Tuesday, June 16, 2009

அல்னார் நரம்பும் அல்லக்கையும்.

· 14 comments

நட்சத்திர வாய்ப்பை முழுதாக பயன்படுத்தாத பதிவர்களில் நானும் ஒருவன் என்பது வருத்தமாகத்தான் உள்ளது. எனினும் தமிழ்மணத்திற்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். வெகுநாட்கள் ஆவலாக எதிபார்த்த ஒன்று; ஏற்கனவே நிலுவையில் இருக்கும் பதிவுகளை வலை ஏற்றவே வாய்ப்பு கிடைக்காமல் இருப்பது கவலையாக உள்ளது. தா. பாண்டியனின் பேட்டியை வலை ஏற்ற ஆயத்தமாகும் முன் அது காலாவதி ஆகிப்போனது கொடுமை. MLA ரவிக்குமாரின் பேட்டி தட்டச்சு செய்யப்படாமல் கிடக்கிறது. மேலும், என் சில கேள்விகளுக்கு அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் அளித்த பதில்கள் மொழி பெயர்கப்படாமல் உள்ளன. அதுமட்டுமல்லாமல், செந்தழல் ரவியின் பேட்டி முழுமையாக கைக்கு வரவில்லை. மிகுந்த பிரயத்தனம் செய்து அனுமதி பெற்ற தமிழச்சியின் பேட்டிக்கு கேள்விகள் தயாரிக்கமலே இருக்கிறேன். இன்னும் சில பதிவுகள் ரஃப் காப்பி என்னும் அளவிலேயே கிடக்கின்றன. இதற்கிடையே 'கவிச்சை' என்னும் வலைப்பூவை உருவாக்கி இந்தியாவிலுள்ள நண்பரிடம் அதை முற்றாக ஒப்படைத்து என் பதிவுகளை தட்டச்சு செய்து வலையேற்ற கோரியிருந்தேன். சில பதிவுகளுக்கு பிறகு அதிலும் தொய்வு ஏற்பட்டுவிட்டது.

பத்து வருடங்களுக்குள்ளாகவே கணிப்பொறி சார்ந்த பணி எனக்கு மிகுந்த சேதாரத்தை செய்துவிட்டதாகவே உணர்கிறேன். தொடர்ச்சியாக கணிப்பொறி முன் அமர்ந்திருந்தால் கழுத்து தசைகள் அதீதமாக சோர்வுற்று தலையின் மொத்த எடையும் கழுத்துப்புற தண்டு வடத்தின் மீது வீழ்ந்து நரம்புகளை அழுத்துகிறது. இதனால் அப்பகுதியில் இருந்து வெளியேறும் நரம்புகளில் ஒன்றான அல்னார் நரம்பு சிறிது நேரத்தில் சுண்டு விரலையும் மோதிர விரலையும் மரக்கச்செய்து விடுகின்றன. வெறும் மூன்று விரல்களைக்கொண்டு தட்டச்சு செய்வது இயலாத காரியம். தொடர்ந்தால் குறைந்த பட்சம் மூன்று நாட்களுக்கு பெரும் அவதியைத்தருமே ஒழிய முக்கிய பணிகள் முடங்கிப் போகும்.

ஊரில் சிறிதுகாலம் இயல் முறை மருத்துவராக நான் பணி புரிந்தபோது இது போன்ற பிணிகளை தீர்த்திருக்கிறேன். எனினும் இதை காசால்ஜியாவாக முற்றும் வரை விட்டுவைத்திருப்பது கொடுமைதான். என் நலனில் அக்கறை கொண்ட குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் இதற்காக என்னை கடிந்து கொள்வது உண்டு. பதிவுலகிலும் அக்கறை கொண்ட தோழர்களின் பட்டியல் இருக்கிறது. ஆச்சர்யமாக,இப்போது அந்த பட்டியலில் புதிதாக ஒரு நண்பர் இணைந்திருக்கிறார். அவருக்கு என் பதிவுகள் சுவாரசியமில்லாமல் இருப்பது மிகுந்த கவலையைத் தந்திருக்கிறது. காற்று வாங்கும் நிலையில் என் வலைப்பூவை நான் வைத்திருப்பது அவருக்கு பிடிக்கவில்லையாம்!. கடிந்து கொள்கிறார். பதிவு எழுத மேட்டர் இல்லை என்று நான் சொன்ன சால்ஜாப்பை கேட்டு அவருக்கு கோபம் கூட வருகிறது. ஆனால் என்ன முயன்றாலும் எனக்கு அவரைப் போல சுவாரசியமாக எழுதவே வராது என்று அவர் புரிந்து கொள்ளவே இல்லை.

தற்போதைய தமிழ்மண சூப்பர் ஸ்டார் பரிசல்காரனும் நானும் ஒரே சமயத்தில் பதிவெழுத வந்தோம். ஒன்னரை வருடத்தில் அவர் சென்றுள்ள தூரத்தில் பகுதி அளவு கூட நான் முயற்சிக்க வில்லை. ஏனெனில் சுட்டுப்போட்டாலும் எனக்கு வரவே வராத வகைமாதிரி அவருடையது. சுவாரசியமாக எழுதவேண்டுமானால் பஜார் புத்தகங்கள் முதல் பன்னாட்டு இலக்கியங்கள் வரை நிறைய படிக்கவேண்டும். நான் படித்ததெல்லாம் பத்திரிக்கைகளும் படிப்பு சம்பந்தமான ஆய்வு புத்தகங்களும்தான். அவற்றில் இருக்கும் மொன்னையான எழுத்து நடை தான் எனக்கு கைகூடி உள்ளது. பதிவுகள் தவிர்த்து வேறெங்கும் எழுதியதில்லை. பல்கலைக்கழக உள்சுற்று சஞ்சிகைகளில் வாரம் ஒருமுறை எதையாவது எழுதியாகவேண்டும். எவரையும் கவர்ந்தாக வேண்டியதில்லை. நாலைந்து பெருசுகளை திருப்தி படுத்தினால் போதும். இந்நிலையில் சுவாரசியமான பதிவுகளுக்கு நான் எங்கே போவது? நானும் உடன் பிறப்பு பதிவுகளை படித்துக் கொண்டுதான் இருக்கிறேன். அவரது சுண்டி இழுக்கும் எழுத்து நடை எனக்கு வாய்க்கவே இல்லையே!

மேலும், தமிழ்மணத்தில் இணையும் முன்பே, ஏன் பதிவெழுதும் முன்பே பல பதிவர்களை தொடர்ந்து படித்து வந்திருக்கிறேன். அசுரன், திராவிட தமிழர்கள், கோவிகண்ணன், லக்கிலுக், குழலி, வரவனையான், ரவி, பொட்'டீ'கடை சத்யா, டிபிசிடி, தமிழ் சசி, செல்லா, தமிழச்சி, கிழுமத்தூரார் என்று பலரையும் புக் மார்க் செய்து வைத்ததுண்டு. ஆனால் எவர் நடையையும் நான் சுவீகரிக்கவில்லை. கிழுமத்தூரார் போல் எழுதுவதாக குசும்பனும் கோவியும் கூறியதுண்டு. பொட்'டீ'கடை சத்யாவை ஒத்தது என்று ரவி ஒரு முறை சொன்னார். ஆனால் உண்மையில் என் பதிவுகள் பரீட்சை விடைத்தாளில் இருக்கும் வாக்கியங்களை போன்றவை. ஆனால், ஊடே மிகை உணர்ச்சிகள் நிறைந்த வாரிகளை மெனக்கெட்டு திணிப்பது உண்டு. பதிவுகளை சுவாரசியமாக்க எனக்கு தெரிந்த ஒரே வழி இதுதான். என் விமர்சனப் பதிவுகள் அவ்வகையானவை. அடாவடி நிறைந்தவை. அளப்பரையானவை. மேலும் அவை விரும்பியே செய்யப்பட்டவை. எனினும் சத்தியாவின் பதிவுகளை ஒப்பிட்டால் எனது பதிவுகள் வெறுமையானவை என்பதை எளிதில் உணரலாம்.

ஆனால், சிலருக்கு அவரது பதிவுகள் ஏற்படுத்தாத எரிச்சலை என் பதிவுகள் ஏற்படுத்துகின்றன. திமுக -வை விமர்சித்தும் அதன் தலைவரை செத்துதொலையச் சொல்லியும் அவர் எழுதியபோது வராத கோபம் இந்த அல்லக்கைக்கு என் மீது வருகிறது. ஏன் அவரைப்போய் நொட்ட வேண்டியதுதானே?! அது முடியாது! ஏனென்றால் அவர் விமர்சித்தது திமுக -வை மட்டும். நான் அல்லக்கைகளின் நிலைப்பாட்டையும் சேர்த்து கேள்வி கேட்பது குடைச்சலைத் தருகிறது போலும். குடைச்சல் தாழாமல் அழும்போது மட்டும் திமுக -வின் பதிவுலக அறங்காவலர் போல பிஸ்த்து கிளம்புகிறது. திமுக எனக்கு பதிவுலக வாழ்வு தருவதாக அதை நம்பியே வாழும் அடிவருடிகள் கூறுவது விந்தைதான். திமுக கருணாநிதியின் தனி சொத்தாகியது போல் பதிவுலகில் அது இவருக்கு தாரை வார்க்கப்பட்டுவிட்டதோ ஒருவேளை!

வன்மமும், வக்கிரமும், வசவும் நிறைந்த அறிக்கைகளுக்காக அதை விரும்பாதவர்களால் கருணாநிதி தொடர்ந்து விமர்சிக்கப்படுகிறார். இதிலெல்லாம் அனுபவம் நிறைய உண்டு அவருக்கு. நம் டமாஷ் பாண்டிகள் அடுத்தமுறை அறிவாலயத்திற்கு காவடி தூக்கும்போது தனி மனித தாக்குதல் குறித்த வரையறையை அவரிடமே பயின்றுவிட்டு வரலாம். இல்லாவிட்டால் எப்போதும்போல் பாப்பான் மாட்டினால் கும்மிக் கொண்டு பொழுதை ஓட்டலாம். இவற்றையெல்லாம் விட இன்னொரு வழியுமுண்டு. கொஞ்சம் கஷ்டமானது. உணவில் சிறிது உப்பை சேர்த்து அருந்திப் பார்க்கலாம். ஒரு முயற்சிதான்! முடியாவிட்டால் பரவாயில்லை, இருக்கவே இருக்கு எலும்புத் துண்டு. அதைக் கவ்விக்கொண்டு, வருவோர் போவோர் மீது விழுந்து பிடுங்கலாம்.

Read More......

Saturday, June 13, 2009

திமுக வின் எதிர்காலம்

· 52 comments

இந்த வலைப்பூவில் லக்கி லுக், மதிபாலா மற்றும் புதுகை அப்துல்லா ஆகியோர் திமுக -வின் தோற்றம், வளர்ச்சி மற்றும் எதிர்காலம் பற்றி கட்டுரைகளை எழுதியுள்ளனர். அவை பெரும்பாலும் உயர்வு நவிற்சி (அல்லது நடுவு நிலைமை!?) கொண்டவைதாக இருந்தன என்பதாக பின்னூட்டங்கள் வந்தன. ஆனால் திமுக -வின் அசமந்தங்களையும், அச்சுபிச்சுகளையும் விமர்சிக்கும் பதிவை வெளியிடவேண்டும் என்ற விருப்பம் எனக்கு இருந்தது. பதிவர் உண்மைத்தமிழனிடம் இதுபற்றி ஒருவருடத்திற்கு முன்பே கேட்டிருந்தேன். அவர் நேரம் வாய்க்கும்போது தருவதாக கூறியிருக்கிறார். எனினும் இப்பதிவு அந்நோக்கில் சிறிது தூரம் செல்கிறது.

அறிஞர் அண்ணாவின் மறைவு எவ்வாறு தமிழகத்தின் அரசியலை மாற்றியது என்பது பலரால் வெவேறு தளங்களில் அலசப்பட்டுள்ளன. அவருக்குப்பின் கட்சி எவ்வாறு கைமாறி இறுதியில் தனியுடமையானது என்பதும் வேண்டியமட்டும் விமர்சிக்கப்பட்டுள்ளது; தொடர்ந்து விமர்சிக்கப்படுகிறது. எனினும் இவை எல்லாம் மாறப்போவதில்லை. இன்னும் எவ்வளவு மோசமாக அல்லது அசிங்கமாக திரியும் என்று வேண்டுமானால் எதிர்வு கூறலாம்.

ஒப்பீட்டளவில் அறுபது ஆண்டுகாலம் என்பது ஜனநாயகப் பரிணாமத்திற்கு மிகக்குறைவு. உலகின் ஆகப்பெரிய ஜனநாயகம் இன்னும் குழந்தைதான் என்றாலும் அது ஒரு சவலைக் குழந்தை என்பதை நாம் அறிந்துகொள்ளவேண்டும். இன்னும் நூறாண்டுகாலம் வளர்ந்தபின்னும் அது சவலையாகத் தான் இருக்கும். அடிப்படை நேர்மை இல்லாத கட்சிகள் நிறைந்த மக்களாட்சியில் ஒன்று மற்றதற்கு முன் உதாரணமாக அமைந்து, சுயநலத்தைப் பொறுத்த அளவில் எங்கும் ஒரே கூட்டுக்கும்மியாக உள்ளது. அதிலுள்ள ஓட்டைகள் அனைத்தும் அகலமானவை. ஓட்டரசியலுக்கு புதிதாக வரும் கட்சிகள் யாவும் உடனடியாக ஒருமுறை அதில் விழுந்து எழுந்தால் பிறகு கூச்சமின்றி, விமர்சனத்திற்கு கவலைப்படாமல் அப்படியே தொடர்கின்றன. பெரும்கட்சிகளிடம் அவை ஏகலைவன் போல் பாடம் கற்றுக்கொள்கின்றன. பித்தலாட்ட அரசியலை பாமக மற்றும் விடுதலை சிறுத்தைகள் போன்றவை திமுக -வின் அடியொற்றி செய்தாலும் குடும்ப அரசியலுக்கு காங்கிரஸ்தான் திமுகவின் முன்னோடி. காமராஜர் தொடங்கிவைத்த வாரிசு அரசியல் திமுக வை குட்டிச்சுவராக்கி உள்ளது.

இந்திராவை காமராஜர் அரசியலுக்கு அழைத்தார். பொறுக்கித்தனங்கள் தான் அரசியல் என்று கருதிய சஞ்சீவ் போலல்லாமல் ராஜீவும் சோனியாவும் காங்கிரசாரின் வற்புறுத்தலின் பேரில் அரசியலுக்கு வந்தார்களாம்!. ஆனால் திமுகவில் இருக்கும் வாரிசுகளை யார் வற்புறுத்தி அழைத்தார்கள்? இவர்களில் எவராவது தம் அரசியல் தத்துவம், திராவிடக் கொள்கையில் தமக்குள்ள பிடிப்பு, முக்கிய பிரச்சினைகளான இட ஒதுக்கீடு, ஈழம் மற்றும் மாநில சுயாட்சி போன்றவற்றில் தங்கள் நிலைப்பாடு பற்றி எங்காவது பேசியிருக்கிறார்களா? இவர்கள் கையில் திமுக எவ்வாறு இருக்கும் என்று யோசித்தால் அது கடந்த சில வருடங்களாக எவ்வாறு சுரனையற்றதாக இருக்கிறதோ அதுபோல் அப்படியே தொடரும் என்பது புரியும்.

மாநிலத்தில் திமுகவின் அடுத்த தலைமை ஸ்டாலின் கையில் என்பது முடிவாகிவிட்ட நிலையில் தனது அரசியல் நிலைப்பாடுகளை அவர் உடனடியாக விளக்கியாக வேண்டிய நிலையில் இருக்கிறார். ஏனெனில் அவரைப்பற்றி உடன்பிறப்புகளுக்கே முழுதாகத் தெரியுமா என்பது கேள்விக்குறியே! திராவிடம் குறித்து அவர் மேடையில் எங்காவது பேசினாரா என்பதுபற்றியும் தகவல் இல்லை. முதல்வரானால் மத்திய அரசிடம் இவர் எதை வலியுறுத்துவார்? அதிக நிதி வேண்டும் அல்லது குறிப்பிட்ட திட்டங்கள் தமிழகத்திற்கு வேண்டும் என வலியுறுத்தக்கூடும். நிதிக்கொள்கையிலோ, வெளியுறவுக் கொள்கையிலோ இவரது தலையீடு அல்லது வலியுறுத்தல் இருக்குமா என்றால் நிச்சயம் இருக்காது.

மாநில சுயாட்சியை பொறுத்தவரையில், ஒருமுறை மணி சங்கர் அய்யர் கூட்டிய உள்ளாட்சித் துறை அமைச்சர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள மறுத்து பரபரப்பை ஏற்படுத்தினார் ஸ்டாலின். மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் மாநில உள்ளாட்சிதுறையின் அதிகாரத்தில் தலையிடுகிறது என்று அப்போது கருணாநிதி குற்றம் சாட்டினார். அந்த குறிப்பிட்ட மத்திய அரசின் பிரச்சினைக்குரிய தீர்மானம் வாபஸ் பெறப்பட்டது. மேலும் ஆட்சி நிர்வாகத்தை பொறுத்தவரையில் சிறப்பாக செயல் படுபவர் என்றாலும் தமிழின அரசியலை கைவிட்டுவிட்டு ஒரு மொன்னை அரசியலைச் செய்ய ஒரு திமுக தேவையில்லை. திமுகவில் மிச்சமிருக்கும் சிறிது வீரியமும் இவரால் சிதையும் என உறுதியாக நம்பலாம்.

திமுகவை நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவப் படுத்தும் முக்கிய பொறுப்பில் மூன்று பேர் இருக்கிறார்கள். தயாநிதி மாறனைப் பற்றி நான் எதைக்கூறினாலும் அது புதிய செய்தியாக இருக்காது. பதிவர் குசும்பன் கூறியது போல் இவர் ஒரு 'பவுடர் பாண்டி' என்பதற்கு மேல் இவர் கொள்கை ரீதியாக எதையும் கிழிக்கப் போவதில்லை. அவரது தந்தையார் எழுதிய மாநில சுயாட்சி பற்றிய புத்தகங்களையாவது இவர் படித்திருப்பாரா என்பது சந்தேகமே! அதிக பட்சம் வட இந்தியாவில் மீடியா நண்பர்களை பிடித்துக்கொண்டு எதிர்காலத்தில் திமுகவிற்கு குடைச்சலைத்தரலாம். தவிர்த்து, திமுகவின் கொள்கைகளை மன்றங்களில் எடுத்தியம்பி கட்சிக்கு வலு சேர்ப்பார் என்று யாரும் நம்பவில்லை.

இடஒதுக்கீடு பற்றிய விவாதமொன்றில் பார்ப்பனிய குஞ்சுகளிடம் கனிமொழி சீரியதைப் பார்த்தவர்கள் நிச்சயம் இவரை நாடாளுமன்றத்திற்கு தகுதியான ஆள் என கணித்திருப்பார்கள். ஆனால் சில மாதங்களுக்குப் பிறகு தினகரன் பத்திரிகை எரிப்பு சம்பவத்தில் இவர் உரைத்த பொய்களும், ஈழம் பற்றிய கேள்விகளுக்கு உளரியவைகளும் இவர் தம் தேவைகளுக்கு நேர்மையை அடகு வைப்பார் என்பது தெளிவானது. பதவிகளுக்காக தம் இட ஒதுக்கீடு கொள்கையை கைவிட மாட்டார் என்பது நிச்சயமில்லை. அழகிரி பற்றி நாம் அறிந்ததெல்லாம் பணப்பட்டுவாடா அரசியலும் அடிதடியும்தான். ஈழத்துயருக்கு மத்தியில் ஆடம்பர விழாக்களில் பொழுதைக் கழித்தவர். இவர் என்ன திராவிடத்தை நிலைநாட்டப்போகிறார் என்று யாருக்கும் தெரியாது. ஒருவேளை கருணாநிதிக்கு தெரிந்திருக்கலாம். அவரது காலத்திற்குள் அதை தெளிவு படுத்துகிறாரா என்று பார்க்கலாம்!!

இவர்களையெல்லாம் விட நம் உடன்பிறப்புகள் தான் கிலியை ஏற்படுத்துகிறார்கள். தலைமையின் முடிவுகளில் இவர்களின் பங்கு என்று எதுவும் இல்லை என்றாலும் இவர்களின் எதிர்வினைகள் தலைமைக்கு சிறிது யோசனையைத் தரக்கூடும். ஆனால் இவர்கள் எப்போதும்போல அடிவருடிக்கொண்டே இருப்பின் திமுக இன்னும் மோசமான அரசியலை எவ்வித கூச்சமின்றி திமுக தொடரும் என்பது திண்ணம்.இனி திமுகவிற்கு எவ்வித தனிச்சிறப்புகளும் இல்லை. ஏனைய கட்சிகளில் இதுவும் ஒன்று அவ்வளவே. மேலும், எதிர்காலம் கட்சித்தலைமை(களு)க்கு சிறப்பாக இருக்கக் கூடும். ஆனால் கட்சிக்கோ, உண்மைத் தொண்டர்களுக்கோ அல்லது திராவிட கொள்கையாளர்களுக்கோ எவ்வித நம்பிக்கையையும் அது தரப்போவதில்லை. கூடவே, பார்ப்பனிய எதிர்ப்பு, திராவிடம், தமிழ் என்றெல்லாம் பேசவோ அதை சொல்லி ஓட்டு கேட்கவோ எவ்வித அருகதையும் அதற்கு இல்லை.

Read More......

Thursday, June 11, 2009

என் பிகருக்கு கல்யாணம் அல்லது கந்தசாமி பெண் பார்த்த கதை

· 45 comments

நேற்று விடியற்காலையில் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. கடந்த இரண்டு மாதங்களாக பேசாத என் அம்மா அழைத்திருந்தார். எனது திருமண முயற்சிகளில் சொர்ந்துபோனவர் ஒரு கட்டத்தில் எரிச்சலுற்று எல்லாவற்றையும் முற்றிலுமாக நிறுத்திவிட்டார். கடந்தமுறை கூட என் திருமண விஷயமாக எங்களிருவருக்கும் பெருத்த சண்டையாகி தொலைபேசி இணைப்பை பாதியிலேயே துண்டித்திருந்தார். இம்முறை அழைப்பு வந்ததும் நிச்சயம் ஒரு நல்ல முடிவை சொல்வார் என்று நினைத்திருந்தேன்.

"டேய், இதுதான் ஃபோன் நம்பர். அஞ்சே அஞ்சு நிமிஷந்தான், அஞ்சு நிமிஷத்துக்கு மேல் பேசினன்னு தெருஞ்சுதுன்னா கொன்னுடுவேன்!" என்று கூறி இணைப்பை துண்டித்துவிட்டார். இதற்கு முன் பலமுறை பெண் பார்த்து படங்களை எனக்கு அனுப்பி வைத்திருக்கிறார். அவற்றை திறந்து கூட பார்க்காமலே "அந்த அஞ்சு நிமிஷ மேட்டர் என்னாச்சு என்று தான் கேட்பேன். நான் முதலில் ஒகே சொன்னால் அஞ்சு நிமிஷம் பேசுவதற்கு ஏற்பாடு செய்கிறேன் என்பார். இது வேலைக்காகாது, முதலில் அஞ்சு நிமிஷம், பிறகுதான் ஓகே என்று வாதிட்டுப் பார்த்தேன். விடாப்பிடியாக நிராகரித்துவிட்டு அடுத்த பெண் தேட ஆரம்பித்துவிடுவார். பெண் அழகாக இருந்தால் நான் அஞ்சு நிமிஷ மேட்டர் பற்றி எதுவும் பேச மாட்டேன் என நினைத்துவிட்டார் போலிருக்கு.

நல்ல ஃபிகரெல்லாம் இப்படியே கைநழுவிப்போக, வேறொரு உபாயம் செய்தேன். சும்மானாச்சும் ஓகே சொல்லி ஐந்து நிமிஷம் பேசிவிட்டு பிறகு பிடித்தால் ஒப்புக்கொள்வோம், இல்லாவிட்டால் இழுவையாக நீட்டி பிறகு மறுத்துவிடலாம் என்று திட்டமிட்டேன். ஒரு சுமாரான ஃபிகர் படம் வந்தபோது ஓகே சொல்லிவிட்டு அஞ்சு நிமிஷத்திற்கு அனுமதி வாங்கினேன். நிச்சயம் நிராகரிக்கும் எண்ணத்துடன் பேச்சை தொடங்கினேன்.

என்ன பேசினோம் என்பதை கீழே கொடுத்துள்ளேன். அடைப்புக்குள் என் மனசாட்சி.

"ஹலோ!, நான் மோகன் பேசறேன், நியூ ஜெசியிலேர்ந்து, மிஸ். கவிதாகிட்ட பேசமுடியுமா?"

"ஹாங்... நான்தான் பேசறேன், எப்படி இருக்கீங்க? அப்பா எட்டு மணிக்கு போன் பண்ணுவீங்கன்னு சொன்னாரு?!"

(எட்டு அஞ்சு தான ஆகுது! இதுவே லேட்டா?) ஏன், வெயிட் பண்ணிட்டு இருந்தீங்களா?

அதெல்லாம் இல்ல, ஃபிரன்ஸ் கால் பண்ணுவாங்க, மிஸ் பண்ண முடியாது!

(நியூஜெர்சி கால் -ஐ விட சைதாபேட்டை கால் முக்கியமா?) அப்படியா? சாரி!

"சரி விடுங்க! ஃபோன்ல பேசினா ஒன்னு கேட்கனும்னு இருந்தேன், நீங்க சிகரெட் பிடிப்பீங்களா!"

(வாட் ஏ டெட்லி கொஸ்டின் ?!?)"சிகரெட்டா! நானா!..ஏன் கேட்கிறீங்க!"

"சும்மாதான் கேட்டேன்"

"இல்ல தம் அடிக்கமாட்டேன்!"

"அப்புறம் ஏன் உங்களுக்கு தொண்டை பெருசாயிருக்கு?"

"தொண்டையா?, சிகரெட் பிடிச்சா தொண்டை பெருசாகும்னு யாரு சொன்னா?,(பயங்கர கண்டுபிடிப்பா இருக்கே!) உதடுதான் கறுப்பாகும்!"

"ஆமாம் உங்க உதடு கருப்பாதான் இருக்கு! நீங்க சிகரெட் பிடிப்பீங்கதான?"

(என்னங்கடா இது!!)"இத பத்தி அப்புறம் பேசுவோம், நீங்க என்ன படிச்சிருக்கீங்க?"

"நீங்கதான சம்பாதிக்கப் போறிங்க, நீங்க என்ன படிச்சிருக்கீங்க, அத சொல்லுங்க!"

"MS"

"எந்த ஃபீல்டு?"

(ம்ம்..என்ஃபீல்டு)" ஐடி"

"என்ன டெக்னாலஜி"

"ஜெ2ஈஈ"

"ஒ! அப்படியா? ஸ்பெஸிபிக்கா என்ன?"

(ஏன், வேற வேல வாங்கித்தரப் போறியா!) "Struts, Hibernate"

"Struts ஒண்ணா டூவா"

(ஆஹா! இதுக்கு ஒரு முடிவே இல்லையா?!!?) "ஒன் பாயின்ட்..."

"ஓல்டு டெக்னாலஜி" -இன்னுமா அப்டேட் பண்ணல?"

"(சரி, அந்த வெள்ளக்காரன்கிட்ட மாத்த சொல்றேன்!) சரி உங்களப் பத்தி சொல்லுங்களேன்!"

அதான் "ஃ போட்டோ பின்னாடி டீடைல் -லா எழுதி இருந்தேனே! படிக்கலையா?

"(ங்கோத்தா... இன்னைக்கு எவன் முகத்துலடா முழிச்சேன்!)"சரி வேறேதாவது கேட்கனுமா?"

"அங்க யாரையாவது லவ் பண்ணிங்களா!"

"(லவ்தான!!) ஆமா, இப்ப ஒரு ஸ்பானிஷ் காரிய லவ் பண்றேன்! இதுக்கு முன்னாடி ஒரு கருப்பிய லவ் பண்ணேன், அதுக்கு முன்னாடி..."

"சும்மா கத உடாதிங்க, நீங்க ஒரு தொட நடுங்கின்னு உங்கம்மா சொல்லிட்டாங்க!"

"சரி... நிறைய பேசிட்டம்னு நினைக்கிறேன்... என் அம்மா கிட்ட சொல்லி உங்கப்பாவுக்கு ஃபோன் பண்ண சொல்றேன்!, வச்சிடவா?"

"அதெல்லாம் வேணா எதுக்கு! நான் எங்கப்பாகிட்ட என் முடிவ சொல்லிட்டேன்!"

"(முடிவே பண்ணியாச்சா!)என்ன சொன்னீங்க!"

"வேற இடம் பாக்க சொல்லி!"

"வேற எடமா? அப்பறம் என்ன ம்ம்..மசி... எதுக்கு போன் ல பேசின!"

"எனக்கு இஷ்டமில்ல, உங்க வீட்லதான் திரும்ப திரும்ப கால் பண்ணாங்க!"

"ஆ.!!?!?..."

அப்போது பல்பு வாங்கியவன்தான், அதன் பிறகு இந்த அஞ்சு நிமிஷ மேட்டர் வேலைக்காகாது என்று முடிவெடுத்து இருந்தேன். ஆனால் இந்த முறை எப்படியாவது தெளிவா பேசிடவேண்டும் என்று முடிவெடுத்துவிட்டேன். தனியாக ஸ்கிரிப்ட் தயார் செய்து, மனதிற்குள் ஓரிரு முறை சொல்லிப்பார்த்து இருக்கிறேன். என்ன எதிர்கேள்விகள் வரக்கூடும், எந்த கேள்விக்கு எந்த பதில் சொல்லவேண்டும் என்று ஓரளவுக்கு யோசித்து ஒப்பேற்றி ஆகிவிட்டது. இம்முறை எப்படியும் ஃபிகர மடிச்சிட... மன்னிக்கவும் பெண்ணிற்கு பிடித்த மாதிரி பேசி அசத்த வேண்டும். இந்த முறையும் பல்பு வாங்கினால் அம்மா பார்க்கும் பெண்ணை ஃபோட்டோ
பார்க்காமலே கூட திருமணம் செய்ய வேண்டிவரலாம்.

நம் பதிவுலகில் தங்க மணிகள் பற்றிய அனுபவப்பதிவுகள் நிறைய வந்துள்ளன. திருமணத்திற்கு முன் இவ்வாறு பல்பு வாங்கி பிறகு மீண்டவர்கள் யாராவது இருந்தால் ஐடியா கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். மேலும், நட்சத்திர வாரத்தில் என்ன எழுதுவதென்றே தெரியவில்லை, அதான் ஒரு சிறு மொக்கை. பொறுத்ததருள்வீராக! தலைப்புக்கும் பதிவிற்கும் சம்மந்தமில்லை என்று ஏதாவது பஜார் புத்தக மேதாவிகள் சொல்லக்கூடும். இதற்கும் ஒரு மாப்பு கேட்டுக்கிறேன்!

Read More......

Monday, June 8, 2009

இந்தியா, எரிச்சலூட்டும் கோமாளி

· 26 comments

எனது மற்றொரு வலைப்பூவான 'கவிச்சை' -யில் வெளிட்ட பதிவை மீண்டும் இங்கு மீள் பதிவிடுகிறேன்.

இன்று உலகின் பல பகுதிகளில் நிலவும் பல்வேறு குழப்பங்களுக்கு எவ்வாறு இங்கிலாந்து பேரரசு காரணமோ அது போல் தெற்காசியாவில் இருக்கும் எல்லாவித குழறுபடிகளுக்கும் இந்தியா அல்லது இந்திய தேசிய காங்கிரஸ் காரணம். காஷ்மீர் முதல் ஈழம் வரை இந்தியாவின் மொள்ளமாரித்தனமும் ஐ.நா முதல் ஹோக்கேனக்கள் வரை அதன் பித்தலாட்டமும் கன ஜோராக பல்லிளிக்கின்றன. இதற்கு அன்றும் இன்றும் அது தந்து வரும் ஒரே பதில் தேச நலன்.

அப்படி என்ன இந்திய தேச நலனை காங்கிரஸ் கட்டிக் காத்துவிட்டது என்றால் தொன்னூறுகளில் மொத்தமாக திவாலாகி துண்டு துண்டாக சிதறவிருந்த அபாயத்தில் இருந்து இந்தியாவை மீட்டது ஒன்றுதான். ஏனைய எல்லா சந்தர்பங்களிலும் எதையாவது செய்து எங்காவது சூடு பட்டுக்கொண்டு மக்களை இம்சித்து வருகிறது. இந்தியப் பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கத்தை எதிர்கொள்ள இலங்கைக்கு உதவுவது என்பதைத் தவிர மாற்று கொள்கைகளை தேர்ந்தெடுக்க இந்தியா தயாரில்லை அல்லது தைரியமில்லை. தமிழர் நலனை ஒழித்து காஷ்மீரத்தை காப்பதும் இலங்கைக்கு உதவி சீனாவை கட்டுப்படுத்துவதும் தான் இந்தியாவிற்கு தற்போதுள்ள ஒரே வழி என்ற கருத்தை எனது பேராசிரியர் மறுக்கிறார்.

2001 -ல் அமெரிக்காவை இந்தியா நெருங்கியதன் வினை தனது கொல்லைப்புறத்தில் சீனாவை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது என்றும் அரைகுறையான நட்பை தொடர்ந்ததன் விளைவாக சீனாவை பயங்கொள்ளச் செய்ததுடன் நின்றுவிட்டதாகவும் அவர் மேலும் கூறுகிறார். அன்றைய ராணுவ அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் சீனாவை "இந்தியாவின் அருகில் உள்ள அபாயம்" என்று அறிவித்துக் கொண்டிருக்கையில் வெளியுறவு அமைச்சர் ஜஸ்வத் சிங் அமெரிக்க-இந்திய ராணுவ கூட்டு நடவடிக்கை குறித்து டெல்லிக்கும் வாஷிங்டனுக்கும் பறந்து கொண்டிருந்தார். இறுதியில் அப்படி ஒரு முயற்சி நடந்ததாக பத்திரிகைகளில் வந்த செய்தியை "ஒரு சுவாரசியமான சரடு" என்று கூறி பிரதமர் முடித்துவிட்டார். ஆனால் சீனாவோ ஜப்பானை ஓரம்கட்டி இலங்கையை வெகு அருகில் நெருங்கி விட்டது.

விடுதலைப் புலிகள் வெற்றிகளை குவித்தபோது அமெரிக்க போர்கப்பல் மத்திய ஆசியப் பகுதியில் நங்கூரமிட்டது. இதனால் நம் கடல் பகுதியில் சீனாவின் எதிர் நடவடிக்கையை எதிர்பார்த்து விடுதலைப் புலிகளை பின்வாங்கச்சொன்னது இந்திய அரசு. இதற்கு பதிலாக வேறு உபாயங்களை கண்டிருக்க முடியும் என்றாலும் புலிகள் உடனடியாக கேட்பார்கள் என்ற ஒரே காரணத்திற்காக இந்த வழியை தேர்ந்தெடுத்தது இந்தியா.

அதுபோல் இந்தியாவின் மின்சார தேவை என்ற முற்றிலும் லாஜிக் இல்லாத காரணத்தை கூறி அணு ஆயுத ஒப்பந்தத்தை அமெரிக்காவுடன் ஏற்படுத்திக்கொண்டுள்ள இந்தியா இன்று அந்த ஒப்பந்தத்தின் எதிர்காலம் என்னவென்று தெரியாமல் கையை பிசைந்து கொண்டுள்ளது. தில்லுமுல்லுகள் என்று அந்த ஒப்பந்தத்தில் பெரிதாக ஒன்றையும் குறிப்பிடமுடியாத நிலையில் என்னவோ பரம ரகசியம் போல் பதுங்கிப் பதுங்கி முக்காடு போட்டவாறு அதை டீல் செய்தது. கடைசியில் ஒப்பந்த வரைவை நம் கண்ணில் காட்டியபோது இதற்குத்தானா இந்த பீட்டர் என்று எண்ணத்தோன்றியது. ஆனால் காஷ்மீர் பிரச்சினைக்கு ஒரு நிரந்தர, அதிரடி தீர்வு கண்டு பாகிஸ்தானுடன் நட்பு ஏற்பட்டால்தான் ஒப்பந்தம் அடுத்த கட்டத்திற்கு நகரும் என்று புதிய அமெரிக்க அரசு தெரிவித்து விட்டதுபோல் உள்ளது. தாலிபான்களுடன் பரமபதம் விளையாடிவரும் பாகிஸ்தானையும் துணிச்சலற்ற இந்த கோமாளி இந்திய அரசையும் வைத்துக் கொண்டு சீனாவுடன் அணு ஆயுத விளையாட்டை விளையாட அமேரிக்கா தயாராயில்லை.

இந்தியாவின் கோமாளித்தனத்தை இந்திய மேதாவிகள் வானளாவ புகழ்ந்தாலும் விஷயமறிந்தவர்கள் தலையிலடித்துக் கொண்டு அமைதியாக இருந்துவிடுவர். பாஜக ஆட்சியில், ஒரு வருடத்திற்கும் மேலாக பாகிஸ்தான் எல்லையில் ராணுவத்தை முழு அளவில் தயாராக நிறுத்தி, போர் பயம் காட்டி, சர்வதேசத்தை பாகிஸ்தானுக்கு எதிராக திருப்பப்போவதாக சொல்லிக்கொண்டிருந்தது இந்தியா. பத்துவருட ராணுவ பராமரிப்புச் செலவை ஒருவருடத்தில் முடித்துவிட்டு பலனேதுமின்றி படைகளை பின்வாங்கியது. சர்வதேச ஊடகங்கள் எல்லாம் எள்ளி நகையாடிய தருணத்தில் இந்திய வலது சாரி ஊடகங்கள் (வேறு எந்த சாரி -யிலாவது ஊடகங்கள் இருக்கின்றனவா?) வெற்றி முரசு கொட்டின அல்லது குதம் கிழிந்து அவஸ்தை பட்டன. இம்மாதிரியான கோமாளித்தனங்களை காங்கிரஸ் கடந்த காலங்களில் பலமுறை செய்திருந்தாலும் இந்திய குடிமகன் என்ற ரீதியில் நாமும் சப்பைகட்டி விட்டு நமக்குள் சிரித்துக்கொள்வதொடு நிறுத்திக் கொண்டோம். ஆனால் இன்று ஐநா -வில் அடிக்கும் அடுத்த கேலிக்கூத்து நம் வயிறெரியச் செய்கிறது.

லட்சக்கணக்கில் தங்கள் குடிமக்கள் தெருக்களில் ஆர்பாட்டம் செய்துவிட்ட நிலையில் ஐரோப்பிய நாடுகள் அதற்கு ஏதாவது செய்தாக வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகின. (அவையெல்லாம் ஜனநாயக நாடுகளாம்! மக்கள் போராட்டத்தை புறக்கணித்ததாக வரலாறு சொல்லக்கூடாதல்லவா? அதற்காக...) பேசி வைத்துகொண்டவாறு கனகட்சிதமாக பதினேழு நாடுகளை தேர்வு செய்துகொண்டு ஒப்புக்கு சப்பாணியாக தீர்மானத்தை முன்வைத்தன. தீர்மானம் தோல்வியுற சகலவிதமான வாய்ப்புகளையும் திறந்துவைத்து பிரச்சினையை கை கழுவின. மேற்குலக ஊடகங்கள் இந்த தீர்மானம் யாரையும் எந்த அழுத்தமான நடவடிக்கையையும் கோராமல் நிறைவேறும் அல்லது தோற்கும் என்று ஒரு வாரத்திற்கு முன்பே கூறிவிட்டன. புலம் பெயர்ந்த தமிழர்களை குடிமக்களாக கொண்ட ஒரே காரணத்திற்காக ( மெக்சிகோவிற்கு வேறு காரணம் :-)) ) இவை இவ்வளவு செய்ததே பெரிய விஷயம். இந்தியா என்னும் பருத்த நந்தியை இடறித் தள்ள அல்லது சற்று மெனக்கிட இவற்றிற்கு விருப்பமில்லை. ஈராக் போருக்குக்கு முன்பாக ஆதரவு கோரி அமெரிக்க ராஜ தந்திரிகள் ஐரோப்பிய ஆசிய நாடுகளில் தெருத்தெருவாக அலைந்ததையும் ஆதரவு கிடைக்காத பட்சத்திலும் போரை தொடங்கியதையும் இங்கே நினைத்துப் பார்த்தால் நமக்கு நம்மூர் பெருநோய் பீடித்த அரசியல்வாதிகள் மீதுதான் கோபம் வருகிறது.

இப்போது மொத்த பேரும் ஈழப்பேரழிவிற்கு இந்தியாவை ஒற்றை பொறுப்பாளி (அதுதானே உண்மை!) ஆக்கிவிட்டு ஒதுங்கிக்கொண்டனர். இது நீண்ட கால அடிப்படையில் இந்தியாவில் தேசிய இன பிரச்சினைக்கு வழிவகுக்கக்கூடும் என்று கருதினாலும் இது பற்றி எச்சரிக்கையாகக் கூட வாய்திறக்கவில்லை. ஏற்கனவே மதக்கலவரங்கள் பற்றி இங்கிலாந்து அமைச்சர் ஏதோ 'இந்திய தேசியம்... இந்து-முஸ்லிம்... மாநில அரசு... இந்திய ஒன்றியம்... என்றெல்லாம் வார்த்தைகள் போட்டு அறிக்கை வெளியிட்டுவிட அதற்கு பதிலடியாக இந்தியா 'ராபர்ட் கிளைவ்... கிழக்கிந்திய கம்பெனி... அஸ்தமனம் ஆகிவிட்ட பிரிட்டன்... என்றெல்லாம் வார்த்தைகளைப் போட்டு எதிர் அறிக்கை விட்டு பொரிந்து தள்ளிவிட்டது. இனி எக்கேடு கேட்டாலும் இவர்கள் தலையிடப் போவதில்லை.

இவ்வாறு இந்தியா என்னும் பித்துக்குளி செய்யும் வேலைகள் எல்லாம் தமிழனை காவு வாங்கிக்கொண்டிருக்க, இந்தியாவில் தூண்டப்பட்டு விட வாய்ப்புகள் நிறைய உள்ள தேசிய இன பிரச்சினையை அதன் தலையில் எத்தி, நியாபகம் ஊட்டி, தன் சுய நினைவுக்கு கொண்டு வரவேண்டியது யார்? சீனத்திற்கு தடைபோட மாற்று வெளியுறவுக் கொள்கைகளை நாட இந்தியாவை நெருக்க வேண்டியது யார்? விடுதலைப் புலிகள் நம் கூட்டெதிரி என்று ரகசிய ஒப்பந்தம் போட்டு கதையை முடித்த பின்னும் தமிழனை பேனாவால் குத்தி குத்தி வெறுப்பேற்றுவது யார்? அது யாராக இருந்தாலும் அவருக்கும் இந்திய தேசியத்திற்கும் ஈழத்து அகதி முகாம்களில் இருந்து வரும் செய்திகள் அபாய மணி போன்றவை என்று விரைவில் உணர்ந்து கொள்வது நல்லது. சிறார்களின் பாலுறுப்பை சிதைப்பது, பாலியல் வன்கொடுமைகளால் வலிந்து இனக்கலப்பை செய்வது, பட்டினிபோட்டும் மருந்தின்றியும் மக்களை கொள்வது, உறுப்புகளை திருடி விற்பது (உறுதி படுத்தப்படாத செய்தி!!) போன்ற செயல்கள் பரவலாக தமிழகம் அறியும்போது அல்லது அதை திட்டமிட்டு தடுக்கும் பெரியண்ணன்கள் இடத்தை காலி செய்யும்போது இந்தியாவை முன்னொரு காலத்தில் ஆண்டவர்களும், முன்னூறு வருடங்கள் ஆண்டவர்களும், அரை நூற்றாண்டாக ஆள்பவர்களும், அவர்களை அண்டிபிழைப்பதை புதிய பணியாக சிரமேற் கொள்பவர்களும் எதிர்பார்த்த அல்லது எதிர்பாராத விளைவு ஏற்படக்கூடும்.

Read More......

Saturday, June 6, 2009

கருணாநிதியிடம் 32 -கேள்விகள்

· 135 comments


தமிழ்மணத்தின் அங்கீகாரத்திற்கு நன்றி தெரிவித்துக்கொண்டு நட்சத்திர வாரத்தின் முதல் பதிவை வெளியிடுகிறேன். 'முப்பத்திரண்டு கேள்விகள்' என்ற இந்த சங்கிலித்தொடர் விளையாட்டிற்கு என்னை அழைத்த கோவி கண்ணனுக்கு ஒரு நன்றி. அக்கேள்விகளுக்கு நான் பதில் அளிப்பதைவிட நம் தமிழினத்தலைவர், தமிழக முதல்வர், திமுக தலைவர் திரு. கலைஞர் கருணாநிதி அவர்கள் பதில் அளிப்பது சாலப் பொருத்தம் என நான் கருதியதன் விளைவே இந்த இம்சை.


1.உங்களுக்கு ஏன் இப்பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?
எனது உண்மையான பெயர் தட்சிணா மூர்த்தி. தமிழனை உசுப்பேற்ற கருணாநிதி என்ற தமிழ் பெயர் வைத்துக்கொண்டேன். இது மட்டும் என்ன தமிழ் பெயரா என்று கேட்பவர்கள் அனைவரும் பார்ப்பனர்களே!. மேலும், கருணாநிதி என்று விளித்தால் பிடிக்காது கலைஞர் கருணாநிதி என்று அழைத்தால் பிடிக்கும்.

2.கடைசியாக அழுதது எப்போது?
நிஜமாக அழுததா அல்லது முதலைக் கண்ணீர் வடித்ததா? நிஜமாக அழுதது பல ஆண்டுகளுக்கு முன். பொய்யாக அழுதது நேற்று சாயுங்காலம். இன்று கூட ஒரு முதலைக் கண்ணீருக்கு அப்பாயின்மென்ட் கொடுத்திருக்கிறேன். அது இரவு கலைஞர் செய்திகளில் வரும்.

3.உங்களோட கையெழுத்து உங்களுக்குப் பிடிக்குமா?
எனக்கு பிடிக்காமலா!! ஆனால் ஆரியர்களுக்கு இந்த தமிழனின் கையெழுத்து பிடிப்பதில்லை. பிடித்திருந்தால் நான் அனுப்பிய ஒரு கடிதத்தையாவது டெல்லிக்கார ஆரியர்கள் படித்திருப்பார்களே! எனவே தமிழனை காப்பாற்ற பார்ப்பனர்களுக்கு பிடித்த மாதிரி என் கையெழுத்தை மாற்றப்போகிறேன்.

4.பிடித்த மதிய உணவு!
உண்ணா விரதத்திற்கு முன் ரெண்டு இட்லி. உண்ணாவிரதத்திற்கு பின் கொஞ்சம் ஜூஸ். தமிழனின் துயர் கண்டு இப்போதெல்லாம் உணவு உண்ண முடிவதில்லை. துக்கம் தொண்டைக் குழியை அடைக்கிறது.

5. நீங்கள் வேறுயாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
உடனேவெல்லாம் வைக்க முடியாது. ஜாதி ஓட்டு வைத்திருக்க வேண்டும். கொடுக்கிற சீட்டை வாங்கிக்கணும். நான் சொல்லும்போது 'தமிழ் தமிழ்' என்று தெருவில் இறங்கி கத்தவேண்டும். நான் போதும் என்றால் உடனே நிறுத்தவேண்டும். இப்படி இருந்தால் நட்பு வைத்துக்கொள்வது பற்றி பொதுக்குழுவை கூட்டி விவாதிப்பேன்.

6.கடலில் குளிக்கப் பிடிக்குமா? அருவியில் குளிக்கப் பிடிக்குமா?
சேதுக்கடல், ஹோக்கேனக்கள் அருவி இரண்டும் பிடிக்கும். அதில் வந்து சேர வேண்டிய பணம் வரும் வரை பிடிக்கும். மற்ற படி அவற்றில் குளிக்கவேல்லாம் பிடிக்காது.

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதைக் கவனிப்பீர்கள்?
சட்டைப் பையை கவனிப்பேன். கட்சி நிதிக்கு கூட காசில்லாதவர்களை கவனித்து என்ன செய்வது?

8. உங்க கிட்ட உங்களுக்கு பிடித்த விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன?
எனது நடிப்பாற்றல், திரைக்கதை புருடா வசனம் எழுதுவது போன்றவை எனக்கு பிடிக்கும். ஆனால் எனது பிள்ளைகளிடம் என் பருப்பு வேகுவதில்லை. இதுதான் எனக்கு பிடிக்காத விஷயம்.

9.உங்க சரிபாதி கிட்ட உங்களுக்கு பிடித்த,பிடிக்காத விஷயம் என்ன?
சரிபாதி என்று சொல்லமுடியாது. சரி குவாட்டர் என்றுதான் சொல்ல வேண்டும். அவர்களிடம் பிடித்தது ஒருவருக்கொருவர் சண்டை போடாமல் இருப்பது. பிடிக்காதது எப்போதும் சண்டை போடும் பிள்ளைகளை பெற்றது.

10.யார் பக்கத்தில் இல்லாம இருக்கறதுக்கு வருந்துகிறீர்கள்?
எனது சர்வாதிகார நண்பர் பிரபாகரன் பக்கத்தில் இல்லாமல் இருப்பது வருத்தமாக இருக்கிறது.

11.இதை எழுதும்போது என்ன வர்ண உடை அணிந்துள்ளீர்கள்?
வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை மற்றும் மஞ்சள் துண்டு. நான் தோள் துண்டிற்காக வேட்டியை இழந்துவிட்டேன் என்று விமர்சிக்கிறார்கள். அந்த நெசவாளர்கள் ... சாரி ... வசவாளர்கள் வாழ்க!!!

12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டிருக்கிறீங்க!
நான் எங்கே பாட்டு கேட்கிறேன்??!! என் பாட்டைத்தான் ஊரே கேட்கிறதே!!! இதோ நீங்களும் கேளுங்கள்!!

"குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா! - இது
கொள்ளை அடிப்பதில் வல்லமை காட்டிடும் திருட்டு உலகமடா"

13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என வர்ணமாக உங்களுக்கு ஆசை?
ஒவ்வொரு வண்ணத்திலும் ஒரு தங்கப் பேனாவை பரிசளியுங்கள். பிறகு எந்த வண்ண பேனாவாக மாற விரும்புகிறேன் என்று கூறுகிறேன்!

14.பிடித்த மணம்?
பணப்பெட்டியை திறந்ததும் வரும் அந்த பச்சை தாளின் மனம்.

15.நீங்க அழைக்க விருக்கும் பதிவரிடம்..உங்களுக்கு பிடித்த விஷயம்..அவரை அழைக்கக் காரணம்?

உடன் பருப்பு: இவரை அறிவாலயம் வாசலில் நிற்க வைத்து டவுசர் கிழித்தாலும் அசராமல், அகலாமல் அங்கேயே நிற்பார். இதுதான் இவரை அழைக்க காரணம்.

குத்து தெலுங்கினி: இவர் நிரம்ப யோசிப்பதால் லாஜிக் இல்லாமல் திமுக -வை ஆதரிப்பார்.

பொடி டப்பா: இவர் திமுக -வை ஆதரிக்க எந்த காரணமும் தேவை இல்லை. அதனால் இவரை அழைக்க வேறு எந்த காரணமும் தேவையில்லை.

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்கு பிடித்த பதிவு எது?
ஜெயலலிதா ஒரு பாசிஸ்ட் வைகோ ஆவேசம் !

17.பிடித்த விளையாட்டு?
தந்தி அடித்து ஆடும் ஆட்டம் பிடிக்கும். எல்லா உடன்பிறப்புகளுக்கும் இது பிடிக்க வேண்டும்.

18.கண்ணாடி அணிபவரா?
என்னய்யா கேள்வி இது!! அதை அணியவில்லை என்றால் பத்திரிக்கையாளர் சந்திப்பில் டரியல் ஆகும் பொது அது கண்ணில் தெரிந்துவிடாதா?!!

19.எப்படிப்பட்ட திரைப்படம் பிடிக்கும்?
திரைக்கதை எழுதுவதோடு சரி. அதை படத்தில் பார்த்து ஆயுளை குறைத்துக் கொள்ள என்னால் முடியாது. அதற்குத்தான் உடன் பிறப்புகள் இருக்கிறார்களே! அத்திரைப் படங்களை பார்க்கும் அனைவருக்கும் என் இதயத்தில் மட்டுமல்லாமல் மருத்துவமனையிலும் இலவச இடமுண்டு. அவசர ஆம்புலன்ஸ் வசதியோடு!

20.கடைசியாக பார்த்த படம்?
கடைசியாக பார்த்த குத்தாட்டம் எதுவென்று கேட்டால் சரியாக இருக்கும். மானாட மயிலாட வெண் திரையில் வெளியிட்டால் அதை பார்ப்பேன். இதற்கு ஆவன செய்ய வேண்டும் என பிரதமருக்கும் அன்னை சோனியாவுக்கும் கடிதம் எழுதியிருக்கிறேன்.

22.இப்போது படித்துக் கொண்டிருக்கும் புத்தகம்?
நேரு எழுதிய இராமாயணம்.

23.உங்க டெஸ்க் டாப்பில் இருக்கும் படத்தை எத்தனை நாளைக்கு ஒரு முறை மாற்றுவீர்கள்?
டெஸ்க் டாப்பில் இருக்கும் படத்தையெல்லாம் மாற்றுவது இல்லை. கொள்கையை மட்டும் தான் மாற்றுவேன். அடிக்கடி!!

24.உங்களுக்கு பிடித்த சத்தம்...பிடிக்காத சத்தம்!
ஷெல்லடிக்கும் போது மக்கள் அலறும் சத்தம் மிகவும் பிடிக்கும். என் பிள்ளைகள் ஒருவருக்கொருவர் சதா அடித்துக்கொண்டு எழுப்பும் சத்தம் பிடிக்காது.

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிகபட்ச தொலைவு!
வேறெங்கே! டெல்லிதான்.

26.உங்களுக்கு ஏதேனும் தனித்திறமை இருக்கிறதா?
எனக்குத் தெரியாது. ஆனால் இருப்பதாக உலகம் இன்னும் நம்புகிறது.

27.உங்களால் எற்றுக் கொள்ளமுடியா ஒரு விஷயம்?
நான் தமிழினத் தலைவர் என்பதை உடன்பிறப்புகளே ஏற்க மறுப்பதை என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியாது!

28.உங்களுக்குள் இருக்கும் சாத்தான்?
உள்ளே வேறு சாத்தான் வேண்டுமா? நாங்களே அப்படித்தான்.

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலாத்தலம்?
டெல்லியும் ஜன்பத் இல்லமும்.

30.எப்படி இருக்கணும்னு ஆசை?
இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற எந்த ஆசையும் கிடையாது. ஆனால் எப்படி இருந்தாலும் பதவி மட்டும் இருக்கவேண்டும் என்கின்ற ஆசையுண்டு என்பதை அடக்கத்துடன் தெரிவிக்க விரும்புகிறேன்.

31.கணவர்/மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம்?
அவர்களை வைத்துக் கொண்டு ஒன்றுமே செய்ய முடியாது. நிம்மதியாக உண்ணாவிரதம் கூட இருக்க முடியாது.

32.வாழ்வு பற்றி ஒருவரி சொல்லுங்க!!
வாழ்க்கை ஒரு வட்டிக் கடை போன்றது. தேவையற்றதை அடகு வைத்து தேவையானதை பெறலாம். அவை மீண்டும் தேவைப்படும் போது மீட்டுக்கொள்ளலாம். இப்போதைக்கு தேவையற்றது தமிழின அரசியல். தேவையானது பதவி. கொள்கையை அடகு வைத்து மூழ்கிவிட்டதால் மீட்க முடியாமலே போய் விட்டது வேதனை.

Read More......