Friday, October 3, 2008

டெமாக்ரசி இண்டியன் ஸ்டைல்

·

வெற்றிகரமான ஆட்சி முறை என்று உலகங்கும் ஏற்கப்பட்டாலும் ஜனநாயகம் ஊருக்கு ஊர் மாறித்தான் கிடக்கின்றது. முற்றாக இல்லையென்றாலும் இந்திய வகை ஜனநாயகம் கிட்டத்தட்ட தனித்தன்மை வாய்ந்ததுதான். எவரும் அதை நமக்கு துப்பாக்கி முனையில் ஏற்றுமதி செய்யவில்லை. நாமே சுத்திகரித்த ஒன்றும் அல்ல. பனானா ரிபப்ளிக்கும் அல்ல. மன்னரில்லாத இந்திய வகை முடியாட்சிதான் நமது ஜனநாயகம். மன்னனை லாபி செய்யும் குழுக்கள் நடத்தி வந்த முடியாட்சியும் வெள்ளையர்கள் விட்டுச்சென்ற பப்பட் ஜனநாயகமும் சர்விகிதத்தில் கலந்துதான் இந்தியவகை ஜனநாயகம்.

போதிய அளவு நேர்மையில்லாத நம்மை பிரதிநிதிக்கும் அரசியல்வாதிகளிடம் நேர்மை எப்போதும் பற்றாக்குறைதான். குட்டிக்கரண அரசியலை மன்னித்து விடுகிறோம். ஊழல் புகார்களை மூக்கைப்பிடித்துக்கொண்டு கடந்து சென்றுவிடுகிறோம். ஏதோ ஒன்றிற்காக யாரையாவது ஆதரித்துவிடுகிறோம். அந்த ஏதோ ஒன்றின் தேவை இல்லாதவர்கள் அல்லது தேவையான ஒன்று என்னவென்று தெரியாதவர்கள் நடுநிலையாளர்கள் என்ற பெயரில் சலித்துக்கொள்கிறோம். சிலசமயம் பப்பூன்களாக மாறி பப்பூன்களை ஆட்சியில் வைத்து எல்லோரையும் பப்பூன்களாக்குகிறோம். இப்படி ஏதோ ஒருவகையில் ஜனநாயகத்தை சிறப்பாக நடாத்தி வருகிறோம்.

நம் ஜனநாயகத்தை கொண்டாட சிறப்பான காரணங்கள் ஏதும் இல்லை. குறைகளை பட்டியலிட்டாலும் அவற்றை நாம் நிவர்த்தி செய்யப்போவதில்லை. எனவே தமிழகத்தில் கடை விரித்திருக்கும் ஜனநாயக வியாபாரிகளின் வியாபார உத்திகளை பற்றிய எனது பார்வையை மட்டும் சொல்வதோடு நிறுத்திக்கொள்கிறேன்.

வியாபாரத்தில் புதுமைகளை புகுத்தி வெற்றி கொள்வது, தனித்திறமைகளை தக்கவைத்து நீடித்திருப்பது, வெற்றிபெற்ற உத்திகளை காப்பி அடிப்பது மற்றும் போட்டியை சமாளிக்க எதிரியின் உத்தியையே பயன்படுத்துவது எல்லாமே வழமைதான். அரசியலிலும் இது அப்படியே பொருந்தும். அதேபோல் அரசியலில் புகுத்திய புதுமைகள் போனியாகாமல் போவதும், காலாவதியான கொள்கைகளை கட்டிக்கொண்டு காணாமல் போவதும், எதிரியை போலவே அரசியல் செய்து மக்களை மாற்று சக்திக்காக ஏங்கவைத்து விடுவதும் இயல்பானதே. இதை வியாபாரத்திலும் பார்க்கமுடியும்.

பணத்தையும், வன்முறையையும். அரசியலில் புகுத்தி புதுமை செய்த காமராஜருக்கு தனித்தன்மையும் இருந்தது. ஊழல் கரை படியாதவர் என்பதுதான் அது. அவர் புகுத்திய புதுமை நன்றாக போனியாகியது. மற்றவர்களால் காப்பியடிக்கப்பட்டது. அதே சமயம், தமிழகம் இன்று இந்தியாவின் முன்னணி மாநிலமாக திகழ்வதற்கு அவரே முதல் காரணம். அவரது எளிமை என்ற தனித்தன்மை இன்றும் நினைவுகூறப்படுகிறது. ஆனால் அது அவர் காலத்திலேயே காலாவதியாகிப்போன ஒன்று. அவரது நிறுவனம் திவாலாகி விடவில்லை என்றாலும் அவருக்குப்பின் அது வளரவே இல்லை.

அண்ணாதுரை அரசியலும் மேற்கண்ட தத்துவங்களில் இருந்து மாறாமல்தான் இருந்தது. காலாவதியான கொள்கைகளை கைவிட்டுத்தான் அரசியல் கரை சேர்ந்தார். நாவன்மையால் மக்களை சமாதானம் செய்து ஆட்சியை பிடித்தார். நீண்ட காலம் அவர் ஆட்சியில் இல்லாததால் வேறெவருடனும் ஒப்பிட முடியாது.

கலைஞர் நாவரசியலை அண்ணாவிடம் இருந்து சுவீகரித்துக் கொண்டார். காமராஜரின் பண அரசியலை காப்பியடித்தார். அரசியல் எதிரி எம்ஜியார் போலவே வன்முறை அரசியல் செய்தார். ஜெயலலிதாவை சமாளிக்க வம்ச எதிரிகளுடன் கூட்டணி வைத்து குட்டிக்கரண அரசியல் செய்தார். சமீப காலங்களில் ஜெயலலிதா போலவே இலவச அரசியல் செய்கிறார். ஈழத்தமிழர் விவகாரத்தில் மவுன அரசியல் செய்து புதுமையை புகுத்தியுள்ளார். அதேசமயத்தில் காமராஜர் உருவாகிய அடித்தளத்தில் ஒரு கோட்டையையே உருவாக்கி பெரியார் வழியில் எல்லோரையும் அதன் பயனர் ஆக்கியுள்ளார். தமிழகம் இன்று உண்மையிலேயே ஒரு முன்னணி மாநிலம்.

எம்ஜியாரின் அரசியல் கம்யூனிஸ்டுகளின் அரசியலுடன் ஒப்பிட்டால் சுவாரசியமாக இருக்கும் என நினைக்கிறேன். ஏழைகளுக்கு இருவருமே குரல் கொடுத்தனர். கம்யூனிஸ்டுகள் வீதியில் இறங்கி குரல் கொடுத்தனர். எம்ஜியார் வெள்ளித்திரையில் குரல் கொடுத்தார். எனினும் ஏழைப்பங்காளன் வேடம் நன்றாகவே போனியாகக்கூடிய உத்திதான். காலாவதியான கொள்கைகளை சமரசமின்றி பின்பற்றுபவர்கள் கம்யூனிஸ்டுகள். எம்ஜியாரின் கொள்கையே ஜனரஞ்சகம்தான். உலகம் உய்ய ஒரே வழிதான் உள்ளதென கருத்துடையவர்கள் கம்யூனிஸ்டுகள். எம்ஜியாரின் வழியில் தமிழகம் உய்த்தேவிட்டது (தமிழகம் இன்று கல்வியில் சிறந்திருப்பதன் காரணம் சத்துணவு திட்டம் மற்றும் தனியார் கல்லூரிகளின் பெருக்கம் போன்றவையே). ஒருதுறையில் பெற்ற புகழை மற்றொரு துறையில் புழக்கடை வாயிலாக நுழைய பயன்படுத்தி மோசடி செய்ததுதான் அவர் புகுத்திய புதுமை.

The More You Know The More You Think You Have To Know More. இது ஜெயலலிதாவுக்கு பொருந்துமா என்று தெரியவில்லை. ஆனால் அவரது அராஜக அரசியல் அவருக்கு மட்டுமே கைவரக்கூடியது என்று பத்தாம் பசளியாய் நினைத்துக்கொண்டுள்ளார் என்பது தெளிவு. அவரது வகை அரசியலில் வென்றால் அவருக்கு லாபம். தோற்றால் அவருக்கு நஷ்டம். மக்களுக்கு எப்போதும் நஷ்டம் தான். 1991-1996 ஆட்சிகாலத்தில் லாபம் யாருக்கு? நஷ்டம் யாருக்கு? 2001-2006 ஆட்சிக்காலத்தின் முதல் இரண்டரை ஆண்டுகாலம் நஷ்டம் யாருக்கு? இறுதி இரண்டரை ஆண்டுகாலம் லாபம் யாருக்கு? சு.சாமி, சங்கராச்சாரியார், சோ, சசிகலா போன்றோர் பின்னிருந்து இயக்க கண் போன போக்கில் அரசியல் செய்வதுதான் அவரது புதிய உத்தி. விஜயகாந்த், ரஜினிகாந்த் போன்றவர்களிடம் இது போனியாகக்கூடும்.

நாவன்மை அரசியலில் வைகோவுக்கு நல்ல தேர்ச்சி உண்டு. காமராஜர் காலத்திலேயே காலாவதியாகிப்போன நேர்மையை தாமதமாக உதறியவர். விடுதலைப்புலிகள் தன்னை திமுக தலைவராக ஆக்குவார்கள் என தவறாக கணித்து நஷ்டகணக்கு எழுதிவைத்துள்ளவர். குட்டிகரன அரசியலில் தகுந்த தேர்ச்சியின்றி வியாபாரம் அதலபாதாளத்தில் உள்ளது. இவர் புகுத்திய புதுமைகள் எல்லாம் அட்டர் பிளாப்.

மருத்துவர் அய்யாவின் குட்டிக்கரண அரசியல் வெகு பிரசித்தம். ஆனால் இவர் இதில் சுயம்பு அல்ல. மொழியரசியல், ஈழத்தமிழர் அரசியல் போன்றவைகளும் காப்பி அடித்த வியாபாரத் தந்திரங்களே. இப்போது தீவிரமாக மார்க்கெட் செய்யப்பட்டு வரும் அவ்வுத்திகள் எவ்வாறு பலனளிக்கும் என அவர் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். சமூக நீதி என்ற அவரது பில்போர்டு தேர்தல் நேரங்களில் ஆங்காங்கே வைக்கப்பட்டு வியாபாரம் ஜகத்ஜோதியாக நடைபெறும். சாதி சங்க அரசியல் அவரது புதுமை. மிகப்பிற்படுத்தப்பட்டவர்களின் நலன் பேண கட்சி தொடங்கி இப்போது அவர்களின் பெருமை பேசும் அமைப்பாக மாறியிருப்பது வளர்ச்சியா? வீழ்ச்சியா?

"புகழ் மோசடி" உத்தியை எம்ஜியாரிடமிருந்து காப்பி அடிப்பவர் யார் என்பது தெளிவு. பப்பூன் போன்ற சொல்லாடல்களை மீண்டும் இங்கு பயன்படுத்த விரும்பவில்லை.

எனது ஒரே நம்பிக்கை திருமாவளவன் மட்டுமே.

18 comments:

Ŝ₤Ω..™ said...
October 3, 2008 at 7:32 AM  

நம்ம சனநாயகத்தில், பெரும்பான்மையான மக்கள் யாரை "வேண்டாம்" என்கிறார்களோ அவர் தான் ஆட்சி அமைக்கமுடியும்.. இது தான் இந்திய சனநாயகம்..

சற்றே சிந்தித்து பாருங்கள்..
இன்று சட்டமன்றத்திலோ, நாடாளுமன்றத்திலோ ஆட்சியமைக்க உரிமை கோரும் கட்சிகள் எவை?? 1/3பங்கு இடங்களைப் பெற்ற கட்சிகள் தானே?? அப்படி என்றால், 2/3 மக்கள் அக்கட்சி வேண்டாம் என்று தானே வாக்களித்துள்ளனர்???

ஒரு நாட்டில் 2/3 பகுதி மக்கள் வேண்டாம் என்று சொல்லும் ஒரு கட்சி, ஆட்சிபுரிவது எந்த வகை சனநாயகம்??

மோகன் கந்தசாமி said...
October 4, 2008 at 3:44 AM  

திரு அசோக்,

////நம்ம சனநாயகத்தில், பெரும்பான்மையான மக்கள் யாரை "வேண்டாம்" என்கிறார்களோ அவர் தான் ஆட்சி அமைக்கமுடியும்.////

பெரும்பாலான சமயங்களில் இதுதான் உண்மை.

///ஒரு நாட்டில் 2/3 பகுதி மக்கள் வேண்டாம் என்று சொல்லும் ஒரு கட்சி, ஆட்சிபுரிவது எந்த வகை சனநாயகம்??///

அதுதான் நம் சனநாயகத்தின் சிறப்பு(?)

வருகைக்கு நன்றி.

அணிலன் said...
October 5, 2008 at 12:14 PM  

முதல் வருகை...50 ஆண்டு கால தமிழக அரசியலை அழகாக குறளாக்கம் செய்திருக்கிறீர்கள்....

சமீப காலமாக வழங்கும் "சதவீத அரசியல்" ( 'Percentage Politics') குறித்து தான் எனக்கும் கொஞ்சம் வருத்தமும், கவலையும். உத்திரபிரதேசம் போன்று நோய் முற்றிவிடவில்லை என்றாலும், அறிகுறிகளே கொஞ்சம் பயமுறுத்துகின்றன....சாதி, மொழி, சமய வேறுபாடுகளை உபயோகித்து அரசியல் செய்யும் கட்சிகள் பெருகி வருகின்றன. எல்லா தரப்பினருக்கும் குரல் கொடுக்க கடவுவதே சனநாயகம் எனினும், வாக்குகளை பிரித்தே அரசியல் செய்யும் இவற்றை நம்பி ஏமாறும் மக்கள் நிலையே கொடுமை.

மோகன் கந்தசாமி said...
October 5, 2008 at 1:37 PM  

திரு அணிலன்,

///முதல் வருகை...50 ஆண்டு கால தமிழக அரசியலை அழகாக குறளாக்கம் செய்திருக்கிறீர்கள்....////

முதல் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி.

////சமீப காலமாக வழங்கும் "சதவீத அரசியல்" ( 'Percentage Politics') குறித்து தான் எனக்கும் கொஞ்சம் வருத்தமும், கவலையும். உத்திரபிரதேசம் போன்று நோய் முற்றிவிடவில்லை என்றாலும், அறிகுறிகளே கொஞ்சம் பயமுறுத்துகின்றன/////

உத்திரபிரதேசத்தில் நோய் முற்றி உள்ளது குறித்து மாற்று கருத்து இல்லை. ஆனால் தலித்துகளின் ஆட்சி அவர்களுக்கு விடிவையும் ஏனையோருக்கு நல்லாட்சியும் தந்தால் மகிழ்ச்சி.


////சாதி, மொழி, சமய வேறுபாடுகளை உபயோகித்து அரசியல் செய்யும் கட்சிகள் பெருகி வருகின்றன. /////

எதன் பெயரால் ஒடுக்கப்பட்டோமோ அதன் பெயரால் தான் தமிழர்கள் எழுச்சி பெற்றனர். அரசியலில் 'தமிழ்' எழுச்சிக்கு மட்டுமே பயன்பட்டிருக்க வேண்டும். இனப்பெருமை பேசி காழ்ப்பிற்கு பயன் படாதிருந்திருக்க வேண்டும். (எனினும் தற்கால இந்தியாவில் எங்கும் இனப்பெருமையே அரசியலில் அனைத்தையும் இயக்குகிறது, தமிழகம் விதிவிலக்கல்ல). அதே போல் தலித்துகளும் ஒரு வைடர் அஜண்டாவுடன் சாதியின் பெயரால் எழுச்சி பெற்றாகவேண்டும். எனவே திருமாவளவனும் இருக்கும் குட்டையில் மற்றுமொரு மட்டையாக இருக்கத்தான் வேண்டும் போலிருக்கிறது. வாழ்க இந்திய ஜனநாயகம்!.

நன்றி.

அணிலன் said...
October 6, 2008 at 6:55 PM  

மறக்கப்பட்ட , மறக்கடிக்கப்பட்ட சமூகங்கள் தமக்கென ஒரு அடையாளச்சின்னத்தை உருவாக்கிக்கொண்டு உரிமைக்குரல் கொடுப்பதில் மகிழ்ச்சி..அது உலகம் பண்பட்ட பாதை..
ஆனால் இந்த சமூகங்கள் வாக்கு விளையாட்டில் பந்தாடப்பட்டு உருவான காரணத்தை தொலைத்துவிட்டு நிற்பதுதான் கொடுமை..எண்ணிக்கையில் உள்ள பலம் சதவீதத்தில் இருப்பதில்லை...

Anonymous said...
October 7, 2008 at 2:13 AM  

நீங்களெல்லாம் திருந்தவே மாட்டீங் கலாண்ணு முன்பு நடந்த குண்டு வெடிப்பின் போது முஸ்லிம்களை கிழித்தீர்கள்! இப்போ ஓரிஸ்சாவிலும் கர்நாடகவிலும் கிரிஸ்தவர்கள் கண்மூடிதனமா தாக்கப்படும் போதும், 35 உயிர்களை இந்துக்கள் எல்லாம் சேர்ந்து எடுத்த போதும் உங்களுக்கு இந்துக்களின் மத வெறியை பற்றி ஏன் எதுவும் எழுத தோண வில்லை
அதுவும் அந்த சுவாமி லட்சுமானாந்தா கொலைக்கும் கிரிஸ்தவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, அதை செய்தது மாவோ தீவிரவாதிகள்!! இதை போலத்தான் கோத்ரா சம்ப வமும் , அப்போ எல்லாம் இந்துக்கள் நல்லவர்கள் அல்லவா? ஏன் உங்கள் இந்துக்களுக்கு நல்ல தலைமை இல்லயா? ஒரு இந்துவாகிய நீங்கள் இதை பற்றி ஏன் சிந்திக்க வில்லை, உங்களால் எப்படி முடியும், நீங்களும் ஒரு இந்து தானே? நல்லா இருக்கு!!

புதுகை.அப்துல்லா said...
October 7, 2008 at 12:15 PM  

நீங்கள் ஆயிரம் சொல்லுங்கள் மோகன்... கோடி விமர்சனம் இருந்தாலும் இன்றைக்கு மு.கவை விட்டால் வேறு நாதியில்லை நமக்கு.

மோகன் கந்தசாமி said...
October 7, 2008 at 1:47 PM  

////இந்த சமூகங்கள் வாக்கு விளையாட்டில் பந்தாடப்பட்டு உருவான காரணத்தை தொலைத்துவிட்டு நிற்பதுதான் கொடுமை.////

இதன் முக்கிய காரணம் நம் ஜனநாயகம் செயல் படும் விதம்தான் காரணம்.

நன்றி அணிலன்.

மோகன் கந்தசாமி said...
October 7, 2008 at 1:52 PM  

வாருங்கள் புதுகை,

ஒய்வு புத்துணர்ச்சி தந்துள்ளதா?

///மு.கவை விட்டால் வேறு நாதியில்லை///

உண்மைதான். ஆனால் அண்ணா, மு.க. -வின் அரசியல் பரம்பரையை உருவாக்கும் பொருட்டாவது வேறொருவரை ஆதரித்தாக வேண்டுமே! நேரம் நெருங்கிவிட்டதல்லவா? எனது சாய்ஸ் திருமா.

புதுகை.அப்துல்லா said...
October 10, 2008 at 2:54 PM  

எனது சாய்ஸ் திருமா.
//

உன்னோடு கூட்டணி வைத்து வெற்றி பெற்றேன் ஆனால் உன்னோடு இப்போது கூட்டணி இல்லை எனும் போது உன் வாக்குகளையும் வாங்கிப்பெற்ற சட்டமன்ற உறுப்பினர் பதவி தேவையில்லை என்று ராஜினாமா செய்த அந்த மானஸ்தன் மேல் எனக்கும் எப்போதும் மரியாதை உண்டு.

குடுகுடுப்பை said...
October 13, 2008 at 12:51 PM  

திருமாவளவன் விடுதலைச்சிறுத்தைகள் தலைவராக இருந்து சாதிக்க முடியுமா. அவர் திமுக அல்லது அதிமுக போன்ற கட்சிகளின் தலைமை பீடத்தை அடைந்தால் மட்டுமே முதல்வர் ஆக முடியும்.விடுவார்களா?
நடக்குமா? எனக்கு தெரிந்த ஒரு சீர் திருத்த கல்யாணத்தில் தலைமை குடியரசு, மதிமுக, தாலி எடுத்து கொடுத்தவர் எல்.ஜி, மதிமுக, நாம் போக வேண்டிய தூரம் நிறைய

மோகன் கந்தசாமி said...
October 15, 2008 at 1:28 AM  

///விடுதலைச்சிறுத்தைகள் தலைவராக இருந்து சாதிக்க முடியுமா. அவர் திமுக அல்லது அதிமுக போன்ற கட்சிகளின் தலைமை பீடத்தை அடைந்தால் மட்டுமே முதல்வர் ஆக முடியும்.விடுவார்களா?///

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வளர்ச்சி வேகம் பிடித்தால் விரைவில் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கலாம் என்பது எனது கருத்து மற்றும் அவா.

நன்றி குடுகுடுப்பை.

மோகன் கந்தசாமி said...
October 15, 2008 at 1:34 AM  

///உன்னோடு கூட்டணி வைத்து வெற்றி பெற்றேன் ஆனால் உன்னோடு இப்போது கூட்டணி இல்லை எனும் போது உன் வாக்குகளையும் வாங்கிப்பெற்ற சட்டமன்ற உறுப்பினர் பதவி தேவையில்லை என்று ராஜினாமா செய்த அந்த மானஸ்தன் மேல் எனக்கும் எப்போதும் மரியாதை உண்டு.////


பிறகு தனித்து நின்றும் கணிசமான வாக்குகள் பெற்று ஆச்சர்யமளித்தவராயிற்றே! மேலும் அவரது அரசியல் ஆலோசகர் ரவிக்குமார் பெரிய திட்டங்கள் வைத்துள்ளார் போல் தெரிகிறது. வி.சி வரும் நாட்களில் தமிழத்தில் ஒரு முக்கிய அரசியல் சக்தியாக விளங்கும்.

Anonymous said...
October 25, 2008 at 12:10 AM  

//தமிழகம் இன்று உண்மையிலேயே ஒரு முன்னணி மாநிலம்//

:) :) :) :) :)

Anonymous said...
October 25, 2008 at 12:11 AM  

//தமிழகம் இன்று உண்மையிலேயே ஒரு முன்னணி மாநிலம்//

In your dream?!

rapp said...
October 29, 2008 at 1:09 AM  

ஹா ஹா ஹா, சூப்பர். அரசியல் பபூன் பத்தி என்னத்த சொல்றது? இதே ரேஞ்சுல போனா அவ்ளோதான்:(:(:( அம்மா ஆட்சி பத்தி நீங்க சொல்லிருக்கறது சூப்பர்:):):)

rapp said...
October 29, 2008 at 1:11 AM  

//ஒரு நாட்டில் 2/3 பகுதி மக்கள் வேண்டாம் என்று சொல்லும் ஒரு கட்சி, ஆட்சிபுரிவது எந்த வகை சனநாயகம்??//

இது ஜனநாயகம் தழைத்தோங்குவதாக சொல்லப்படும் எந்த நாட்டில் இல்லை? மறைமுகமாகவாவது அனைத்து ஜனநாயக நாடுகளிலும் இத்தகைய ஒரு ஆட்சியே நடைபெறுகிறது:(:(:(

மோகன் கந்தசாமி said...
October 29, 2008 at 6:40 AM  

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ராப் ஆகிய வெட்டி ஆபிசர்