Sunday, May 25, 2008

புழக்கடை மனிதர்கள்

·

காலச்சுவடு இதழில் ரவிக்குமார் எழுதிய "புழக்கடை மனிதர்கள்" என்ற கட்டுரையை படித்ததும் என் மனதில் தோன்றியதை இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். கொஞ்சம் சொந்தகதை, எனவே போரடித்தால் மன்னிக்க.

எனது ஆறு வயது முதல் (நினைவு தெரியத்தொடங்கும் வயது) பதினாறு வயது வரை வாரநாட்களில் காலை 7.30 -லிருந்து இரவு 8 மணி வரை என் தாய் என்னிடம் பேசுவது "டேய் எழுந்திரு", "புக்ஸ் எடுத்துவை", "பஸ் வெளிய கை நீட்ன கொன்னுடுவன்", "ஏன் மதிய சாப்பாடு மிச்சம் இருக்கு?", "இன்னைக்கும் என்ன பிரச்சினை!" என்பன போன்ற ஒரு சில வழமைகள் தான். வேறு எதையும் பேச மாட்டாள், நாங்கள் பேசினாலும் பதில் வராது. எங்கள் கடமைகளை நாங்களே வழக்கம்போல் செய்துவிடுவோம் அல்லது செய்துகொள்வோம். அதிலேதேனும் சந்தேகங்களிருந்தால் எங்களுக்குள் தீர்த்துக்கொள்வோம், இல்லை என்றால் இருக்கவே இருக்கு "டிரையல் அண்ட் எரர்". புருவத்தை உயர்த்தி, இடது கையை மடித்து இடுப்பில் வைத்து, பற்களை நர நர வென கடித்தாள் என்றால் தவறிய கடமைகள் சட்டென நினைவுக்கு வந்துவிடும்.

நான் சொல்ல வருவது என்னவென்றால், குடும்பத்தலைவியின் கடமைகள் எனக்கூறிக்கொண்டு முழுநேர வேலைக்காரியாக இல்லாமல் அவரவரே அவர்கள் வேலைகளை செய்யப் பணித்திருந்தாள் என்பதைத்தான். இப்போது என் அறை நண்பரை பார்க்கும் போது அவரது தாயின் உழைப்பை எவ்வாறெல்லாம் சுரண்டி சுகவாசியாக வாழ்ந்திருப்பார் என தெளிவாக புரிகிறது. அசுத்தமான அவரது அறை, குவியல் குவியலாக அழுக்கு உடைகள் என பல விஷயங்களில் அதை நிரூபிப்பார். கொடுமை என்ன வென்றால் இன்னமும் தம் வேலையை தாமே செய்ய கற்றுக்கொள்ளாமல் வரப்போகும் மனைவியிடம் டிரான்ஸ்பர் செய்ய காத்திருக்கிறார்.

அது சரி, இக்காலத்தில் வேலைக்கு செல்லும் பெண்கள் வீட்டில் எல்லா வேலைகளையும் இழுத்து போட்டுக்கொண்டு இம்சைபடுகிறார்களா? பெரும்பாலும் இல்லை என்பது சந்தோஷம் தான். ஆனால், அவ்வேலைகள் எல்லாம் குடும்பத்தில் உள்ளோர் பகிர்ந்துகொள்ளுகிறார்களா என்றால் இல்லை, அவை வேலைக்காரர்களிடம் மடைமாற்றப்படுகிறது. பெண்கள் உழைப்பை சுரண்டும் ஆண்களும், அந்த சுரணை அற்ற பெண்களும் ஓவர் நைட் -ல் திருந்த போவதில்லை என்பதால், வேலைக்காரர்கள் வைத்துக்கொள்வது ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் அது "எசன்சியல் கம்மாடிட்டி" -யாக இல்லாமல் "லக்சுரி ஐட்டம்" -ஆகா இருக்க வேண்டும். அதாவது வேலைக்காரர்களின் குறைந்த பட்ச சம்பளம் அரசு அலுவலர்கள் சம்பளம் போல் இருக்க வேண்டும். அவர்கள் யூனியன் மூலமே வேலைக்காரர்களை பெறவேண்டும். ஒருவேளை உணவும், ஹெல்த் இன்சூரன்சும் அளிக்கப்படவேண்டும். சட்டப்பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். முக்கியமாக "டிரீட்மன்ட்" பழுதில்லாமல் இருக்கவேண்டும். மொத்தத்தில் "ஆள உடுங்கடா சாமி, என் வேலைய நானே செஞ்சிக்கறேன்" -என்ற வகையில் இருக்கவேண்டும்.

வேலைக்காரர்(கள்) அமர்த்தப்படுவதற்கான அத்தனை தேவைகளும் எங்கள் குடும்பத்தில் இருந்தது. குடும்ப வேலைகள், அரசுப்பணி, பெண்டு கழற்றும் வேலைகள் நிறைந்த ஒரு சுயதொழில், வாரம் ஒரு முறையாவது வெளியூர் செல்ல வேண்டிய ஒரு பொதுப்பணி என எனது பெற்றோர்கள் பம்பரமாக சுற்றிக்கொண்டுதான் இருந்தார்கள். எனினும் வீட்டு வேலைக்கு யாரையும் அமர்த்தவில்லை. என் சகோதரிகளும் தங்கள் திருமணத்திற்கு பிறகு என் தாய் வழியையே பின்பற்றுகிறார்கள், நானும் என் வேலைகளை எவருக்கும் இட்டதில்லை இதுவரை, இனிமேலும் மாட்டேன்.

ரவிகுமார் கட்டுரை படித்தபிறகு, ஒரு முடிவு செய்துள்ளேன். என் அறை நண்பனை மாற்ற முயற்சி செய்வது அல்லது, அறையை காலி செய்வது என்பதுதான் அது.

6 comments:

மாதங்கி said...
May 25, 2008 at 3:54 AM  

நல்ல பதிவு

மோகன் கந்தசாமி said...
May 25, 2008 at 9:46 AM  

நன்றி மாதங்கி,
மீண்டும் வருக.

rapp said...
May 26, 2008 at 9:43 AM  

இந்த விஷயத்தில் எனக்கு உங்களோடு முழுமையாக உடன்பட முடியல மோகன். இதப்பத்தி நான் எப்பவாவது பிளேடு போடறப்போ உங்களுக்கு சொல்றேன்,வந்து பாருங்க. ஆனா இந்த பதிவு மேட்டர் நல்ல தேர்வு.

மோகன் கந்தசாமி said...
May 26, 2008 at 2:06 PM  

ஹாய் வெட்டி ஆபிசர்,
/////இந்த விஷயத்தில் எனக்கு உங்களோடு முழுமையாக உடன்பட முடியல மோகன்////
பெரும்பாலான குடும்பத்தலைவிகள் என் கருத்துக்கு உடன் படமாட்டார்கள் என அறிவேன். அவரவர் வேலைகளை அவரரே செய்து கொள்ள முடியும் போது அதை ஏன் "கடமை"கள் எனக்கூறிக்கொண்டு பெண்கள் அவஸ்த்தை படவேண்டும். அன்பை காட்ட இது வழி அல்ல. இவ்வாறு செய்வதால், மறைமுகமாக பிள்ளைகளை சோம்பேறியாக்கி, எந்த குற்ற உணர்வுமின்றி அவர்கள் தம் வேலைகளை அடுத்தவர் தலையில் கட்ட ஊக்குவிப்பதாகி விடும். பாதிக்கப்பட போவது மற்றொரு பெண்ணே என்பதை நாம் அறிவோம் தானே?

rapp said...
May 26, 2008 at 4:06 PM  

ஐய்யோ, மோகன் நீங்க என் கருத்தை தப்பா புரிஞ்சிகிட்டீங்க. நான் உங்க பதிவுலயே ஆண் ஆதிக்க கருத்துக்கள் சிலது மறைமுகமா இருக்குன்னு சொல்ல வரேன். நான் என்னை எப்பவுமே குடும்ப இஸ்திரின்னோ அயர்ன் பாக்ஸ்சுன்னோ அடையாளப் படுத்திக்க விரும்பறதில்லை.

மோகன் கந்தசாமி said...
May 26, 2008 at 4:10 PM  

/////ஆண் ஆதிக்க கருத்துக்கள் சிலது மறைமுகமா இருக்குன்னு/////
அப்படியா? தயவு செய்து உடனே விளக்குங்கள், நான் ஆணாதிக்க வாதி இல்லை. நான் நிரூபிக்க முடியும்.