Monday, September 1, 2008

சும்மா ட்டமாஷ்-50: கோவி கண்ணன் பேட்டி, பாகம்-1

·

பதிவர் கோவி கண்ணன்

தமிழ்வலைப்பூக்களில் திராவிட எழுத்து முன்னோடிகளில் ஒருவரான கோவி கண்ணன் அவர்களின் பேட்டியை 'சும்மா ட்டமாஷ்' வலைப்பூவில் வெளியிடுவதில் மகிழ்ச்சி கொள்கிறேன். எனக்கு மின்னஞ்சலில் அவர் அளித்த பேட்டியின் முதல் பாகத்தை தற்போது பதிவிடுகிறேன். பேட்டியின் இரண்டாம் பாகம், மூன்றாம் பாகம், லக்கிலுக்கின் அரசியல் கட்டுரை, பதிவர் ராப் எழுதும் பதிவு (இன்னும் உறுதியாக வில்லை), வேற்று மொழி பின்நவீனத்துவ வீடியோவின் தமிழ் மொழியாக்கம் ஆகியன வரவிருக்கின்றன.


ங்கள் முழுப்பெயர், சொந்தஊர், வாழிடம், பணி மற்றும் நெருங்கிய நண்பர்கள் பற்றி சொல்லுங்கள்.

னது பல்வேறு எண்ணங்களைப் ஒட்டுமொத்தமாக பகிர்ந்து கொள்ள வாய்ப்பு கொடுக்கும் நண்பர் மோகனுக்கு மிக்க நன்றி. இங்கே கேள்விகளைப் பார்க்கும் போது ஒரு தேர்ந்த ஆசிரியர் மாணவனைப் சோதிப்பது போன்று உள்ளது. கேள்வி கேட்பதுதான் கடினம் என்றே நினைக்கிறேன். ஏனெனில் கேள்விகளில் நீங்கள் கேட்டிருப்பதெல்லாம் உங்களுக்கு இருக்கும் சமூக உயர்வுக்கான எண்ணங்களின் பிரதிபலிப்பாக இருக்கிறது. இவை வெறும் கேள்வியாக ஓர் இரவில் எழுந்தாக நம்ப முடியவில்லை. நல்லது !

எனது முழுப்பெயர் கண்ணன், தந்தைப் பெயர் கோவிந்தராஜூ. பிறந்து வளர்ந்தது எல்லாமே நாகப்பட்டினம் தான். அதன் பிறகு சென்னையில் ஒரு 10 ஆண்டுகள் பல்வேறு நிறுவனங்களில் வேலை செய்திருக்கிறேன். கடந்த 10 ஆண்டுகளாக சிங்கையில் இல்லத்தினருடன் வசிக்கிறேன். சென்னையில் இருந்தவரை எனது பணி மின்னனு தொழில் நுட்பம் சார்ந்தவையாக இருந்தது, சிங்கைக்கு பணியில் சேர்ந்த பிறகே தன்னார்வத்தில் தகவல் தொழில்நுட்ப துறைக்கு எனது முழுமுயற்சியினால் மாறினேன். கடந்த 8 ஆண்டுகளாக தகவல் தொழில்நுட்ப பிரிவில் ஒன்றான சிஸ்டம் என்ஜினியாராக சீன நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறேன்.
பதிவுலகம் சாராத நெருங்கிய நண்பர்கள் பலருண்டு, குறிப்பிட்டு அவர்களின் பெயரைச் சொன்னாலும் அவர்களை இங்கு யாருக்கும் தெரியாது என்பதால் பெயர்களை விட்டுவிடுகிறேன். செயலால், நடவெடிக்கைகளால் மனதுக்குப் பிடித்தவர்களைப் பார்த்து இவர் எனக்கான நண்பர் என்று மனதில் நினைத்தே அவர்களுடன் பழகுகிறேன். அவ்வாறு நானே விரும்பிப் பழகியவர்களே எனது நண்பர்களாக இருக்கிறார்கள். பதிவுலகில் எல்லோருமே நண்பர்கள் என்று நினைத்தாலும், பாசத்துடன் 'அண்ணன்' என்று என்னை அழைக்கும், அதே போன்று அன்புத் தம்பி என்ற உணர்வில் என்னால் ஒருமையில் அழைக்கப்படும் நெருங்கிய நண்பர்கள் பலர் உண்டு.

திவுலகில் உங்கள் முன்னோடி யார்? ஆதிக்க எதிர்ப்பை பதிவுகளில் எப்போது தொடங்கினீர்கள்?

நான் பதிவுலகை வாசிக்க வந்த பொழுது மதச் சண்டைகளே பெரிதாக நடந்து கொண்டிருந்தது. அவர்களின் விவாதங்கள் சுவையார்வமாக இருந்ததுடன் பல்வேறு மதங்களைப் பற்றி தெரிந்து கொள்ளூம் வாய்ப்பாக அமைந்தது, எழுத வரும் முன் பதிவில் இந்து மதத்தை இழிவு படுத்தி சிலர் எழுதுவதைக் கண்டு எரிச்சல் அடைந்திருக்கிறேன், காரணம் அண்ணன் ஆர்எஸ்எஸில் முன்பு ஒரு 10 ஆண்டுகள் இருந்து இருக்கிறார், அதனால் பலமுறை காவல் துறையால் முன்னெச்சரிக்கை நடவெடிக்கையில் கைது செய்யப்பட்டு இருக்கிறார். கடந்த 10 ஆண்டுகளாக முற்றிலுமாக தன்னை விலக்கிக் கொண்டார், தற்போது அவருக்கு காவல் துறை கெடுபிடிகள் எதுவும் கிடையாது. நானும் பட்டயப்படிப்பு படிக்கும் காலத்தில் ஆர்எஸ்எஸின் மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிசத்தில் சேர்ந்து உழவாரப்பணி ஆற்றி இருக்கிறேன். இதன் பின்னனியில் இந்துமதம் பற்றிய உயர்வான எண்ணம் இருந்தது, இந்துமதத்தைக் குறை சொல்பவர்கள் குறித்து எரிச்சலும் இருந்தது. இங்கே பதிவுலகில் வாசிக்க வந்த பிறகே இந்துமதத்தை தாங்கி எழுதுபவர்களின் நோக்கம் முற்போக்கானது அல்ல என்றதை படித்து உணர்ந்து கொண்ட போதுதான் நான் எழுதவே தொடங்கினேன்.குறிப்பாக விடாது கருப்பில் எழுதப்பட்டிருந்த இடுகைகள், திராவிட சிந்தனையாளர்களின் பெரியார் கருத்துக்கள் பற்றிய பதிவுகளை வாசிக்கும் பொழுது ஆதிக்க சக்திகளை எதிர்க்கும் கருத்துக்களைத்தான் பதிவில் எழுதவேண்டும் என்று முடிவு செய்துகொண்டேன்.

இதற்கு உரமாக அமைந்தது பதிவுகளை வாசித்து ஏற்படுத்திக் கொண்ட எனது தமிழ் உணர்வும், ஆர்வமும் தான். அதன் பிறகு தேவநேய பாவாணர் போன்ற தமிழறிஞர்களின் நூல்களை வாசித்த போது தமிழின் தொன்மை பெருமையெல்லாம் தெரிந்தது, இறந்து போன மொழியை தேவபாஷை என்று போற்றிக் கொண்டே தமிழை நீஷ பாஷை என்று இகழ்ந்து கூறும் அவர்கள் மொழியை அவர்கள் உயர்வாக கூறிக் கொள்ளும் போது, ஒரு தமிழன் என்ற உணர்வில் தமிழ்மொழி மீதான அவதூறுகளை மறுக்க வேண்டும், தமிழ் மொழி விழிப்புணர்வும், தமிழின் பயன்பாடு குறித்து எழுதுவது என்றும் முடிவு செய்தேன். ஆங்கிலம் தவிர்த்து அந்நிய மொழிகளின் ஆதிக்கத்தால் தமிழ் எவ்வாறெல்லாம் சீர்கெடுகிறது, புறக்கணிக்கப்படுகிறது என்றெல்லாம் எனது பதிவுகளில் எழுதி வந்திருக்கிறேன். சிதம்பரம் கோவில் நிகழ்வுகளில் தமிழ் மொழி தீண்டாமை வெளிப்படையாக பேசப்பட்ட போது அதனை எதிர்த்து நிறைய இடுகைகள் எழுதி இருக்கிறேன். செந்தமிழில் எழுதுவதற்கும், பல தமிழ்ச் சொற்களை அறிந்து கொள்ளவும் எனக்கு பெரிதும் பயனளித்தது இராமகி ஐயாவின் பதிவுகளே. எனது எழுத்தின் ஒரு குறிப்பிட்ட நோக்கமாக. ஆதிக்கச் சக்திகளுக்கு எதிரான எனது கருத்துக்களை பதிய தொடங்கியது முதலே எழுதிவருகிறேன்.

திராவிடமும் பார்ப்பனீய எதிர்ப்பும் எவ்வாறு தொடர்புடையன? ஒன்றிலிருந்து மற்றதை பிரிக்க முடியாதா?

திராவிட சிந்தனை என்பது ஒரு கருத்தாக்கம் தான், தந்தை பெரியாரின் சிந்தனைத் தொகுப்பே திராவிட சிந்தனைகளின் தொகுப்பு எனலாம், பெரியாருக்கு முன்னோடியான அயோத்திதாச பண்டிதர் தான் திராவிட சிந்தனைகளின் விதை. எந்த கொள்கையும் தோன்றும் காலத்தில் தான் அவை சிறப்பிக்கப்படும், காரணம் கொள்கைகள் தோன்றுவது திட்டமிட்ட ஒன்று அல்ல, அதற்கான தேவை இருப்பதால் அவை இயற்கையாகவே யாரோ ஒருவரின் முன்னெடுப்பில் தோன்றி அதுபற்றிய ஏக்கம் இருப்பவர்களால் உள்வாங்கப்பட்டு வளர்ச்சி பெரும். நாளடைவில் கொள்கை தோன்றியதன் நோக்கம் ஓரளவு நிறைவேறிவிட்ட பொழுது மூலக் கொள்கைகல் திரிய ஆரம்பித்துவிடும். தோன்றிய காலத்தில் இருந்த அதே இறுக்கம் இருப்பதற்கான தேவை இல்லாது போவதும் ஒருகாரணம்.
திராவிடம் கருத்தாக்கம் தோன்றிய காலத்தில் பார்பனிய எதிர்பாகவே இருந்தது காரணம் அன்றைய உயர்சாதியினர் அனைவருமே தாங்கள் செய்வது கொடுமை என்றெல்லாம் உணர்ந்திருந்தது இல்லை. இன்றைக்கு 50 விழுக்காட்டிற்கும் மேல் நிலைமை மாறி இருக்கிறது. பலர் உணர்ந்துவிட்டார்கள். பலர் இன்னும் பழைய பெருமையிலேயே இருக்கிறார்கள். எனவே முழுக்க முழுக்க இன்றைய பார்பனிய எதிர்ப்பு என்பது பார்பனர்களை மட்டுமே குறிவைக்காமல் உயர்சாதியினர் யாராக இருந்தாலும் அவர்களை நோக்கியும் நகர்ந்து கொண்டிருக்கிறது, கீழவெண்மணி, கண்டதேவி, பாப்பாரப்பட்டி, இரட்டை தம்ளர் ஆகியவற்றிற்கான ஞாயம் கற்பித்து எழுதும் பதிவர்கள் ஒருவர் கூட இல்லை. ஆனால் இவற்றிற்கு எதிர்பாக நூற்றுக்கணக்காண இடுகைகள் பல்வேறு பதிவர்கள் பதிந்து இருக்கிறார்கள், சூழ்நிலை மாற்றத்திற்கான கருத்து விதைகளை பலரும் விதைத்துவிட்டார்கள், நிலைமை மெதுவாக மாறும் ஏனென்றால் படித்த பார்பனர்களே சாதிகளை பிடித்து தொங்கிக் கொண்டு உயர்வு பேசும் போது படிக்காத பாமரர்கள் சாதிப் பெருமையை மறப்பதற்கான வாய்ப்பை காலம் தான் கொடுக்கும். ஆனால் ஒன்றுமட்டும் உறுதியாகக் கூறலாம், உரிமைக்காக சாதி பேசும் ஒடுக்கப்பட்ட சாதிகள் தவிர்த்து திராவிடம் பேசும் பதிவர்கள் தங்கள் சாதிகளின் பெருமை பேசுவதில்லை.

கேள்வியை விட்டு சற்றுவிலகி சென்றுவிட்டேன், திராவிடம் என்பது பார்பனியத்துக்கு எதிரான சிந்தனைக் கொண்டது என்றே சொல்கிறார்கள். ஆதிக்கச் சக்திகளின் சாதிகள் எதுவாக இருந்தாலும் அவை பார்பனியமே என்றே சொல்கிறார்கள். பார்பனிய எதிர்ப்பே திராவிடம் என்றாலும் அதில் தமிழர் நலனும் அடங்கி இருக்கிறது. பார்பனீயம் என்றுமே தமிழ்மொழிக்கான ஆதரவு நிலை எடுத்தது இல்லை. அவர்கள் பேசுவதெல்லாம் தேசியம்.

பார்ப்பனீயம் இப்போது கைமாறி திராவிட பார்ப்பனீயர்களிடம் வந்துவிட்டதை பற்றி யாரும் விசனப்படுவதில்லையே ஏன்? மறைமுக தீண்டாமையை எல்லா மட்டங்களிலும் செய்து வரும் பார்ப்பனரல்லாத உயர்சாதியினர் பார்ப்பனர்களை வைவது நகை முரண் தானே?

ரிதான். பார்பனர், பார்ப்பனரல்லாத உயர்சாதியினர் இவர்களே ஒருவருக்கொருவர் கை நீட்டிக் குற்றம் சொல்வது மாற்றத்துக்கான அறிகுறிதானே. நீ மட்டும் ஒழுங்கா ? என்று அவர்களுக்குள் கேட்டுக் கொள்கிறார்கள். ஆனால் முன்பு போல் இருவரும் இணைந்தே தீண்டாமை போற்றுவோம் என்றெல்லாம் செய்யத் துணிவது இல்லை. ஆக ஆதிக்க சக்திகளை ஆதிக்க சக்திகளே அடையாளம் காட்டுவது அவர்களின் ஆளுமை சக்தியை நீர்த்துப் போகவைக்கும் பலவீனம் தானே!

பொருளாதார இட ஒதுக்கீடு, இட ஒதுக்கீட்டிற்கு காலநிர்ணயம், மிகப்பிற்படுத்தப்பட்டவர்கள் மற்றும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீட்டை முழுமையாக சென்று சேர்த்தல் போன்றவற்றில் உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளமுடியுமா?

"பொருளாதார இட ஒதுக்கீடு" இந்த சொல்லாடல் பற்றி அறிவு ஜீவிகள் பேசுகிறார்கள். ஒடுக்கப்பட்ட மக்களின் தாழ்வுணர்ச்சி முற்றிலும் விடுபட ஒருதலைமுறை இட ஒதுக்கீடு என்னைப் பொறுத்து சரியான தீர்வு அல்ல. என்னுடன் மாலை நேர (என்ஜினியரிங்க் டிகிரி) வகுப்பில் படித்த மாணவர்கள் எல்லோருமே வேலைபார்த்துக் கொண்டே படித்தவர்கள், அவர்களில் பலர் அரசு வேலையில் இருந்தார்கள், பிற்பட்ட வகுப்பினருக்கு இல்லாத தாழ்வுணர்ச்சி தாழ்த்தப்பட்ட பிரிவை சேர்ந்த மாணவர்களுக்கு இருந்தது, தங்களால் மற்ற பிரிவு மாணவர்களுக்கு இணையாக மதிப்பெண் பெற முடியாது என்றே நினைத்து அதில் சில மாணவர்கள் படிப்பை பாதியில் விட்டுவிட்டு இருப்பதே (டிப்ளமோ) போதும் என்று சென்றுவிட்டார்கள். ஓரளவு படித்து இருந்தாலும் தங்களுக்கு போட்டியிடும் தன்மை இல்லை என்றெல்லாம் தாழ்வாக நினைக்கும் நிலையிலேயே இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் பொருளாதார இட ஒதுக்கீடு என்று முட்டுக்கட்டைப் போட்டால் இதுவரை படித்ததே போதும் என்று சென்றுவிடுவார்கள்.

மூன்று தலைமுறைகளுக்கு (பாட்டன், தந்தை, மகன்) படிப்பு பற்றிய விழிப்புணர்வு இருந்தால் தான் இட ஒதுக்கீட்டை முற்றிலும் எடுக்க முடியும். இவர்கள் இட ஒதுக்கீட்டில் வந்துவிட்டால் மகனின் குழந்தைக்கு 'நோ' சொல்லிவிடலாம். இது கிரிமீ லேயர் போன்ற ஒரு தனிப்பட்ட குடும்பத்தினருக்கு மட்டுமான கட்டுபாடுதான். அது போன்றே அதே சாதிப்பிரிவில் உள்ள மற்றவர்களும் மூன்று தலைமுறை வாய்பை எட்டிவிட்டார்களா என்று கண்காணிக்க வேண்டும். இட ஒதுக்கீட்டின் வழியாக படிப்படியாக படித்தவர்கள் மிகும் போது அந்த பிரிவின் ஒதுக்கீட்டு அளவை குறைத்துக் கொண்டே பொதுப் பிரிவை கூடுதலாக்கலாம். மொத்தமாக இட ஒதுக்கீட்டை நீக்குவதில் உடன்பாடு இல்லை. இதுவரையில் இருந்ததைக் கண்காணித்து சீர்த்திருத்துவது சமூகத் தேவைதான்.

திராவிட கட்சிகளின் செயல்பாடு சமூக நீதியோடு முடிந்து போகிறதா? அல்லது ஈழம் போன்ற பிரச்சினைகளுக்கு காத்திருக்க வேண்டுமா? அல்லது ஈழம் நம் பிரச்சினை இல்லையா?

திராவிட என்னும் சொல் திராவிட இன ரீதியானது என்றாலும் தமிழர்கள் தவிர்த்து வேறு எவரும் திராவிடர் என்று சொல்லிக் கொள்வது இல்லை. தமிழகத்தின் தமிழர்களின் நலன் மட்டுமின்றி அனைத்துலக தமிழர்கள் அனைவரின் நலன் குறித்த சொல்லாக பயன்படுத்துவேண்டும். ஈழப்போராட்டமும், சிங்களரின் ஆதிக்கமும் இன ரீதியானது என்பது தானே உண்மை?

சோ மற்றும் சில ஊடகங்கள் ஈழ மக்கள் விரோதத்தையும் உள்ளார்ந்த திராவிட எதிர்ப்பையும் எவ்வித சங்கோஜமோ சங்கடமோயின்றி தொடர்ந்து பதிவு செய்துவர முடிவது எதனால்? ஜனநாயகத்தில் இது சகஜம் என்பதாலா? அல்லது அவர்களுக்கு ஆதரவென்று ஏதும் இருப்பதாலா? அல்லது ஆரியக்கூத்து புடக்காலியில் அரங்கேறுகிறதா?

சோமற்றும் உயர்சாதியினர் நடத்தும் ஊடகங்கள் எப்போதும் இந்துத்துவ சார்புள்ளவை, அவற்றிற்கு மதிப்புக் கொடுக்காமல் விட்டாலே விஷம பிரச்சாரங்கள் நாளடைவில் குறைந்து போகும்.

சேது சமுத்திரத்திற்கு எதிராக அகில இந்திய அளவில் நடக்கும் ஆரிய சதியை முறியடிக்க சுற்றுப்புற சூழல் காரணங்களை ஒதுக்கிவிட்டாவது திட்டத்தை நிறைவேற்றுவது அவசியமல்லவா?

ண்டங்களை பிளந்து சூயஸ் கால்வாய், பனாமா என்றெல்லாம் அமைத்து தங்கள் நாட்டின் வியாபாரத்தையும் போக்குவரத்தையும் வளர்த்து உலக நாடுகள் வெற்றிபெற்றி இருக்கிறது. இங்கே பழைய பஞ்சாங்கத்தைக் காரணம் காட்டி ஒரு திட்டம் நிராகரிக்கப்படுவது கேலிக் கூத்து. இன்னும் பழமை வாதங்களில் மக்கள் இருந்தால் தான் தங்களால் இந்துமதத்துக்குள் ஆதிக்கம் செலுத்த முடியும் என்றே ஆதிக்க சக்திகள் நினைக்கின்றன. அவர்களின் எண்ணம் நிராகரிக்கப்பட வேண்டிய ஒன்று, மக்கள் வாழ்வாதரமான பொருளாதார நலன் கருதி, சேது திட்டம் அறிவிக்கப்பட்ட வழித்தடத்தில் விரைவாக செயல்படுத்தப்பட வேண்டும்.


பேட்டியின் அடுத்த மற்றும் இறுதி பாகங்களில் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திரு தொல்.திருமாவளவன் மற்றும் செல்வப்பெருந்தகை பற்றியும் போலிடோண்டு விவகாரம், தற்போதைய பதிவு நற்சூழலின் எதிரிகள் பற்றியும் விவாதம் இடம்பெறுகிறது.

23 comments:

லக்கிலுக் said...
September 1, 2008 at 7:54 AM  

முதல்பாகமே பட்டாசாக வெடிக்கிறது. இரண்டாம் பாகத்தில் இன்னமும் சர்ச்சைக்குரிய கேள்விகளாக இருப்பதால் சரவெடியாக இருக்குமென்று எதிர்பார்க்கிறேன்.

பதில்கள் மட்டுமல்லாமல் கேள்விகளும் அருமை. மோகன் ஒரு மிகச்சிறந்த பத்திரிகையாளருக்குரிய லாவகத்தோடு கேள்விகளை எழுப்பியிருக்கிறார்.

Unknown said...
September 1, 2008 at 7:55 AM  

சிறப்பாய் தெரிவு செய்யப்பட்டுள்ள மோகன் கந்தசாமியின் கேள்விகள் அதற்கு ஜி.கே. அவர்களின் மழுப்பலற்ற சிறந்த பதில்கள். இருவரின் கைவண்ணமும் பளிச்சிடுகிறது.

இது 'சும்மா ட்டமாஷ்' இல்லை.

மோகன் கந்தசாமி said...
September 1, 2008 at 8:19 AM  

///லக்கிலுக் said... ///

ஆஹா! முதல் போனியே வெயிட்டான பார்ட்டிகிட்ட பண்ணியிருக்கிறேன் போலிருக்கே!

////முதல்பாகமே பட்டாசாக வெடிக்கிறது. இரண்டாம் பாகத்தில் இன்னமும் சர்ச்சைக்குரிய கேள்விகளாக இருப்பதால் சரவெடியாக இருக்குமென்று எதிர்பார்க்கிறேன்.

பதில்கள் மட்டுமல்லாமல் கேள்விகளும் அருமை. மோகன் ஒரு மிகச்சிறந்த பத்திரிகையாளருக்குரிய லாவகத்தோடு கேள்விகளை எழுப்பியிருக்கிறார்./////

நன்றி லக்கி லுக்

மோகன் கந்தசாமி said...
September 1, 2008 at 8:21 AM  

நண்பர் சுல்தான்,

நெடுநாட்களுக்குப் பிறகு மீண்டும் வருகை தந்துள்ளீர்கள்! மிக்க நன்றி.

விஜய் ஆனந்த் said...
September 1, 2008 at 9:48 AM  

ஆழமான கேள்விகள்..விளக்கமான, தெளிவான பதில்கள்...

கலக்குங்க!!!

ஹாட்ட் பார்ட் 2 எப்போ???

புதுகை.அப்துல்லா said...
September 1, 2008 at 11:12 AM  

இடஓதுக்கீட்டின் பயனை அடைந்தவர்களை கிரிமிலேயர் பிரிவில் சேர்ப்பதுபற்றிய கருத்தாக்கம் இப்போது பரவலாக நடைபெறுகிறது. இடஓதுக்கீட்டின் அடிப்படையில் தாழ்த்தப்பட்ட ஓருவர் படிக்கும் வாய்ப்பைப் பெற்று நன்கு படித்து இந்திய ஆட்சிப்பணிக்கும் வருகின்றார். நாம் அவரை கலெக்ட்டராக மதிக்கின்றோம்,மரியாதை செலுத்துகின்றோம். ஆனால் சக கலெக்ட்டர்கள் மத்தியில் அவர் கலெக்ட்டராக மதிக்கப்படுவது இல்லை.தாழ்த்தப்பட்டவராகத்தான் பார்க்கப்படுகிறார். திரு.கிருஸ்துதாஸ் காந்தி ஐ.ஏ.எஸ்,திருமதி.சிவகாமி ஐ.ஏ.எஸ் போன்றோர் எதிர்கொண்ட பிரச்சனைகள் இதற்கு சிறந்த உதாரணம். இடஓதுக்கீட்டின் பலன் என்பது பொருளாதாரத்தை உயர்த்துவது மாத்திரம் அல்ல அனைத்து தளங்களிலும் அந்தஸ்தையும் உயர்த்துவதை உள்ளடக்கியதுதான். எனவே கிரிமிலேயர் என்பது என்னைப் பொருத்தவரை தலைவர் கலைஞர் சொன்னபடி கிருமிதான்.

ஜோசப் பால்ராஜ் said...
September 1, 2008 at 11:52 AM  

மிக அருமையான கேள்விகள், ஆக்கப்பூர்வமான, அர்தமுள்ள, ஆழமான பதில்கள் . இதை எதற்கு ச்சும்மா டமாஷ் என்று வகைப்படுத்தியுள்ளீர்கள் மோகன்? கோவி.க அண்ணணின் பதில்கள் மிக மிக அருமை.

இரண்டாம் பாகத்தை சீக்கிரம் வெளியிடுங்கள்.

rapp said...
September 1, 2008 at 12:34 PM  

நல்ல ஆழமானக் கேள்விகள், மற்றும் மனதிலிருந்து பதில்கள் அருமை:)
இதில் அப்துல்லா அண்ணாவின் கருத்துக்களை நான் வழிமொழிகிறேன். ஒரு சிறு உதாரணத்திற்கு, இன்று கிட்டத்தட்ட அனைத்து பொறியியல் கல்லூரிகளிலும் வெளிப்படையாக மாணவர்கள் மத்தியில், நிர்வாகத்தில் என அனைத்து இடங்களிலும் ஜாதி மோகம் வெட்கமில்லாமில் இருப்பதை பார்க்கிறோம். சங்கர வித்தியாலயா போன்ற பள்ளி மாணவர்கள் கூறும் கதைகளை கேட்டால் குமட்டிக்கொண்டு வரும். இப்படி எதிர்கால சமுதாயமான மாணவர்கள் மத்தியில் மீண்டும் ஜாதிப் பெருமை பேசுவதை பெருமையான விஷயமாகக் கருதும் போக்கை அழகாக சமூகம் செய்துக்கொண்டிருக்கும் வேளையில், வேறன்ன செய்வது. திருமா அவர்களின் கருத்துக்கள் இதில் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் இருந்தாலும், கொஞ்சம் நாள் கழித்து செயல்படுத்துவதுதான் இவ்விஷயத்தில் சிறந்தது என்பது என் கருத்து

Sanjai Gandhi said...
September 1, 2008 at 12:58 PM  

அட.. எதோ மெய்யாலுமே டமாஷ்தான் பன்றிங்கனு வந்து பார்த்தேன்.. கேள்விகளும் பதில்களுல் ரொம்ப பொறுப்பா அட்டகாசமா இருக்கே... கலக்கல் கந்தா.. :)

மோகன் கந்தசாமி said...
September 1, 2008 at 2:32 PM  

////ஆழமான கேள்விகள்..விளக்கமான, தெளிவான பதில்கள்...

கலக்குங்க!!!/////

நன்றி விஜய் ஆனந்த். முதல் வருகைக்கு ஒரு நன்றி.


///ஹாட்ட் பார்ட் 2 எப்போ???///

விரைவில், மே பி இன்னும் சிலமணி நேரங்களில்.

நன்றி.

மோகன் கந்தசாமி said...
September 1, 2008 at 2:37 PM  

புதுகை,

/////ஆனால் சக கலெக்ட்டர்கள் மத்தியில் அவர் கலெக்ட்டராக மதிக்கப்படுவது இல்லை.தாழ்த்தப்பட்டவராகத்தான் பார்க்கப்படுகிறார்.////

இதுதான் பிரச்சினையே. எனினும் வுயர் பதவிகளில் உள்ள ஆதிக்க ஜாதியினர் இவ்வாறு செயல் படுவது அவர்களின் ஆதிக்க சாயுங்காலம் அருகி விட்டதை உணர்த்துகிறது.

மோகன் கந்தசாமி said...
September 1, 2008 at 2:41 PM  

////மிக அருமையான கேள்விகள், ஆக்கப்பூர்வமான, அர்தமுள்ள, ஆழமான பதில்கள் ////

நன்றி திரு ஜோசப்,

////இதை எதற்கு ச்சும்மா டமாஷ் என்று வகைப்படுத்தியுள்ளீர்கள் மோகன்? ////
சும்மா ட்டமாஷுக்கு, :-)))))

///இரண்டாம் பாகத்தை சீக்கிரம் வெளியிடுங்கள்.///
விரைவில் வெளியிடுகிறேன். வருகைக்கு நன்றி.

பரிசல்காரன் said...
September 1, 2008 at 2:48 PM  

பதிவுலகம் என்பது ஒன்றுக்கும் உதவாத விஷயங்களை எழுதுபவர்களின் கிடங்கு என்பவர்களுக்கும், பத்திரிகைகளில் வந்தவற்றை எடுத்துப் போட்டு பேர் வாங்குபவர்கள் என்பவர்களுக்கும் உங்கள் பதிவு சாட்டையடி!

கேள்விகளை தயார் செய்ய மிகுந்த நேரமெடுத்துக் கொண்டிருப்பீர்கள் என்பது அதன் நேர்த்தியிலும், ஆழத்திலும் தெரிகிறது!

கண்ணனின் நேரிடையான பதில்களும் பாராட்டுக்குரியது!

மோகன், வலைப்பூவின் பெயரை மாற்றிவிடுங்களேன்!

மோகன் கந்தசாமி said...
September 1, 2008 at 2:49 PM  

ஹாய் வெட்டி ஆபிசர்,

/////சங்கர வித்தியாலயா போன்ற பள்ளி மாணவர்கள் கூறும் கதைகளை கேட்டால் குமட்டிக்கொண்டு வரும்.////

இன்று நேற்றா? பன்னெடுங்காலமாக நடப்பது எப்படி தானாய் மாறும்? மாற்றம் வர்ணம்...சாரி வரணும்.

////திருமா அவர்களின் கருத்துக்கள் இதில் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் இருந்தாலும், கொஞ்சம் நாள் கழித்து செயல்படுத்துவதுதான் இவ்விஷயத்தில் சிறந்தது என்பது என் கருத்து////

திருமா சொன்னதை சுருக்கமாக quote செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.


நன்றி ராப்.

மோகன் கந்தசாமி said...
September 1, 2008 at 2:51 PM  

////அட.. எதோ மெய்யாலுமே டமாஷ்தான் பன்றிங்கனு வந்து பார்த்தேன்.. ////

ஹா ஹா ஏமாந்துட்ட்டிங்களா? நாங்களும் சீரியஸ் பதிவு போடுவம்ல! :-)))

///கேள்விகளும் பதில்களுல் ரொம்ப பொறுப்பா அட்டகாசமா இருக்கே... கலக்கல் கந்தா.. :)////

நன்றி நண்பா!

மோகன் கந்தசாமி said...
September 1, 2008 at 3:10 PM  

வாருங்கள் பரிசல்,

////பதிவுலகம் என்பது ஒன்றுக்கும் உதவாத விஷயங்களை எழுதுபவர்களின் கிடங்கு என்பவர்களுக்கும், பத்திரிகைகளில் வந்தவற்றை எடுத்துப் போட்டு பேர் வாங்குபவர்கள் என்பவர்களுக்கும் உங்கள் பதிவு சாட்டையடி!////

எனது ஐம்பதாவது பதிவுக்காக கொஞ்சம் சீரியஸ் பதிவு போட மெனக்கிட்டேன். தொடர்ந்து சில பதிவுகளுக்கு பிறகு என் வலைப்பூவில் மீண்டும் ஒரே ட்டமாஷ் தான்! :-)))

///கேள்விகளை தயார் செய்ய மிகுந்த நேரமெடுத்துக் கொண்டிருப்பீர்கள் என்பது அதன் நேர்த்தியிலும், ஆழத்திலும் தெரிகிறது!

கண்ணனின் நேரிடையான பதில்களும் பாராட்டுக்குரியது!////

நன்றி நண்பா!

////மோகன், வலைப்பூவின் பெயரை மாற்றிவிடுங்களேன்! /////
:-))))

Anonymous said...
September 2, 2008 at 1:20 AM  

கருத்து கந்தசாமியை மோகன் கந்தசாமி பேட்டி எடுப்பது அற்புதமான டச்சிங்...!!!

லக்கிலுக் said...
September 2, 2008 at 1:30 AM  

/////சங்கர வித்தியாலயா போன்ற பள்ளி மாணவர்கள் கூறும் கதைகளை கேட்டால் குமட்டிக்கொண்டு வரும்.////

ஹலோ! நானும் என் பள்ளி கேரியரை சங்கர வித்யாலயாவில் தான் ஆரம்பித்தேன்! :-)

மோகன் கந்தசாமி said...
September 2, 2008 at 2:38 AM  

நண்பர் ரவி,

////கருத்து கந்தசாமியை மோகன் கந்தசாமி பேட்டி எடுப்பது அற்புதமான டச்சிங்...!!!/////

இதென்ன பிரமாதம்! அவதூறு கந்தசாமிகள் தயார் என்றால் அவர்களிடமும் என்னால் பேட்டி எடுக்க முடியும்!

மோகன் கந்தசாமி said...
September 2, 2008 at 2:44 AM  

//////////சங்கர வித்தியாலயா போன்ற பள்ளி மாணவர்கள் கூறும் கதைகளை கேட்டால் குமட்டிக்கொண்டு வரும்.////

ஹலோ! நானும் என் பள்ளி கேரியரை சங்கர வித்யாலயாவில் தான் ஆரம்பித்தேன்! :-)/////

அப்படியா? உங்களுக்கு ஏதும் குமட்ட வில்லையா? டாஸ்மாக் குமட்டலைவிட இது தேவலையா? :-)))))))

ஜ்யோவ்ராம் சுந்தர் said...
September 2, 2008 at 3:52 AM  

மூன்று பாகங்களையும் படித்தேன். காத்திரமான கேள்விகள், சுவாரசியாமான பதில்கள்.

நல்லா பண்ணியிருக்கீங்க மோகன்!

மோகன் கந்தசாமி said...
September 2, 2008 at 4:00 AM  

////மூன்று பாகங்களையும் படித்தேன். காத்திரமான கேள்விகள், சுவாரசியாமான பதில்கள்.
நல்லா பண்ணியிருக்கீங்க மோகன்!///

வசிஷ்டர் வாயால் பட்டம் பெற்றதுபோல் உள்ளது சுந்தர்.
மிக்க நன்றி. I really mean it.

மோகன் கந்தசாமி said...
September 3, 2008 at 5:31 PM  

திரு குமரன்,
/////மூன்று பாகங்களும் நன்றாக இருந்தன மோகன் கந்தசாமி. ////

உங்கள் முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றிகள்கிடங்கு