'ச்சும்மா ட்டமாஷ் - 75': சிறப்பு பதிவுகள் வரிசையில் அடுத்து பதிவர் மதிபாலா அவர்கள் எழுதும் அரசியல் கட்டுரை வெளியாகிறது. திமுக -விற்கு வலுவான திராவிட மாற்று கட்சி தற்போதைய தமிழக அரசியலில் இல்லை என்னும் நிலை திமுக -வை முன்னெப்போதுமில்லாத வகையில் அக்கறை இன்மையுடன் கூடிய சோம்பல் கொள்ளச்செய்கிறது என்பது பரவலான எண்ணம். மேலும் ஒரு பெரிய அளவிலான தலைமை மாற்றத்திற்கு திமுக தயாராகி வரும் இச்சூழ்நிலையில் மாற்றத்திற்கு பிறகான திமுகவின் நிலை எவ்வாறு இருக்கும் என இக்கட்டுரை ஆராய்கிறது.
திராவிட முன்னேற்றக் கழகம் – இனி?
'தி்ராவிட முன்னேற்றக் கழகம் – இனி?' என்ற இந்தக் கேள்வி வெகு ஆழமானது. அந்தக் கேள்வியில் திமுகவின் அடுத்த அரசியல் தலைமை பற்றிய வினவல் மட்டும் அடங்கியிருக்கவில்லை…..திமுகவின் எதிர்காலம் என்ன என்னும் மாபெரும் கேள்வியும் அடங்கியிருக்கிறது
திமுக ஒரு புறக்கணிக்கவியலாத சக்தி
சற்றேறக்குறைய சுதந்திரத்திற்கு பிந்தைய தமிழகத்தின் வரலாற்றில் இன்று வரை திமுகவின் பங்களிப்பு இல்லாத காலமில்லை. சுதந்திரமடைந்த புதிதில் தம்மைத் தாமே ஆண்டு கொள்வதற்காக தேசம் தம்மைத் தயார் படுத்திக்கொண்டிருந்த ஒரு வேளையில்தான் திமுகழகம் தோன்றியது.
பார்ப்பனர்களாலும், உயர் சாதி இந்துக்களாலும் நிரம்பி வழிந்த தமிழக/இந்திய அரசியலை கொஞ்சமேனும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தின் பக்கமும் , தாழ்த்தப்பட்டவர்களிடமும் கொண்டு
சேர்க்க சமூக வழியில் போராடுவது பெரியார் தோற்றுவித்த திராவிடர் கழகம்…அதனை அரசாங்க வழியில் சாத்தியப்படச் செய்யும் அரசியல் சக்தியாக இன்று பிரமாண்டமாக ஆலம்போல் ஓங்கி வளர்ந்து நிற்பது திராவிட முன்னேற்றக் கழகம். ஆக
தமிழகத்தின் அரசியலில், தமிழகத்தின் சமூகத்தில், தமிழகத்தின் கட்டமைப்பில், தமிழகத்தின் தொழில் வளத்தில், தமிழ் வளர்ச்சியில், தேசிய மொழியென சொல்லப்பட்ட ஹிந்தி ஆதிக்கத்தை எதிர்ப்பதில் திராவிட
முன்னேற்றக் கழகத்தின் பங்கு இல்லையென்று அக்கழகத்தின் இன்றைய அரசியல் எதிரிகள் கூட சொல்ல மாட்டார்கள்.சொல்ல முடியாது.
அத்தகையதோர் இயக்கம் , தனது வாழ்நாளில் எந்தவொரு இயக்கமுமே கண்டிராத மாபெரும் வெற்றிகளையும் குவித்திருக்கிறது. எந்தவொரு இயக்கமுமே தாங்க முடியாத மாபெரும் தோல்விகளையும் கண்டிருக்கிறது. அத்தோல்விகளுக்கு பிறகு பீனிக்ஸ் பறவையாய் மீண்டு வந்திருக்கிறது. இன்றும் ஆண்டு கொண்டிருக்கிறது
இன்றும் திராவிட இயக்கத்தின் மேல் பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்படும் போதும் , அவ்வியக்கத்தின் முக்கியக் கோட்பாடான கடவுள் மறுப்புக் கொள்கையை பெரும்பாலான தமிழர்கள் ஏற்றுக்கொள்ளாத நிலையிலும் , தொடர்ந்து திமுகவை மக்கள் ஆதரித்தே வருகிறார்கள்
அது ஏன்?
காங்கிரசை வீழ்த்திய திமுக
அரை நூற்றாண்டிற்கு மேல் கட்டுப்பாடோடு இருந்த காங்கிரஸ் கட்சியை , நாட்டிற்கு சுதந்திரம் பெற்றுத்தந்ததாக சொல்லப்படும் ஒரு கட்சியை , சமுக நீதிக்காக தோற்றுவிக்கப்பட்ட ஒரு இயக்கம் இன்னும் 20 ஆண்டுகளுக்குள் முற்றிலும் தோற்கடிக்கப் போகிறது என்று யாரும் திமுகழகம் தொடங்கப்பட்ட 1949ல் எண்ணியிருக்க வாய்ப்பில்லை.
இன்றைக்கும் இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக இருக்கும் காங்கிரஸ் பேரியக்கமானது தனது வலுவான தொண்டர் படையை தமிழகத்தில் மட்டுமே முற்றிலுமாக இழந்திருக்கிறது. அதுவும் எத்தகையதொரு தொண்டர் படையை? சுதந்திர வேட்கையில் தமது இன்னுயிரையும் தரத் துணிந்ததொரு தொண்டர் படையை….!!!! அதுவும் வீழ்த்தியதெப்போது? இன்றைக்கும் அனேக மக்களால் கர்ம வீரர் அன்போடு அழைக்கப்படும் உயர்திரு. காமராசர் அவர்களின் காலத்தில்!
அந்த பெரியதொரு பிரபுவத்துவ கட்சியை , அக்கட்சியின் ஆதிக்கத்தை , மாநில நலன்களை என்றுமே பிரதிநிதித்துவப் படுத்தாத தேசிய தலைமைகளுக்கு கட்டுப்பட்ட கட்சியின் ஆதிக்கத்தை தகர்த்தெரிந்தது திமுக. இன்று கர்நாடகத்தில் மதச்சார்பற்ற ஜனதாதளம் , ஆந்திராவில் தெலுங்கு தேசம் , பிரஜா ராஜ்யம் , தெலுங்கானா ராஷ்டிரா சமீதி , மகாராஷ்டிராவில் சிவசேனா , தேசியவாத காங்கிரஸ் , உத்திரப்பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் , சமாஜ்வாடி , பஞ்சாபில் அகாலிதளம் , ஹரியானாவில் லோக்தளம் , காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சி , தேசிய மாநாட்டுக் கட்சி , ஒரிஸாவில் பிஜு ஜனதா தளம் , மேற்கு வங்கத்தில் திருணாமுல் காங்கிரஸ் இப்படி இந்தியாவின் அனைத்து மாகாணங்களிலும் மாநில உணர்வுகளும் , மாநிலக் கட்சிகளும் தோன்றி விட்டன, காரணம் , தேசிய கட்சிகளாக அறியப்பட்டவை தமது மாநில உணர்வுகளை புறக்கணித்தமையே
இன்றைக்கும் தேசிய கட்சிகள் இல்லாததாலேயே தமிழகத்தின் வளர்ச்சி குறைந்ததாக குறைபட்டுக்கொள்ளும் பலரும் சிந்தித்துப்பார்க்கவேண்டும் , தேசியக் கட்சிகளையே நம்பிக்கொண்டிருந்த மேலே சொன்ன பல மாநிலங்கள் எப்படி மாநிலக் கட்சிகளுக்கு பின்னால் சென்றன என்பதை.
இதையெல்லாம் அன்றே கண்டுணர்ந்த தீர்க்கதரிசிதான் அறிஞர் அண்ணா
அது எப்படி சாத்தியமாயிற்று?
திமுகவின் தொண்டர் பலம்.
அஇன்றைக்கும் அனேக தமிழ் மக்கள் திமுகவின் மேல் மதிப்பும், அவ்வியக்க வளர்ச்சியின் மேல் அக்கறையும் கொண்டிருக்கிறார்கள். திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆணி வேர்களான தந்தை பெரியாரையும், அறிஞர் அண்ணாவையும் இன்றும் மிகப்பலர் தங்களது வழிகாட்டிகளாக ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். எம்.ஜி.ஆர் 1972ல் கட்சியை விட்டு வெளியேறிய போது அனேகம் பேர் திமுகவின் கதி அதோகதிதான் என்றார்கள். 1976ல் அதிமுக ஆட்சிக்கட்டிலில் ஏறிய போதிலிருந்து 1989 வரை திமுகழகம் தொடர்ச்சியான தோல்வியையே சந்தித்து வந்திருந்தது……இருந்தும் அக்கட்சியின் தொண்டர் பலம் சரியவே இல்லை. 1976ல் ஆரம்பித்து 1989 வரை தொடர்ந்து தோல்வியையே சந்தித்த பிறகும், 1990களில் வைகோ சற்றேறக்குறைய பாதி மாவட்டச் செயலாளர்களை தன்னகத்தே கொண்டு சென்ற பிறகும் இன்றைக்கும் ஒரு பெரும் இளைஞர் சமுதாயம் திமுகவின் மேல் பற்றுக்கொண்டு பதவிசுகம் மட்டுமே குறிக்கோளாக இல்லாமல் கழகத்தைப் போற்றிக்கொண்டிருக்கிறார்கள்.
எதற்கு?
இந்த ஏன் , எப்படி , எதற்கு என்ற மூன்று கேள்விகளுக்கு விடை கண்டோமானால் திமுகவின் எதிர்காலம் எப்படியிருக்கப் போகிறது என்ற மாபெரும் கேள்விக்கு விடை காண வாய்ப்புண்டு. கடமை , கண்ணியம் , கட்டுப்பாடு என்ற மூன்று மந்திரங்களால் இன்னமும் கட்டுண்டு கிடக்கின்ற ஒரு இயக்கத்தின் எதிர்காலம் எப்படியிருக்கும் , அதன் வருங்கால தலைமை எப்படிச் செயல்படும் என்று யாராலுமே அறுதியிட்டுக்கூறவியலாது. வேண்டுமானால் எப்படியிருக்கப்போகிறது என்ற ஒரு அனுமானத்தை மட்டுமே கூறலாம். அத்தகைய அனுமானத்தை முன்னெடுக்க திமுக கடந்து வந்த பாதையை அலசுவது கட்டாயம்.
முதலில் திமுகவின் வரலாற்றை ஒரு கழுகுப்பார்வை பார்த்துவிடலாம்!
திமுகவின் தோற்றமும் வரலாறும்
60 ஆண்டு கால வரலாற்றை ஆறுபக்கங்களில் புரட்டி விட முடியும் என்பவன் வெறுங்கையில் முழம் போடுபவனாகத் தான் இருக்க முடியும். ஆகவே , ஒரு சில குறிப்புகள் மட்டும் இங்கே!
தந்தை பெரியார்
1947ல் சுதந்திரம் பெற்றபிறகு , தேசம் முழுமையும் எவ்வாறு நாட்டை வழிநடத்தலாம் என்று எண்ணிக்கொண்டிருந்த வேளையில் சமூகக் கட்டமைப்பு என்ற முள்வேலி சமூகத்தைச் சீரழிக்கிறது , அதனால் சமூகச் சீர்திருத்தமே நாட்டிற்கு முதல் தேவை என்று ஒரு பெரியவர் ஒருவர் வாய்வலியக் கத்திக்கொண்டிருந்தார்.
அப்பெரியவர்தான் பெரியார்!
தந்தை பெரியார் என்னும் கடந்த நூற்றாண்டின் மாபெரும் புரட்சியாளர்தான் திமுகவின் உந்து சக்தி, திமுகவின் அடித்தளம், திமுகவின் வளர்ச்சிக்கான காரணம் என்று சொன்னால் அது மிகையில்லை. தந்தை பெரியார் , கடந்த நூற்றாண்டில் இந்தியாவில் இவரைத் தவிர்த்து எழுதப்படும் வரலாறென்பது “தமிழர்களின் சிறு பங்களிப்புமில்லாத இராமாயணம், மஹாபாரதம்” போன்ற இன்னொரு புர்ராணமாகவே இருக்க முடியும், நம்புவதற்குசிதமில்லாத கட்டுக்கதைகளாகவே இருக்க முடியும். பிரிட்டிஷ் காரர்களுக்கு ஜால்ரா அடித்தால் பல பட்டங்களையும் , செல்வங்களையும் பெற முடியும் என்றவொரு சூழலில் வியாபாரிகள் சங்கத் தலைவர், தென்னிந்திய வியாபாரிகள் சங்க நிர்வாக சபை உறுப்பினர், இன்கம்டாக்ஸ் டிரிப்யூனல் கமிஷனர், டவுன் ரீடிங் ரூம் செக்ரெட்டரி, ஹைஸ்கூல் போர்ட் செக்ரெட்டரி, தாலூகா போர்ட் பிரசிடெண்ட், முனிசிபல் சேர்மன், ஜில்லா போர்ட் மெம்பர், வாட்டர் ஒர்க்ஸ் கமிட்டி செக்ரெட்டரி, ப்ளேக் கமிட்டி செக்ரெட்டரி, தேவஸ்தான கமிட்டி செக்ரெட்டரி, தேவஸ்தான பிரசிடெண்ட், உணவு கண்ட்ரோல் டிஸ்ட்ரிப்யூஷன் ஆபீஸர் உட்பட மொத்தம் இருபத்தொன்பது பதவிகளையும் விட்டுவிட்டு அரசியலில் நுழைந்தார். ( நன்றி – திரு.ஞானி – அவர்தாம் பெரியார் கட்டுரை). வெறும் கடவுள் எதிர்ப்பாளராக மட்டும் பெரியாரை பார்ப்பவர்கள் குறுகிய பார்வையுள்ளவர்களாகவே நான் கருதுகிறேன்……தீண்டாமை எதிர்ப்பு , சுய மரியாதை, வகுப்புவாரியான இட ஒதுக்கீடு, பகுத்தறிவு , பெண்ணுரிமைக் கோட்பாடு இவைகளுக்காக இறுதிவரை போராடியவர் பெரியார்
இத்தகைய அனைத்து பிரச்சினைகளுக்கும் மூல காரணியாக அவர் கண்டறிந்தது தான் இந்து மதமென்னும் அரக்கன். அம்மதத்துக்கு மூலம் யார்? கடவுள்
ஆக பிரச்சினையின் ஆணி வேரை அறுத்தெரிந்தால் மட்டுமே இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என்பதில் அசையாத நம்பிக்கை கொண்டிருந்தார். பால் பொங்குது, பொங்குதுன்னு சொல்லி எரியற கொள்ளியை இழுத்து விட்டுக்கொண்டே இருப்பது முட்டாள்தனம் என்று கண்டறிந்த தீர்க்கதரிசிதான் பெரியார்…அதன் விளைவாகவே அவர் கடவுள் எதிர்ப்பை கையிலெடுத்தார்( நன்றி – அமைதிப்படை வசனம்). ஆனால் இன்றைக்கு அவரை வெறும் நாத்தீகவாதி என்ற பார்வையில் மட்டுமே சுருக்கிவிட்டது இந்தச் சுயநலச் சமூகம். அவரது கருத்துக்களுக்கான தேவையை இன்றைக்கும் மும்பை சம்பவம் நமக்கு உணர்த்திக்கொண்டே இருக்கிறது
அவரால் தான் திமுகவின் தாய்க் கழகமான திராவிடர் கழகம் தோற்றுவிக்கப்பட்டது. அந்தக் கழகமே திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கைகளுக்கான மூல காரணி. நாம் இங்கே இதைச் சொல்வதற்கு காரணம் திமுகவின் அடிப்படை மிக வலுவானது என்பதை எடுத்துரைக்கத்தான்.
அறிஞர் அண்ணா
அம்மாபெரும் மனிதராம் பெரியார் கண்டெடுத்த சீடர்களில் மிக முக்கியமானவர் காஞ்சியில் பிறந்த அறிஞர் அண்ணா…தென்னாட்டு பெர்னாட்ஷா என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்படுபவர்…...பெரியார் நீதிக் கட்சியிலிருந்தபோது பெரியாரின் கொள்கைகளாலும் , சமூக சீர்திருத்தக் கருத்துக்களாலும் ஈர்க்கப்பட்ட அண்ணா நீதிக்கட்சியில் இணைந்து பின் பெரியார் தோற்றுவித்த திராவிடர் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்
மூட நம்பிக்கைகளுக்கு எதிரான பகுத்தறிவுக் கருத்துக்களையும், சமூக சீர்திருத்தக் கருத்துக்களையும் பரப்புவதில் முன்னின்று ஈடுபட்டார். பெரியாரின் சில நடவடிக்கைகள் காரணமாக எழுந்த கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து, திராவிடக் கழகத்தின் முக்கிய உறுப்பினர் பலருடன், 1949 ல், பெரியாரை விட்டு விலகி, திராவிட முன்னேற்றக் கழகம் (தி.மு.க) என்ற புதிய இயக்கமொன்றை நிறுவினார்.
நாடு சுதந்திரம் பெற்ற இரண்டே ஆண்டுகளில் உருவானதொரு இயக்கம்தான் திமுக……..அக்கட்சி 1957 வரை தேர்தலில் போட்டியிடாத ஒரு சமூக சீர்திருத்த இயக்கமாகவே தன் பணிகளைத் தொடர்ந்தது….1957ல் தேர்தலில் போட்டியிட முடிவு செய்தார் அறிஞர் அண்ணா , தான் கண்ட முதல் தேர்தலிலேயே 15 இடங்களில் காங்கிரசை வீழ்த்தி சட்டசபைக்குச் சென்றது கழகம்.1957 க்கு முன் அது சமூக சீர்திருத்த இயக்கம் தான்….இருப்பினும் கட்சியின் வளர்ச்சி இருந்ததற்கு காரணம் ஆட்சியதிகாரத்தை மட்டுமே குறிக்கோளாக இல்லாத தலைவர்களும் , தொண்டர்களும் நிரம்பியிருந்தார்கள் என்பதுதான்
1957 ல் முதன் முதலில் தேர்தலில் போட்டியிட்ட திமுகழகம் அடுத்த பத்தே ஆண்டுகளில் 1967ல் ஆட்சியைப் பிடித்தது…. பெரியார் ஊட்டிய சுயமரியாதைக்கொள்கைகளாலும் , தமிழ் மொழிப் பற்றாலும், ஹிந்தி திணிப்பை எதிர்த்த திமுகவின் செயல்பாடுகள் பிடித்தும் அனேக மக்கள் தங்களை திமுகவில் இணைத்துக்கொண்டார்கள். சினிமா கவர்ச்சியாலோ , பொய் வாக்குறுதிகளாகலோ வாக்குகளை அள்ளிய வெற்றி அல்ல 1967 தேர்தல் வெற்றி.
கலைஞர்
1967ல் மாபெரும் வெற்றியடைந்த கழகம் 1969ல் மாபெரும் இழப்பை சந்தித்தது…..அறிஞர் அண்ணா புற்றுநோயால் உயிரிழந்தார்.…இன்றைக்கு கலைஞருக்கு பின்னால் கழகம் , கலகமாகிவிடும் என்றெல்லாம் பிரச்சாரம் செய்பவர்கள் 1969 ஆம் ஆண்டு தமிழகச் சரித்திரத்தை கொஞ்சம் புரட்டிப் பார்க்கவேண்டும்…..மாபெரும் அரசியல் எதிரிகளை புறந்தள்ளிவிட்டு மேலெழுந்த கழகம் , பதவியேற்ற இரண்டே ஆண்டுகளில் புதிய தலைவனை தேட வேண்டிய துர்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டது
அந்தச் சூழலில் கழகத்தை கட்டிக் காக்கும் பொறுப்பை ஏற்றவர்தான் கலைஞர் மு கருணாநிதி……அதையொட்டி ஏராளமான கதைகள் அவ்வப்போது வருவதுண்டு. அதையெல்லாம் நாம் கொஞ்சம் ஒதுக்கி வைத்துவிட்டு, மக்களின் உணர்வுகளுக்கு வடிகாலாக இருந்த ஒரு இயக்கத்திற்கு தலைவராக கருணாநிதி பதவியேற்றதை மட்டுமே பார்க்கிறோம்.
சொல்வன்மை , செயல் வன்மை , பேச்சாற்றல் , எழுத்தாற்றல் என பலவகையில் அவருக்கிணை இன்றும் கூடயாருமே இல்லாததொரு சூழலில் கழகத்துக்கு அவரை விட பொறுத்தமான தலைவர் வேறு யாரும் இருந்திருக்க முடியுமா என்ற கேள்வி எழலாமலில்லை.
அடுத்த பகுதி இன்னும் சில மணி நேரங்களில் வெளியாகும்.
22 comments:
திமுக வரலாறும், பெரியார் பற்றிய செய்திகளும் நன்றாக எழுதி இருக்கிறீர்கள் பாராட்டுகள் !
அருமையான கட்டுரை...
தி.மு.க.எதிர்காலம் பெரிய பூஜ்யம் தான், வேறென்ன சொல்றது..
Vanangamudyy said...
தி.மு.க.எதிர்காலம் பெரிய பூஜ்யம் தான், வேறென்ன சொல்றது..
//
காலம் பதில் சொல்லும் உங்களுக்கு வணங்காமுடி.
அரசியல் சதுரங்கத்தில் ஒற்றைப் புள்ளியில் இரு இயக்கங்கள் எதிரெதிராக இருக்கும். அதில் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஒர் இடம் என்றும் நிரந்தரம். எதிர்படும் இயக்கங்கள் மாறலாம். சுதந்திரா கட்சி, காங்கிரஸ், அ.தி.மு.க போல.ஆனால் தி.மு.க. இன்னும் 50 ஆண்டுகளுக்கு மாறாது.
///திமுக வரலாறும், பெரியார் பற்றிய செய்திகளும் நன்றாக எழுதி இருக்கிறீர்கள் பாராட்டுகள் !///
மதிபாலாவின் உழைப்புக்கு வணக்கங்கள். நன்றி கோவி கண்ணன்.
///அருமையான கட்டுரை...///
நன்றி சரவணா குமார்.
//தி.மு.க.எதிர்காலம் பெரிய பூஜ்யம் தான், வேறென்ன சொல்றது.///
வருகைக்கு நன்றி வணகாமுடி
நன்றி புதுகை அப்துல்லா!.
ஒரு வித்தியாசமான முயற்சிக்காக உங்களை அணுக வேண்டியுள்ளது. வெகு விரைவில் உங்களை அழைத்து முழு விபரம் தருகிறேன்
மோகன் கந்தசாமி said...
நன்றி புதுகை அப்துல்லா!.
ஒரு வித்தியாசமான முயற்சிக்காக உங்களை அணுக வேண்டியுள்ளது. வெகு விரைவில் உங்களை அழைத்து முழு விபரம் தருகிறேன்
//
நீங்க என்ன சொல்லப்போறீங்க நான் என்ன எழுதப்போறேன்னு நானும் ஆவலோடு காத்திருக்கிறேன்.
Good start
// பெரியாரின் சில நடவடிக்கைகள் காரணமாக எழுந்த கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து, //
திமுக உறுவானதின் உண்மை காரணம் என்ன என்று சொல்வதில் என்ன தயக்கம்??
//அதையெல்லாம் நாம் கொஞ்சம் ஒதுக்கி வைத்துவிட்டு, மக்களின் உணர்வுகளுக்கு வடிகாலாக இருந்த ஒரு இயக்கத்திற்கு தலைவராக கருணாநிதி பதவியேற்றதை மட்டுமே பார்க்கிறோம்.//
இது திமுக’வின் வரலாறு தானே.. என்ன நடந்தது என்று சொல்வதில் என்ன மழுப்பல்??
நாவலரைவிட கலைஞர் better fit என்று காலம் புரியவைத்துள்ளது.. அதை பதிவு செய்வதில் என்ன தவறு??
மதிபாலா அவர்களே ஒட்டு மொத்த தமிழர்களின் எண்ணங்களில் இருக்க வேண்டியது இந்த கட்டுரை...
//இயக்கத்திற்கு தலைவராக கருணாநிதி பதவியேற்றதை மட்டுமே பார்க்கிறோம்.சொல்வன்மை , செயல் வன்மை , பேச்சாற்றல் , எழுத்தாற்றல்//
மேலும் தலைமைப் பண்பு, தமிழ் உலகம் ஏற்றுக்கொள்ளும். தந்தை பெரியார் இருக்கும் பொழுது ஒரு கட்சி அதுவும் அவரேயே தலைவராக ஏற்றுக் கொண்ட கட்சி..ஆனால் இன்று எண்ணி பாருங்கள் இதற்கு யார் காரணம் என்று...கலைஞர் மட்டும் பணத்தாசையும், குடும்ப அரசியலும் இல்லாமல் பணிசெய்திருந்தால் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா அவர்களின் வரிசையில் ஒப்பற்ற இடம் கிடைத்திருக்கும்..இப்பவும் உண்டு. ஆனால் இன்றும் மக்களில் மனங்களில் அவருக்கு நல்ல எண்ணம் கிடையாது அதற்கு அவரே காரணம்..இன்னும் உள்ள காலங்களிலாவது தமிழகத்தின் தலைவராக செயல்பட்டால் (ஏனெனில் அவரை விட்டால் யாரும் இல்லை) அவரின் வழக்கை நிறைவடையும்..
காலம் தன் கடமையை செய்யும்...
மன்னிக்கவும் வாழ்கை
பரத்,
////திமுக உறுவானதின் உண்மை காரணம் என்ன என்று சொல்வதில் என்ன தயக்கம்?? ///
////இது திமுக’வின் வரலாறு தானே.. என்ன நடந்தது என்று சொல்வதில் என்ன மழுப்பல்?? ////
இக்கேள்விகளை மதிபாலாவுக்கு திருப்பி விடுகிறேன். :-)))))
////நாவலரைவிட கலைஞர் better fit என்று காலம் புரியவைத்துள்ளது////
நச்!!
////பணத்தாசையும், குடும்ப அரசியலும் இல்லாமல் பணிசெய்திருந்தால்///
ஊழல் மற்றும் குடும்ப அரசியல் என்பது திமுக பிரச்சினை மட்டுமல்ல. உலகளாவிய, அல்லது குறைந்தபட்சம் நாடு தழுவிய பிரச்சினை. திமுக வை விமர்சிக்கையில் ஏனையவற்றை விமர்சித்தால் பயனாக இருக்கும். அன்றேல் திமுக -வை தெரிவு செய்து குற்றம் சாட்டுவதுபோல் ஆகிவிடக்கூடும்.
நன்றி பரூக்
உங்கள் கருத்துக்களுக்கு நன்றிகள் திரு.கோவி.கண்ணன் , சரவணகுமரன் , வணங்கா முடி , சுட்டி அருண் , புதுகை அப்துல்லா , பாரத் , முகமது பாருக் !!!
தோழமையுடன்
மதிபாலா.
தி.மு.க.எதிர்காலம் பெரிய பூஜ்யம் தான், வேறென்ன சொல்றது..//
உங்கள் கருத்து எனக்கு மிகவும் வியப்பளிக்கிறது. எந்த அடிப்படையில் நண்பரே?
Vanangamudyy said...
தி.மு.க.எதிர்காலம் பெரிய பூஜ்யம் தான், வேறென்ன சொல்றது..
//
காலம் பதில் சொல்லும் உங்களுக்கு வணங்காமுடி./
நல்ல பதில் நண்பர் புதுகை அப்துல்லா.
Good start
// பெரியாரின் சில நடவடிக்கைகள் காரணமாக எழுந்த கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து, //
திமுக உறுவானதின் உண்மை காரணம் என்ன என்று சொல்வதில் என்ன தயக்கம்??
----
தயக்கமெதுவுமேயில்லை நண்பரே , ஆனால் வெளிப்படையாகச் சொல்லப்படும் காரணங்களை விட வேறு சில காரணங்களும் இருப்பதாக எப்போதுமே ஒரு பேச்சு உண்டு , கண்டிப்பாக பிரிதொரு சம்யத்தில் பேசுவோம்!
//அதையெல்லாம் நாம் கொஞ்சம் ஒதுக்கி வைத்துவிட்டு, மக்களின் உணர்வுகளுக்கு வடிகாலாக இருந்த ஒரு இயக்கத்திற்கு தலைவராக கருணாநிதி பதவியேற்றதை மட்டுமே பார்க்கிறோம்.//
இது திமுக’வின் வரலாறு தானே.. என்ன நடந்தது என்று சொல்வதில் என்ன மழுப்பல்??
---
நண்பருக்கு , இது திமுகவின் வரலாற்றை முழுதுமாக பதியும் ஒரு கட்டுரை அல்ல , தவிர்த்து அது ஒரு மழுப்பல்தான் என்பதை ஒத்துக்கொள்கிறேன்.சுட்டியமைக்கு நன்றிகள்.
---
மதிபாலா அவர்களே ஒட்டு மொத்த தமிழர்களின் எண்ணங்களில் இருக்க வேண்டியது இந்த கட்டுரை...
//
நன்றிகள் நண்பரே......
----------------
கலைஞர் மட்டும் பணத்தாசையும், குடும்ப அரசியலும் இல்லாமல் பணிசெய்திருந்தால் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா அவர்களின் வரிசையில் ஒப்பற்ற இடம் கிடைத்திருக்கும்..இப்பவும் உண்டு. ஆனால் இன்றும் மக்களில் மனங்களில் அவருக்கு நல்ல எண்ணம் கிடையாது அதற்கு அவரே காரணம்..இன்னும் உள்ள காலங்களிலாவது தமிழகத்தின் தலைவராக செயல்பட்டால் (ஏனெனில் அவரை விட்டால் யாரும் இல்லை) அவரின் வழக்கை நிறைவடையும்..//
நண்பருக்கு ,
உங்களுக்குள்ள அனேக ஆதங்கங்கள் எனக்கும் உண்டு , அதை கொஞ்சமே கொஞ்சம் பதிவிலும் சுட்டியிருக்கிறேன்.
ஆனால் அவையெல்லாம் என்னை பெரியார் , அண்ணா என்ற வரிசையில் அடுத்ததாக கலைஞரை வைக்க எந்தவித தடையையும் கொடுக்கவில்லை....
"அண்ணா" உயிருடன் இருந்த வரை பதவி ஆசை காரணமாகத் தான் பெரியாரை முறைத்துக் கொண்டு வெளியே வந்ததாக காங்கிரசார் தூற்றுவார்கள் என்று என் மாமா சொல்லியிருக்கிறார்.
a man who satisfies everybody is yet to born -
அனைவரையும் திருப்திப் படுத்தக் கூடிய மனிதன் இன்னும் இவ்வுலகில் பிறக்கவில்லை என்றே சரித்திரம் சொல்கிறது.
ஆனால் என் மேற்கண்ட வாதமானது கலைஞரின் தவறுகளை நியாயப்படுத்துவதாக நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டாம்!
////இது திமுக’வின் வரலாறு தானே.. என்ன நடந்தது என்று சொல்வதில் என்ன மழுப்பல்?? ////
இக்கேள்விகளை மதிபாலாவுக்கு திருப்பி விடுகிறேன். :-)))))//
ரீ டைரக்ட் செய்யப்பட்ட கேள்விக்கு பதிலளித்துவிட்டேன் பப்ளிஷர் சார்......
//ரீ டைரக்ட் செய்யப்பட்ட கேள்விக்கு பதிலளித்துவிட்டேன் பப்ளிஷர் சார்......///
மதிபாலா சார்! இறுதியில் வந்தே விட்டீர்கள். பதிலும் அளித்துவிட்டீர்கள். எனது நூறாவது பதிவில் உங்கள் பங்களிப்பை வேறொரு வடிவத்தில் கோரவிருக்கிறேன். உங்கள் உழைப்பை மீண்டும் ஒருமுறை உறிஞ்சப்போகிறேன். :-))))
நன்றி!
Post a Comment