அஜால் குஜால் நாயகன் என்று அன்போடு அழைக்கப்படும் பதிவர் அதிஷா அவர்கள் இந்த இன்பக்கதையை அவரது இன்பினிட்டி குடுவையிலிருந்து ச்சும்மா ட்டமாஷ் - 75 -க்காக தந்துள்ளார். பிகரை சைட் அடிக்கப்போன இடத்தில் ஒரு மர்டரை நிகழ்த்தவேண்டிய கட்டாயத்திற்கு ஆளான நண்பர்களின் சோகத்தை பதிவு செய்கிறது இந்த கதை. படிக்கும்போதே சோகம் கணித்திரையிலிருந்து கைநீட்டி நம் கழுத்தை நெரிக்கிறது. நீங்களும் அதை அனுபவியுங்களேன்!
பி1 போலீஸ் ஸ்டேசன் தெரியாமல் கோவையில் யாருமே இருக்க முடியாது , மிக அரிய வழக்குகளையும் குற்றவாளிகளையும் சந்தித்த அக்காவல் நிலையம் இதுவரை அந்த மூவரைப்போல எந்த குற்றவாளியையும் கண்டதில்லை . பி1 காவல் நிலைய சரித்திரத்திலேயே அந்த மூவர் குறிப்பிடத்தக்கவர்கள் . அதில் ஒருவன் இன்று அப்போதைய காவல் நிலையத்தின் ஆய்வாளரின் ரெண்டு விட்ட மருமகன் .
அந்த மூவரும் அக்காவல் நிலையம் குறித்த அறிவும் அதற்கான தேவையுமின்றிதான் இத்தனை காலம் இருந்தனர் . எப்போதாவது டிரெயினிங் ஸ்கூல் பிள்ளைகளை சைட்டடித்து விட்டு வரும்போது வழியில் பார்த்ததுண்டு .
விசும்பி விசும்பி விடாமல் அழுதுகொண்டிருந்தான் கார்த்தி . அவன் இதற்கு முன் இது போல் அழுததேயில்லை . கண்களில் கசிந்து கொண்டிருந்த கண்ணீர் மூக்கைத்தாண்டி உதட்டின் வழியே வழிந்து இறுதியில் உதட்டில் துவர்த்தது.
கடைசியாக அவன் ஆயா செத்தப்போது எவ்வளவோ அழ முயற்ச்சித்தும் அழ வராமல் மிகவும் துன்பப்பட்டிருக்கிறான் . மற்றவர்கள் அழும் போது கேனப்பயல் வினோ ' ஹமாரா ஆயா மர்கயா ' என்று நாயகன் பாணியில் திரும்ப திரும்ப சொல்லி அவனை சிரிக்க வைத்தது தேவையில்லாமல் ஞாயபகத்திற்கு வந்து தொலைக்க அழுகையிலும் சிரிப்பை அடக்க முடியவில்லை.
பக்கத்தில் ஆரஞ்சு நிற பூப்போட்ட ஜட்டி அதன் மத்தியில் மிக்கிமௌஸ் என அதை மறைத்தவாறு குந்தவைத்து முழங்காலோடு தனது இரண்டு கைகளையும் கட்டியபடி வினோ அமர்ந்திருந்தான் (ஆய் போவது போல). அவன் அருகில் முஸ்தபா அவனும் அப்படியே அவன் பச்சை ஜட்டி மிக்கிமௌஸ் இல்லை.
கார்த்தி மட்டும் அழுதுகொண்டிருக்க, வினோ முஸ்தபாவின் காலை நோண்டி கார்த்தி அழுவதை சுட்டிக்காட்டினான், முஸ்தபாவிற்கு சிரிப்பை அடக்கமுடியாமல் வாயை கைகளால் பொத்திக்கொண்டு முகத்தை தனது தொடைகளுக்குள் மறைத்து வைத்து சிரிக்கத்தொடங்கினான்.
நடுவில் மறைந்திருந்த முஸ்தபாவின் விக்கிவிக்கி சிரிக்கும் தாடையில் லத்தி ஒன்று நுழைந்தது,
''சார் இவனா!'', கறுத்த குண்டு போலீஸ், முறைத்தபடி இன்னொரு போலீஸிடம்.
''இல்ல சார், மூணாவது இருக்கான் பாருங்க அவன்'' கார்த்தியை காட்டினார்,
பொட்டை மாதிரி அழற, அறிவுகெட்டவனே, ஆம்பளைதான நீ?'' 16 வயது கார்த்தியை மிரட்டினார் 40 வயது கறுத்த குண்டு போலீஸ் ( சிரிப்பு போலீஸ் போல இருந்ததால் மீண்டும் வினோவிற்கு சிரிப்பு ) . (பொட்ட என்கிற சொல் கார்த்தியை கோபமூட்டியிருக்க வேண்டும் .
''சார் எங்கப்பாக்கு தெரிஞ்சா.....ம்...ம்......ம் என்ன வீட்டுள்ளயே சேத்த மாட்டாருங்... சார் , நான் ஒன்னும் பண்ணல சார் ,ம்.......ம்.......ம்.......ம் இவனுங்கதான் சார் '' , தேம்பி தேம்பி அழுதபடியே கூறினான் .
கார்த்தியின் பிருஷ்டத்தில் ''பளீர்'' , ஒரு அடி , இடி போல விழுந்தது .
''ஏன்டா நீயெல்லாம் ஒரு பிரெண்டா , இவ்ளோ ஈஸியா சரண்டர் ஆகிட்ட , பாரு அவனுங்கள , கல்லு மாதிரி இருக்காணுங்க , ஸ்கூல் படிக்கும் போதே ஈவ்டீசிங் , மர்டரு ... அசிங்கமா இல்ல''
''சார் , வலிக்குது சார் , அடிக்காதீங்க சார் , சார் இதெல்லாம் கொலையா...... , இதுக்குப் போயி இப்படி அடிக்கிறீங்களே .. ''
''அடத்தூ செத்த பாம்புடா நீ '' காரி துப்பிவிட்டு போனார் கறுத்த போலீஸ் . போகும் போது வினோவிற்கும் முஸ்தபாவிற்கும் பிருஷ்டத்தில் ஒன்று தர மறக்கவில்லை . பளீர் பளீர்... கார்த்தி முகத்தில் வெற்றிசிரிப்பில் பற்களும் பளீர் பளீர்...
மூன்று நாட்கள் முன்பு வரை அவர்களுக்கு தெரியாது இப்படி ஒன்று நடக்கப்போகிறதென்று . எல்லோரையும் போல (அதாவது 16 வயது காளைகளைப் போல ) தெருவோர திட்டோ திண்ணையோ அல்லது சலூன் வாசலோ எதிலோ ஒன்றில் அமர்ந்து கொண்டு போகும் வரும் மக்களை கலாய்த்தவாறு கும்மியுடன் கும்மாளமாகத்தான் குஜாலாகத்தான் இருந்தனர் .
7 மணிக்கு நண்பர்கள் ஸ்டார் சலூன் வாசலில் கூடுவது வழக்கம் . அப்போதுதான் டியூசன் முடித்து அவ்வழியே வரும் அழகிகளையும் அழகியாகப்போகிறவர்களையும் ஸைட் அடிக்க வசதி .கார்த்திக்கு தினமும் 7 மணி ஆகிவிட்டால் தம்மடித்தாக வேண்டும் இல்லையேல் கை நடுக்கமே வந்து விடும் , அதும் கிங்ஸ்தான் ! . இரண்டேமுக்கால் ரூபாய் கிங்ஸ் வாங்க ஒரு ரூபாயோடு தினமும் வந்துவிடுவான் . என்றுமில்லாமல் அவன் அன்றைக்கு 6.45க்கே வந்துவிட்டான் . கோபத்தோடிருந்தான் . சலூன் கடைக்குள் நுழைந்து முடியை கோதிவிட்டுக்கொண்டான் . வினோ வந்தான் .
'' மச்சி , கிளம்புடா தம்மடிக்க போலாம் ''
''மச்சி என்னடா ஆச்சி ஏன் ஒரு மாதிரி இருக்க ''
வரியா இல்லியா இல்லாட்டி நானே போறேன் ''
''கார்த்தி இருடா, முஸ்தபா வந்துருவான் '' சொல்லிக்கொண்டிருக்க அவனும் தனது பிஎஸ்ஏ பச்சை சைக்கிளில் சைக்கிளில் வந்துவிட்டான் .
தியேட்டருக்கு பின்னால் இருக்கும் முட்டுச்சந்தில் மூவரும் குழுமினர் .
''மச்சி இந்தா 5 ரூபா, என்கிட்ட அவ்ளோதான் '' வினோ நீட்டினான் .
''கார்த்தி நீடா '' என்றதும் 1 ரூபாவை எடுத்து நீட்டினான் . வினோ முறைத்தான் .
இரண்டு கிங்ஸ் மட்டும் வாங்கிக்கொண்டு வினோ பற்றவைத்தான் ஒரு கிங்ஸை. இன்னொன்றை முஸ்தபா . கார்த்தி வினோவை முறைத்தபடியே இருந்தான் .
''அப்புறம் கார்த்தி என்னடா டென்சன் '' , கார்த்தி பேசாமல் அமர்ந்திருந்தான் .
''ஏன்டா லூசு அவன்தான் டென்சனா இருக்கான்ல அவன்கிட்ட சிகரெட்ட குடுரா '' ,. சிகரட்டை கொடுத்தான் வினோ .
''மச்சி , நம்ம தெருல ஒரு பொண்ணு பாக்க குஷ்பு மாதிரி போகுமே தெரியுமா ஒனக்கு ''
''யார்ரா ''
''அதான் நம்ம லதா வீட்டுக்கெதிர் வீடு , பேரு கூட ஜீலினு....''
''அடிங்க... அவ என் ஆளுடா '' வினோ அலறினான் .
''ச்சீ கருமம் எவனுக்குடா வேணும் உன் ஆளு ,பேரப்பாரு ஜீலி பப்பினு , நாய்க்கு வைக்கறமாதிரி ''
''அப்புறம் என்ன மேட்டர் , ''
''ஸ்கூல் பக்கம் நேத்து நம்ம கலாவுக்காக வெயிட் பண்ணிட்ருந்தேன் மச்சி , கலாகிட்ட கிப்ட்டும் லவ்லெட்டரும் குடுக்கலாம்னு போனா, அவ கூட இவளும் வந்திட்டிருந்தா , என்னை பார்த்ததும் திட்ட ஆரம்பிச்சிட்டா , என்ன பத்தி கலாகிட்ட தப்புதப்பா சொல்லி தந்திருப்பா போல, என் கலா என்னை எப்படி பாத்தா தெரியுமா..... ''
''ஏன்டா இதுக்குலாம் பீல் பண்ற விடுரா விடுரா நம்ம கலாதானடா எங்க போயிரப்போறா'' வினோ முகத்தை சிரிக்காதது போல வைத்துக்கொண்டு நக்கலடித்தான் .
'' இத்தனை நாள் என்னை ஹீரோ மாதிரி பாக்கறவ இன்னைக்கு பபூன் மாதிரி பாக்கறாடா அதுக்கு அவதாண்டா காரணம் , மஞ்சுதான் சொன்னா , இப்போலாம் ஜீலியும் கலாவும் ரொம்ப குளோஸ் ஆகிட்டாங்களாம் , மஞ்சுகிட்ட கூட கலா சரி பேசறதில்லையாம் ''
''அவளுக்கு என்னடா உன் மேல பொச்சுகாப்பு ''
''தெரில மச்சி ''
''அப்புறம் ஏன்டா உன் லைன்ல கிராஸ் பண்றா? ''
''அவளுக்கு ஆப்படிச்சாதான் சரியாவுன்டா...!!''
''ஆமா இவரு பெரிய ஆசாரி ஆப்படிக்க கெளம்பிட்டாரு... மூடிட்டு வேற பிகர பார்ராங்கன்னா .அதான் மஞ்சுகிட்டதான் பேசறல்ல அவளுக்கு குடுத்துற வேண்டியதுதான அந்த லெட்டர ''
வெறியோடு இருவரையும் முறைத்தான் கார்த்தி . அவனவன் வலி அவனவனுக்குதான் தெரியுமாம் . மூவரும் தம்மடித்து முடித்து கிளம்பினர் . போகும் போது ஐம்பது காசு அஜந்தா பாக்கு வாங்கி வாயில் போட மறக்கவில்லை , ஒரு பாக்கில் மூன்று பாகமாய் . தம்மடித்த வாயை ஒருவர் முகத்தில் மற்றவர் ஊதி வாசனை போய்விட்டதா என சரிபார்த்த பின் வீட்டிற்க்கு கிளம்பினர் .
அடுத்த நாள் காலை வேளை , சனிக்கிழமையாதலால் பள்ளி விடுமுறை , 8 மணிக்கே சலூன் வாசலில் வந்து அமர்ந்து கொண்டான் வினோ , மற்றவரும் பின்னாலேயே .
ஜீலி தனது நாய் சின்ட்ரல்லாவை அழைத்துக்கொண்டு வாக்கிங் போய் திரும்பிக்கொண்டிருந்தாள் , ஜீலிக்கு 15 வயதுதான் , வயதுக்கு மீறிய வளர்ச்சி . அவளது நாய் ஏதோ வகையை சேர்ந்தது , பாட்ஷா படத்தில் வருமே அதை விட பெரியது . இவள் அந்த நாயோடு காலை வேளைகளில் வாக்கிங் போகும் போது அந்த நாயைக்கூட பார்க்காமல் இவளைத்தான் பார்ப்பார்கள் , எது பெரியதோ அதைத்தானே நம் விந்தையான மனித உள்ளம் முதலில் காணும் .
சிலுப்பி சிலுப்பி நாயும் அவளும் நடந்து வர , அவளது டைட் டிஷர்ட்டும் , மிக டைட்டான பேண்ட்டும் வினோவை ஏதோ செய்திருக்க வேண்டும் , அவள் அவர்களை கடக்கையில் எந்த எழவெடுத்த புயல் அவனை அடித்ததோ வினோ பாட ஆரம்பித்தான்......
'' ஏரு பெருசா.....! இந்த ஊரு பெருசா......! சொல்லடி நெல்லு பெருசா....! பயக பல்லு பெருசா......! '' .
கடுப்பானாள் ஜீலி..
''ஷிட்! ...... சின்ட்டு அட்டாக் '' என்று கையில் இருந்த நாயை கழண்டு ஓட விட்டாள் .
அது கார்த்தியின் மேல் பாய, மூவரும் பின்னங்கால் பிடறியில் தெறிக்க ஓடினர் . கரிம் பாய் கடை தாண்டி மூன்றாவது சந்து ஒரு முட்டுச்சந்து அது தெரிந்தும் அவசரத்தில் அங்கே ஓடினர் . முஸ்தபாவிற்கு நாய்கள் என்றாலே ஆகாது . நாய்கள் மார்கழி மாதத்தில் குஜாலாக இருக்கும் போது எத்தனை முறை கல் எரிந்து கலைத்திருக்கிறான் தெரியுமா? அவனது பால்யத்தில் ஏதோ ஒரு தெருநாய் இவன் டியூசன் போய்விட்டு வரும்போதெல்லாம் துரத்துமாம் , கடித்ததில்லை , துரத்தியதற்கே இத்தனை கோபம் .
முட்டுசந்தில் மாட்டிக்கொண்டதை உணர்ந்தவன் அங்கிருந்த செங்கல்லை எடுத்துக்கொண்டு நாயை நோக்கி ஓடினான் , அதற்குள் நாய் இவன் மேல் பாய இவன் நகர்ந்து விட்டான் . சின்ட்ரல்லா( அந்த நாயின் பெயர் சின்ட்ரல்லா ) நேராக முஸ்தபா பின்னால் இருந்த சாக்கடையில் விழுந்துவிட்டது, அது ஒரு குறுகலான சாக்கடை , அந்த நாயால் வெளியே வர இயலவில்லை . வெளிவரும் முயற்சியில் அதன் தலை ஒருபக்கமும் அதன் உடல் ஒரு பக்கமுமாக கோணல் மாணலாக மாட்டிக்கொண்டது.
இவ் இவ் இவ் இவ்...கிவ் கிவ் கிவ் கிவ் என்று முனகியது , அந்த நாயைவிட நல்ல நாய் நம்ம கார்த்தி அதை வெளியே எடுக்க எத்தனித்தான் . வினோ அவனை தடுத்து ஆப்படிக்க நேரம் வந்துவிட்டது என்றான் . முஸ்தபா மெல்லிதாக புன்னகைத்தான் , கார்த்தி தெலுங்கு பட வில்லனைப்போல முஹ்ஹாஹாஹாஹா என்று உலகம் அதிர சிரித்தான் .... முஸ்தபா கையிலிருந்த செங்கல்லுக்கு வேலை வந்துவிட்டது .
இவ்இவ்இவ்இவ்... முனகல் அவ்அவ்அவ்அவ் ஆகி ஆஆஆஆஆவ் ஆகி ங்ங்ங்ங்ங் என குறைந்தது . கார்த்தி கடைசியாக ஒரு பெரிய குழவி கல் போன்ற ஒன்றை தூக்கி வந்து அதன் மண்டையில்............. இப்போது ங்ஙங்ங் கூட இல்லை . ஸ்ஸ் தான் .
வீதி வீதியாக நாயை தேடிக்கொண்டு ஜீலி கடைசியாக கரீம்பாய் கடையில் விசாரித்தாள் . அவர் மூன்றாவது வீதிபக்கம்தான் போனார்கள் என்று சொல்ல மூன்றாவது வீதியில் அந்த மூவர் இல்லை . சாக்கடையில் நாயின் பிணம் . கதறி அழுதாள் ஜீலி . அவள் அந்த சாக்கடையில் விட்ட கண்ணீரால் அந்த சாக்கடை மட்டுமல்ல அந்த ஊர் பாதாளசாக்கடையே அன்று சுத்தம் ஆகியிருக்க வேண்டும் . வெறி கொண்டாள் .பழி என்றாள் . இறந்து போன நாயின் உடலை அடக்கம் செய்தனர் அவள் வீட்டினர் . கண்கள் சிவக்க , நரம்புகள் புடைக்க நாயின் ஸாரி சின்ட்ரல்லாவின் சமாதியில் அந்த மூவரை அழித்தே தீருவேன் என சபதமெடுத்தாள் .
பிறகென்ன அவள் சித்தப்பா அந்த ஊர் காவல் நிலையத்தின் உதவி ஆய்வாளர், அந்த மூவருக்கு பிடிவாரண்ட் . மூவரும் மாட்டிக்கொண்டனர் . நாயை அடித்ததற்க்காக உள்ளே வைத்து அடிக்க முடியுமா . ஜீலியை ஈவ்டீசிங் செய்ததாக எப்.ஐ.ஆர் .
காலையிலேயே பிடித்துக்கொண்டு வந்துவிட்டனர் . அந்த காவல் நிலையத்தின் அனைத்து காவலர்களும் அந்த மூவரையும் நன்கு என்ஜாய் பண்ணி அடித்தனர் . மதிய வேளையில் ஜீலியும் அவளது தந்தையும் வந்து பார்த்து விட்டுச்சென்றனர் . வினோவுக்கு அவமானமாக போய்விட்டது ஆயிரம்தான் இருந்தாலும் வருங்கால மாமனார் முன்னால் ஜட்டியோடு அமர வேண்டியதாகிவிட்டதே என்று . டீ கொடுப்பவன் கூட அடித்திருக்கலாம் .
இரவு ஒன்பது மணிக்கு மூவரது பெற்றோரும் வந்தனர் . முப்பதாயிரம் கொடுத்து பிள்ளைகளை மீட்டனர் . லஞ்சமில்லை , ஜீலியின் தந்தை இறந்து போன நாய்க்காக கேட்ட நஷ்ட ஈடு . அந்த நாயின் விலை முப்பதாயிரமாம். ஒரு வாரம் ஆய் கூட போக இயலாமல் அவதிப்பட்டனர் மூவரும் .. அடி முழுக்க அங்கேயே விழுந்திருந்தது . சம்பவம் முடிந்து ஒரு வாரம் கழித்து மீண்டும் அதே சலூன் கடை அதே மூவர் . அதே காலை வேளை எட்டு மணி , ஜீலி தனியாக நடந்து வந்துகொண்டிருந்தாள் . வினோ அவளிடம் அருகில் சென்று ,
''ஹாய் , ஜீலி ''
''ம்ம் என்ன?''
''ஸாரிப்பா , கோபத்தில அப்படி பண்ணிட்டோம் ''
''இட்ஸ் ஓகே, ''
''ப்ளீஸ் நீ என்ன மன்னிச்சிட்டேனு சொல்லு ''
''சரிடா மன்னிச்சிட்டேன் போடா ''
''உன்னால ஒரு வாரமா சரியா உக்கார கூட முடியல தெரியுமா , எப்படி அடிச்சாங்க தெரியுமா . அதை உங்கிட்ட காட்டக்கூட முடியாதுப்பா ''
அவளுக்கு சிரிப்பு வந்து விட்டது .
''.............''
''என்ன ஜீலி சிரிக்கற ''
''இல்ல ,
ம்ம்ம்........................................................ ஒன்னுமில்ல , ஹாஹா''
''சரி விடு , பாய் ''
''ஏய் வினோ, அதான உன் பேரு , ஈவ்னிங் வீட்டுக்கு வரியா , கேரம்ஸ் விளையாடலாம் , நீதான் கேரம்ஸ் ஸ்டேட் லெவல் சாம்பியனாமே , ஸ்கூல்ல ஒன் சிஸ்டர் சொன்னா , அடுத்த வாரம் டூர்ணமென்ட் ஸ்கூல்ல அதான் ''
''.................... '' மௌனமாக இருந்தான் , ஆனால் மனசுக்குள் ஆயிரம் வாலா வெடித்து சிதறியது , ராக்கெட்டுக்கள் பறந்தன , மனது படபடக்க ஆரம்பித்தது . குறுகுறுப்பாக இருந்தது . இப்போதே அவளை காதலிலத்து விட்டதாய் உணர்ந்தான் . அவள் உதடுகளில் முத்தமிட்டதை மகிழ்ந்தான் .
'' 7 மணிக்கு வந்திடுரீயா.. அப்பாட்ட சொல்லிடறேன் ''
''ஓகே....................................... ஓகே....................'' என்றபடியே ரிவர்ஸில் நடந்து கார்த்தி அருகில் அமர்ந்து கொண்டு அவள் செல்லும் அழகையே பார்த்துக்கொண்டிருந்தான் .
கண்களால் காறித்துப்ப முடியுமா...????
முதன்முறையாக அன்றுதான் வினோ அதைப்பார்த்தான் . கார்த்தி,முஸ்தபா மூலமாக ... இவன் ஈ என்று கேனத்தானமாக சிரித்தான் .
கார்த்தியும் , முஸ்தபாவும் அதற்குப்பின் அவனிடம் பேசுவதில்லை . முஸ்தபாதான் கார்த்தியின் கிங்ஸிற்கு ஒன்னேமுக்கால் ரூபாய் தர வேண்டியிருந்தது .
மாலை வேளைகளில் வினோ மட்டும் ஜீலிக்கு கேரம் , காதல் , முத்தம் , இத்யாதி இத்யாதி இன்பங்கள் குறித்து சொல்லிக்கொடுக்கிறான் .
அன்புடன்
அதிஷா
Read More......