திரு. தமிழ் சசி உடனான ஈழம் குறித்த பேட்டியின் முதல் மூன்று பகுதிகளை இங்கே காணலாம்.
பகுதி - 1
பகுதி - 2
பகுதி - 3
தொடர்ந்து இது இறுதிப் பகுதி
ராஜிவ் காந்தி - ஜெயவர்த்தனே உடன்படிக்கை தோல்வி அடைய காரணம் என்ன? புலிகளா? சிங்கள அரசா? அல்லது அந்த உடன்படிக்கையேதான் காரணமா?
இந்த உடன்படிக்கை முதலில் ராஜீவ்காந்தி-ஜெயவர்த்தனே இடையே நடைபெற்றிருக்க கூடாது. விடுதலைப் புலிகள்-ஜெயவர்த்தனே இடையே தான் இந்த ஒப்பந்தம் நடைபெற்றிருக்க வேண்டும். இந்தியா அந்த ஒப்பந்தத்திற்கு உதவி செய்திருக்க வேண்டும். அது தான் முதல் கோணல். அது போல இந்திய-இலங்கை ஒப்பந்தம் என்பது இந்தியாவின் நலன்களைச் சார்ந்து முன்வைக்கப்பட்டது. திருகோணமலை துறைமுகம் போன்றவை இந்த ஒப்பந்தத்திற்கு அடிப்படையான காரணமாக இருந்தது.
அது தவிர போபர்ஸ் போன்ற ஊழல் பிரச்சனைகளில் சிக்கித்தவித்த ராஜீவ் காந்தி இந்திய-இலங்கை ஒப்பந்தம் மூலம் பிரச்சனைகளை திசைதிருப்ப முனைந்தார். மிகவும் அவசரகோலத்தில் செய்யப்பட்ட ஒப்பந்தம் என முன்னாள் வெளியூறவுச் செயலர் வெங்கடேஸ்வரன் குறிப்பிட்டு இருக்கிறார்.
ராஜிவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தம்
சோனியா, ராஜிவ்,எம்ஜியார் - மரினா, சென்னை
இன்னும் விரிவாக பேசலாம். ஆனால் ராஜீவ் காந்தி பற்றி பேசினாலே பிரச்சனை வேறு பக்கம் திரும்பி விடும். எனவே இப்போதைக்கு இது போதும்
ரணில் மற்றும் பேராசிரியர் பெரிஸ் முன்னெடுத்த பேச்சு வார்த்தை ஏன் தோல்வி அடைந்தது? அதில் என்ன முடிவு எடுக்கப்பட்டது? அரசுதரப்பு ஒப்புக்கொண்ட முடிவுகள் பிறகு ஏன் அரசுக்கு உவப்பளிக்கவில்லை?
ஆண்டன் பாலசிங்கம், பேரா. ஜி.எல். பெரிஸ் - ஆஸ்லோ
ரனில் ஆட்சிக்கு வந்த பொழுது தடுமாறிக்கொண்டிருந்த தன்னுடைய பொருளாதாரத்தை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டிய தேவை இருந்தது. புலிகளுக்கு உலகநாடுகளிடம் தங்களுக்கென ஒரு அங்கீகாரத்தை பெற வேண்டிய தேவை இருந்தது. இந்த இரண்டு நோக்கங்கள் தான் பேச்சுவார்த்தை தொடங்கியதற்கு காரணம். ஆரம்பகட்ட பேச்சுவார்த்தைகள் சுமூகமாகவே சென்றன. நார்வே தலைமையில் பேச்சுவார்த்தை சென்று கொண்டிருந்த சூழ்நிலையில் ஒரு பன்னாட்டு வலையத்தை ரனில் ஏற்படுத்த முயன்றார். ஜப்பான், அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், நார்வே போன்றவை நாடுகள் உள்ளிட்ட கூட்டத்தலைமை ஏற்படுத்தப்பட்டது. இது தங்களுக்காக விரிக்கப்பட்ட ஒரு வலை என புலிகள் நினைத்தனர். அது போல பேச்சுவார்த்தை புலிகளுக்கு அதிக அதிகாரங்களை தருவதாக சந்திரிகா மற்றும் சிங்கள தேசியவாதிகள் கருதினர்.
புலிகள் தங்களுக்கு தேவைப்படும் அதிகாரங்களை Interim Self Governing Authority (ISGA) என்ற பெயரில் முன்வைத்தனர். அதனைச் சார்ந்து பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட வேண்டும் என கூறினர். இதனை சிங்கள அரசியல்வாதிகளால் ஏற்கமுடியவில்லை. சிந்திரிகா ரனில் வசம் இருந்த முக்கிய இலாக்காக்களை பறித்தார். இதற்கிடையே கருணா பிளவு ஏற்பட்டது. ஏற்கனவே ஆட்டம் கண்டிருந்த சூழலை கருணாவின் பிளவு வலுப்படுத்தியது. பேச்சுவார்த்தை நின்று போனது. இது தவிர உலகநாடுகளிடம் அங்கீகாரம் கோரிய புலிகளுக்கு ஐரோப்பிய யூனியன் தடை, கனடா தடை என பல தடைகள் நேர்ந்தன. இந்த தடைகளே தற்போதைய போருக்கு ஒரு முக்கிய காரணமாக சொல்ல முடியும் (இந்தப் பேச்சுவார்த்தைகள் குறித்த சூழலை என்னுடைய பல்வேறு பதிவுகளில் விரிவாக எழுதியுள்ளேன்)
இந்தியாவின் இலங்கை அயலுரவுக்கொள்கையை நிர்ணயிப்பவை எவை? கற்பிதமான இந்திய தேசியத்தின் போலி இறையான்மையா? ராஜீவ்காந்தி படுகொலையா? சீனா, பாகிஸ்தான் முதலான நாடுகளா? தமிழின காழ்ப்பா? அசட்டையா? அல்லது வேறெதுவுமா?
தமிழன் என்ற இனம் இந்திய தேசியம் உருவாவதற்கு முன்பும் சரி, பின்பும் சரி தமிழ் தேசியம் என்பதை முன்வைத்து வந்திருக்கிறது. கடந்த காலங்களில் தமிழ் தேசியம் என்பதை வலுவாக முன்வைத்த ஒரு தேசிய இனம் தமிழ் இனம். இத்தகைய ஒரு தேசிய இனம் தனக்கென ஒரு நாட்டினை பெற்று விட்டால் அது இந்திய தேசியத்திற்கு அச்சுறுத்தலாக அமையும் என
ராஜபக்ஷே - ஹூ ஜிண்டாவோ பீஜிங்
அது தவிர தற்பொழுது உலமெங்கும் பல தேசிய இனங்கள் தங்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. இலங்கையில் விடுதலைப் புலிகள், துருக்கியில் PKK, இந்தியாவில் காஷ்மீர், நாகாலாந்து, மணிப்பூர் போன்ற மாநிலங்களில் என தேசிய இனங்களின் போராட்டங்கள் பல இடங்களில் நடந்து வருகின்றன. இதில் எந்த ஒரு இனம் வெற்றி பெற்றாலும் அது பிற நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும். விடுதலைப் புலிகள் தமிழ் ஈழத்தைப் பெற்றால் காஷ்மீர், மணிப்பூர், நாகாலாந்து போன்ற இடங்களில் இது தாக்கத்தை ஏற்படுத்தும் என இந்தியா நினைக்கிறது. எனவே தமிழ் ஈழம் அடைந்து விடக்கூடாது என்ற அக்கறை இந்தியாவிற்கு உள்ளது.
எப்படி இலங்கையின் சில பகுதிகள் இலங்கை
ராஜபக்ஷே - முஷாரப்
எனவே விடுதலைப் புலிகள் வெற்றி பெற்று விடக்கூடாது என இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் விரும்புகின்றன.
ராணுவ நடவடிக்கைகளும் புலிகளின் எதிதாக்குதலும் இந்நேரம் எந்நிலையில் உள்ளது?
ராஜபக்ஷே - முகம்மது அகமதினாஜாத்
தற்போதைய நிலையில் சிறீலங்கா இராணுவத்தின் கை ஒங்கியுள்ளது என்பது தெளிவாக தெரிகிறது. இதற்கு பல காரணங்கள் உள்ளன. முக்கியமான காரணம் புலிகளுக்கு கடல்வழியே வந்து கொண்டிருந்த ஆயுதங்கள் பெரும்மளவில் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறன. மிக அதி நீவீன கடல் உளவு நுட்பங்களை இந்தியா/அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் சிறீலங்காவிற்கு அளித்து உள்ளன. மிகவும் அசுர பலம் கொண்ட விமானப்படை சிறீலங்காவிடம் உள்ளது. அதன் மூலம் பாரிய தாக்குதல்களை தொடுத்து வருகிறார்கள். கடந்த ஈழப்போர்களில் புலிகளிடம் விமான எதிர்ப்பு ஏவுகணைகள் இருந்தன. இது போரின் போக்கினை ஒரு சமநிலையில் வைத்திருந்தது. தற்போதைய போரில் அவ்வாறான நிலை இல்லை. புலிகளிடம் விமான எதிர்ப்பு ஏவுகணைகள் இருந்தாலும் அது முக்கியமான இடங்களையும், பிரபாகரனின் பாதுகாப்பிற்கும் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. எனவே சிறீலங்கா விமானப்படை எந்த தடையும் இல்லாமல் குண்டு மழை பொழிகிறது.
தற்பொழுது கிளிநொச்சி நோக்கிய இராணுவ முன்நகர்வுகளில் ஒரு தொய்வு கடந்த சில வாரங்களாக தெரிகிறது. கிளிநொச்சியை விட்டு விட்டு பூநகரி நோக்கி சிறீலங்கா இராணுவம் நகர முனைவதாக தெரிகிறது. பூநகரி கைப்பற்றப்பட்டால் யாழ்ப்பாணத்திற்கு தற்பொழுது கடல் வழியாக சுற்றிச்செல்லும் பிரச்சனை இருக்காது. எனவே சிறீலங்கா இராணுவமே தற்பொழுது கிளிநொச்சியை கைப்பற்ற முடியாது என நினைப்பதாக தெரிகிறது. இதனை நான் சொல்லவில்லை. இந்தியாவின் உளவு நிறுவனமான ராவின் முன்னாள் அதிகாரிகளான பி.ராமனும், ஹரிஹரனும் தங்களுடைய இராணுவ ஆய்வறிக்கையில் தெரிவிக்கிறார்கள்.
ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்தப் போரில் சிறீலங்கா, விடுதலைப் புலிகள் என இருவருமே வெற்றி பெற முடியாது. கடந்த 30 ஆண்டுகளாக நடக்கும் போர் அதைத் தான் நமக்கு தெரிவிக்கிறது. புலிகளும், சிறீலங்கா இராணுவமும் மாறி மாறி வெற்றி பெற்றிருக்கிறார்கள். தோல்வியும் அடைந்திருக்கிறார்கள். சந்திரிகா தலைமையில் சிங்கள இராணுவம் யாழ்ப்பாணத்தை கைப்பற்றிய பொழுது புலிகள் மிகவும் பலவீனமாக உள்ளதாகவே அனைவரும் தெரிவித்தனர். யாழ்ப்பாணத்தில் இருந்து புலிகள் துரத்தப்பட்டனர்.
ஆனால் என்ன நடந்தது ? அடுத்த சில மாதங்களில் தாங்கள் இழந்த பகுதி அனைத்தையும் புலிகள் கைப்பற்றினர். யாழ்ப்பாணத்தை நோக்கி புலிகள் முன்னேறிய பொழுது இந்தியாவும், அமெரிக்காவும் யாழ்ப்பாணத்தை கைப்பற்ற வேண்டாம் என புலிகளை எச்சரித்தன. எனவே புலிகள் தங்கள் முன்னேற்றத்தை நிறுத்த வேண்டிய தேவை ஏற்பட்டது.
இப்பொழுது உள்ள சூழ்நிலை எப்படி மாறும் என தெரியவில்லை. ஆனால் நிச்சயமான வெற்றி யாருக்கும் கிடைக்காது என நான் நினைக்கிறேன். புலிகளால் ஒட்டு மொத்த தமிழ் ஈழத்தையும் வென்றெடுக்க முடியாது. சிறீலங்கா இராணுவத்தாலும் புலிகள் வசம் உள்ள அனைத்து பகுதிகளையும் கைப்பற்ற முடியாது. இது ஒரு நிச்சயமற்ற சூழ்நிலையை தான் ஏற்படுத்தும்.
நிச்சயமில்லாத சூழ்நிலை தமிழ் மக்களுக்கு கொடுமையானது.
விடுதலைப் புலிகள் உங்களை எவ்வாறு கவருகிறார்கள் ? எதனை எதிர்க்கிறீர்கள் ?
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது எனக்கு பல விமர்சனங்கள் உள்ளன. சிறுவர்களை வலுக்கட்டாயமாக படையில் சேர்த்தது, சக போராளிக்குழுக்கள் மீதான தாக்குதல், தொடர்ச்சியாக செய்த அரசியல் ரீதியிலான தவறுகள் என எனக்கு பல விமர்சனங்கள் உள்ளன.
ஆனால் புலிகளை விமர்சிக்கும் தமிழ் இடதுசாரிகள் சிங்கள இனவாதத்திற்கு எதிராக முன்வைக்கும் தீர்வு என்ன ?
வான் புலிகளுடன் பிரபாகரன்
www.satiyakadatasi.com/2007/06/06/நேர்காணல்-ஷோபாசக்தி-2/
ஷோபா சக்தி போன்றவர்கள் தங்களை அறிவுஞானம் மிக்க மாற்று சிந்தனையாளர்களாக கருதி முன்வைக்கும் சிங்கள இடதுசாரி-தமிழ் இடதுசாரி சார்ந்த "உளறல் கருத்தாக்கம்" எந்த வகையில் நடைமுறை சாத்தியம் மிக்கது ? ஷோபா சக்தி போன்றவர்கள் தங்கள் "உளறல் கருத்தாக்கத்தை" தார்மீக நியாயமாக கருதிக்கொண்டிருக்கலாம். அவர்களை அறிவுஞீவிகளாக வெளிப்படுத்திக் கொள்வதற்கு மட்டுமே இத்தகைய கருத்துக்கள் உதவும்.
புலிகளை விமர்சிப்பதை தவிர தமிழ் இடதுசாரிகள் இந்தப் பிரச்சனையில் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் ? ப்ரான்சிலும், டோரோண்டோவிலும் கூட்டம் போடுவதை தவிர இவர்கள் செய்தது எதுவும் இல்லை.
சிங்கள அதிகாரமையம், இந்திய அதிகாரமையம் என அனைத்தையும் எதிர்கொண்டு வருபவர்கள் விடுதலைப் புலிகள் மட்டுமே. எனவே தான் புலிகள் மீது பல விமர்சனம் இருந்தாலும் அவர்களை நிராகரிக்க முடிவதில்லை.
ஈழப்பிரச்சினைக்கு உங்கள் தீர்வென்ன?
நான் டிரவுசர் போட்டு கொண்டிருந்த காலங்களில் "ஜெயவர்த்தனேவின் கொடும்பாவி" கொளுத்தும் நிகழ்வு தான் ஈழப்பிரச்சனை குறித்து எனக்கு நேர்ந்த முதல் அனுபவம். நெய்வேலியின் வீதிகளில் பள்ளி மாணவர்களும், பிற இளைஞர்களும் ஜெயவர்த்தனேவின் கொடும்பாவியை இழுத்துக் கொண்டு சென்று கொளுத்துவார்கள். ஈழத்தில் பிரச்சனை தீவிரமடையும் பொழுதெல்லாம் அரசாங்கப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் எங்கள் பள்ளியில் நுழைந்து பள்ளியை மூட சொல்வார்கள். நான் படித்துக் கொண்டிருந்தது தனியார் பள்ளியில். 4வதோ, 5வது இருக்கலாம். லீவு கிடைத்த விட்ட மகிழ்ச்சியில் வீட்டிற்கு வருவதும், பிறகு ஜெயவர்த்தனேவின் கொடும்பாவி வீதி வீதியாக கொண்டு செல்லப்பட்டு கொளுத்தப்படுவதும் நடக்கும். அந்த கூட்டத்துடன் நடந்து சென்றது தான் என்னைப் இந்தப் பிரச்சனையை முதன் முதலில் கவனிக்க வைத்தது.
சுமார் 25 ஆண்டுகளுக்கு மேல் சென்று விட்டது. பல இழப்புகளை சந்தித்து விட்டோம். இன்றைக்கும் எதிர்கொண்டு வருகிறோம்.
ஈழத்தில் நடைபெறும் போர் சாமானிய மக்களுக்கு ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து முன்பு ஒரு பதிவில் இவ்வாறு எழுதியிருந்தேன்.
http://blog.tamilsasi.com/2008/04/eelam-war-psychological-trauma.html
எண்பதுகளின் தமிழகத்தில் ஈழ ஆதரவு போராட்டம்
போர் ஒரு சாமானிய மனிதனின் வாழ்க்கையை சிதைக்கிறது. அவனுடைய அன்றாட வாழ்வியலை கேள்விக்குறியாக்குகிறது. உயிருடன் அன்றைய பொழுதை கழிக்க முடியுமா என்ற கேள்வியுடன், தன்னைச் சார்ந்த குடும்பமும், சக மனிதர்களும் அடுத்த சில மணி நேரங்களுக்கு இருப்பார்களா அல்லது உயிரிழப்பார்களா என்ற நிலையற்ற தன்மையுடனும் வாழ்க்கையை நகர்த்த வேண்டிய சூழல் ஏற்படுகிறது. பெரும்பாலும் அதிகார மையங்களால் நகர்த்தப்படும் இந்தப் போர், அந்தப் போரினை நேரடியாக எதிர்கொள்ளும் சூழலில் இருக்கும் சாமானிய மனிதனையே அதிகம் பாதிக்கிறது/சிதைக்கிறது.
ஈழத்திலே நடந்து வரும் போரும் ஒரு சாமானிய தமிழனையே அதிகம் பாதிக்கிறது. தன்னுடைய குடும்பத்தை இராணுவத்திடமும், புலிகளிடமும், துணை இராணுவ குழுக்களிடம் இழந்தவர்கள், விமானத் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்கள், கணவன்/குழந்தைகளை இழந்த பெண்கள், உறவுகள் இல்லாமல் அனாதையாக்கப்பட்ட குழந்தைகள் என தமிழ் ஈழம் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் கொண்ட ஒரு நாடாக மாறிவிட்டது. இதற்கு ஒரு மாற்றம் வேண்டும்.
சில நேரங்களில் எந்த அதிகாரங்களும் இல்லாவிட்டால் கூட பரவாயில்லை. போர் முடிந்தால் போதும். மக்கள் தங்களின் அன்றாட வாழ்க்கையை குண்டுவீச்சுகள், செல் தாக்குதல் போன்றவை இல்லாமல் கழித்தாலே போதும் என்ற எண்ணம் கூட ஏற்படுகிறது. ஈழத்திலே நான் ஒரு நாள் கூட இருந்ததில்லை. ஆனால் எனக்கே அவ்வாறு தோன்றும் பொழுது ஒரு சாமானிய ஈழத்தமிழனின் எண்ணம் அவ்வாறே இருக்க முடியும் என்று நினைக்கிறேன். அவ்வாறு நடக்க கூடிய வாய்ப்பு இருந்தால் நான் அதைத் தான் ஆதரிப்பேன்.
ஈழத்திலே எது நடைமுறை சாத்தியமோ அது தான் நடக்க வேண்டும் என்பது என்னுடைய நிலைப்பாடு. ஆனால் முன்வைக்கப்படும் எந்த தீர்வும் நடைமுறை சாத்தியம் இல்லாமல் போவது தான் வேதனையான சூழ்நிலை. புலிகளின் முழுமையான தமிழ் ஈழம் நடைமுறை சாத்தியம் அல்ல. சிறீலங்கா அரசியல்வாதிகள் கூறும் Unitary setup என்பதும் நடைமுறை சாத்தியம் அல்ல.
தமிழருக்கும், சிங்கள மக்களுக்கும் சரிசமமான அதிகாரங்களை கொண்ட ஒரு கூட்டாட்சி அமைப்பே தீர்வாக முடியும். இந்த கூட்டாட்சி அமைப்பினை பேச்சுவார்த்தைகள் மூலமே எட்ட முடியும். போரினால் சாதிக்க முடியாது. தற்போதைய போர் ஓய்ந்தால் தான் பேச்சுவார்த்தை நடக்ககூடிய வாய்ப்பு ஏற்படும். சிங்கள இராணுவம், புலிகள் இருவருமே இந்தப் போரில் தாங்கள் வெற்றி பெற முடியும் என நினைக்கின்றனர். அது தான் இங்கு பிரச்சனை.
சிங்கள இராணுவம் இந்தப் போரினை தொடர்ந்து நடத்துவதன் மூலம் அதிரடியாக இந்தப் போரினை முடிவுக்கு கொண்டு வந்து விடலாம் என நினைக்கிறது. புலிகள் இந்தப் போரில் சிறீலங்காவின் முன்னேற்றத்தை எவ்வளவு தூரம் தடுக்க முடியுமோ அந்தளவுக்கு தடுப்பதன் மூலம் சிறீலங்காவின் பொருளாதாரத்திற்கு அழுத்தத்தை ஏற்படுத்தலாம் என்று நினைக்கிறார்கள். தொடர்ச்சியான போர் இராணுவத்திற்கு பிரச்சனைகளை ஏற்படுத்தும் பொழுது தாங்கள் அவர்களை தாக்கலாம் என நினைக்கிறார்கள். அதன் மூலம் வெற்றி பெற முடியும் என நம்புகிறார்கள்.
அது தான் இங்கு பிரச்சனை.
.
8 comments:
நல்ல தொடர்! பதிவு முழுவதும் முதல் பகுதியின் முதல் மூன்று வரிகள் நன்றாகவே எதிரொலித்தன... வாழ்க வளமுடன்!
இறுதி பகுதிக்கு நன்றிகள்..
//புலிகளை விமர்சிப்பதை தவிர தமிழ் இடதுசாரிகள் இந்தப் பிரச்சனையில் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் ? ப்ரான்சிலும், டோரோண்டோவிலும் கூட்டம் போடுவதை தவிர இவர்கள் செய்தது எதுவும் இல்லை.//
புலிகளின் அராஜகமே அதற்கு காரணம்.
அரசின் தற்போதைய முயற்சி வெற்றிபெற்றால், ஷோபாசக்தி போன்றோர்கள் செயலாற்ற சூழல் உருவாகும்
//புலிகளின் அராஜகமே அதற்கு காரணம்.
அரசின் தற்போதைய முயற்சி வெற்றிபெற்றால், ஷோபாசக்தி போன்றோர்கள் செயலாற்ற சூழல் உருவாகும்//
கிழிப்பார்கள். ணா.. இருக்கும் சிறிய பரப்பிலே சிறு புகழ்வட்டத்தை வெச்சுக்கிட்டே இன்னா ஆட்டம் போட்றாங்கணா. குழுச்சண்டைகள், வன்முறைகள்ன்னு ரொம்ப நல்ல முன்மாதிரிகளா இருக்காங்க. செயல் பட்றதுன்ன என்ன எப்படி..? கட்டுடைக்கிறது, கூட்டுக் கலவி, குடித்து விட்டுக் கூட்டம் போடுவது, எல்லாரின் சாதிகளையும்
விலாவாரியா அறிந்து வைத்திருப்பது (பிற்பாடு மறுவினையாற்றிறப்ப திட்டுவதற்கு) போன்றன தானே அவர்கள் செயல் திட்டங்கள்? அதுக்கு இங்கேயெ இருந்து பாசிசப் புலிகள், புண்ணாக்குகள், அ.மார்க்சு தெய்வம், வயிற்றுப்போக்கு, பின் நவீனம் என உளறி வைத்துக் கொண்டு இருக்கலம்.
சில நேரங்களில் எந்த அதிகாரங்களும் இல்லாவிட்டால் கூட பரவாயில்லை. போர் முடிந்தால் போதும். மக்கள் தங்களின் அன்றாட வாழ்க்கையை குண்டுவீச்சுகள், செல் தாக்குதல் போன்றவை இல்லாமல் கழித்தாலே போதும் என்ற எண்ணம் கூட ஏற்படுகிறது. ஈழத்திலே நான் ஒரு நாள் கூட இருந்ததில்லை. ஆனால் எனக்கே அவ்வாறு தோன்றும் பொழுது ஒரு சாமானிய ஈழத்தமிழனின் எண்ணம் அவ்வாறே இருக்க முடியும் என்று நினைக்கிறேன். அவ்வாறு நடக்க கூடிய வாய்ப்பு இருந்தால் நான் அதைத் தான் ஆதரிப்பேன்.
//
யுத்த சூழலை விட்டு நீங்கிய ஒரு ஈழத்தமிழனாக என்னுள்ளும் இந்த எண்ணம் தோன்றும்.
இயல்பு வாழ்வு கிடைக்காத நிலையில் -
அரசியல் உரிமை இல்லை அதனாற்தான் இந்த சூழல் என்ற எண்ணத்தையும் அந்த மக்களுக்கு ஏற்படுத்தலாம். அல்லது அரசில் உரிமை கேட்கப் புறப்பட்டதால்த்தானே இயல்பு வாழ்வும் போயிற்று என நினைக்கலாம்.
இரண்டாவது தெரிவை மக்கள் எடுக்க வேண்டும் என்பதுதான் சிங்கள அரசின் மக்கள் மீதான தாக்குதல்களின் நோக்கம்.
-
தமிழருக்கு உரிமைகள் கிடைப்பதை புலிகளே தடுப்பதாகவும் அதனால் இப்போதைக்கு புலிகளை அழிப்பதற்கு இராணுவத்தை நம்பியிருப்பதை தவிர வேறு வழியில்லையெனவும் - புலிகள் அழிக்கப்பட்டதும் சிங்கள அரசுகளோடு போராடி உரிமையை பெறலாம் என யாரோ ஒரு இடது சாரி எழுதியதை படித்தேன்.
எனது கேள்வியென்னவென்றால்
புலிகளை ஒழிக்கப் பட்ட பிறகு - தமிழரின் உரிமையத் தர சிரிலங்கா அரசு தடுத்தால்
பிறகு இப்போ கிளம்பியது போல சிறிலங்கா அரசை அழிக்கும் பிறிதொரு இயக்கத்துக்கு ஆதரவு தருவார்களா?
வன்னியில் உணவுக்கு தட்டுப்பாடு, மருந்துக்கு தட்டுப்பாடு, மக்கள் வகைதொகையில்லாமல் கொல்லப்படுகிறார்கள், பெண்கள் இலங்கை இராணுவத்தால் மானபங்கப்படுத்தப்படுகிறார்கள் என்றெல்லாம் தமிழக அரசியல்வாதிகள் பிரச்சாரம் செய்கிறார்கள். இவ்வாறெல்லாம் பிரச்சாரம் செய்யும் தமிழக அரசியல் தலைவர்கள், தினமும் வன்னி யுத்தமுனையில் இலங்கை இராணுவத்தால் டசின் கணக்கில் கொல்லப்படும் புலி உறுப்பினர்கள் (சிறுவர்கள் முதல் இளைஞர்கள், இளம் யுவதிகள் வரை) குறித்து எதுவும் சொல்லாமல் மௌனம் காக்கிறார்கள். புலிகள்தான் இலங்கை தமிழ் மக்களின் பாதுகாவலர்கள் என்றால் புலிகள் கொல்லப்படுவதற்கும் கண்டனக்குரல் எழுப்பலாம்தானே? இங்குதான் தமிழக அரசியல்வாதிகளின் கபடத்தனம் அம்பலத்துக்கு வருகிறது. அதாவது புலிகளுக்காக வெளிப்படையாக குரல் எழுப்பினால், தமிழக அரசியல் தலைவர்களது அந்தரங்க நோக்கம் அம்பலமாகிவிடும். அதாவது ஈழத்தமிழர்களை பாதுகாப்பது இவர்களது நோக்கமல்ல, புலிகளைப் பாதுகாப்பதே இவர்களது நோக்கம் என்பது தெரிய வந்துவிடும். புலிகளைப் பாதுகாப்பதுதான் இவர்களது நோக்கம் என்றால், தமிழகமக்கள் இவர்களுக்கு ஆதரவு வழங்காமல் தூரவிலகிவிடுவார்கள் என்பது தமிழக அரசியல் தலைவர்களுக்கு நன்கு தெரியும். தமிழக அரசியல்வாதிகள் சொல்வதுபோல, வன்னியில் உணவுத் தட்டுப்பாட்டால் எந்தவொரு நபரும் இதுவரை இறந்துவிடவில்லை. இனிமேலும் இறக்கப்போவதும் இல்லை. இங்கு இலங்கை அரசாங்கமும் ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்புகளும் வாராவாரம் போதிய உணவுப்பொருட்களை அனுப்பி வருகின்றன. தமிழக அரசியல்வாதிகளை தவிர, இலங்கையில் செயல்படுகின்ற சர்வதேச நிறுவனங்களோ,அல்லது வேறு நாடுகளில் உள்ள எந்தவொரு அரசாங்கங்கமோ, வன்னியில் உணவுத்தட்டுப்பாடு நிலவுவதாக இதுவரை சொல்லவில்லை. மேலும் இலங்கை இராணுவம் இங்கு எந்தவொரு தமிழ் பெண்களையும் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கவுமில்லை. 1995ல் இராணுவம் யாழ்ப்பாணத்தை விடுவித்த பொழுதோ, சென்றவருடம் கிழக்கு மாகாணத்தை விடுவித்தபோதோ,இலங்கை இராணுவம் தமிழ்ப்பெண்களிடம் ஒழுங்கீனமாக நடந்துகொண்டதாக ஒரு முறைப்பாடுதன்னும் வரவில்லை. புலிகள்கூட அவ்வாறு ஒரு குற்றச்சாட்டை இதுவரை இலங்கை இராணுவம்மீது சுமத்தவில்லை. தவிரவும் இலங்கை இராணுவம் தற்போது வன்னியில் கைப்பற்றியுள்ள இடங்களில் பொதுமக்கள் எவரும் இல்லாதபடியால்,இராணுவம் எவ்வாறு பாலியல் வன்செயல்களில் ஈடுபட முடியும்? ஆனால் தொல்.திருமாவளவன்,வை.கோபாலசாமி,டாக்டர் ராமதாஸ், பழ.நெடுமாறன்போன்றோர் நடாத்தியஆர்ப்பாட்ட ஊர்வலங்களில்,வன்னியில் இலங்கை இராணுவம் தமிழ் பெண்களை வன்புணர்ச்சிக்கு உள்ளாக்குவதாக தெரிவிக்கும் சுலோக அட்டைகளை காணக்கூடியதாக இருந்தது. இவ்வளவு மலினமான பொய்ப்பிரச்சாரங்கள் மூலம்தான் தமிழக மக்களை தமது பக்கம் திருப்பமுடியும் என்று தமிழக அரசியல் தலைவர்கள் கருதுகிறார்கள் போலும்!
http://www.thenee.com/html/121108-1.html
1995ல் இராணுவம் யாழ்ப்பாணத்தை விடுவித்த பொழுதோ,இலங்கை இராணுவம் தமிழ்ப்பெண்களிடம் ஒழுங்கீனமாக நடந்துகொண்டதாக ஒரு முறைப்பாடுதன்னும் வரவில்லை//
சூப்பர்..
கிருசாந்தி எங்க ஆஜன்டீனால பிறந்து செத்தவவோ?
இந்த ஒரு ஸ்டேட்மன்டிலெயே மேல சொன்னதெல்லாவற்றினதும் நம்பிக்கை தகர்ந்து விட்டிருக்கிறது.
எனக்கென்னமோ
யாரோ வஞ்சப் புகழ்ச்சி செய்கிறார்கள் போலத் தெரிகிறது.
நல்ல பதிவு
Post a Comment