Monday, June 30, 2008

என் தாக்க அறுக்க வந்த ஆன் சைட் பார்ட்டி

·

நம் பட்டமளிப்பு விழா நிகழ்வுகள் ஒவ்வொருவர் மனதிலும் பசுமையாய் என்றும் நிற்கும் என்பது நாம் அறிவோம். விழாவில் நாம் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்கள் தான் மீண்டும் ஒருநாள் பார்க்கும்போது நம் பெருமித நினைவுகளைத் தூண்டும் கிளர்ச்சிப் பொருட்கள். ஆனால் என் வாழ்வின் மூன்றாவதும் இறுதியுமான 2008 பட்டமளிப்பு விழா புகைப்படங்களை எவரிடமும் காட்டி பெருமை கொள்ள முடியாத படிக்கு என் நிலைமையாகும் என நான் கனவிலும் நினைத்திருக்கவில்லை. காரணம் விதி விண்ணேறி வந்தது. தொலைபேசியில் அதன் வரவை உறுதி செய்யும்போது அபாக்கியவான், நான் அறிந்திருக்கவில்லை.

"ஹலோ..."

"ஹலோ அண்ணே, நாந்தாண்ணே ரகு, மெட்ராஸ் -லருந்து பேசறேன்!"

"எந்த ரகு?.."

"என்னண்ணே! மறந்துட்டிங்களா? கெமிஸ்ட்ரி பய்யன் ரகு -ண்ணே!"

"அடேய் நீய்யா! சொல்லு, எப்டி இருக்க +2 பாஸ் பண்ணிட்டியா? "

"ண்ணே, டிகிரியே முடிச்சிட்டு ஒரு வருஷமா ஐ.டி -ல வேல பாக்றண்ணே!"

"என்னடா கத உடற, ஒன்ற வருஷத்துல எவண்டா டிகிரி தரான் இந்தியாவுல?"

"எங்கப்பாகிட்ட வேணா போன குடுக்கிறேன் நீங்களே கேளுங்க!"

"சரி, என்னுமோ போ!............. அப்பறம் என்ன திடீர்ன்னு போன்?"

"யு.எஸ் வரண்ணே ஆன் சைட்டுக்கு 3 மாசம், நியூ யார்க் தான் வரேன்."

"ஓஹோ! வா வா, அப்படியே மறக்காம உன்ன ஆன் சைட்டுக்கு ரெக்கமண்ட் பண்ணான் பாத்தியா, அவன் பர்சனல் மெயில் ஐ.டி. ய வாங்கிட்டு வா!"

"சரிண்ணே!, ... அப்பறம் உங்கக்கூடதான் தங்கப்போறேன்."

"என்கூடயா? போடா வெண்ணை, ... உங்க கம்பனி அரேஞ் பண்ணுவாங்க, ... அங்க போ!"

"வேணாண்ணே, எங்கப்பா கண்டிப்பா உங்கக்கூடத்தான் தங்கச் சொல்றாரு!"

"என்னது கண்டிப்பாவா? ...நான் இன்னும் அவர் கிளாஸ் -ல படிச்சிட்டு இருக்கேன் -ன்னு நெனைச்சிட்டு இருக்காரா? ஆர்டர்லாம் போடறாரு!"

"..ண்ணே ப்ளீஸ் ண்ணே! இல்லன்னா அனுப்பமாட்டாருண்ணே!"

"சரி வந்துத்தொல!...ஆமா, எப்பவும் உங்கம்மா முந்தாணிய புடிச்சிட்டே திரியுவியே, இங்க அந்த வசதியெல்லாம் கெடயாது என்ன பண்ணபோற?"

"என்னானே! இப்பவும் அப்படியேவா இருப்பேன்?, நீங்க போய் பன்னண்டு வருஷம் ஆனமாதிரி சீன் போடுறிங்க"

"அது சரி..எங்கம்மா என் கிராசுவேசன் டே -க்கு வராங்க, ரெண்டுபேரும் ஒன்னா டிக்கட் புக் பண்ணுங்க, என்ன சரியா!"

"சரிண்ணே!"

"சரி போன வை."

எதிர் பார்த்த படியே, ஏர்போர்ட்டில் என் அம்மாவின் முந்தானையை பிடித்துக்கொண்டு நின்றிருந்தவனை அள்ளிப்போட்டுக்கொண்டு வீட்டுக்கு வந்தபோதுதான் தெரிந்தது ஏழரையும் கூடவே வந்துள்ளது என்று. முதல் நாளே என் உடனிருந்தவனுடன் சண்டை போட்டான். அவன் இவனைவிட பொடியன், இனி மூன்று மாதத்திற்கு இந்தப்பக்கமே வரமாட்டேன் என்று சொல்லி ஓடிப்போன அவன் நேற்று முன்தினம் தான் வந்தான்.

நான் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த கிராஜுவேசன் டே வந்தது. முந்தய நாள் இரவு அனைத்தும் தயார் நிலையில் வைத்துவிட்டு, என் அம்மாவுக்கு இன்ஸ்ட்ரக்ஷன் கொடுத்துக்கொண்டிருந்தேன். அப்போதுதான் அந்த அசம்பாவிதம் நிகழ்ந்தது!

"டேய், நாளைக்கு பங்க்ஷனுக்கு இவன் வரலையா?"

"அவன் எதுக்கு மா, அவன் ஆபிஸ் போக வேணாமா!"

"இல்லண்ணே, நான் பர்மிஷன் சொல்லிடறேன்" என்று இதற்காகவே காத்திருந்தவன் போல் சொன்னான். நான் முறைத்ததும் ஜகா வாங்கியவன் என் அம்மாவைப்பார்த்தான்.

"அவனும் வரட்டும் விடுறா, போட்டா எடுக்கவாவது ஆள் வேண்டாமா?" -தான் செய்வது இன்னது என்று தெரியாமல் அவனுக்கு ரிக்கமன்ட் செய்தாள் என் அம்மா. அதன் பிறகு அப்பீல் ஏதும் இல்லாமல் போகவே நானும் ஆண்டவன் மேல பாரத்த போட்டுட்டு தூங்கச்சென்றுவிட்டேன்.

ரகு காலையிலேயே எழுந்து ரெடி ஆகி, அங்கும் இங்கும் ஓடியபடி போட்டோ எடுத்து பிராக்டிஸ் செய்து கொண்டிருந்தான். நான் பல் தேய்ப்பது, என் அம்மா கொட்டாவி விடுவது என முக்கியமான தருணங்களை பதிவு செய்து கொண்டிருந்தான்.

"டேய் ஒரு ஓரமா உட்காருடா, நானே டென்ஷன்ல இருக்கேன், நீ வேற இம்சைய குடுக்கிற" என்று சலித்துக்கொண்டே உடை அணிந்து தயாரானேன்.

முட்டி போட்டு அயர்ன் செய்து கொண்டிருந்தவனிடம் வந்து "அண்ணே ஒரு போஸ் கொடுங்க" என்றான்.

"போட்டோ எடுக்க வேறு ஆள் ரெடி பண்ணியாச்சு, நீ கொஞ்சம் உணர்ச்சி வசப்படாம சாப்ட்டுட்டு கெளம்பு" என்று சற்றே கடுமையாக சொல்லி அனுப்பி வைத்தேன்.

என் அம்மாவிடம் போய் என்ன சொன்னான் என்று தெரியவில்லை, அவள் அங்கிருந்த படியே கத்தினாள், "அவன்தான் நான் போட்டோ எடுக்கறேன்றான் இல்ல, வேற ஆளு எதுக்குடா?"

வெற்றி பெருமிதத்தோடு என்னிடம் வந்தவன் என் அனுமதியின்றியே இப்போது போட்டோ எடுத்தான், நான் முறைப்பதையும் பொருட்படுத்தாமல். கீழே இருப்பதுதான் அந்த போட்டோ. கடு கடுப்பில் எனது முகம் மேக்கப் போடாத நயன்தாரா மாதிரி இருந்ததால், பிறகு போட்டோவை சற்றே புராசஸ் செய்துவிட்டேன்.



நான் வேறு வரிசையில் உள்ளே நுழைய வேண்டியிருந்ததால், அவர்களுக்கு என்ட்ரி பாஸ் பெற்று உள்ளே அனுப்பி விட்டு என்னிருக்கைக்கு சென்று சேரும் வரை ஒரு டசன் முறையாவது எனக்கு கால் செய்து இன்ஸ்ட்ரக்ஷன் கொடுத்திருப்பான்.

"அண்ணே, உள்ள போய் உட்காந்ததும் ஒரு மிஸ்டு கால் கொடுத்துட்டு ஒரு வாட்டி எழுந்து நில்லுங்க, அப்பத்தான் போக்கஸ் பண்ண வசதியா இருக்கும்"
சரிடா!

அண்ணே, பட்டம் வாங்கினதும் தொப்பிய கழட்டி ஒரு வாட்டி ஆட்டினிங்கன்னா, சிக்னலா புரிஞ்சிகிட்டு ஷூம் பண்ண வசதியா இருக்கும்"
சர்ர்ர்ர்ர்ரிடா!

எந்த பிகர் கூடயாவது சேர்ந்தாமாதிரி போட்டோ வேணுன்னா ஒரு சிக்னல் கொடுங்கண்ணே, அம்மாவுக்கு தெரியாம எடுத்திடறேன்.
டேய்ய்ய்...கம்ம்ம்முன்னு போன வைடா"

அடுத்த முறை போன் வந்தது. தமிழில் இருப்பதிலேயே ஒரு மோசமான வார்த்தையை சொல்லி நான் கத்தவும் பக்கத்திலிருந்த வெள்ளைக்காரன் வேறுஇடம் போய் அமர்ந்து கொண்டான்.

அதன் பிறகு அவன் என்ன செய்து கொண்டிருந்தான் என்ற கவலையை விடுத்து பட்டமளிப்பு உரையில் கவனம் செலுத்தத்தொடங்கிவிட்டேன்.

ஒரு படமாவது எப்படியும் நன்றாக எடுத்திருப்பான் என்ற நம்பிக்கை எனக்கு ஏனோ கடைசிவரை இருந்தது. அவன் எடுத்த மொத்தம் 182 படங்களில் ஒரு பத்து படங்களில் என்னை அடையாளம் காண முடியும். ஆனால் என்னைத் தவிர வேறு யாராலும் அடையாளம் காணமுடியாது. அவன் எடுத்தப்படங்களில் "ஹைலைட்" -டான சில படங்களை இங்கு தருகிறேன். என்னைக்கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.


என்னைக்கண்டு பிடித்தால் $1000 பரிசு



பிகரோட சேர்த்து போட்டோ எடுக்கிறானாம்!
பட்டம் வாங்குறது நான்தான், முக்கியமானத உட்டுட்டான்



படியில் இறங்குவது கிறிஸ்துமஸ் தாத்தா அல்ல, நான்தான்.



இந்தப்படத்தை "Fine Arts" மாணவர் ஒருவர் விலைக்கு கேட்டிருக்கிறார்.




தான் எடுத்த படங்களை எல்லாம் விலாவரியாக அன்று இரவு என் அம்மாவிடம் விவரித்துக்கொண்டிருந்தான். பொறுமையாக எல்லா போட்டோக்களையும் பார்த்துக்கொண்டிருந்தவள் கடைசி போட்டோ வரும்போதே தொண்டையை செருமத் தொடங்கினாள். காரி துப்பிவிடுவாளோ என்று ஒருகணம் பயந்தே விட்டேன். எழுந்து போய் "சிங்க்" -ல் துப்பி விட்டு எதுவும் பேசாமல் படுக்கைக்குச் சென்றுவிட்டாள்.

19 comments:

கோவி.கண்ணன் said...
June 30, 2008 at 4:15 AM  

//கீழே இருப்பதுதான் அந்த போட்டோ. கடு கடுப்பில் எனது முகம் மேக்கப் போடாத நயன்தாரா மாதிரி இருந்ததால்//

இருந்தாலும் உங்களுக்கு இருக்குற லொள்ளு...

ஒன்னுஞ் சொல்ல முடியல :)

மோகன் கந்தசாமி said...
June 30, 2008 at 4:27 AM  

வாருங்கள் கோவியாரே!
அது லொள்ளு இல்லை, வேதனையின் வெளிப்பாடு!
:-)))

மங்களூர் சிவா said...
June 30, 2008 at 4:30 AM  

//கீழே இருப்பதுதான் அந்த போட்டோ. கடு கடுப்பில் எனது முகம் மேக்கப் போடாத நயன்தாரா மாதிரி இருந்ததால்//

இதெல்லாம் ரொம்பா ஓவரு சொல்லிபுட்டேன்

:)

மோகன் கந்தசாமி said...
June 30, 2008 at 4:35 AM  

////இதெல்லாம் ரொம்பா ஓவரு சொல்லிபுட்டேன்///
புராசஸ் செய்யாத அந்த போட்டோவை பாத்திங்கன்னா இப்படி சொல்லமாட்டிங்க சிவா!

நன்றி.

Syam said...
June 30, 2008 at 4:57 AM  

//மேக்கப் போடாத நயன்தாரா மாதிரி இருந்ததால்//

வருங்கால முதல்வர் புரட்சி செம்மல் நயன்தாரா வை கிண்டல் செய்த உங்களை நயன்தாரா ரசிகர் மன்றம் சென்னை சதுரத்தின் சார்பாக வன்மையாக கண்டிக்கறேன்... :-)

மோகன் கந்தசாமி said...
June 30, 2008 at 5:04 AM  

////சென்னை சதுரத்தின் சார்பாக வன்மையாக கண்டிக்கறேன்... :-)////
நானும் கண்டிக்கிறன்,
வாங்க சியாம், முதல் முறை வருகிறீர்கள் என நினைக்கிறேன், நன்றி

rapp said...
June 30, 2008 at 5:44 AM  

நான் என்னோட மாஸ்டர்ஸ் பட்டம் வழங்கும் விழாவை(கல்யாணம் ஆகி இங்கு வந்துட்டதால) மிஸ் பண்ணிட்டேன். சரின்னு மனச தேத்திகிட்டிருந்தப்போ இங்க sorbonne பல்கலைகழகத்துல ஒரு ஆறு மாசம் படிப்பை படிச்சேன். அதுக்கும் அவங்க ஒரு பட்டமளிப்பு விழா நடத்தனாங்க. நான் அப்போலேருந்தே இவர்கிட்ட புகைப்படங்களைப் பத்தி இம்சை கொடுக்க ஆரம்பிச்சேன். இவரோ அந்த பட்டமளிப்பு விழால நாம யாரு படம் எடுத்தாலும் நீங்க போட்டிருக்கீங்களே, அதே மாதிரித் தான் வரும்னாரு. அவங்களே அதுக்குன்னு வெச்சிருக்க ஆளுங்க எடுக்கறது மட்டும்தான் நல்லா வரும், அதனால அங்கயே வாங்கிக்கலாம்னாரு. நான் ஆனாலும் விடாம நச்சரிச்சதால அவரு படம் எடுத்தாரு. அந்த விழா நடந்த அறைக்குள்ளே எடுத்த அத்தனை படமும் இப்படித்தான் இருந்தது. எனக்கு மட்டும் இல்லாம என்னை மாறி இம்சை கொடுத்து எடுக்க வெச்ச மத்தவங்களோட படங்களும் இதே மாதிரித்தான் இருந்துச்சு. இது எல்லா இடத்துலயும் நடக்கிற விஷயமான்னு எனக்குத் தெரியாது. ஆனாலும் உங்கப் பதிவ படிச்ச உடனே ஞாபகம் வந்துச்சி, அதான் சொன்னேன்.

rapp said...
June 30, 2008 at 6:06 AM  

//என் தாக்க அறுக்க வந்த ஆன் சைட் பார்ட்டி//தப்பா எடுத்துக்காதீங்க,'என் தாக்க அறுக்க வந்த', அப்டினா என்ன அர்த்தம்?(ஒருவேளை அது தாலியா?) காலேஜ் முடிச்சு ரெண்டு வருஷமான உடனே கரண்ட் விஷயங்கள் தெரியாமப் போய்டுது

Unknown said...
June 30, 2008 at 9:21 AM  

போட்டோல இன்னா க(கொ)லை நயம். உனக்கு இதெல்லாம் புரியாது தல. இதுக்கெல்லாம் கலை பார்வை வேணும்

மோகன் கந்தசாமி said...
June 30, 2008 at 12:16 PM  

ஹாய் வெட்டி ஆபிசர்,
நான் Rutgers University -ல் பட்டம் பெறும்போது இதைவிட இன்னும் பெரிய அரங்கில் விழா நடந்தது. எனது படங்களை எனது வகுப்புத் தோழியின் குடும்பத்தினரில் ஒருவர் எடுத்தார். க்ளோசப் படங்கள் சற்றே சிரமம் என்றாலும் எடுக்கும் படங்களை தெளிவாக எடுப்பதில் சிரமம் ஏதும் இருக்கவில்லை. லைட்டிங் பிரச்சினையோ, ஸ்பேஸ் பிரச்சினையோ இருக்காது. பெனரோமேட்டிக் இடங்கள், வான்டேஜ் பாய்ண்ட்டுகள் அரங்கினுள் உள்ளன. பொறுப்பாக எடுத்தால் ஒரு ஐம்பது சத படங்களையாவது நன்றாக எடுக்கமுடியும். காமிரா பயன்படுத்துவதில் இவனுக்கு பிரச்சினை இருப்பது எனக்கு கடைசி வரை தெரியாமல் போனதுதான் எல்லாவற்றிற்கும் காரணம்.

தாக்க அறுப்பது என்றால் "தாலிக் கயிற்றை அறுப்பது" என்ற அர்த்தம் இருக்கலாம் என்று இப்போது தோன்றுகிறது. இம்சை கொடுப்பதுதான் தாலி அறுப்பது என்ற பொருளில் அழைக்கப்படும்.

மோகன் கந்தசாமி said...
June 30, 2008 at 12:19 PM  

///போட்டோல இன்னா க(கொ)லை நயம். உனக்கு இதெல்லாம் புரியாது தல. ////
அட போ தல,
என் போட்டோவுல எனக்கு கலை எல்லாம் வேணாம், என் மூஞ்சி தான் வேணும்.

தேவகோட்டை ஹக்கீம் said...
June 30, 2008 at 12:27 PM  

Superruuu...naan antha kuttiyai sonnen. :)))

மோகன் கந்தசாமி said...
June 30, 2008 at 12:46 PM  

////Superruuu...naan antha kuttiyai sonnen. :)))////
இந்த மாதிரி நிறைய குட்டிகளை எடுத்திருக்கான், ஆனா ஒன்னு கூட ஷேக் இல்லாம எடுக்கல, முகமெல்லாம் ஒழுங்கா தெரியாது.

rapp said...
June 30, 2008 at 3:17 PM  

அப்படிங்களா? எனக்கு இன்னிவரைக்கும் இந்த பட்டமளிப்பு விழா போட்டோ விஷயங்கள்ல எக்கச்சக்க சந்தேகங்கள் உண்டு. அப்புறம் காசு குடுத்தாலாவது கிடைக்குதேன்னு திருப்தி ஆகிடுவேன்.
//தாக்க அறுப்பது என்றால் "தாலிக் கயிற்றை அறுப்பது" என்ற அர்த்தம் இருக்கலாம் என்று இப்போது தோன்றுகிறது//
ஆஹா இப்பதாங்க நான் எங்க கிலாசு பசங்களை மிஸ் பண்றேன். இந்த மாதிரி விஷயங்கள எல்லாம் நான் நீனு போட்டி போட்டு விளக்குவாங்க.

மோகன் கந்தசாமி said...
June 30, 2008 at 3:55 PM  

///அப்புறம் காசு குடுத்தாலாவது கிடைக்குதேன்னு திருப்தி ஆகிடுவேன். ///
காசு கொடுத்து வாங்கின போட்டோக்களை பார்த்தப் பிறகுதான் என் அம்மா ரிலாக்ஸ் ஆனார்.

/////தாக்க அறுப்பது என்றால் "தாலிக் கயிற்றை அறுப்பது" என்ற அர்த்தம் இருக்கலாம் என்று இப்போது தோன்றுகிறது//
ஆஹா இப்பதாங்க நான் எங்க கிலாசு பசங்களை மிஸ் பண்றேன். //////
கரைக்டுதான் ராப், பாட விஷயங்களைவிட இவற்றிற்குத்தான் நாம் முன்னுரிமை கொடுத்து கற்போம். அந்த நாட்களில்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...
July 1, 2008 at 1:09 AM  

:) ராப் சொல்ற மாதிரி வேற போட்டோ பிறகு வாங்கினீர்களா?

மோகன் கந்தசாமி said...
July 1, 2008 at 1:37 AM  

ஹாய் கயல்விழி முத்துலெட்சுமி,
மூன்று நிறுவனங்கள் படங்கள் பிடித்துத் தரும் சேவையைச் செய்தன. மூன்றையும் வாங்கி விட்டேன். அவற்றை பார்த்த பிறகுதான் எனது அம்மா திருப்தி அடைந்தார்.

கருணாகார்த்திகேயன் said...
July 1, 2008 at 7:00 AM  

// பொறுமையாக எல்லா போட்டோக்களையும் பார்த்துக்கொண்டிருந்தவள் கடைசி போட்டோ வரும்போதே தொண்டையை செருமத் தொடங்கினாள். காரி துப்பிவிடுவாளோ என்று ஒருகணம் பயந்தே விட்டேன். எழுந்து போய் "சிங்க்" -ல் துப்பி விட்டு எதுவும் பேசாமல் படுக்கைக்குச் சென்றுவிட்டாள். //
இதுதான் பன்ச் லைன் ..
மத்தது எல்லாம் தான புரியும்..
நல்ல நடை ..

அன்புடன்
கார்த்திகேயன்

மோகன் கந்தசாமி said...
July 1, 2008 at 11:31 AM  

நன்றி திரு.கார்த்திகேயன். கருணாநிதி,
மீண்டும் வருக.



கிடங்கு