமும் இருக்கிறது.

லைவர் கலைஞர் திருக்குறளை கையாள்வதில் லாவகம் மிக்கவர் என்பது எல்லோரும் அறிவர். உங்களுக்கு அதில் பரிச்சயம் உண்டா? சான்றாண்மை அதிகாரத்தில் ஒரு குறளை சொல்லி விளக்குங்கள்.

"ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர்
மாற்றாரை மாற்றும் படை."


வல்லவராக இருப்போரின் வல்லமையே பணிவோடு நடந்துகொள்வதுதான். எதிரிகளை கூட இந்த அணுகுமுறை மூலமாக நண்பர்களாக்கி கொள்ள முடியும்.

எனக்கு குறளில் அவ்வளவு பரிச்சயமில்லை. பள்ளிப் பருவத்தில் ப்ரேயர் மீட்டிங்கில் குறள்விளக்கம் சொன்னதால் சில குறள்கள் மட்டும் நினைவிலிருக்கிறது.

திராவிட இயக்கம் ஒரு வெற்றி பெற்ற கருத்தாக்கம் என்கிறார் இதழியலாளர் ஏ. கே. பன்னீர்செல்வம். உங்கள் கருத்து என்ன?

நிச்சயமாக. கடந்த நாற்பதாண்டுகளில் தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர் / தாழ்த்தப்பட்டோர் மத்தியில் ஏற்பட்டிருக்கும் மவுனப்புரட்சியின் வித்து திராவிட இயக்க சிந்தனைகளே. இன்று ஏராளமான தலித்கள் வழக்குரைஞர்களாக, வங்கிப் பணியாளர்களாக, அரசு ஊழியர்களாக பணியாற்றுவதை பார்க்கிறோம். நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு சாத்தியமேயில்லாத விஷயங்களாக இருந்தவை இவை.


(தொடரும்)


இப்பேட்டியின் தொடர்ச்சி இன்னும் சில மணிநேரங்களில் வலையேற்றப்படும். ஷகிலா, நமிதா, எதிர் வீட்டு ஜன்னல், டோண்டு, உண்மைத்தமிழன், கம்யூனிசம் என விலாவாரியாக பதிலளித்து உள்ளார்.


தனது செப்டம்பர் 9 பதிவின் பின்னூட்டத்தில் தன் சாதியை வெளியிட்டதற்காக லக்கிலுக்கிற்கு எனது கண்டனங்கள் - மோகன் கந்தசாமி |செப்டெம்பர் 10, 2008

Read More......


கிடங்கு