Showing posts with label தமிழ் சசி. Show all posts
Showing posts with label தமிழ் சசி. Show all posts

Monday, November 17, 2008

தமிழ் சசி அவர்களுக்கும் ஏனையோருக்கும் நன்றிகள்

· 4 comments

ஈழம் பற்றி தமிழ் சசி அவர்களின் பேட்டி இந்தியத்தமிழர்கள் பெரும்பாலானோருக்கு தெரியாத பல விஷயங்களை தெளிவுற விளக்கியுள்ளது. அவரது பல வேலைகளுக்கு இடையே கணிசமான நேரத்தை இதற்காக ஒதுக்கி விரிவான மற்றும் ஆழமான பதில்களை அளித்துள்ளார். அவருக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளும் அவரது புதிய முயற்சிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களையும் இப்பதிவின் மூலம் தெரிவித்துகொள்வோம். பின்னூட்டங்கள் மூலம் ஆதரவளித்த பதிவர்களுக்கும், வாசகர்களுக்கும் மீண்டுமொருமுறை நன்றி.

தமிழ் சசி


நசரேயன்

தமிழ் பிரியன்

கோவி.கண்ணன்

நந்தா

indian

ஜோ

வெண்தாடிதாசன்

we the people நா ஜெயசங்கர்

Pot"tea" kadai Sat

தம்பி

பொடியன்-|-SanJai

ராஜ நடராஜன்

பிருந்தன்

ஓசை செல்லா

மு.மயூரன்

Thooya

தங்க முகுந்தன்

ஜ்யோவ்ராம் சுந்தர்

சயந்தன்

கொழுவி

குடுகுடுப்பை

stanjoe

குசும்பன்

தமிழ் பால்

மற்றும் அனானிமஸ்

Read More......

Tuesday, November 11, 2008

தமிழீழம்: தமிழ் சசி -யின் பேட்டி, நிறைவுப் பகுதி

· 8 comments

திரு. தமிழ் சசி உடனான ஈழம் குறித்த பேட்டியின் முதல் மூன்று பகுதிகளை இங்கே காணலாம்.

பகுதி - 1
பகுதி - 2
பகுதி - 3

தொடர்ந்து இது இறுதிப் பகுதி


ராஜிவ் காந்தி - ஜெயவர்த்தனே உடன்படிக்கை தோல்வி அடைய காரணம் என்ன? புலிகளா? சிங்கள அரசா? அல்லது அந்த உடன்படிக்கையேதான் காரணமா?

ந்த உடன்படிக்கை முதலில் ராஜீவ்காந்தி-ஜெயவர்த்தனே இடையே நடைபெற்றிருக்க கூடாது. விடுதலைப் புலிகள்-ஜெயவர்த்தனே இடையே தான் இந்த ஒப்பந்தம் நடைபெற்றிருக்க வேண்டும். இந்தியா அந்த ஒப்பந்தத்திற்கு உதவி செய்திருக்க வேண்டும். அது தான் முதல் கோணல். அது போல இந்திய-இலங்கை ஒப்பந்தம் என்பது இந்தியாவின் நலன்களைச் சார்ந்து முன்வைக்கப்பட்டது. திருகோணமலை துறைமுகம் போன்றவை இந்த ஒப்பந்தத்திற்கு அடிப்படையான காரணமாக இருந்தது.

அது தவிர போபர்ஸ் போன்ற ஊழல் பிரச்சனைகளில் சிக்கித்தவித்த ராஜீவ் காந்தி இந்திய-இலங்கை ஒப்பந்தம் மூலம் பிரச்சனைகளை திசைதிருப்ப முனைந்தார். மிகவும் அவசரகோலத்தில் செய்யப்பட்ட ஒப்பந்தம் என முன்னாள் வெளியூறவுச் செயலர் வெங்கடேஸ்வரன் குறிப்பிட்டு இருக்கிறார்.


ராஜிவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தம்

சோனியா, ராஜிவ்,எம்ஜியார் - மரினா, சென்னை

இன்னும் விரிவாக பேசலாம். ஆனால் ராஜீவ் காந்தி பற்றி பேசினாலே பிரச்சனை வேறு பக்கம் திரும்பி விடும். எனவே இப்போதைக்கு இது போதும்



ணில் மற்றும் பேராசிரியர் பெரிஸ் முன்னெடுத்த பேச்சு வார்த்தை ஏன் தோல்வி அடைந்தது? அதில் என்ன முடிவு எடுக்கப்பட்டது? அரசுதரப்பு ஒப்புக்கொண்ட முடிவுகள் பிறகு ஏன் அரசுக்கு உவப்பளிக்கவில்லை?


ஆண்டன் பாலசிங்கம், பேரா. ஜி.எல். பெரிஸ் - ஆஸ்லோ

னில் ஆட்சிக்கு வந்த பொழுது தடுமாறிக்கொண்டிருந்த தன்னுடைய பொருளாதாரத்தை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டிய தேவை இருந்தது. புலிகளுக்கு உலகநாடுகளிடம் தங்களுக்கென ஒரு அங்கீகாரத்தை பெற வேண்டிய தேவை இருந்தது. இந்த இரண்டு நோக்கங்கள் தான் பேச்சுவார்த்தை தொடங்கியதற்கு காரணம். ஆரம்பகட்ட பேச்சுவார்த்தைகள் சுமூகமாகவே சென்றன. நார்வே தலைமையில் பேச்சுவார்த்தை சென்று கொண்டிருந்த சூழ்நிலையில் ஒரு பன்னாட்டு வலையத்தை ரனில் ஏற்படுத்த முயன்றார். ஜப்பான், அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், நார்வே போன்றவை நாடுகள் உள்ளிட்ட கூட்டத்தலைமை ஏற்படுத்தப்பட்டது. இது தங்களுக்காக விரிக்கப்பட்ட ஒரு வலை என புலிகள் நினைத்தனர். அது போல பேச்சுவார்த்தை புலிகளுக்கு அதிக அதிகாரங்களை தருவதாக சந்திரிகா மற்றும் சிங்கள தேசியவாதிகள் கருதினர்.


புலிகள் தங்களுக்கு தேவைப்படும் அதிகாரங்களை Interim Self Governing Authority (ISGA) என்ற பெயரில் முன்வைத்தனர். அதனைச் சார்ந்து பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட வேண்டும் என கூறினர். இதனை சிங்கள அரசியல்வாதிகளால் ஏற்கமுடியவில்லை. சிந்திரிகா ரனில் வசம் இருந்த முக்கிய இலாக்காக்களை பறித்தார். இதற்கிடையே கருணா பிளவு ஏற்பட்டது. ஏற்கனவே ஆட்டம் கண்டிருந்த சூழலை கருணாவின் பிளவு வலுப்படுத்தியது. பேச்சுவார்த்தை நின்று போனது. இது தவிர உலகநாடுகளிடம் அங்கீகாரம் கோரிய புலிகளுக்கு ஐரோப்பிய யூனியன் தடை, கனடா தடை என பல தடைகள் நேர்ந்தன. இந்த தடைகளே தற்போதைய போருக்கு ஒரு முக்கிய காரணமாக சொல்ல முடியும் (இந்தப் பேச்சுவார்த்தைகள் குறித்த சூழலை என்னுடைய பல்வேறு பதிவுகளில் விரிவாக எழுதியுள்ளேன்)


ந்தியாவின் இலங்கை அயலுரவுக்கொள்கையை நிர்ணயிப்பவை எவை? கற்பிதமான இந்திய தேசியத்தின் போலி இறையான்மையா? ராஜீவ்காந்தி படுகொலையா? சீனா, பாகிஸ்தான் முதலான நாடுகளா? தமிழின காழ்ப்பா? அசட்டையா? அல்லது வேறெதுவுமா?

மிழன் என்ற இனம் இந்திய தேசியம் உருவாவதற்கு முன்பும் சரி, பின்பும் சரி தமிழ் தேசியம் என்பதை முன்வைத்து வந்திருக்கிறது. கடந்த காலங்களில் தமிழ் தேசியம் என்பதை வலுவாக முன்வைத்த ஒரு தேசிய இனம் தமிழ் இனம். இத்தகைய ஒரு தேசிய இனம் தனக்கென ஒரு நாட்டினை பெற்று விட்டால் அது இந்திய தேசியத்திற்கு அச்சுறுத்தலாக அமையும் என


ராஜபக்ஷே - ஹூ ஜிண்டாவோ பீஜிங்
ஆரம்பகாலங்களில் இந்தியா நினைத்தது. அதனால் ஈழப்போராட்டத்தை நசுக்க முனைந்தது. பிறகு ராஜீவ் காந்த படுகொலை காரணமும் அதனுடன் சேர்க்கப்பட்டது.

அது தவிர தற்பொழுது உலமெங்கும் பல தேசிய இனங்கள் தங்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. இலங்கையில் விடுதலைப் புலிகள், துருக்கியில் PKK, இந்தியாவில் காஷ்மீர், நாகாலாந்து, மணிப்பூர் போன்ற மாநிலங்களில் என தேசிய இனங்களின் போராட்டங்கள் பல இடங்களில் நடந்து வருகின்றன. இதில் எந்த ஒரு இனம் வெற்றி பெற்றாலும் அது பிற நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும். விடுதலைப் புலிகள் தமிழ் ஈழத்தைப் பெற்றால் காஷ்மீர், மணிப்பூர், நாகாலாந்து போன்ற இடங்களில் இது தாக்கத்தை ஏற்படுத்தும் என இந்தியா நினைக்கிறது. எனவே தமிழ் ஈழம் அடைந்து விடக்கூடாது என்ற அக்கறை இந்தியாவிற்கு உள்ளது.

எப்படி இலங்கையின் சில பகுதிகள் இலங்கை

ராஜபக்ஷே - முஷாரப்
அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இல்லையோ அது போல நாகாலாந்து போன்ற குட்டி மாநிலத்தின் சில பகுதிகள் இந்திய இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இல்லை. புலிகள் பல போராளிக்குழுக்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருப்பதாக இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் நினைக்கின்றன.

எனவே விடுதலைப் புலிகள் வெற்றி பெற்று விடக்கூடாது என இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் விரும்புகின்றன.

ராணுவ நடவடிக்கைகளும் புலிகளின் எதிதாக்குதலும் இந்நேரம் எந்நிலையில் உள்ளது?


ராஜபக்ஷே - முகம்மது அகமதினாஜாத்

ற்போதைய நிலையில் சிறீலங்கா இராணுவத்தின் கை ஒங்கியுள்ளது என்பது தெளிவாக தெரிகிறது. இதற்கு பல காரணங்கள் உள்ளன. முக்கியமான காரணம் புலிகளுக்கு கடல்வழியே வந்து கொண்டிருந்த ஆயுதங்கள் பெரும்மளவில் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறன. மிக அதி நீவீன கடல் உளவு நுட்பங்களை இந்தியா/அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் சிறீலங்காவிற்கு அளித்து உள்ளன. மிகவும் அசுர பலம் கொண்ட விமானப்படை சிறீலங்காவிடம் உள்ளது. அதன் மூலம் பாரிய தாக்குதல்களை தொடுத்து வருகிறார்கள். கடந்த ஈழப்போர்களில் புலிகளிடம் விமான எதிர்ப்பு ஏவுகணைகள் இருந்தன. இது போரின் போக்கினை ஒரு சமநிலையில் வைத்திருந்தது. தற்போதைய போரில் அவ்வாறான நிலை இல்லை. புலிகளிடம் விமான எதிர்ப்பு ஏவுகணைகள் இருந்தாலும் அது முக்கியமான இடங்களையும், பிரபாகரனின் பாதுகாப்பிற்கும் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. எனவே சிறீலங்கா விமானப்படை எந்த தடையும் இல்லாமல் குண்டு மழை பொழிகிறது.

தற்பொழுது கிளிநொச்சி நோக்கிய இராணுவ முன்நகர்வுகளில் ஒரு தொய்வு கடந்த சில வாரங்களாக தெரிகிறது. கிளிநொச்சியை விட்டு விட்டு பூநகரி நோக்கி சிறீலங்கா இராணுவம் நகர முனைவதாக தெரிகிறது. பூநகரி கைப்பற்றப்பட்டால் யாழ்ப்பாணத்திற்கு தற்பொழுது கடல் வழியாக சுற்றிச்செல்லும் பிரச்சனை இருக்காது. எனவே சிறீலங்கா இராணுவமே தற்பொழுது கிளிநொச்சியை கைப்பற்ற முடியாது என நினைப்பதாக தெரிகிறது. இதனை நான் சொல்லவில்லை. இந்தியாவின் உளவு நிறுவனமான ராவின் முன்னாள் அதிகாரிகளான பி.ராமனும், ஹரிஹரனும் தங்களுடைய இராணுவ ஆய்வறிக்கையில் தெரிவிக்கிறார்கள்.

ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்தப் போரில் சிறீலங்கா, விடுதலைப் புலிகள் என இருவருமே வெற்றி பெற முடியாது. கடந்த 30 ஆண்டுகளாக நடக்கும் போர் அதைத் தான் நமக்கு தெரிவிக்கிறது. புலிகளும், சிறீலங்கா இராணுவமும் மாறி மாறி வெற்றி பெற்றிருக்கிறார்கள். தோல்வியும் அடைந்திருக்கிறார்கள். சந்திரிகா தலைமையில் சிங்கள இராணுவம் யாழ்ப்பாணத்தை கைப்பற்றிய பொழுது புலிகள் மிகவும் பலவீனமாக உள்ளதாகவே அனைவரும் தெரிவித்தனர். யாழ்ப்பாணத்தில் இருந்து புலிகள் துரத்தப்பட்டனர்.

ஆனால் என்ன நடந்தது ? அடுத்த சில மாதங்களில் தாங்கள் இழந்த பகுதி அனைத்தையும் புலிகள் கைப்பற்றினர். யாழ்ப்பாணத்தை நோக்கி புலிகள் முன்னேறிய பொழுது இந்தியாவும், அமெரிக்காவும் யாழ்ப்பாணத்தை கைப்பற்ற வேண்டாம் என புலிகளை எச்சரித்தன. எனவே புலிகள் தங்கள் முன்னேற்றத்தை நிறுத்த வேண்டிய தேவை ஏற்பட்டது.

இப்பொழுது உள்ள சூழ்நிலை எப்படி மாறும் என தெரியவில்லை. ஆனால் நிச்சயமான வெற்றி யாருக்கும் கிடைக்காது என நான் நினைக்கிறேன். புலிகளால் ஒட்டு மொத்த தமிழ் ஈழத்தையும் வென்றெடுக்க முடியாது. சிறீலங்கா இராணுவத்தாலும் புலிகள் வசம் உள்ள அனைத்து பகுதிகளையும் கைப்பற்ற முடியாது. இது ஒரு நிச்சயமற்ற சூழ்நிலையை தான் ஏற்படுத்தும்.

நிச்சயமில்லாத சூழ்நிலை தமிழ் மக்களுக்கு கொடுமையானது.



விடுதலைப் புலிகள் உங்களை எவ்வாறு கவருகிறார்கள் ? எதனை எதிர்க்கிறீர்கள் ?

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது எனக்கு பல விமர்சனங்கள் உள்ளன. சிறுவர்களை வலுக்கட்டாயமாக படையில் சேர்த்தது, சக போராளிக்குழுக்கள் மீதான தாக்குதல், தொடர்ச்சியாக செய்த அரசியல் ரீதியிலான தவறுகள் என எனக்கு பல விமர்சனங்கள் உள்ளன.

ஆனால் புலிகளை விமர்சிக்கும் தமிழ் இடதுசாரிகள் சிங்கள இனவாதத்திற்கு எதிராக முன்வைக்கும் தீர்வு என்ன ?


வான் புலிகளுடன் பிரபாகரன்

www.satiyakadatasi.com/2007/06/06/நேர்காணல்-ஷோபாசக்தி-2/
ஷோபா சக்தி போன்றவர்கள் தங்களை அறிவுஞானம் மிக்க மாற்று சிந்தனையாளர்களாக கருதி முன்வைக்கும் சிங்கள இடதுசாரி-தமிழ் இடதுசாரி சார்ந்த "உளறல் கருத்தாக்கம்" எந்த வகையில் நடைமுறை சாத்தியம் மிக்கது ? ஷோபா சக்தி போன்றவர்கள் தங்கள் "உளறல் கருத்தாக்கத்தை" தார்மீக நியாயமாக கருதிக்கொண்டிருக்கலாம். அவர்களை அறிவுஞீவிகளாக வெளிப்படுத்திக் கொள்வதற்கு மட்டுமே இத்தகைய கருத்துக்கள் உதவும்.

புலிகளை விமர்சிப்பதை தவிர தமிழ் இடதுசாரிகள் இந்தப் பிரச்சனையில் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் ? ப்ரான்சிலும், டோரோண்டோவிலும் கூட்டம் போடுவதை தவிர இவர்கள் செய்தது எதுவும் இல்லை.

சிங்கள அதிகாரமையம், இந்திய அதிகாரமையம் என அனைத்தையும் எதிர்கொண்டு வருபவர்கள் விடுதலைப் புலிகள் மட்டுமே. எனவே தான் புலிகள் மீது பல விமர்சனம் இருந்தாலும் அவர்களை நிராகரிக்க முடிவதில்லை.



ழப்பிரச்சினைக்கு உங்கள் தீர்வென்ன?

நான் டிரவுசர் போட்டு கொண்டிருந்த காலங்களில் "ஜெயவர்த்தனேவின் கொடும்பாவி" கொளுத்தும் நிகழ்வு தான் ஈழப்பிரச்சனை குறித்து எனக்கு நேர்ந்த முதல் அனுபவம். நெய்வேலியின் வீதிகளில் பள்ளி மாணவர்களும், பிற இளைஞர்களும் ஜெயவர்த்தனேவின் கொடும்பாவியை இழுத்துக் கொண்டு சென்று கொளுத்துவார்கள். ஈழத்தில் பிரச்சனை தீவிரமடையும் பொழுதெல்லாம் அரசாங்கப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் எங்கள் பள்ளியில் நுழைந்து பள்ளியை மூட சொல்வார்கள். நான் படித்துக் கொண்டிருந்தது தனியார் பள்ளியில். 4வதோ, 5வது இருக்கலாம். லீவு கிடைத்த விட்ட மகிழ்ச்சியில் வீட்டிற்கு வருவதும், பிறகு ஜெயவர்த்தனேவின் கொடும்பாவி வீதி வீதியாக கொண்டு செல்லப்பட்டு கொளுத்தப்படுவதும் நடக்கும். அந்த கூட்டத்துடன் நடந்து சென்றது தான் என்னைப் இந்தப் பிரச்சனையை முதன் முதலில் கவனிக்க வைத்தது.

சுமார் 25 ஆண்டுகளுக்கு மேல் சென்று விட்டது. பல இழப்புகளை சந்தித்து விட்டோம். இன்றைக்கும் எதிர்கொண்டு வருகிறோம்.

ஈழத்தில் நடைபெறும் போர் சாமானிய மக்களுக்கு ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து முன்பு ஒரு பதிவில் இவ்வாறு எழுதியிருந்தேன்.
http://blog.tamilsasi.com/2008/04/eelam-war-psychological-trauma.html


எண்பதுகளின் தமிழகத்தில் ஈழ ஆதரவு போராட்டம்

போர் ஒரு சாமானிய மனிதனின் வாழ்க்கையை சிதைக்கிறது. அவனுடைய அன்றாட வாழ்வியலை கேள்விக்குறியாக்குகிறது. உயிருடன் அன்றைய பொழுதை கழிக்க முடியுமா என்ற கேள்வியுடன், தன்னைச் சார்ந்த குடும்பமும், சக மனிதர்களும் அடுத்த சில மணி நேரங்களுக்கு இருப்பார்களா அல்லது உயிரிழப்பார்களா என்ற நிலையற்ற தன்மையுடனும் வாழ்க்கையை நகர்த்த வேண்டிய சூழல் ஏற்படுகிறது. பெரும்பாலும் அதிகார மையங்களால் நகர்த்தப்படும் இந்தப் போர், அந்தப் போரினை நேரடியாக எதிர்கொள்ளும் சூழலில் இருக்கும் சாமானிய மனிதனையே அதிகம் பாதிக்கிறது/சிதைக்கிறது.

ஈழத்திலே நடந்து வரும் போரும் ஒரு சாமானிய தமிழனையே அதிகம் பாதிக்கிறது. தன்னுடைய குடும்பத்தை இராணுவத்திடமும், புலிகளிடமும், துணை இராணுவ குழுக்களிடம் இழந்தவர்கள், விமானத் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்கள், கணவன்/குழந்தைகளை இழந்த பெண்கள், உறவுகள் இல்லாமல் அனாதையாக்கப்பட்ட குழந்தைகள் என தமிழ் ஈழம் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் கொண்ட ஒரு நாடாக மாறிவிட்டது. இதற்கு ஒரு மாற்றம் வேண்டும்.

சில நேரங்களில் எந்த அதிகாரங்களும் இல்லாவிட்டால் கூட பரவாயில்லை. போர் முடிந்தால் போதும். மக்கள் தங்களின் அன்றாட வாழ்க்கையை குண்டுவீச்சுகள், செல் தாக்குதல் போன்றவை இல்லாமல் கழித்தாலே போதும் என்ற எண்ணம் கூட ஏற்படுகிறது. ஈழத்திலே நான் ஒரு நாள் கூட இருந்ததில்லை. ஆனால் எனக்கே அவ்வாறு தோன்றும் பொழுது ஒரு சாமானிய ஈழத்தமிழனின் எண்ணம் அவ்வாறே இருக்க முடியும் என்று நினைக்கிறேன். அவ்வாறு நடக்க கூடிய வாய்ப்பு இருந்தால் நான் அதைத் தான் ஆதரிப்பேன்.

ஈழத்திலே எது நடைமுறை சாத்தியமோ அது தான் நடக்க வேண்டும் என்பது என்னுடைய நிலைப்பாடு. ஆனால் முன்வைக்கப்படும் எந்த தீர்வும் நடைமுறை சாத்தியம் இல்லாமல் போவது தான் வேதனையான சூழ்நிலை. புலிகளின் முழுமையான தமிழ் ஈழம் நடைமுறை சாத்தியம் அல்ல. சிறீலங்கா அரசியல்வாதிகள் கூறும் Unitary setup என்பதும் நடைமுறை சாத்தியம் அல்ல.

தமிழருக்கும், சிங்கள மக்களுக்கும் சரிசமமான அதிகாரங்களை கொண்ட ஒரு கூட்டாட்சி அமைப்பே தீர்வாக முடியும். இந்த கூட்டாட்சி அமைப்பினை பேச்சுவார்த்தைகள் மூலமே எட்ட முடியும். போரினால் சாதிக்க முடியாது. தற்போதைய போர் ஓய்ந்தால் தான் பேச்சுவார்த்தை நடக்ககூடிய வாய்ப்பு ஏற்படும். சிங்கள இராணுவம், புலிகள் இருவருமே இந்தப் போரில் தாங்கள் வெற்றி பெற முடியும் என நினைக்கின்றனர். அது தான் இங்கு பிரச்சனை.

சிங்கள இராணுவம் இந்தப் போரினை தொடர்ந்து நடத்துவதன் மூலம் அதிரடியாக இந்தப் போரினை முடிவுக்கு கொண்டு வந்து விடலாம் என நினைக்கிறது. புலிகள் இந்தப் போரில் சிறீலங்காவின் முன்னேற்றத்தை எவ்வளவு தூரம் தடுக்க முடியுமோ அந்தளவுக்கு தடுப்பதன் மூலம் சிறீலங்காவின் பொருளாதாரத்திற்கு அழுத்தத்தை ஏற்படுத்தலாம் என்று நினைக்கிறார்கள். தொடர்ச்சியான போர் இராணுவத்திற்கு பிரச்சனைகளை ஏற்படுத்தும் பொழுது தாங்கள் அவர்களை தாக்கலாம் என நினைக்கிறார்கள். அதன் மூலம் வெற்றி பெற முடியும் என நம்புகிறார்கள்.

அது தான் இங்கு பிரச்சனை.



[முற்றும்]


.

Read More......

Monday, November 10, 2008

தமிழீழம்: தமிழ் சசி -யின் பேட்டி, பகுதி - 3

· 9 comments

திரு. தமிழ் சசி -வுடனான தமிழீழம் குறித்த பேட்டியின் முதல் மற்றும் இரண்டாம் பகுதிகள் கடந்த இரண்டு பதிவுகளாக வெளியிடப்பட்டது. தொடர்ந்து இது மூன்றாவது பகுதி.


ந்திய அரசியலமைப்பு சட்டத்தையும் இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தையும் ஒப்பிட முடியுமா?

ந்திய அரசியலமைப்பு சட்டத்தையும், இலங்கை அரசியலைப்புச் சட்டத்தையும் ஒப்பிட கூடிய அரசியல் சட்டமைப்பு குறித்த அறிவு எனக்கு இல்லை.
"ஏட்டளவில் (On Paper)" இந்திய அரசியல் சாசனம் அனைவருக்கும் சமமான உரிமையை வழங்குகிறது.

இலங்கையில் உள்ளது போலவே இந்தியாவிலும் மாநிலங்களுக்கு பெரிய அதிகாரம் எதுவும் இல்லை. ஆனால் ஒரளவுக்கு அதிகாரங்கள் உள்ளன. இந்தியாவின் அரசியல் அமைப்பில் உள்ளது போன்ற அதிகாரங்களை வடக்கு-கிழக்கு மாகாணங்களுக்கு வழங்கும் திட்டம் கூட சிங்கள அரசியல்வாதிகளால் முன்வைக்கப்படுகிறது. ஆனால் இது இலங்கைக்கு பொருந்தாது. இந்தியாவின் தற்போதைய அதிகாரப் பரவல் என்பது இந்தியாவின் பிராந்திய கட்சிகள் பலம் பெற்றதாலும், தேசிய கட்சிகள் பலம் இழந்ததாலும் தான் அடைய முடிந்தது. இந்தியா போன்று பெரிய நாட்டில், பல்வேறு பிராந்தியங்கள் உள்ள சூழ்நிலையில், பிராந்திய கட்சிகள் வலுப்பெறும் பொழுது தான் இந்த மைய கூட்டாட்சி நிலை ஏற்படுகிறது.

ஆனால் இலங்கை போன்ற சிறிய நாட்டில் இது போன்ற நிலை ஏற்பட வாய்ப்பு இல்லை. அதனால் இந்தியா போன்று அதிகாரப்பரவலாக்கம் ஏற்பட சாத்தியம் இல்லை.

இலங்கையில் இந்தியாவைப் போன்ற மாநில அதிகாரங்களை வழங்க முனைந்தால் இந்தியா சுதந்திரம் அடைந்த ஆரம்ப கால சூழ்நிலை தான் இலங்கையில் ஏற்படும்.
இந்தியாவில் ஆரம்ப காலங்களில் மைய அரசு தான் பலம் பொருந்தி இருந்தது. மாநில ஆட்சிகளை கலைக்கும் அதிகாரங்களை பெற்றிருந்தது. மைய அரசின் அசுர பலம் காரணமாகவே கட்சத்தீவினை தமிழகத்தின் கடும் எதிர்ப்பினை மீறியும் இலங்கைக்கு

அன்றைய இந்தியாவின் மைய அரசு தாரைவார்த்தது. ஆனால் இன்றைய கூட்டாட்சி முறையில் அது போன்ற நிலை ஏற்பட வாய்ப்பு இல்லை.

எனவே இந்தியா போன்ற அதிகாரங்களை கொண்ட மாநிலங்களை இலங்கையில் உருவாக்குவது என்பது ஈழத்தமிழர் பிரச்சனைக்கு தீர்வாக முடியாது.

இவை தவிர இலங்கை அரசியல் சட்டத்தில் கொண்ட வரப்பட்ட பல மாற்றங்களே இலங்கையின் இன்றைய நிலைக்கு காரணம். குறிப்பாக 1956ம் ஆண்டு சிங்கள ஆட்சி மொழி சட்டம் (Official Language Act or Sinhala Only Act), ஈழத் தமிழர்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றியது. இந்திய அரசியல் சட்டத்தில் அவ்வாறான ஒரு நிலை இல்லை. என்றாலும் ஹிந்தியை இந்தியாவின் தேசிய மொழி என்று கூறுவதை என்னால் என்றைக்கும் ஜீரணம் செய்து கொள்ள முடிவதில்லை. அப்படியெனில் மற்ற மொழிகள் எல்லாம் எதற்கு?

ழத்தமிழர் பற்றி அண்ணாவின் நிலைப்பாடு என்னவாக இருந்தது?

ண்ணா காலத்தில் ஈழப் பிரச்சனை குறித்த விழிப்புணர்வு தமிழகத்தில் அதிகம் இருந்தது இல்லை என நினைக்கிறேன். அதனால் அண்ணாவின் நிலைப்பாடு குறித்த எந்த தகவலும் இல்லை


விடுதலை புலிகளுக்கு எம்ஜியார் செய்த உதவிக்கும் இந்திய அரசு செய்த உதவிக்கும் உள்ள வித்தியாசம் என்ன? அல்லது வித்தியாசம் இல்லையா?

மிழீழ விடுதலை குறித்து உண்மையிலேயே அக்கறை கொண்டு உதவி செய்த ஒரே தமிழக தலைவர் எம்.ஜி.ஆர் மட்டும் தான். எம்.ஜி.ஆர் ஆரம்பகாலங்களில் செய்த உதவி தான் விடுதலைப் புலிகள் இயக்கத்தை வலுவாக கொண்டு வந்தது.


இந்திரா, அமிர்த லிங்கம்,
நரசிம்ம ராவ்

எம்.ஜி.ஆர்., பிரபாகரன்
இந்திய அரசு ஒரு உதவியும் செய்யவில்லை என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் இந்திய அரசு இலங்கை அரசாங்கத்தை தங்களின் கட்டுப்பாட்டில் வைக்கவே தமிழ் போராளிக்குழுக்களுக்கு ஆயுதங்களை வழங்கியது. தமிழ் போராளிக்குழுக்களையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவே இந்திய அரசு நினைத்தது. தமிழ் ஈழத்தை ஒரு போதும் இந்திய அரசாங்கம் ஆதரித்தது இல்லை. இதன் காரணமாக இந்திய அரசு அளித்த பயிற்சியில் தமிழ் போராளிக்குழுக்களுக்கு மிகவும் தரம் குறைந்த ஆயுதங்களும், மிதமான பயிற்சிகளும் தான் வழங்கப்பட்டன. இது தமக்கு எந்த வகையிலும் உதவாது என பிரபாகரன் நினைத்தார் (பாலசிங்கம் எழுதிய "War and Peace" என்ற புத்தகம் இதனை விரிவாகவே விளக்குகிறது). அந்த சூழ்நிலையில் தான் எம்.ஜி.ஆர் வழங்கிய பெரும் நிதி பிரபாகரனுக்கு பெரும் உதவியாக இருந்தது. பல நவீன ஆயுதங்களை வாங்க முடிந்தது. தரமான பயிற்சிகளை தாங்களாகவே புலிகள் ஏற்படுத்திக் கொண்டனர்.


வ்விஷயத்தில் எழுபதுகளின் இறுதியிலும் எண்பதுகளின் தொடக்கத்திலும் கலைஞரின் நிலைப்பாடு என்ன? கலைஞர் யாரை ஆதரித்தார்? எண்பதுகளின் இறுதியில் அவரது நிலைப்பாடு புலிகள் பக்கம் சாய்வாக இருந்ததா?

முதன் முதலில் 1970களில் தான் ஈழப் பிரச்சனை தமிழகத்தில் நுழைந்தது. செல்வநாயகம், தொண்டமான் போன்றோர் அப்போதைய முதல்வர் கலைஞர், எம்.ஜி.ஆர் மற்றும் பெரியாரை சந்தித்தனர்.

கலைஞர் ஒரு குழப்பமான நிலைப்பாட்டினை தான் ஈழப்பிரச்சனையில் தொடர்ந்து செய்து வருகிறார். தமிழனத்தலைவர் என்று தன்னை அனைவரும் அழைக்க வேண்டும் என விரும்பும் கலைஞர் தன்னுடைய அரசியல் சுயநலத்தைச் சார்ந்தே தன்னுடைய நிலைப்பாட்டினை அமைத்து கொண்டிருக்கிறார். 80களில் எம்.ஜி.ஆர் விடுதலைப்


தொண்டைமான்
புலிகளுக்கு நிதி வழங்கிய பொழுது கலைஞர் அதற்கு போட்டியாக டெலோ (TELO) அமைப்புக்கு நிதி வழங்கினார். அங்கும் அரசியல்.

1989ம் ஆண்டு கலைஞர் ஆட்சியில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயல்பட்டதாக கலைஞர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அதற்கு காரணம் சென்னையில் வைத்து பத்மநாபா விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டது தான் காரணம். மற்றொரு காரணம் கலைஞர் இலங்கையில் தமிழர்கள் மீது வன்முறை தாக்குதலை தொடுத்த இந்திய இராணுவத்தை வரவேற்கவில்லை. இது இந்திய தேசியவாதிகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.

உண்மையில் கலைஞர் எந்தக் காலத்திலும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயல்பட்டதில்லை. ஆனால் அவ்வாறான ஒரு பிம்பம் எழுப்பபட்டது. இந்த அரசியலை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும். கலைஞர் மீது ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கும் பொழுது அந்த குற்றச்சாட்டினை மறுக்க வேண்டிய நிலைக்கு கலைஞர் தள்ளப்படுகிறார். He is on Defensive. அதுவும் கலைஞர் போன்று அரசியல் அதிகாரங்களை மையப்படுத்தி "மட்டுமே" அரசியல் செய்பவர்களை அவ்வாறான Defensive நிலைக்கு தள்ளுவது என்பது ஒரு சரியான உத்தி. கலைஞருக்கு எதிராக மற்றொரு ஈழவிடுதலை ஆதரவாளர் இருந்திருந்தால் இந்த உத்தி வேலை செய்திருக்காது. ஆனால் ஜெயலலிதா இருந்ததால் கலைஞரை குற்றம்சாட்டிக் கொண்டே அவரை நெருக்கடி நிலையில் வைத்து ஈழப்போராட்டத்திற்கு ஆதரவான ஒரு நிலையை தமிழகத்தில் ஏற்படாமல் செய்து விட்டனர். தற்பொழுது கூட ஜெயலலிதா திடீர் என்று தமிழர்களுக்கு ஆதரவாக பேசியதும், பிறகு கலைஞர் களத்தில் இறங்கியதும், நிலைமை வலுத்ததும் ஜெயலலிதா பின்வாங்கி கலைஞரை குற்றம்சாட்டியது, இந்திய தேசியவாதிகள் அலறுவதும், பிறகு கலைஞர் பின்வாங்குவதும்...என்னய்யா அரசியல் இது.

திருச்செல்வம், கலைஞர்

ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஈழப்போராட்டம் இலங்கையில் சிங்களனுக்கும்-தமிழனுக்கும் நடக்கும் யுத்தம். அந்த ஈழப்போராட்டத்தின் மற்றொரு பரிமாணம் தமிழகத்தில் உண்டு. தமிழகத்திலே ஈழப்போராட்டம் என்பது தமிழனுக்கும் - பார்ப்பானுக்கும் நடக்கும் யுத்தமாக நடந்து கொண்டு இருக்கிறது. குறிப்பிட்ட ஒரு சாரார் மட்டும் ஈழப்போராட்டத்தை வலுவாக எதிர்ப்பதையும் அவர்களின் நிலைப்பாட்டையே இந்திய நடுவண் அரசு முன்வைப்பதும் எதனை குறிக்கிறது ?

வைகோ புலித்தோல் வரித்தவரா அல்லது போர்த்தியவரா? அவரை திமுக தலைவராக ஆக்குவதாக எப்போதாவது புலிகள் உறுதி கொடுத்தனரா?

வைகோவை திமுக தலைவராக மாற்ற விடுதலைப் புலிகள் சதி செய்வதாக இந்திய உளவுத்துறை தகவலை வெளியிட்டது. உளவுத்துறைக்கு தான் திமுக மேல் என்ன கரிசனம் !! இந்திய உளவுத்துறை தமிழ் ஈழப்போராட்டத்தை நசுக்க பல வேலைகளை செய்து வந்தது/வருகிறது. அதில் ஒன்று தான் இந்த வேலை. கருணாநிதிக்கும் - வைகோவுக்கும் பகை உண்டாக்கியவர்களும், கருணாவை உருவாக்கி விடுதலைப் புலிகள்


ராமதாஸ்

வைகோ, பழ. நெடுமாறன்
இயக்கத்தை உடைத்தவர்களும் ஒருவர் தான்.
அவர்கள் இந்திய உளவுத்துறையினர் - ரா (RAW)


பாமக மற்றும் திருமா ஆகியோரின் விடுதலை புலிகள் தொடர்பான அணுகுமுறை என்ன? பொதுவுடமைவாதிகள் என்ன சொல்கிறார்கள்?


பாமக ஆரம்பகாலத்தில் தீவிரமாக விடுதலைப் புலிகளை ஆதரித்தது. ஆனால் தற்பொழுது அதன் நிலையில் சறுக்கல் தெரிகிறது. காங்கிரசை பகைத்து கொள்ளக் கூடாது என்று நினைக்கிறார்கள். அதனால் அடக்கி வாசிக்கிறார்கள். இது தான் தமிழகத்தின் தலையெழுத்து. தமிழகத்தில் காங்கிரஸ் ஒரு பெரும் சக்தியாக ஏனோ தொடர்ந்து மதிக்கப்படுகிறது. ஆனால் உண்மையில் காங்கிரசுக்கு ஓட்டு போடுபவர்களில் பெரும்பகுதியினர் எப்பொழுதோ சுடுகாட்டிற்கு போய் சேர்ந்து விட்டனர். தமிழக அரசியல் கட்சிகள் இதனை உணர்ந்து தங்கள் கூட்டணிகளை அமைக்க வேண்டும். ஆனால் அதனை எவரும் செய்வதில்லை.

ஈழப் பிரச்சனை என்பது தமிழக அரசியல் கட்சிகளின் அரசியல் சுயநலம் சார்ந்த பிரச்சனையாக காலப்போக்கில் மாறிவிடும் என்பதற்கு திமுக முதல் உதாரணம் என்றால் பாமக சமீபத்தைய உதாரணம்.

திருமா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு ஆறுதல் அளிக்கிறது. குறிப்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தோழர்கள் இந்தப் பிரச்சனையில் காட்டி வரும் ஈடுபாடு தான் இந்தப் பிரச்சனையை தமிழகத்தில் அதிகளவில் பேசவைத்துள்ளது என நான் நினைக்கிறேன். டி.ராஜா போன்றோர் இந்தப் பிரச்சனையை இந்தியா அளவில் முன்வைத்துள்ளனர்.

மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றொரு பாரதீய ஜனதா கட்சியாக மாறிவருகிறது என்பது தேசிய அளவில் என்றோ வெளிபட்டு விட்டது என்பதால் அதனைப் பற்றி நாம் அதிகம் கவலைப்படவேண்டியதில்லை.

பொதுவாக பல கட்சிகள் முன்வைக்கும் எந்த முயற்சிக்கும் பெரிய பலன் இருக்கப்போவதில்லை என்பது வேறு விடயம். என்னைப் பொறுத்தவரை ஈழப் பிரச்சனை தமிழக மக்களின் முன்வைக்கப்பட வேண்டும். 18 வருடங்களாக அது நடக்கவில்லை. மக்கள் மத்தியில் இந்தப் பிரச்சனை குறித்து பேசப்படவேண்டும் என்பது மட்டும் தான் என்னுடைய விருப்பம்.


கருத்துரிமை மீட்பு மாநாட்டில் திருமா

மற்றபடி, ஈழப்போராட்டத்தை புலிகள் தான் வென்றெடுக்க வேண்டும். இங்கு அகதியாக வந்து சேரும் மக்களுக்கும், ஈழத்திலேயே அகதியாக உள்ள மக்களுக்கும் பொருளுதவியும், நிதியுதவியும் செய்வது தவிர தமிழக மக்கள் செய்யக்கூடியது ஒன்றும் இல்லை என்பது தான் யதார்த்தமான சூழ்நிலை/அவலம்.

ஜெயலலிதாவின் பிரதமர் கனவிற்கும் அவரது தனிஈழ எதிர்ப்புக்கும் ஏதேனும் தொடர்புண்டா?

ஜெயலலிதா பிரதமர் ஆவதெல்லாம் கனவில் தான் நடக்கும். அதற்கும் ஈழ எதிர்ப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சோ, என்.ராம் போன்றோர் எதற்காக ஈழத்தை எதிர்க்கிறார்களோ, அந்த காரணம் தான் ஜெயலலிதாவிற்கும்.


மூகத்தின் மையத்தில் உள்ள இண்டலக்ச்சுவல்களில் விடுதலை புலிகளை ஆதரிப்பவர்கள் யாவர்?

ண்டலக்ச்சுவல்களா ? யார் அவர்கள் ?
இங்கு ஊடகத்தில் பலம் கொண்டவர்கள் யாரை முன்நிறுத்துகிறார்களோ, அவர்கள் தான் இண்டலக்ச்சுவல்கள். அவர்கள் ஆதரித்தால் என்ன ? எதிர்த்தால் என்ன ?


தெற்காசிய தமிழர்கள் விடுதலைப் புலிகளை ஏகமனதாக ஏற்கின்றனரா?


ம். ஏற்கிறார்கள். தெற்காசியா என்னும் பொழுது தமிழகம் மற்றும் இலங்கை மட்டும் தான். இந்தியன் எக்ஸ்பிரஸ், விகடன் கருத்துகணிப்புகள் அதைத் தானே சுட்டி காட்டுகிறது.



[தொடரும்]



அடுத்த பகுதியுடன் தொடர் பேட்டி முற்றுப்பெறும்

Read More......

தமிழீழம்: தமிழ் சசி -யின் பேட்டி, பகுதி - 2

· 25 comments

திரு. தமிழ் சசி -வுடனான தமிழீழம் குறித்த பேட்டியின் முதல் பகுதி சென்ற பதிவில் வெளியிடப்பட்டது. தொடர்ந்து இது இரண்டாவது பகுதி.



ரம்பத்தில் ஆயுதம் ஏந்திய குழுக்கள் மொத்தம் எத்தனை? அவற்றின் இன்றைய நிலை என்ன?

ல போராளிக்குழுக்கள் இருந்தன. சில முக்கிய போராளிக்குழுக்களை மட்டும் இங்கு குறிப்பிடுகிறேன்.

Tamil Eelam Liberation Organization (TELO) என்ற அமைப்பை குட்டிமணி, தங்கதுரை போன்றவர்கள் தொடங்கினார்கள். ஆரம்பகாலங்களில் டெலோ ஈழப்போராட்டத்தில் ஒரு முக்கியமான அமைப்பாக இருந்தது. 1983ல் குட்டிமணி, தங்கதுரை இருவரும் சிங்கள இராணுவத்தால் கொல்லப்பட்டனர். பிறகு சிறீ சபாரத்தினம் தலைமையில் டெலோ செயல்பட்டது. ஆரம்பம் முதலே டெலோ இந்திய உளவுத்துறையான ராவின் முக்கியமான செல்லப்பிள்ளை. டெலோ உள்ளேயே சகோதரப்படுகொலைகள் நிகழ்ந்தன. அதுவே டெலோ பலவீனமடையக்காரணம்.


குட்டிமணி

தங்கதுரை
இந்திய அமைதிப்படை நிலை கொண்டிருந்த நேரத்திலே இரண்டாம்நிலைத்தலைவர்களான தாஸ்-பொபி பிரச்சனையிலே, தாஸ் பொபியினாலே யாழ் வைத்தியசாலையுள்ளே வைத்துக் கொல்லப்பட்டார். அவர் விடுதலைப்புலிகளுடன் சுமுகமான உறவை வடமராச்சிப்பகுதியிலே கொண்டிருந்தவர். சிறீ சபாரத்தினம் புலிகளால் கொல்லப்பட்டார். தற்பொழுது TELO விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான அரசியல் கட்சியாக தமிழ் தேசிய கூட்டணியில் (TNA) அங்கம் வகிக்கிறது.

EROS (Eelam Revolutionary Organisation of Students) என்ற அமைப்பு லண்டனில் இருந்து தொடங்கப்பட்டது. இது மார்க்சிய வழியில் தமிழீழ விடுதலையை முன்வைத்தது. கடைசியாக ஈரோஸ் பிரிந்தபோது, பாலக்குமார் தலைமையிலான குழு

சிறீ சபாரத்தினம்

பாலக்குமார்

ஷங்கர் ராஜீ
விடுதலைப்புலிகளுடன் சென்றபோது, கணிசமான ஒரு பகுதி, சங்கர் ராஜி போன்றோர்கள் இந்தியாவின் செல்லப்பிள்ளைகளாக இருந்தனர். சங்கர் ராஜி இறந்த பின்னர், அவரின் மகனான இலங்கையிலேயே வசிக்காத நேசன் இங்கிலாந்திருந்து நானே தலைவர் என்று அப்பிரிவுக்குத் தலைமை தாங்குகிறார்.

1980ல் EROS அமைப்பு உடைந்து Eelam People's Revolutionary Liberation Front (EPRLF) என்ற அமைப்பு தோன்றியது. பத்மநாபா இதன் தலைவராக இருதார். EPRLF பல பிரிவுகளாக இயங்கியது. வரதராஜபெருமாள் இந்தியாவின் ஆதரவுடன் வடகிழக்கு மாகாண முதல்வர் ஆனார். பிறகு இந்தியப் படைகளுடன் சேர்ந்து அவரும் வெளியேறி இந்தியாவின் வடமாநிலத்தில் (மத்திய பிரதேசம் ??) தலைமறைவாக வசித்து வருகிறார். இதன் சில பிரிவுகள் டக்ளஸ் தேவானந்தாவின் EPDP போன்றவை சிங்கள அரசின் கூலிப்படையாக செயல்பட்டு வருகின்றன.

விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து வெளியேறிய உமா மகேஸ்வரன் தொடங்கிய மற்றொரு போராளி இயக்கம் - PLOTE - People's Liberation Organisation of Tamil Eelam. போராளிக்குழுக்களுக்குள் நடந்த சண்டையில் பெரும்பங்கு கொண்ட

பத்மநாபா

வரதராஜ
பெருமாள்

டக்லஸ்
தேவானந்தா
இயக்கமென்றால், PLOTE தான். சந்ததியார் உட்பட எத்தனையோ கருத்து ரீதியிலான சிறந்த தலைமைகளைக் கொன்றதிலே இவர்களுக்குப் பங்குண்டு. PLOTE இந்தியாவின் கூலிப்படையாக செயல்பட்டது. இந்திய உளவுத்துறையின் தூண்டுதலின் பேரில் மாலத்தீவிற்கு சென்று அந்த அரசை சீர்குலைக்க முனைந்தது.

மேலே கூறிய அனைத்து போராளிக்குழுக்களும் இந்தியாவின், சிறீலங்காவின் கூலிப்படையாக அவர்களின் செல்லப்பிள்ளைகளாக காலப்போக்கில் மாறிய நிலையில் ஒரு போராளி அமைப்பு மட்டும் தமிழ் ஈழமே தன்னுடைய லட்சியம் என்ற பாதையில் உறுதியாக இருந்தது. இந்தியாவின் நிர்பந்தங்களுக்கு அடிபணியவில்லை. அந்த அமைப்பு தான் பிரபாகரன் தலைமையில் இயங்கிய விடுதலைப் புலிகள் அமைப்பு. 1972ல் புலிப்படை அல்லது Tamil New Tigers என்ற அமைப்பை பிரபாகரன் தொடங்கினார். 1976ல் இது தமிழீழ விடுதலைப் படை (Liberation Tigers of Tamil Eelam - LTTE) என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு படிப்படியாக மிகப் பலமான அரசியல்-இராணுவ அமைப்பாக உருவெடுத்தது. இதற்கு காரணமாக இருந்தவர் பிரபாகரன்.

தன்னுடைய "Island of Blood" என்ற புத்தகத்தில் பிரபாகரனை மிக அதிகபட்சமாக சந்தித்த பத்திரிக்கையாளர் என்று சொல்லப்படும் இந்திய பத்திரிக்கையாளர் அனிதா பிரதாப் இதேக் கருத்தை கூறுகிறார். இலங்கைப் பிரச்சனையின் ஆரம்ப காலங்களில் இந்தியாவில் இருந்த பிரபாகரனை சந்தித்த அனிதா, பிற போராளிக் குழுக்களின் தலைவர்களை விட பிரபாகரனிடம் மட்டுமே தமிழர் உரிமை குறித்த தீவிரத்தையும், தமிழ் ஈழத்தை அடைந்தே தீருவது என்ற லட்சியத்தையும் கண்டதாக தெரிவிக்கிறார்.

PLOTE உமா மகேஸ்வரன்

பிரபாகரன் பத்திரிக்கையாளர்
அனிதா பிரதாப் -வுடன்

.. The other thing about Pirabakaran that made a deep impression on me was his unwavering commitment to the cause of Eelam. It was deep -rooted, non-negotiable convication.
...My encounters with the LTTE guerrillas and their prodigious literature convinced me that Pirabhakaran was the man to watch out for. Compared to the other Tamil groups, the LTTE cadres were clearly superior. They exuded an aura of single-minded devotion to their cause

ஒரு விடயத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். பல போராளிக்குழுக்கள் இந்திய உளவு அமைப்பான ராவின் செல்லப்பிள்ளைகளாக மாறிய பொழுது விடுதலைப் புலிகள் அமைப்பு மட்டுமே தன்னுடைய ஆரம்பகால லட்சியங்களில் இருந்து மாறாமல் உறுதியாக இருந்தது. இது தான் இந்தியாவின் எரிச்சலுக்கும், பிரபாகரன் மீதான வெறுப்பிற்கும் காரணம். பிரபாகரன் இல்லாத விடுதலைப் புலிகள் அமைப்பு என்பதை இந்தியா தொடர்ந்து முன்வைத்து வருகிறது. பிரபாகரன் இல்லாவிட்டால் மற்ற இயக்கங்கள் போலேவே விடுதலைப் புலிகள் அமைப்பையும் தன்னுடைய எண்ணத்திற்கு ஏற்ப மாற்றிவிடலாம் என இந்தியா நினைக்கிறது.


போராளிக்குழுக்களுக்குள் ஏற்பட்ட சகோதர யுத்தம் குறித்து கூற முடியுமா ? கலைஞர் கூட சகோதர யுத்தம் தான் ஈழப்போராட்டம் வெற்றி பெறாமல் போனதற்கு காரணம் என கூறுகிறாரே ?

போராளிக்குழுக்களுக்குள் ஏற்பட்ட சண்டையை ஈழப் போராட்டத்தின் கருப்பு பக்கம் என்று தான் கூற வேண்டும். ஆனால் போராளிக்குழுக்களுக்குள் ஏற்பட்ட சகோதர யுத்தம் தான் ஈழப்போராட்டத்திற்கு பின்னடைவு ஏற்படுத்தியது என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. இந்தியா தன்னுடைய உளவு வேலைகளை இலங்கையில் நிறுத்தியிருந்தால் எப்பொழுதுதோ ஈழம் கிடைத்திருக்கும்.

சகோதர யுத்தம் என்பது தானாக உருவானது அல்ல. உருவாக்கப்பட்டது. இந்தியாவின் உளவு அமைப்பான ராவால் உருவாக்கப்பட்டது. டெலோ, ஈரோஸ், விடுதலைப்புலிகள் போன்ற அமைப்புகள் ஒன்றாக இணைந்து கூட்டாக பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். திம்பு பேச்சுவார்த்தை. ஆனால் அந்தப் பேச்சுவார்த்தையில் இந்திய அரசாங்கம் முன்வைத்ததை அனைத்து போராளிக்குழுக்களும் நிராகரித்தன. ஆனால் இதற்கு காரணம் விடுதலைப் புலிகள் அமைப்பு தான் என இந்திய உளவுநிறுவனம் கருதியது.


ஆண்டன் பாலசிங்கம்
ஆண்டன் பாலசிங்கம் இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்டார். இதனை தொடர்ந்த காலங்களிலும், இந்திய அமைதிப்படை இலங்கை சென்ற பொழுதும் டெலோ, EPRF போன்ற அமைப்புகள் இந்தியாவின் செல்லக்குழந்தைகளாக மாறி தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக செயல்பட்டது என்பதை மறுக்க முடியுமா ?

இந்திய/இலங்கை அரசாங்கங்களின் பிரித்தாளும் சூழ்ச்சி தான் சகோதரயுத்தத்தை உருவாக்கியது. அதில் விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டு விட வேண்டும் என்பது இந்தியாவின் எண்ணமாக இருந்தது. ஆனால் விடுதலைப் புலிகள் அதில் பலம் பெற்றனர். ஏனெனில் தன்னுடைய எதிரிகளின் நடவடிக்கையை சரியாக கணிக்கும் ஆற்றல் பிரபாகரனுக்கு இயல்பாகவே இருந்தது. இன்றைக்கும் இருக்கிறது.

பிரபாகரனுக்கு அடுத்த நிலையில் இருந்த மாத்தையாவை கொண்டு விடுதலைப் புலிகள் இயக்கத்தில் பிளவு ஏற்படுத்த முயன்றவர்கள் யார் ? கருணாவை உருவாக்கியவர்கள் யார் ?

சகோதர யுத்தம் என்ற பெயரில் ஒட்டுமொத்த பழியையும் விடுதலைப் புலிகளின் மீது போட்டு விட்டு இந்தியா தப்பித்துக் கொள்கிறது. ஆனால் போராளிக்குழுக்களுக்குள் சண்டையை ஏற்படுத்தியது இந்தியா தான். இந்திய இராணுவம் இலங்கையில் இருந்தபோது, வவுனியாவிலே, புலிகளின் உள்ளூர்த்தலைவர்களைக் கொல்ல ஆசீர்வாதம் செய்தது. மற்றைய இயக்கங்களை வழி நடத்தியதும் இந்தியாவின் இராணுவ தலைமை தான். தவிர, இந்திய இராணுவம் நிலைகொண்டிருந்தபோது, தமிழ்த்தேசிய இராணுவம் என்ற அமைப்பினை (Tamil National Army) உருவாக்கி மிகவும் சிறிய சிறுவர்களையும் கடத்திப்போய்ச் சேர்த்து, தனிநாடுப்பிரகடனம் உருவாக்கியதெல்லாம், இந்தியாவின் இலங்கை அமைதிப்படை வருகையின் வரலாற்றிலே பேசப்படுவதில்லை.

காங்கிரசின் நெருக்குதல், தமிழக கட்சிகளின் நெருக்குதல் போன்றவற்றில் இருந்து தப்பிக்க கலைஞர் சகோதர யுத்தம் குறித்து பேசிக் கொண்டிருக்கிறார். கலைஞர் ஈழபோராட்டம் குறித்து கருத்து தெரிவிக்கும் பொழுதெல்லாம் இந்த சகோதர யுத்தத்தை பயன்படுத்திக் கொள்கிறார்.

கருணா
பிரச்சனைகளில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள முனைகிறார். கலைஞருக்கு வரலாறு தெரியாதா ? அல்லது மற்றவர்களுக்கு தெரியாது என நினைக்கிறாரா ?

அடுத்த முறை மைய அரசின் பாதுகாப்பு அதிகாரிகள் சென்னை வரும் பொழுது கலைஞர் இந்திய உளவு அமைப்பான ரா இலங்கையில் செய்த குளறுபடிகள் குறித்து ஒரு முழுமையான அறிக்கையை கேட்டால், அவர்களும் கலைஞருக்கு அந்த அறிக்கையை கொடுத்தால் உண்மை தெரியவரும். ஆனால் அது எப்பொழுதும் நடக்கப் போவதில்லை.



விடுதலை புலிகள் இயக்கம் தோன்றிய முதல் நாள் அதில் இருந்தவர்கள் யாவர்? இன்றைய விடுதலைப்புலிகளின் படைபலம் என்ன?

முதல் நாள் யார் இருந்தார்கள் என்பது தெரியவில்லை. ஆனால் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் ஆரம்பகாலத்தில் இருந்தவர்கள் சார்லஸ் ஆண்டனி (சீலன்), செல்லக்கிளி, கிட்டு, பேபி சுப்பிரமணியன் போன்றோர். இவர்களில் பேபி சுப்பிரமணியன் மட்டும் தான் தற்பொழுது உயிருடன் இருக்கிறார். இவர் விடுதலைப் புலிகள் அமைப்பில் பிரபாகரனுக்கு அடுத்த நிலையில் இருப்பவர் (No. 2). ஊடகங்கள் இவர் No.2 அவர் No.2 எனக் கூறிக்கொண்டு இருந்தாலும் பேபி சுப்பிரமணியன் தான் No.2. ஆனால் இவர் தற்பொழுது இராணுவ அமைப்பில் இல்லை. தமிழ் ஈழப் பகுதிகளில் கல்வி, அனைத்து இடங்களிலும் தனித்தமிழை கொண்டு வந்தது போன்றவற்றில் பேபி சுப்பிரமணியனின் பங்கு முக்கியமானது.


சார்லஸ்
ஆண்டனி

கிட்டு

பேபி
சுப்பிரமணியன்
தற்பொழுது விடுதலைப் புலிகளின் படைபலம் குறித்து சரியாக தெரியவில்லை. ஆனால் சுமார் 25,000 பேர் இருக்கலாம் என தெரிகிறது. ஆனால் சிங்கள அரசாங்கம் தினசரி வெளியிட்டு வரும் விடுதலைப் புலிகளின் இழப்பு நிலவரத்தை கொண்டு கணக்கிட்டால் தற்பொழுது விடுதலைப் புலிகளின் பலம் வெறும் "0" தான்.



[தொடரும்]


அடுத்த பகுதி இன்னும் சில மணி நேரங்களில் வலை ஏற்றப்படும்.

Read More......