Wednesday, September 3, 2008

ச்சும்மா ட்டமாஷ்-50:லக்கிலுக் எழுதும் அரசியல் கட்டுரை.

·

ண்பர்களே, லக்கி லுக் அவர்கள் எழுதிய இந்த அரசியல் கட்டுரையை எனது வலைப்பூவில் ஐம்பது பதிவுகள் நிறைவடைந்ததை ஒட்டி வெளியிடுகிறேன். பதிவர் திருமதி ராப் எழுதும் 'லொடுக்கு சுந்தரிகள்: ஒரு பார்வை' என்ற கும்மிப் பதிவும், புதுகை அப்துல்லா எழுதும் ஆராய்ச்சி கட்டுரையும் தொடரவிருக்கின்றன.

தளபதி - காலத்தின் கையில்!!

து 1976.. கோவையில் திமுக மாநில மாநாடு பரபரப்பான சூழ்நிலையில் நடந்துகொண்டிருக்கிறது. பரபரப்புக்கு காரணம் மிசா, ஜனநாயகத்தின் கோரமான இன்னொரு முகம். இந்தியா முழுவதும் மக்களும், பத்திரிகைகளும் சுதந்திரக் காற்றை சுவாசிக்க அன்றைய கொடுங்கோல் பிரதமரால் தடை விதிக்கப்பட்டு அடக்குமுறை தாராளமாக கட்டவிழ்த்து விடப்பட்டிருந்த நேரம். திமுக ஆண்ட தமிழகத்திலும், காமராஜரின் பழைய காங்கிரஸ் ஆண்ட குஜராத்திலும் மட்டுமே மக்களுக்கும், பத்திரிகைகளுக்கும் அடக்குமுறை இல்லை.

அம்மாநில மாநாட்டிலே இருபதுகளின் ஆரம்பத்தில் இருக்கும் ஒரு இளைஞர் இந்திரா அம்மையாரை தாக்கி தைரியமாக முழங்கிக் கொண்டிருக்கிறார். அவரது பேச்சு அவர் தந்தையின் பேச்சை போல மடைதிறந்த வெள்ளமாக கொட்டவில்லை. தமிழ்நடை படுமோசம். இருப்பினும் அவர் பேசிய விஷயங்கள் நேரடியாக மக்களின் நெஞ்சை தொட்டது. அவர் யார் என்று மாநாட்டுக்கு வந்த திமுக தொண்டர்கள் தங்களுக்கிடையே ஒருவருக்கொருவர் கிசுகிசுத்துக் கொள்கிறார்கள். அவர்தான் நடப்பு ஆட்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சர், நான்கு முறை சட்டமன்ற உறுப்பினர், இரண்டு முறை சென்னை மாநகர மேயர், திமுகவின் நிரந்தர இளைஞர் அணிச் செயலாளர், திமுக துணைப் பொதுச்செயலாளர், எல்லாவற்றிற்கும் மேலாக முதல்வர் கலைஞரின் மகன் தளபதி ஸ்டாலின்! எதிர்கால முதலமைச்சர் என்று சிலரால் மகிழ்ச்சியோடும், பலரால் எரிச்சலோடும் பார்க்கப் படுபவர். தளபதி மு.க. ஸ்டாலின்!!

கலைஞர் தனது அரசியல் மற்றும் கலையுலக வாரிசாக அடையாளம் காட்ட நினைத்தது தனது மூத்த தாரத்தின் மகன் மு.க. முத்துவையே. சிறந்த நடிகர், அருமையான குரல்வளம் மிக்க பாடகர். ஏனோ தனிப்பட்ட வாழ்க்கையிலும் வெற்றியின் சிகரத்தை அவரால் எட்டமுடியவில்லை. கலையுலக வாழ்க்கையிலும் பெரியதாக எதையும் சாதிக்கவில்லை. துவண்டுப் போயிருந்த கலைஞருக்கு கை கொடுத்தவர் இரண்டாம் தாரத்தின் இளைய மகன் தளபதி மு.க. ஸ்டாலின்.

தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டு, 'மிசா' சட்டத்தில் திமுக முன்னணியினர் கைது செய்யப்படுகிறார்கள். கலைஞரின் மகன் என்பதால் தளபதியும் கைது செய்யப்படுகிறார். சிறைக்காவலர்களிடம் ஒரு ஹிட்லிஸ்ட் இருக்கிறது, யார் யாரை 'ஸ்பெஷலாக' கவனிக்க வேண்டுமென்று. அந்த ஹிட் லிஸ்டில் தளபதியின் பெயரும் இருந்தது. இருட்டில் நிகழ்த்தப்பட்ட கண்மூடித்தனமான தாக்குதலில் தளபதி துவண்டார். தலைவர் மகனின் உயிரை காக்க வேண்டுமேயென்று 'மிசா' சிட்டிபாபு குறுக்கே புகுந்து, தளபதி மீது விழுந்த தடியடிகளை தாங்கினார். சிறைச்சாலை கொடுமைகளுக்கு சாட்சியாக தன் இன்னுயிரை நீத்தார். இன்றும் தளபதியும், கலைஞரும் 'மிசா' சிட்டிபாபுவை நன்றியோடு நினைவு கூர்வதை காணலாம். சிறைச்சாலை அனுபவங்கள் ஸ்டாலினை அரசியல் பொறுப்புக்கு நேரடியாக வந்தே தீரவேண்டுமென்ற நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியது. மிசா கைதியாக இருந்தவர் வெளிவந்ததும் தளபதி ஆனார். திமுகவின் மாநில இளைஞரணி உருவாக்கப்பட்டு அதன் செயலாளராக நியமிக்கப்பட்டார். கலைஞரின் அடுத்த அரசியல் வாரிசு என்று தொண்டர்களால் முடிவெடுக்கப்பட்டார்.

அரசியல் ஒரு சதுரங்க களம். நல்லவர்கள் தோற்பதும், வல்லவர்கள் வெற்றி காண்பதும் இங்கே அதிசயமல்ல. ஒருவருடைய உண்மையான சுபாவத்துக்கும், அவர்களுக்கு மக்களின் மத்தியில் இருக்கும் தோற்றத்துக்கும் துளிகூட சம்பந்தம் இருக்காது. இதற்கு சரியான உதாரணங்களாக தளபதி ஸ்டாலினையும், அதிமுகவின் ஜெயலலிதாவையும் சொல்லலாம்.

தளபதியோடு நெருங்கிப் பழகியவர்களுக்கு மட்டுமே அவரது வெள்ளைமனம் தெரியும். அவரது அண்ணன் அழகிரி மாதிரி அடாவடியான ஆசாமி அல்ல இவர். இன்னொரு அண்ணன் முத்து போல அப்பாவுக்கு அடங்காத பிள்ளையும் இல்லை. அவருடைய உண்மையான சுபாவத்துக்கு நேரெதிரான ஒரு தோற்றம் தான் மக்கள் மத்தியில் தளபதி குறித்து நிலவுகிறது. இந்த தோற்றத்தை மாற்ற தளபதியும் துளிகூட முயற்சி எடுத்ததில்லை என்பது தான் சோகம்.

தளபதியோடு தூர்தர்ஷன் செய்தி வாசிப்பாளர் பாத்திமாவை இணைத்து கிசுகிசு வந்தபோது அதை மறுத்து இவர் எதுவும் சொல்லாமல் மவுனம் காத்தார். இந்த வதந்தி ஊடகங்கள் மூலமாக பரப்பப்படாமல் வாய்மொழியாக மக்கள் மத்தியில் வேகமாக பரவி வந்தது. குறிஞ்சிமலர் என்ற தொலைக்காட்சி நாடகத்தில் தளபதியோடு, பாத்திமா இணைந்து நடித்துக் கொண்டிருந்ததே அதற்கு காரணம். அப்பொதெல்லாம் தொலைக்காட்சி நாடகங்களில் நடிப்பவர்கள் நாடகம் முடியும் வரை செய்தி வாசிக்கக் கூடாது என்பது விதி. குறிஞ்சிமலரில் பாத்திமா நடித்துக் கொண்டிருந்ததால் செய்திகளில் தலைகாட்டவில்லை. உடனே ஸ்டாலின் பாத்திமாவை ஏதோ செய்துவிட்டார் என்றொரு பொய்யான பரப்புரை மக்கள் மத்தியில் பரப்பப்பட்டது. ஒரு அறிக்கை மூலமாக கூட இதை பொய்யென்று தளபதி சொல்லியிருக்கலாம். ஏனோ மவுனமாகவே இருந்துவிட்டார்.

தளபதிக்கு ஊடகத் தொடர்பு என்று ஒன்று இருப்பதாகவே தெரியவில்லை. இன்று லைம்லைட்டில் இருந்தாலும் கூட பத்திரிகைகளில் இவரைப் பற்றிய பாசிட்டிவ்வான செய்திகளை காண்பது அரிது. தளபதியின் தந்தை கலைஞர் தனது 85வது வயதிலும் கூட தினமும் பத்திரிகையாளர்களை சந்தித்து அளவளாவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார். ஊடகத் தொடர்பு விஷயத்தில் தந்தைக்கு நேர்மாறாக தளபதி இருப்பது அவரது வளர்ச்ச்சிக்கு பெரிய தடைக்கல் தான்.

வாழைமரத்துக்கு கீழே வளர்ந்த கன்றாக இருந்திருந்தால் தளபதி இன்னேரம் இன்னொரு மரமாகியிருப்பார். இவரோ கலைஞர் என்ற ஆலமரத்தில் விழுதாக கட்சியில் இன்னமும் பத்தோடு பதினொன்றாக இருக்கிறார். கலைஞரை மீறி கலைஞரை தவிர்த்து யாராலும் திமுகவில் வளரமுடியாது என்பதும் ஒரு காரணம். எதிர்க்கட்சிகளோடு, தன் கட்சியினரே கூட சில சமயம் பேசும் 'குடும்ப அரசியல்' குற்றச்சாட்டுக்கு பயந்து கலைஞரே ஸ்டாலினின் வளர்ச்சி வேகத்தை மட்டுப்படுத்தியிருக்கிறார் என்பது கண்கூடு.

1989ல் திமுக ஆட்சிக்கு வந்தபோதும், 1996ல் திரும்ப ஆட்சிக்கு வந்தபோதும் தளபதிக்கு அமைச்சர் பதவி தராமல் பொறுமை காத்தார் கலைஞர். அப்போதே அமைச்சர் பதவி கொடுத்திருந்தால் இப்போது 'குடும்ப ஆட்சி' என்று யாரும் முணுமுணுத்துவிட முடியாது. அப்பா தான் தரவில்லை, நாமே கேட்போம் என்று தளபதி கேட்டுப் பெற முயற்சிக்கவேயில்லை. வாய்ப்பு கிடைத்ததுமே தயாநிதி முண்டியடித்து தன்னை முன்னிலைப் படுத்திக் கொண்டதைப் போல தந்திரங்கள் மென்மையான குணம் கொண்ட தளபதிக்கு கைவரவில்லை.

1989 மார்ச் மாதம் கலைஞர் சட்டமன்றத்திலே தாக்கப்பட்ட போதும் சரி, 2001 சட்டமன்றத் தொடரின் போது அவரை சட்டமன்றத்திலே கீழ்த்தரமாக விமர்சித்தபோதும் சரி.. ஒரு மூலையில் உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஒரே திமுக உறுப்பினர் தளபதி மட்டுமே. இதுபோன்ற நிதானமான இவரது அணுகுமுறை ஒரு எதிர்க்கால ஆட்சியாளருக்கு தேவையான அணுகுமுறையாக இருக்கலாம். ஆனால் இன்றைய அடாவடி அரசியல் சூழலுக்கு சரிபடுமா என்று தெரியவில்லை. 'ஜால்ரா' அடித்து நெருக்கமாகுபவர்களுக்கு உடனே கட்சிப் பதவியோ, தேர்தல் சீட்டோ வாங்கித் தந்துவிடுவது தளபதியின் இன்னொரு பலகீனம். இதனால் அனுபவசாலிகள் பலரை அவருக்கு தெரியாமலேயே அவர் ஓரம் கட்டி வருகிறார்.

கோபம், பழிவாங்கும் குணம், நம்ப வைத்து கழுத்தறுக்கும் வஞ்சம் - இந்த குணங்கள் எல்லாம் இல்லாத தற்போதைய தமிழகத்தின் ஒரே அரசியல்வாதி தளபதி ஸ்டாலின் தான். தன்னை அவமானப்படுத்திய எதிரியை கூட மன்னித்து ஏற்றுக்கொள்ளும் சுபாவம் படைத்தவர் அவர். கராத்தே தியாகராஜன் மூலமாக கடுமையான அவமானங்களை சந்தித்த தளபதி, பின்னாளில் அவரையே நண்பராக ஏற்றுக் கொண்டார். எப்படியும் வென்றாக வேண்டும் என்ற வெறி ஒரு வெற்றிகரமான அரசியல்வாதிக்கு தேவை. கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற தலைவர்களிடம் இந்த வெறி இருந்ததால் தான் அவர்கள் வெற்றிகாண முடிந்தது. இப்படிப்பட்ட உணர்வு எதுவும் தளபதியிடம் இருப்பதாக தெரியவில்லை. கலைஞருக்கு பிறகு தளபதிக்கு அரசியல் களத்தில் எதிரிகளாக இருக்கப்போவதில் முக்கியமான இருவர் செல்வி ஜெயலலிதா, தேமுதிக தலைவர் விஜயகாந்த். வெற்றிக்காக எதையுமே ஏற்றுக்கொள்ளும் குணம் கொண்டவர்கள் இவர்கள் இருவரும். மென்மையான அரசியல் நடத்தும் தளபதி இவர்களை எப்படி சமாளிப்பார் என்பது கேள்விக்குறியே.

தளபதி இவ்வளவு பலகீனமாக இருக்கிறாரே? கலைஞரைப் போல திறமையான தலைவராக இவரால் ஆக முடியாதா என்ற ஐயம் இதுவரை வாசித்தவர்களுக்கு தோன்றலாம். இதற்கு விடை காலத்தின் கையில் தானிருக்கிறது.

தளபதியையும், இந்திராவையும் பல வகைகளில் ஒப்பிட முடியும். இருவருமே ராஜா வீட்டு கன்னுக்குட்டிகள். மிசா சட்டத்தில் சிறைக்கு சென்றதை தவிர்த்து தளபதி அடிமட்ட வாழ்க்கையை அனுபவித்ததில்லை. சந்தர்ப்பச் சூழ்நிலை எப்படி இந்திராவை அரசியலில் ஈடுபட வைத்ததோ, அதுபோலவே தான் தளபதியும் திடீரென கட்சிப் பொறுப்புக்கு வரவேண்டியதாகியது. 1964ஆம் ஆண்டு ஜவஹர்லால் நேரு மறையும்போது இந்திரா காந்தி காங்கிரஸ் இயக்கத்தில் சாதாரணத் தொண்டராக தானிருந்தார். 1964 முதல் 1969 வரை லால்பகதூர் சாஸ்திரியின் அமைச்சரவையில் இருந்தபோதும் இன்றைய தளபதி போல அரசியல் பூனையாக பதுங்கிதான் கிடந்தார். 1969ல் காங்கிரஸை பிளந்து அவர் எடுத்த விஸ்வரூபம் யாருமே எதிர்பாராதது. இந்திராவுக்குள் அப்படியொரு ஆளுமைத்திறன் இருந்ததை காமராஜர் கூட கணிக்கத் தவறி விட்டார்

ஒரு தலைவன் உருவாக அவனது திறமையும், அனுபவமும் மட்டுமே முக்கியமல்ல. சந்தர்ப்பமும், சூழ்நிலையும் தான் தலைவர்களை உருவாக்குகிறது. தளபதி ஸ்டாலினுக்கும் அத்தகைய சந்தர்ப்பமும், சூழ்நிலையும் வாய்க்கும் என்று நம்புவோம்.



தனது செப்டம்பர் 9 பதிவின் பின்னூட்டத்தில் தன் சாதியை வெளியிட்டதற்காக லக்கிலுக்கிற்கு எனது கண்டனங்கள் - மோகன் கந்தசாமி |செப்டெம்பர் 10, 2008

19 comments:

Anonymous said...
September 4, 2008 at 2:21 AM  

எக்ஸலண்ட் !!!

மோகன் கந்தசாமி said...
September 4, 2008 at 2:29 AM  

///எக்ஸலண்ட் !!!////
நன்றி ரவி!

விஜய் ஆனந்த் said...
September 4, 2008 at 2:31 AM  

உள்ளேன் ஐயா...

மோகன் கந்தசாமி said...
September 4, 2008 at 2:33 AM  

///உள்ளேன் ஐயா...////

வாருங்கள் விஜய் ஆனந்த்

rapp said...
September 4, 2008 at 3:51 AM  

நல்லா சொல்லி இருக்கீங்க, கரெக்டான ஒப்பீடு, இன்னும் சொல்லப்போனால் இந்திரா அவர்களுக்கு இருந்த அளவுக்கதிகமான தாழ்வுமனப்பான்மை பின்னர் எப்படி நேர் எதிர்விளைவை ஏற்படுத்தியதோ, அதேப்போல இங்கு ஓவர் அமைதியா இருக்கும் இவரிடம் ஏற்படலாம், ஆனால் என்ன, இந்திரா அவர்களுக்கு சஞ்சய் காந்தி இருந்ததைப்போல, இவருக்கு அழகிரி இல்லை என்பது ஒரு வருந்தத்தக்க உண்மை

Anonymous said...
September 4, 2008 at 4:10 AM  

பிராமணர்கள் மாமா-தாத்தா என்பார்களே, அதுபோல தி.மு.கவில்
ஸ்டாலின் இளைஞர்-தாத்தா போலிருக்கு!

Anonymous said...
September 4, 2008 at 4:23 AM  

//அரசியல் பொறுப்புக்கு நேரடியாக வந்தே தீரவேண்டுமென்ற நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியது.//

அரசியலுக்கு நேரடியாக வந்தே தீரவேண்டுமென்ற நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியது?

அதற்காக இளைஞரணி உருவாக்கப்பட்டது?

இல்லை , 'நமக்குப் பின்னால யாரு' என்ற கேள்வி எழுந்ததினால் அந்தச் சந்தர்ப்பம் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளப் பட்டதா?

Anonymous said...
September 4, 2008 at 4:33 AM  

//இல்லை , 'நமக்குப் பின்னால யாரு' என்ற கேள்வி எழுந்ததினால் அந்தச் சந்தர்ப்பம் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளப் பட்டதா?//

நீயெல்லாம் பேரை சொல்ல கூட பயப்பட்டு அனானியா கமெண்டு போடற பார்த்தியா? இந்த மாதிரி நிலைமையை ஏற்படுத்தவும் அது பயன்படுத்திக் கொள்ளப்பட்டது.

இன்னொரு அநாநி

Anonymous said...
September 4, 2008 at 4:33 AM  

//Anonymous said...
பிராமணர்கள் மாமா-தாத்தா என்பார்களே, அதுபோல தி.மு.கவில்
ஸ்டாலின் இளைஞர்-தாத்தா போலிருக்கு!
//

”பிரா”மணர்கள் வீட்டில் புருஷனை கூட அண்ணான்னு தான் கூப்பிடுவாள். அவங்க லெவலுக்கு சூத்திர திமுக வருமா?

மோகன் கந்தசாமி said...
September 4, 2008 at 5:55 AM  

வருகைக்கு நன்றி ராப்.

Anonymous said...
September 4, 2008 at 6:02 AM  

சும்மா தமாஷ் பண்ணாதீங்க..

Anonymous said...
September 4, 2008 at 1:59 PM  

//நீயெல்லாம் பேரை சொல்ல கூட பயப்பட்டு அனானியா கமெண்டு போடற பார்த்தியா? இந்த மாதிரி நிலைமையை ஏற்படுத்தவும் அது பயன்படுத்திக் கொள்ளப்பட்டது.

இன்னொரு அநாநி//

ஹே...ஹே..... கேள்விக்கு பதில் சொல்ல முடியலைன்னா ஏண்டா அனானிய வந்தங்கறது வலையுலகில் தாத்தா காலத்து டெக்னிக்கு.

Anonymous said...
September 4, 2008 at 2:00 PM  

பளைய கள்ளு போலிருக்குதே?

புதுகை.அப்துல்லா said...
September 4, 2008 at 2:20 PM  

தளபதி ஸ்டாலினுக்கும் அத்தகைய சந்தர்ப்பமும், சூழ்நிலையும் வாய்க்கும் என்று நம்புவோம்.
//

நிச்சயம் வாய்க்கும்

மோகன் கந்தசாமி said...
September 4, 2008 at 2:25 PM  

நன்றி புதுகை.எம்.எம்.அப்துல்லா

தமிழன் said...
September 5, 2008 at 2:45 AM  

உண்மையில் பிரமிப்பாக உள்ளது இந்த பதிவு, அதுவும் அந்த கடைசி வரி நிதர்சனம்.

மோகன் கந்தசாமி said...
September 5, 2008 at 6:03 PM  

வருகைக்கு நன்றி திலீபன்

வெண்பூ said...
September 6, 2008 at 9:31 AM  

நல்ல பதிவு. ஸ்டாலின் செய்ய வேண்டிய முக்கியமான விசயம், ஏன் அவரது தந்தை அவருக்கு பதவி அளிக்க தயங்குகிறார் என்பதை புரிந்து கொள்ள முயற்சிப்பது.

உதாரணமாக நம் கம்பெனி அப்ரைசலில் நாம் எதிர்பார்க்கும் ரேங்கிங் இல்லை ப்ரோமோசன் வரவில்லையென்றால் உடனடியாக நம் மேலதிகாரியிடம் நாம் கேட்கும் "என்னா செஞ்சா நான் கேக்குறது கிடைக்கும்?" என்ற கேள்வியை தைரியமாக அவர் கலைஞரிடம் கேட்கலாம்.

இன்னும் சொல்லப்போனால் ஒரு வருடம் முன்பே அவர் முதலமைச்சராகியிருந்தால் திமுகவின் பெயர் இந்த அளவிற்கு கெட்டிருக்காது என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

எனக்கென்னவோ தி.மு.க.வில் அவரை விட தகுதியானவர் வேறு ஒருவர் இல்லையென்றே தோன்றுகிறது.

மோகன் கந்தசாமி said...
September 6, 2008 at 10:00 AM  

வருகைக்கு நன்றி வெண்பூ.



கிடங்கு