Showing posts with label தனிமாநிலம். Show all posts
Showing posts with label தனிமாநிலம். Show all posts

Sunday, December 21, 2008

தமிழகத்தில் ஒரு தனி மாநில கோரிக்கை; குடுகுடுப்பையாருக்கு ஒரு வேண்டுகோள்.

· 52 comments

பதிவர் குடுகுடுப்பை தென்மாவட்டங்களை உள்ளடக்கி செந்தமிழ்நாடு என்னும் தனி மாநிலம் உருவாக்குவது பற்றி ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அம்மாவட்டங்களில் வளர்ச்சியின்மையை காரணம் கூறியிருந்தார். "மாலிவுட் என்ற திரைத்துறையை உருவாக்கலாம்" என்பது போன்றும் நகைச்சுவைக்காக சில விஷயங்கள் கூறப்பட்டன. அவற்றை மறுத்து சில கருத்துக்களை கூறி அதற்கு தேவையேதும் இல்லை என வலியுறுத்தவே இப்பதிவு.

இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும்தான் இரண்டாம் மட்ட நகரங்கள் தொழில் வளர்ச்சிக்கு முனைப்புடன் தயார் செய்யப்பட்டுள்ளன என்கிறது மெக்கின்சி ரிபோர்ட். கோவை மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, ஓசூர் ஆகிய நகரங்களில் ஐடி கட்டமைப்புகளை அரசு தீவிரமாக வளப்படுத்தி வருகிறது. ஐடி -யில் கோவையின் அசுர வளர்ச்சியை பற்றி எல்லோருக்கும் தெரியும். அது தொழில் வளர்ச்சியில் ஏற்கனவே செழுமை பெற்ற நகரம். ஹெல்த் சர்வீஸ் இங்கு சென்னைக்கு சற்றும் குறைவில்லாமல் உள்ளது (இந்தியாவின் மெடிகல் காபிடல் சென்னை). அண்ணா பல்கலைக்கழகம் ஒன்று இங்கே தொடங்கப்பட்டு உள்ளது;சுய நிர்வாகத்துடன் விரைவில் செயல்படவிருக்கிறது. திருப்பூரை ஏனைய மாநகரங்களுக்கு இணையாக மாற்றும்படிக்கு நிர்வாக வசதி கருதி தனி மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளது.

சமீப காலங்களில் "டெஸ்டினேசன் மதுரை" என்ற கருத்தரங்கை ஒவ்வொரு வருடமும் மதுரையில் இந்திய தொழில் கூட்டமைப்பு நடத்தி வருகிறது. சென்னை பெங்களூர் போன்ற நகரங்களில் பத்து வருடங்களுக்கு முன் இவ்வாறான கருத்தரங்களை நடத்தி வந்தது. தமிழக அரசு இவற்றை முன்னெடுக்கிறது. உள்கட்டமைப்புகள் முக்கிய கவனம் பெறுகின்றன. இந்தியாவின் ஏனைய இரண்டாம்நிலை நகரங்களை விட மதுரை பலமடங்கும், சில மாநில தலைநகரங்களைவிடவும், சிலவற்றுக்கு இணையாகவும் உள்கட்டமைப்பை பெற்றுள்ளது.

கோவையை போலவே திருச்சியில் அண்ணா பல்கலைக்கழகம் ஒன்று தொடங்கப்பட்டு உள்ளது;சுய நிர்வாகத்துடன் விரைவில் செயல்படவிருக்கிறது. இந்தியாவின் இரண்டாம் நிலை தலைநகரங்களில் பூனா போன்று விமான போக்குவரத்து அதிகம் பெற்ற நகரம் இது. சிறந்த கல்வி நிலையங்களை கொண்ட நகரம். உள்கட்டமைப்புக்கு அரசின் (குறிப்பாக மத்திய அரசின்) கவனம் பெற்றுள்ள நகரம்.

தென்மாவட்டங்களில் சமீபகால வளர்ச்சிகள் யாவும் மாநில அரசின் முனைப்பினாலேயே நடைபெறுகின்றன. திருநெல்வேலியிலும் அண்ணா பல்கலை கழகம் நிறுவப்பட இருக்கிறது. சேது சமுத்திரத்திட்டம் தென்மாவட்டங்களின் வளர்ச்சிக்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு வழக்கமான திட்டமன்று. அது ஒரு மிகப்பெரிய திட்டத்தின் முதல் நடவடிக்கை. கனரக மற்றும் உற்பத்தித்தொழிலில் உலக நாடுகள் தமிழகத்தை குறிவைத்து இந்திய அரசையும் மாநில அரசையும் நெருக்குகின்றன. குறிப்பாக ஜப்பான், ஆஸ்திரேலியா, மலேசியா போன்றவை. புதிய தொழிற்சாலைகள் அனைத்தையும் தென் மாவட்டங்களுக்கு கொண்டுசெல்ல மாநில அரசு நினைக்கிறது. அதனாலேயே தூத்துக்குடி துறைமுக மேம்பாடும் சேது சமுத்திரமும் முக்கியமான முதல் நடவடிக்கைகள் ஆகின்றன. இது தற்போதைய தமிழக அரசின் நீண்டகால அடிப்படையிலான முயற்சி.

தற்போதைய தொழிற்கொள்கை சென்னையை விட்டு எவ்வளவு தூரம் வெளியே தொழிற்சாலையை அமைக்கிறீர்களோ அதற்கு தகுந்த ஊக்கத்தொகையும் வரிவிலக்கும் தருகிறது. விரிவாக்கப் பணிதவிர வேறெந்த புது முயற்சிகளும் சென்னைக்கு 150 கிமீ உள்ளாக தொழில்துறையில் தொடங்க தனியாருக்கு கிட்டத்தட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே கிராமப்புற வளர்ச்சி மிக மிக மிக மிக மிக முன்னேற்றமாக உள்ள மாநிலம் தமிழகம். கிராமவளர்ச்சியின் குறியீடுகளில் ஒன்றான அர்பனைசேசன் ஒப்பீட்டளவில் முதலிடத்தில் (இரண்டாம் இடம் பெற்ற மாநிலத்தைவிட மிகுந்த வித்தியாசத்துடன்) உள்ளது.

வளர்ச்சியில் சென்னை முன்னிலைப்படுத்தப்படுகிறது என்பது இருபது வருடங்களுக்கு முந்தைய குற்றச்சாட்டு. இப்போது நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. ஐடி -இன் துரித வளர்ச்சியும், தயாநிதி மாறனின் சில விளம்பரமிக்க முயற்சிகளும் சென்னை முன்னிலைப்படுத்துவதாக தோற்றம் அளிக்கின்றன. இரண்டாம் மட்ட நகரங்களை மேம்படுத்தும் பணி பின்னணியிலும், விளம்பரமின்றியும், வழக்கமான செயல்பாடு போல் பரபரப்பின்றியும் நடைபெற்று வருகிறது. அதிமுக -விட திமுக இதை தொய்வில்லாமல் செய்கிறது என்றாலும் அதிமுக -இவற்றிற்கு பெரும்பாலும் தடையாக இல்லை. (1991-1995 -ல் கதை வேறு; அப்போது இரண்டாம் மட்ட நகரங்களின் வளர்ச்சி மட்டுமல்ல, எந்த வளர்ச்சியும் ஏற்படவில்லை)

ஆக, தென்மாவட்டங்கள் வளர்ச்சியில் புறக்கணிக்கப் படுகின்றன என்பது தற்போதைய காலங்களில் ஏற்க முடியாத குற்றச்சாட்டு. வேறுசில வசதிக்குறைவுகள் அங்கே இருக்கின்றன என்றால் சிலவற்றை ஏற்க முடியம். முக்கிய அரசு அலுவலகங்கள் தங்கள் தலைமையகத்தை சென்னையில் கொண்டுள்ளன. கடைக்கோடித் தமிழன் இவற்றின் பயனைப்பெற நேரவிரையம் செய்து பயணிக்க வேண்டியுள்ளது என்பது உண்மை. நாம் உச்சநீதி மன்றத்தின் பயன்பாட்டை பெற வெகுதூரம் வடக்கு நோக்கி பயணம் செய்ய வேண்டியுள்ளது என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும். உயர் நீதிமன்றக் கிளை மதுரையில் அமைத்து நீதித்துறை தென்மாவட்டங்களுக்கு நியாயம் செய்ததுபோல் தமிழக அரசும் முக்கிய அரசு அலுவலகங்களின் தலைமையகத்தை தென்மாவட்டங்களுக்கு மாற்றியோ அல்லது தற்சார்பாக செயல்படும் கிளைகளை அங்கு அமைத்தோ அம்மாவட்டங்களுக்கு நியாயம் செய்ய வேண்டும். முடிந்தால் சட்டமன்ற கூட்டத்தொடர் ஒன்றை அங்கே நடத்தலாம். கோடைகால தலைநகரமாக தென்மாவட்ட நகரம் ஒன்றை தேர்ந்தெடுக்கலாம்.

எனினும், தென்மாவட்டங்களை உள்ளடக்கி தனியாக ஒரு மாநிலம் உருவாக்க வேண்டும் என்பதற்கான தேவை கிஞ்சித்தும் இல்லை. தனிமாநில உருவாக்கத்திற்கு வளர்ச்சி, கலாச்சாரம் அல்லது மொழி என ஏதேனும் ஒரு காரணி இருக்க வேண்டும். ஜார்கண்ட் போன்ற மாநிலங்கள் வளர்ச்சியை முன்னிறுத்தியும், தெலுங்கானா கோரிக்கை கலாச்சாரத்தை முன்னிறுத்தியும் தனி மாநிலம் கேட்டன/கேட்கின்றன. தமிழகத்தில் இவ்வாறான கோரிக்கைக்கு எந்த முகாந்திரமும் இல்லை. இதனால் நமக்கு ஒட்டுமொத்தமாக நட்டமே ஏற்படும். மத்திய அரசுடனான பார்கெயின் பவர் நமக்கு குறையும். முக்கிய பிரச்சினையில் இருவேறு நிலைப்பாட்டை இரு மாநிலங்களும் எடுத்தால் தமிழின எதிரிகளுக்கு கொண்டாட்டமாகிவிடும். (ஏற்கனவே ஈழப்பிரச்சினையில் நமக்கு மூன்று வித நிலைப்பாடுகள் உள்ளன). வேறு மாநிலங்கள், நாடுகளில் வாழும் தமிழருக்கு நம்மால் வலுவோடு குரல் கொடுக்க முடியாத நிலை ஏற்படலாம். (உ - ம்: காங்கிரஸ் ஏதேனும் ஒரு மாநிலத்தில் ஆட்சிக்கு வந்தால் ஈழப்பிரச்சினை, கர்நாடக பிரச்சினை என்னவாகும்?)

இவை தவிர பல பிரச்சினைகள் உள்ளன. வலைப்பூக்களில் பேசப்படும் பல விஷயங்கள் வெளியே கூர்ந்து கவனிக்கப்படுகின்றன. இந்நிலையில், தனிமாநில கோரிக்கை என்ற ஒன்று தமிழகத்தில் இல்லாதபோது (குறைந்த பட்சம் தற்போது) நாம் அவ்வகை முயற்சியை தொடக்கிவைக்ககூடாது.

Read More......